கவிதைகள்

 

இருக்கிறதா இல்லையா என தெரியாதபடி
இம்சைப்படுத்தும் உன் இடையை கூட
இறுக்கமாய் மறைத்து படியே
உன் விழி நோக்கும் திசையில்
வீழ்ந்து போகும் தூசியாகவெனும்
பறந்திட வேண்டுமடி கண்ணமணி…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

உன் மேல் விழும் ஒற்றைப் பார்வையில்
நிலைக்குத்தி இமைகளை இமைக்க
முடியவில்லை ஏனெனெனில் நீ இந்த
ஆகச்சிறந்த படைப்பின் ஒரு துளி…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

பாதம் முடியும் புள்ளியில் தொடங்கும்
உன் ரசனையின் துவக்கம் உணர்த்தும்!
பேரழகு என்பது உன்னுடய ஆழமன
ரசித்தலுக்குள் ஒளிந்திருக்கிறது என்பதை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

தூரத்தில் அசைந்து வரும் தேரினை
ரசித்துக் கொண்டிருந்த உந்தன் முகம்
சில நிமிடங்கள் ஏனும் கண்டிப்பாய்
எனை நோக்கி திரும்பி விடக் கூடாது
என இரைஞ்சி வேண்டினேன் அந்தத்
தேர் கடவுளிடம் காரணம் காற்றில்
அலையும் உன் கூந்தலுக்கு நடுவில்
ஆடிய உன் ஜிம்மிக்குள் ஊசலாடியபடி
இருந்த எந்தன் இதயத்தின் துடிப்பை
நிறுத்த எனக்கு மனம் வரவில்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

மனம் தேடிச் செல்லும் பயணத்தில்
அடைவது என்னவோ
மனம் தேடாத ஒன்றினைத் தான்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

வானத்தின் கீழே இருப்பது எல்லாம்
வண்ணமயமாய் இருக்க வேண்டிய
அவசியமில்லை. நம் ரசனை
வண்ணமயமாய் இருக்கக் கடவது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

என் சுமத்தலின் பாரத்தை
அந்த நெடுந்தூரத்து வானமும்,
நீண்ட பச்சை வயலும்,
தன் நினைவு அடுக்களில்
உறைத்து வைத்திருக்குமோ
அடுத்த முறையெனும் அதனிடம்
கேட்டுப் பார்க்க வேண்டும்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

காய்ந்தே கிடந்தாலும்
இலையற்று போனாலும்
பெய்யும் மழை என்னவோ
என்னுள் இன்னும் மிச்சமிருக்கும்
உயிர்ப்பினை மட்டும் உள்வாங்கி
என் மேனிப் பரவித் தான்
வழிகிறது குளம் சேரும் முன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

ஓர் அறிவோடு ஒற்றையாய் இருப்பதால்
ஆறாவதாய் ஒன்றினைப் பற்றி அறிந்திடாத,
மனம் என்கிற மரணப் போராட்டம் இல்லாத,
இருக்கும் இடம் பற்றி இழிவான இடறும் இல்லாத,
இருத்தலே இயல்பான இன்பமாய்,
பற்றற்று பரவுதலே வரமாய்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

இயற்கையின் ஒளியில்
பாகுபாடே இல்லை
தேவையில்லை என
தன் சுயநலத் தேவைக்காக
இருண்மைக்குள் மறைந்து
கொண்டு இந்த உடலை
உருக்குலைப்பது என்னவோ
கட்டுப்படா மனித மனம் தான்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

காய்ந்து போகும் முன்
உதிர்தலின் வலியை
நான் மிதிப்பட்டு வீழும்
நொடிகளில் உன்னிடம் மட்டுமே
சொல்ல முடியும் என்பதால்
படிக்கட்டுகளில் சா(கா)ட்சியாய்
கிடக்கிறேன் மிதிபடும் நேரத்தை
எதிர் நோக்கி…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

மனிதனோடு மண்ணின் உயிர்
வேர் பிடித்து நடந்த ஏரினை
மரபினை மறந்து மரத்துப் போய்
மறைவாய் மாட்டுத் தொழுவத்தில்
மண்டியிட வைத்த மனசாட்சியை
கேள்வி கேட்க வழி(லி)யில்லாமல்
கலங்கிய கலப்பையாய்
மண்ணின் உயிர் காலடித் தடம்
தேடிக் கிடக்கிறேன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

உடைந்து நின்று போன
நிலைக் கதவின் பின்னால்
உறைந்திருக்கும் உண்மைக்
கதையை கருணை எதுவுமின்றி
சொல்ல காலம் காத்துக் கொண்டு
தான் இருக்கிறது. நிதானித்து
நின்று கேட்கத் தான்
எனக்குத் திராணியில்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நீல வானமும், நீளும் தூரமும்
நிறுத்தமற்ற நடையும்
குறைவே இல்லா என் உளறலும்
உன்னுடன் நடக்கையில் மட்டும்
சலிப்பதே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

யாருமற்ற வரப்பின் ஓரத்தில்
என் மேனி படரும் உன் ஒளியின்
கீற்று உணர்த்தும் காதலை
காற்றோடு கதையாய் பேச நினைத்தும்
நீ நீரில் நின்று நிதானித்து கேட்க
நிழலாய் படிந்திருப்பதை பார்த்து
பேச்சற்று நிற்கிறேன் பகலோனே…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

