அறிமுகம்

எனது பெயர் ந.வெங்கடசுப்பிரமணியன். அடிப்படையில் நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது மூன்றுமே மதுரையில் தான். சிறுவயதிலேயே வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் காரணமாக உணவுத்துறையில் ஒரு பத்து வருடங்கள் பணிபுரிய நேர்ந்தது. அப்படியான சூழலில் தான் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் வாசிப்பு என்னுடனே பயணப்பட ஆரம்பித்தது. தொடர் வாசிப்பு மற்றும் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது என இரண்டு விஷயங்கள் திரைத்துறையை நோக்கி என்னை இழுத்தன. ஒரு கட்டத்தில் என்னுடைய ஆழ்மனதின் ஆசை எல்லாம் திரைத்துறையை நோக்கியே இருந்ததால், ஒரு அரிதான சந்தர்ப்பத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்க, திரைப்படத்துறைக்குள் நுழைந்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல் உதவி ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தேன். இந்தக் காலகட்டத்தில் தான் வாசிப்பின் மற்றொரு பரிமாணத்தை தொட்டேன் எனச் சொல்லலாம். இலக்கியம் என்றால் என்னவென்று தெரிந்தது. நிறையவே வாசிக்க ஆரம்பித்தேன். அந்த வாசிப்பே என்னை எழுதத் தூண்டியது. இப்படியான நிலையில் திரைப்படத்துறையில் இருந்து விளம்பரப்படத்துறைக்கு மாறி, அங்கே பணியில் இருந்த போது கிடைத்த வாய்ப்பு ஒன்று திருப்புமுனையாக அமைந்தது.

சென்னையில் இருக்கும் ஒரு முக்கியமான சர்வதேச பள்ளியில் இருந்து ஒரு நெருக்கமான நண்பரின் வழியே ஒரு வாய்ப்பு என்னிடம் வந்தது. பள்ளி மாணவர்களுக்கு புகைப்படக் கலையை சொல்லித்தர முடியுமா எனக் கேட்டார்கள். சரி என ஒத்துக் கொண்டேன். புதியதான பொறுப்பு என்பதால் அதற்கான மெனக்கெடலிலும், திட்டமிடலிலும் ஈட்டுபட்ட போது தான், இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளின் வாழ்வில், படிப்பில் என எல்லாவற்றிலும் அலைபேசியின் தாக்கம் எந்த அளவு பாதிப்பை எற்படுத்தி இருக்கிறது என்பதை உணர முடிந்தது. அந்த நேரத்தில் அலைப்பேசியின் பிடியில் இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளை வெளியே கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் தான் Psychology of Photography புகைப்படம் எடுத்தலின் உளவியல் என்பது. அந்தப் பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு தான், இன்று எந்த அலைப்பேசியின் பிடியில் இன்றைய மாணவ, மாணவிகள் இருக்கிறார்களோ, அதனைக் கொண்டே ஒன்றினை உருவாக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் புகைப்படக் கலையை கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளனாக இருக்கிறேன். ஒரு வகையில் என்னுடைய தொடர் வாசிப்புக்கும், எழுத்துக்கும் புகைப்படக்கலையும் மிக, மிக முக்கியமான காரணம். இன்று அலைப்பேசியின் வழியே புகைப்படக்கலையை மாணவ, மாணவிகளுக்கு கற்றுக் கொடுப்பதும், மற்றொரு பக்கம் தொய்வில்லாத தொடர் வாசிப்பினையும் பின்னனியாக வைத்துக் கொண்டு எழுதுவதையும் தொடர்ந்தபடியே பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் சக பயணியைப் போல் என்னை வாசிக்க வந்திருக்கும் அனைவருக்கும் என் இதயபூர்வமான மகிழ்வும், நன்றியும்…