கட்டியெழுப்பப்படும் முன் ஒரு நாள்
நாமும் உடைந்து, உருகுலைந்து
ஒன்றுமில்லாமல் போவாம் என்கிற
அறிதல், புரிதல் இருந்திருந்தால்.
இன்று என் இருத்தலைத் தொலைத்து
வேடிக்கையான வெற்றிடத்தைப்
போல இப்படி வீழ்ந்து போய்
நின்றிருக்க மாட்டேன் இல்லையா…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நின்று நிதானமாய் உள்ளிருந்து
அவியும் உணவு வெம்மையின்
வேட்கைக்குள் ஒளிந்திருக்கிறது
எ(இ)ன்றுமே முடிவுறாது நீளும்
எனது பசித்து இருத்தலின் நீண்ட
துயரம்…

ந.வெங்கடசுப்பிரமணியன்ரமணியன்

 

புரிந்து ஏற்றுக் கொள்ளுதலின்
எச்சமும், மிச்சமும், காதலும் ஒரு நாள்
புரிந்து கொண்டவனையே சிலுவையில்
ஏற்றி சுவற்றில் அடித்து நிற்க வைக்கும் என
ஏறி நின்ற பின்பு கூட புரியவேயில்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

என்னை அறிந்து கொள்ளும்
எனது தனித்திருத்தலின் நீண்ட பயண
தூரத்திற்குள் நான் மட்டுமே இல்லை
என்பதை உணர்ந்த நொடியில்
அதன் நீளம் முடிவற்றதாகி விட்டது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

உருண்டோடி விட்ட காலத்தின்
பின்னே மிதிக்க முடியா
மிதி வண்டியின் மிச்சமாய்
தொடர்கிறது இந்தப் பயணம்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

மனித மனமும், மரபும், மண்ணும்
மாற்றம் எனும் பெயரால் மலடாகி
மக்கி விட்டாலும், மாற்றத்தாலும்
மாறாத மரபை மதிக்கும் மாண்பை
பார்த்ததும் மனம் மகிழ்ந்து போய்
மரபின் வாசலில் மண்டியிட்டு விடுகிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

வைகறை வெளிச்சம் பரப்பும்
வண்ணங்கள் கொடுக்கும்
விடியலின் வெகுமதியை
காரிருள் கார்மேகமாய் கரையும்
நேரம் வரை காத்திருந்து
கவிதை ஆக்கினேன்
யட்சியின் கண் கொண்டு…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

வாழ்க்கையின் வட்டத்திற்குள்
வசப்படாத வடிவங்களை
எந்த வண்ணம் கொண்டு
வசப்படுத்துவது என்பது
வசப்படாமலே இருப்பது தான்
வாழ்க்கையின் வடிவமோ என்னமோ…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

ஒற்றைக் காலணி ஆகிவிட்ட
என்னுடைய கதைகளைக் கேட்க
என்னைப் பயன்படுத்திய பாதங்கள் வரும்
என நம்பும் என் நம்பிக்கையை நினைத்து
நீர் சிரித்துக் கொண்டே இருக்கிறது.
அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியாததால்
நீரில் மிதக்கும் என் பயணத்தின் காத்திருப்பு
அர்த்தமற்றதாய் நீண்டு கொண்டே இருக்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

இணையாய் நடக்கும் இந்த
ஒற்றை காலடித் தடத்தினுள்
ஒளிந்திருக்கிறது தன் இணையின்
இயல்பை இயல்பாய் ஏற்றுக் கொள்ள
முடியாது இறங்கியதால் தடுமாறி
தடம் பதியாது வீழ்ந்து போன
மற்றொரு காலடித் தடத்தின் வலி…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

காலமே முடிவு செய்கிறது தன்
ஒளிப் படரும் நிழலின் வடிவத்தை.
நாம் தான் நம்பிக் கொண்டிருக்கிறோம்
நம்முடைய நிழல் நமக்கானது என்று.
காலம் வரையும் நிழல் படத்தின் முன்
நம் முழு வடிவத்தைக் காணக்
காலமெல்லாம் காத்திருந்து கற்றுக்
கொள்ளாத வரை நம் வடிவம்
இறுதி வரை நமக்கானது இல்லை …

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

உன் மீது படராது ஒளி ஒளிந்து
விளையாடிய முற்றத்தின் பாதைப்
புல் வெளிக்குள் என்னுள் படர்ந்து
ஒளிந்திருக்கும் ரகளையான
ரசிகனின் உயிர் நரம்புகள்
மீட்கப்பட்டன…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

மாலை மரத்தின் மடி தவழ்ந்த படி மறையும்
ஒவ்வொரு இரவின் தொடக்கமும்
உன் மறைவின் தீண்டல் கொடுக்கும்
வண்ணங்களால் நிறைந்திருக்கின்றன
அந்த இரவின் இருள் முழுவதும்
உன் தீண்டலின் நிறைவே என்னை
உன் மறு தீண்டலின் வெம்மைக்காக
வைகறையின் வெளிச்சம் வரை
காதலின் கதகதப்பான காத்திருப்பின்
மீது உறங்க வைக்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நீரின்றி அமையாது உலகு
என்பதன் நிகழ்காலச் சாட்சியாய்
நீந்தி விளையாடிய நிலத்திலேயே
இப்படி நிலையற்று வீழ்ந்து
போவேன் என என் நினைவுகளில்
கண்ட கனவுகளில் கூட கடைசி வரை
கண்டுணரவே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

மக்கா மரணத்தில் மயங்கி
மக்கும் மரணங்களை மதியாது
மாறாமல் நீளும் மனித மனதின்
மாசான உடல் இந்த மண்ணில்
மக்கிப் போக வக்கற்று வழியே
இல்லாமல் வாழ்நாள் முழுமைக்கும்
உயிர் போகும் வரை உடல் வலி
சுமந்தே வாழும் வரத்தை வலிந்தே
வாங்கிச் சுமக்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

சுவர் அடைத்து உன் அடிமை என்றான
பிறகு வாழ வ(லி)ழி தெரியாது ஓரமாய்
உட்கார்ந்து உதிர்ந்து கொண்டிருக்கிறேன்,
உன் அலட்சியக் குப்பையின் குன்றிக்
குறையாத மாசோடு மக்கிப் போக
வழியே இல்லாமல்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அந்த நீல வானத்தோடு நீரின் மேல்
நிழலாடும் என் அழகினை ஆராயும்
எவருக்கும் என் தனித்திருத்தலும்,
தவிப்பும், தளர்ந்து போதலும்
தவிர்க்கவே முடியா தவம் போல்
வரம் கிடையாது வாடி நிற்கும்
என் வாழ்நாளின் மிச்சத்தை
மீட்டெடுக்கும் மனம் மட்டும்
வரவே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்ரமணியன்

 

இந்த மரபான மண்ணின்
அழகை அர்த்தமற்றதாக்க
ஆயிரம் அதிசயங்கள் வந்தாலும்
அர்த்தமுள்ள அழகான மரபு
அறிவியலின் அற்புதங்களுக்கு
முன் அவை அனைத்தும் அர்த்தமற்ற
அலங்கோலங்களாகி விடுகின்றன…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நம் வாழ்வியலின் அற்புதம் கண்
எதிரே கரைந்தபடியே கண்ணீரோடுக்
காத்திருக்கிறது. நாம் தான் அது பறி
போவதே தெரியாமல், நகர வாழ்வில்
நசுங்கி, நகர முடியாமல், இருத்தலின்
இயல்பைத் தொலைத்து, இம்சையின்
இயல்பில் சிக்கி, சிந்திக்க முடியாமல்,
சிறப்பாய் இருப்பதாய் நம்பி, சிரித்துக்
கொண்டே சிதறிக் கொண்டிருக்கிறோம்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

எரிந்து சாவேன் என்று தெரிந்தும்
எரிதலினுள் தன்னை முழுதாய்
ஒப்புக் கொடுக்கத் தயாராய் இருக்கும்
மரத்தின் கிளைக்குள் மறைந்திருக்கிறது,
உதிர்ந்து, உடைந்து, உருகுலைந்து
சாம்பலாய் போனாலும் மாறாத
இந்த மண்ணின் மீதான மகத்தான
மீளாக் காதலின் சாட்சி…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

இயல்பான இறை விடியல்
கொடுக்கும் காலை ஒளியின் வழியே
நிறை அறியா மனம், நிறைவாய்
உணர்ந்த தருணத்தில், தொடங்கும்
நாள் தரும் உந்துதல் கொடுக்கும்
உத்வேகம், உதய நேரத்திலிருந்தே
உதிரமாய் உருக்கொண்டு ஓடுமே
உயிராற்றலாய்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

ஒளி ஊடுருவும் ஜன்னலோரக் காற்றும்
தீட்டிய வண்ண வரை கலையும்
மண் மறைந்திருக்கும் கோப்பையும்
விருட்சமாக விரும்பும் விதையின்
வீரியமும் பக்குவமாய் பற்றிப் படரக்
காத்திருக்கும் பச்சைப் இலையின்
பார்வையும் பறை சாற்றுகிறது இந்த
இருத்தலின் மீதான தன் இறவாக் காதலை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

கிளையின் மீதிருந்து சருகாகி உதிர்ந்து
விழுகையில் நான் சத்தமிடவே இல்லை.
என் சத்தம் கூட உன்னை சலனப்படுத்தி
விடக் கூடாது என்பதால். ஆனாலும்
உன் மேனிப் பிரிய மனமில்லாமல்
உன் மடி மீது மரணித்தே கிடக்கிறேன்
மரணமில்லா உன் நினைவுகளை
சுமக்கும் என் மனதோடு…

ந.வெங்கடசுப்பிரமணியன்ரமணியன்

 

உன்னுடைய வருகைக்காக என் காத்திருப்பின்
கதவுகள் எப்பொழுதுமே திறந்தே கிடக்கின்றன.
காத்திருந்த கடவுளின் நிலையே சிலை
என்றான பிறகு, நீ என்ன என்கிற உன்
புரிதலற்ற புறக்கணிப்பின் சுவடுகள்
என்னைச் சுவடே இல்லாமல் ஆக்கும் நாள்
அருகிலேயே ஆர்ப்பரிப்போடு கவனமாய்
காத்திருக்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

ஒளியாய் நீ பின்னால் மறையக் காத்திருக்க,
நான் மரமாய் மறுப்பேதுவும் சொல்ல
முடியாமல் தவிர்க்க. என் மனமோ உழுது
போட்ட நிலம் போல் நிரின்றி நிராதரவாய்
நிற்பதை மறைக்க மறக்க மனமின்றி
மகிழ்வாய் இருப்பது போல இயல்பாக்கிக்
கொள்கிறேன் என்னை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நீளும் உன் நிழலின் நீளம் கண்டு பசுமையாய்
நின்ற என் மனம் பதபதைக்கிறது, என் மீது
படரும் உன் நிழலின் பிரம்மாண்டம் என்
நிஜத்தை நிர்மூலமாக்கி, நின்ற தடமே தெரியாது,
நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் என்
இருத்தலின் இடத்தை, இயல்பிலேயே இல்லாமல்
ஆக்கும் அதிகாரத்தின் அழிவு, உன்னை ஆட்க்
கொண்டு இருப்பதால்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

கிணற்றுக் கரையில் ஒளிக் மறையும் மாலையில்,
நீரில் நின்று விளையாடும் மேகத்திடம்,
ஒரு கதைச் சொல்லியாய் உந்தன் வருகைக்காக
எந்தன் பாதை பகிரக் காத்திருக்கும் கதைகள்
ஏராளம், ஆனாலும் என் கதையின் கதறலைக்
கேட்க மனமில்லாமல் உன் பாதச் சுவடுகள்
மட்டும் மாலை முயங்கும் முன்னே மண்ணுக்குள்
மாயமாய் மறைந்து விடுகின்றன…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

வாயின் வக்கனையான ருசிக்காக அரை பட்டு
வீதியோரத்தில் விற்பனைக்காக வெளிச்சத்தில்
வலியோடு கிடக்கிறேன். விலை கொடுத்து
வாங்கிய பின் குளிருக்கும், சூட்டுக்கும்
இடையிலான எனது மரண விளையாட்டில்
சத்தமே இல்லாமல் வெந்து தணிய வேண்டும்.
இல்லையேல் புளித்து விட்டதாக அதே வீதியின்
நடுவில் வீழ்த்தி வீசப்படுவேன் நாதியே இல்லாமல்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

தூண்டிலின் கரம் எப்பொழுதும்
விழிப்புடனே இருக்கிறது. சிக்கிய
மீனின் துடிப்பை நின்று வேடிக்கைப்
பார்ப்பதற்காக. அந்த உயிர் துடிப்பின்
வலி அடங்க வெகு நேரம் ஆகவில்லை.
துடித்தது உயிர் மட்டுமே என்பதால்
உடனே அடங்கி விட்டது. ஆனால்
நிஜத்தின் வலி நீளமானது இல்லையா?
அதன் நீண்ட பயணம் மட்டும் இன்றும்
நிற்கவே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்ரமணியன்

 

பறப்பதை பறித்து பக்கத்தில் நிறுத்தி விட்டால்
வேடிக்கை பார்க்கலாம் என்பது வேதனையான
மனநிலை பறக்காமல் நிற்பதன் வலியை அந்தப்
பறவையிடம் கேட்டால் பக்குவமாய் சொல்லும்.
ஆனால் நான் ஒன்றும் பறவையில்லையே
அதனால் பழுதாகிப் படைக்கப்பட்டே பாவியாய்
கிடக்கிறேன் பறக்க முடியாமல் பரிதவிப்போடு…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

பறத்தலின் சுதந்திரத்தை அதன் சிறகிடம்
கேட்டால் சொல்லும். இரை தேடலின்
இயலாமையை அதன் இதயத்திடம்
கேட்டால் சொல்லும். அகப்பட்டதின்
அச்சத்தை அதன் அகத்திடம் கேட்டால்
சொல்லும். ஆனால் அந்தப் பறவை
சொல்வதை கேட்கத் தான் அந்தக்
கூண்டிடம் உயிரென்ற ஒன்று இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன
காணும் நாள் எல்லாம் காற்று மட்டுமே
கவலையின்றி வந்து செல்கிறது. மூடிவிட்டேன்
என்றால் மூச்சு விட முடியாது என்பதால் ஓர்
முடிவின் வருகைக்காக காத்திருக்கிறேன்.
என் காத்திருப்பின் கதவுகள் தட்டப்படும்
நாள் வரை தாழிடாமல் தனித்திருப்பேன்
தவிப்பின் மிச்சத்தோடு…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

பயணம் முழுமைக்கும் பாதங்கள்
பக்குவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இருந்தும் இயல்பை தொலைக்கும்
தருணங்கள் தன்னியல்பாய் தோன்றுவதின்
சூட்சம சூத்திரத்தை மட்டும் என்ன
தான் சுதாரிப்பாய் அணுகினாலும், அடி
வாங்கி கிழிந்து தொங்கும் தருணங்கள்
அற்புத ஆசிர்வதமாய், அழையாமல்
அட்டகாசமாய் பக்கத்து இருக்கையிலேயே
பக்குவமாய் வாழ்த்துச் சொல்ல
வந்தமர்ந்து விடுகின்றன…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

என் தனித்திருத்தலின் அதிர்வு மின்சார
கம்பிகளின் ஊடே மெதுவாய் மெல்லப்
பரவியபடியே இருக்கிறது. ஆனாலும்
ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய்
அமர்ந்திருக்க பயிற்சித்துக் கொண்டே
இருக்கிறேன். இருந்தும் மனம் ஏனோ
இரட்டை வாலாய் கால்களின் இடையே
தொங்கியபடி நடனமாடி என்னை
நகர்ந்து செல்ல எத்தனித்துக்
கொண்டே இருக்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

பயணச் சீட்டின் பின்னே இருக்கும்
கிறுக்கல்களுக்குள் ஒளிந்திருக்கும்
காலத்தின் நினைவுகள் சொல்லும்
கதைகள் கேட்டு, கண் மூடிக் காலத்தின்
பின்னால் ஓடும் என் நினைவுகளை
நிறுத்தி வைக்க முடியாமல், கலங்கி,
கண் அயர்ந்து நான்காய் மடித்த
சீட்டினை மார்பின் ஓரத்தில் பதுக்கி
வைத்து மடி சாய்கிறேன் அந்த
இருக்கை ஜன்னலின் ஓரமாய்…

ந.வெங்கடசுப்பிரமணியன்ரமணியன்

 

மாலை நேரமும் மங்கும் வெளிச்சமும்
மனதை மயக்கமுறச் செய்தாலும்,
மாலைத் தாண்டி வரும் நித்திரையின்
நினைவுகள் நெஞ்சில் நிழலாட, மங்கும்
வெயிலின் நிஜமில்லா நிழல் சிறைக்
கம்பிகளின் பின்னே நின்றாடும்
நிஜங்களின் நிர்வாணம் நித்திரையைத்
தொலைக்கும் இரவுகளாய் நீண்டு
கொண்டே இருக்கின்றன…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

என் உயிர் வேரின் மீது உன் வெளிச்சக் கரங்கள்
மீட்டும் வீரியத்தின் அதிர்வு தாளாமல் என்
மேனியின் இதழ்கள் சருகுகாகி உதிர்ந்து
வீழ்ந்து கொண்டே இருக்கின்றன. இருந்தும்
எந்தன் மேனி மீட்டும் உந்தன் அதிர்வின்
பரவலைத் தடுக்க வழி தெரியாமல் என்
வேரின் வீழ்தலை விட்டுக் கொடுக்க முடியாது
விக்கித்துப் போய் விரும்பமே இன்றி
இயலாமையின் இம்சையில் இமைக்
கொட்டாமல் நிற்கிறேன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

பூட்டியபடியே முகம் திருப்பிக் கொள்ளும்
உந்தன் முகத்தை காணாது அந்தக் கதவு
இடுக்கின் இடையில் இம்சையாய் தேடும்
எந்தன் தேடலின் வலி கடைசி வரை
இமை மூடி திரும்பி நிற்கும் உந்தன்
கண்களால் கண்டு கொள்ளப்படப்
போவதே இல்லை என்கிற உண்மை
உணர்த்தும் தருணங்களின் தவிப்பை
சொல்ல எனக்கான வாய்ப்பும் இல்லை,
வார்த்தைகளும் இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

உன் வெளிச்சம் வர விருப்பப்படாத
அந்த இருட்டிற்குள் என்றைக்குமே
என்னை ஒளித்துக் கொள்கிறேன்.
உனக்கே வர விருப்பமில்லாத போது
ஒளிப்படராத எனது ஆன்மாவின் குரல்
ஒலி மட்டும் ஓர் ஓரமாய் ஒன்றுமில்லாமல்
ஓய்ந்து போய் அந்த இருண்மையின்
இரக்கமில்லா பக்கத்திற்குள்
பதற்றத்தோடு உன் வெளிச்ச முகம்
பார்த்து மூச்சடைத்து நிற்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

விட்டில் பூச்சி வீழும் இடத்தை
அண்ணாந்து பார்த்தேன். ஆயிரம்
பூச்சிகளின் உயிர் பிரியும் ஓலம்
அதன் உள்ளே ஒலித்துக் கொண்டே
இருந்தது. இருந்தும் அது ஒளிர்ந்து
கொண்டே தான் இருந்தது. விட்டில்
பூச்சிக்குத் தான் தன்னுடைய வீழ்தலை
நிறுத்தும் வ(லி)ழி தெரியவில்லை.
காரணம், அதன் உயிர் போகும் வரை
அது அண்ணாந்து பார்க்கவே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

ஒளி வீசியவனைத் தூக்கி ஓரமாய்
இறுத்தி விட்டார்கள், கேட்பார் அற்று
கிடக்கும் என்னை ஏளனமாய் பார்க்கும்
கண்களை கண் கொண்டு காணவும்
முடியாமல், ஒளி வீசிய என் மேனியின்
மணிகள் வீழும் வீழ்ச்சியை நிறுத்தவும்
முடியாமல், உதிரும் சுவரின் சுண்ணாம்பு
காரைகளின் நடுவே நாட்களை எண்ணியபடி
பத்திரமாய் இருப்பதாய் பாசாங்கு
செய்து கொண்டிருக்கிறேன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்ரமணியன்

 

நேற்றய செய்தி இன்றைய சிற்றுண்டியின்
கீழே சிரித்துக் கொண்டிருந்தது. செய்தி
எல்லாம் ஓர் நாள் துடைத்து தூக்கி எறியப்படும்
என்று செய்தியானவர்களுக்கே தெரியாது
போல, செய்தியாகும் முன் சிறிது
யோசித்திருக்கலாம் என வாயில்
வடையுடன் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
அதற்குள் வடை வீழ்த்திய எண்ணையின்
பரவலில் அந்தச் செய்தியும் காணாமல்
போயிருந்தது, கூடவே அந்த வடையும் தான்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

மூடிய ஜன்னலின் பின்னால் இருக்கும்
என் நினைவுகள் மீது வெளிச்சம்
படாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறேன்.
காரணம் வெளிச்சம் என் மீது படும் நாளில்,
என் நினைவுகள் மீட்டப்பட்டு மீள முடியாது
போனால், மீண்டும் என்னை மீட்டெடுக்க
என்னாலே முடியாது என்பதால், திறக்காத
ஜன்னலின் பின்னால் திறக்கும் திராணி
இன்றி நிற்கின்றேன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நன்றியின் வால், வார்த்தை எனும் வாளால்
வீழ்த்தப்படும் தருணம் கொடுக்கும் சோர்வு
வேண்டுமானால் என்னை நகர விடாமல்
(நிறுத்தி) வீழ்த்தி இருக்கலாம், இருந்தும்
நன்றியின் மீதான என் வாலின் நம்பிக்கையின்
இருத்தலை வாழ்வின் இறுதி மூச்சு எந்த
வாளாலும் என்னுள்ளிருந்து துடைத்தெறிய
முடியாது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அந்தத் தேநீர் கோப்பைகள் இரு கரங்களின்
பற்றுதலுக்காக காத்திருந்தன. ஆனால்
அந்தக் காத்திருப்பு ஒரு உடலின் இரு
கரங்களுக்கானது அல்ல. ஓர் புள்ளியில்
இணைந்த இரு வேறு உடலின்
கரங்களுக்கானது. காரணம் அந்தக்
கோப்பைக்கு தெரியும் இரு ஆன்மாவின்
ஒற்றைக் கரங்கள் தான் தன் ஆன்மாவை
அர்த்தப்படுத்தும் என்பது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

வெயிலின் சூட்டில் என் வேரின் ஈரம் வற்றிப்
போயின, என் தலையும் கொய்யப்பட்டன,
ஆனாலும் இரத்தமில்லாமல் வற்றிப் போய்
ரணமாய் நின்று கொண்டிருந்தேன்,
என் வேர்கள் ஓர் நாள் ஈரமாகும் என்கிற
நம்பிக்கையோடு…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

படிக்கட்டுகளை மட்டுமே பார்த்து மேலேறிக்
கொண்டிருந்தவனுக்கு ஜன்னலுக்கு வெளியே
காத்திருந்த வானம் தெரியவில்லை. அந்த
ஜன்னலை வருடி வீசிய காற்றின் தொடுகை
தெரியவில்லை. ஜன்னலை கடந்து வந்த
வெளிச்சம் தெரியவில்லை. அவன் ஏறுவதை
நிறுத்தியதின் இறுதி தளத்தின் மேலே அந்த
வானதில் இருட்டு மட்டுமே மிச்சமிருந்தது…

ந.வெங்கடசுப்பிரமணியன்ரமணியன்

 

வெளிச்சம் வீசிய வார்த்தைகளின்
வரிகளை வாசிக்க வழி தெரியாமல்
நின்றவனை, நிழலின் வரிகள்
நிதானமாய் வாசித்தது. ஆனால்
அவன் மட்டும் எதனையும் கடைசி
வரை வாசிக்கவே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

காயத்தின் மீது கரிசனம் காட்டாது
கடவுளிடம் காணிக்கை செலுத்தி
கதறியவனைப் பார்த்து, அந்தக்
காயமே கடவுளுடையது தான்
என்பதை அந்தக் கடவுளே
கண்டடைந்து கதறிச் சொல்லியும்,
அதனை அந்த மனிதன் கடைசி
வரை கண்டுணரவே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

தன்னை அருந்தக் காத்திருக்கும்
அந்த உதடுகளைக் காண முடியாத
அந்தப் பச்சை இலையின் பரிதவிப்பை,
அந்த உதடுகள் உணராமல் உதறிவிடும்
என்று அந்த கோப்பையின் நுனிவரை
வந்து எட்டிப் பார்த்த அந்த இலைக்கு
இயல்பிலேயே புரியவே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

எத்தனையோ நாட்கள் அந்த மணியின்
ஓசைக்காக என் கால்கள் மறக்காமல்
கருணையோடு காத்திருந்தது நினைவு
அடுக்குகளின் பின்னால் இன்னும்
மிச்சமிருக்கிறது. ஆனால் இன்றும்
அந்த மணியின் ஓசையை மறக்காத
கால்கள் ஓசை கேட்டும் மறந்தும்
கூட ஓட வில்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

என் காத்திருப்பு காலத்தின் நீளத்தில்
நிலைக் கதவு மட்டுமே இன்னும்
மிச்சமிருக்கிறது. இருந்தும் என்
காத்திருப்பின் கவனம் மட்டும்
களைத்தும் போகாமல், களைந்தும்
போகாமல், கண்ணும் இமைக்காமல்
அந்த ஏகாந்த நீல வானத்தின் கடைசி
புள்ளி வரை தொடர்ந்து கொண்டே
தான் இருக்கும்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நதியின் நீரோட்டத்தில் நீந்திக்
கொண்டிருந்தவனை கூட்டி வந்து
கரையில் கிடத்தி விட்டு துடுப்பை
தூக்கிச் சென்ற கால்களை தடுக்க
திராணியின்றி வீழ்ந்து கிடக்கின்றேன்.
அந்த நதி நீர் வற்றிப் போவதற்குள்
தூக்கிச் சென்ற கால்கள் தூரத்திலாவது
கண்களில் படும் எனும் நம்பிக்கையோடு…

ந.வெங்கடசுப்பிரமணியன்ரமணியன்

 

இன்று என் வெப்பத்தின் வெம்மை
தாளாமல் என் மறைவின் நேரத்திற்காக
மகிழ்வாய் காத்திருக்கும் மனம். கடந்த
காலம் முழுமைக்கும் நான் இயல்பாய்
இருந்த நேரத்தின் இடற்பாடுகளை
இரக்கமே இல்லாமல் இயற்றியதை
வசதியாய் மறந்து விடுகிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

ஒவ்வொரு நாளும் என்னுள் ஊடுருவிப்
பரவும் ஆயிரமாயிரம் சூடான வார்த்தைகளின்
காயங்களை எனது பிரம்மாண்ட நிழலினை
கொண்டு எனது வேரினை சென்றடையாமல்
அழித்துக் கொண்டே இருக்கிறேன். காரணம்,
என்னுள் ஊடுருவும் வார்த்தைகளின் மீது படும்
வெளிச்சத்தின் சூட்டினை எனது வேர் தாங்காது
போனால், என் இருத்தல் இங்கு அர்த்தமற்றதாகிப்
போகும் என எனது வேருக்குத் தெரியும் …

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

தேவையின் இறுதியில் வீண் என்று
வீசப்பட்டு வீழ்ந்து போன பின்னும்,
இந்த உடல் உரமாக உயிர்ப்போடு
இருப்பதன் உறுதி தான், இந்த இருப்பை
இறுதி வரை ஆழமான அழகோடு
அர்த்தப்படுத்திக் கொண்டே இருக்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

என்ன தான் வாழ்வின் ஒவ்வொரு
திருப்பமும் வெளிச்சத்தின் கதவை
அடைத்து ஆடித் தீர்த்தாலும், அந்த
ஆட்டம் கற்றுத் தரும் பாடம்,
அகத்தினுள் பாடமாய் பதிந்து விட்டால்,
அத்திருப்பதிலேயே அவை படிகளாய்
பக்கத்தில் இருப்பது பக்குவமாய் பார்வைக்கு
புலப்படும் சூட்சமமே மனதினை மனிதத்தோடு
மேலேற்றி விடுகிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

உழுது முடித்து உரமிட்ட பின், என் உயிர்
என்னில் இருக்கிறதா என்கிற சந்தேகத்தை
எனக்கே தீர்த்து வைக்க என் மடி சாயும்
சிறகுகளை கூட தலை சாய விடாது
ஒற்றைக் குச்சியில் சமாதானக்
கொடியினை பறக்க விட்டு சமாதி
ஆக்கி விட்டது இந்த மனித மனம்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

உன் புரிதலான மாற்றத்தினை எதிர்
நோக்கிய பயணத்தில் ஒரு நீண்ட
நெடிய காத்திருப்பின் பின் இருக்கும்
வலி கொடுக்கும் அழுத்தத்தின்
நீளம் நீண்டு கொண்டே போகையில்,
சென்று சேர வேண்டிய தூரத்தின்
அளவு அகத்தினுள் ஆற்றாமையாய்
அரற்றிக் கொண்டே இருக்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

என்னைப் பற்றி பரவுதலில் உள்ள
உன் வேகம் என் மேனியெங்கும்
வரையும் கோடுகள் என்னைப்
பிளந்த படி மேலேறிக் கொண்டே
இருக்கின்றன, உன் பரவுதலை
தவிர்க்கவும் முடியாத, என்னை
தக்க வைக்கவும் முடியாத
போராட்டத்தில் தன்னிலையின்றி
தவித்துக் கொண்டே இருக்கிறேன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அந்த வெண் மேகத்தின் ஈரமான கரங்கள்
வாடியே வற்றிப் போன என் தேகத்தின்
இலைகள் மீது பற்றிப் படரும் நாளுக்காய்
சிறகுகள் வந்தமராத கிளைகளோடு
காலத்தின் கண் முன்னே கதறியபடியே
காத்திருக்கிறேன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

என் கனவுகளில் வந்து செல்லும் கதவுகளில்
எல்லாம் உன் தூரிகை தின்று தீர்த்த
வண்ணங்கள் வரைந்த மிச்சத்தின் சுவடுகள்
படர்ந்திருந்தன, இருந்தும் கனவிலும்
திறவாத கதவின் பின்னால் கதைகள்
சொல்லக் காத்திருக்கும் உந்தன்
கண்களின் கரிசனம் மட்டும் கடைசி
வரை கிடைக்கவே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அன்று ஓர் நாளில் வெம்மையின் பிடியில்
வெறுமையாய் போன என் வானத்தில்
வண்ணம் தீட்ட வந்து போன உன் தீட்டலின்
மீச்சங்கள் அடங்கு முன் இறுதியாய்
இறுக்கப் பற்ற நினைத்தும் இயலாத
இரவுகள் என்னை இம்சித்துக் கொண்டே
இருக்கின்றன…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

வான் உயரம் வளர்ந்து நீக்கமற நிழலாய்
நின்ற பின் வாடிப் போக மாட்டேன் என
நம்பி தன் நாவின் ருசித்தலுக்காக காணும்
பொழுதெல்லாம் வரிசை கட்டி வாகாய்
கல் ஏறிந்ததில் காய்ந்து போன கரங்கள்
கழன்று விழுந்து என் அங்கத்தின் அடர்த்தி
அலங்கோலமாய் ஆகிவிட்டது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அந்த ஜன்னல் கதவுகள் மூடிய பின்னும்
மூடிய கதவின் படிக்கட்டுகளில் பாந்தமாய்
வைத்து விட்டுப் போன உன் காலின்
அணிகலன்களை மட்டும் அர்த்தமற்று
ஆராய்ந்து அரற்றிக் கொண்டிருக்கும்
என் இயல்பினை இடைநிறுத்த இயலாமல்
தவிக்கின்றேன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அந்த வாசலின் தடங்களில் நீண்ட காலமாய் நீ
வந்து சென்றதற்கான தடயங்கள் எதுவுமில்லை,
பழசாகி பழுதாய் போன கதவுகளை திறந்து
பார்க்கும் திராணியும் எனக்கில்லை, இருந்தும்
அக்கதவு திறக்காதா என அந்த நிலை கதவின்
முன்னே என் கண்கள் கலங்கியபடி நிலைக்
குத்தி நகர மனமில்லாமல் நிற்கின்றன…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

ஒற்றை புள்ளியில் இருந்து மேல் ஏறிய
எந்தன் கிளைகளின் பரவல் யாவும்
அந்தரத்தில் அலைபாய்ந்து கொண்டே
இருக்க, காலத்தின் வேகத்தில் காற்றில்
காணாமல் போன என் கிளைகளின் பச்சை
இலைகளைத் தேடிக் கிடைக்காத சிறகுகள்
யாவும் வந்தமராது மறைந்து போகின்றன…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நீ வந்து போன தடயத்தின் மிச்சங்கள் என்
மனதின் இடுக்குகளில் சிக்கிக் காற்றில்
அலைபாய்ந்தபடி அரற்றிக் கொண்டே
இருக்கின்றன, அந்த அரற்றலை அகற்ற
மனமின்றி ஆதாரமாய் விட்டு வைத்திருக்கிறேன்
காரணம் இன்றும் என் கனவுகளில் கூட
எஞ்சிருப்பது அந்த ஒற்றைத் தடயம் மட்டுமே…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நீ வந்து சென்றதன் மிச்சம் உன்
காலடித் தடங்களின் மீது வெளிச்சம்
பட்டு வெளிப்படுகையில், உன்
வருகையை காண முடியாத இந்த
மனம் அந்த மணலை போல் காற்றில்
கரைந்து காணாமல் போகிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

என் கிளை நுனியின் நீளம் தொட
முடியாநீல வானத்தில் நின்றாடும்
நிலவின் ஒளியில், ஓயாது உறவாடும்
காற்றின் காதுகளில் இரவிலேனும்
ஈரமான மனதோடு என் மேனி தொட
மாட்டாயா என வறண்டு போன
வெம்மையின் வேதனையோடு
வேண்டியே நிற்கின்றேன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

தொடுவானத்தின் தூரத்தில்,
மறையும் மாலையில், மடி மீது
தவழும் உந்தன் வெளிச்சத்தின்
பரவலை தாங்கியபடி நிற்கும்
எனது இருத்தலின் பயணம்
இடைநில்லாது இடைவெளியின்றி
இலக்கினை நோக்கி…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அந்த நீல வானத்தில் அத்தனை இரவுகள்
வந்தாலும் எத்தனை மேகங்கள் சூழ்ந்தாலும்
உண்மை என்கிற ஒளியின் ஒற்றைக் கீற்று
பரப்பும் நம்பிக்கையின் வெளிச்சம் மட்டும்
என் இருத்தலின் இயல்பை இலகுவாக்கிக்
கொண்டே இருக்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நம்பிய மழை பெய்யாமல் போகலாம்,
நம்ப வைத்த வார்த்தைகள் குப்பையில்
வீசப்படலாம், நீரின்றி காய்ந்து போய்
கருகினாலும் அந்த நிலத்தின், நிஜத்தின்
நிர்வாணம் மட்டும் உண்மை எனும்
பெருவெளியில் நீக்கமற நின்று
விளையாடும்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

நிஜத்தை புரிந்து ஏற்றுக் கொள்ள முடியா
காதுகளிடம், நிழலில் பேசிக் கொண்டே
இருக்கிறேன். இருந்தும், நிஜம் நின்று,
அடித்து, கொன்று, தின்று நிழலையும்
சேர்த்தே நிர்மூலமாக்கி அடையாள மற்று
வீழ்த்திக் கொண்டே இருக்கிறது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அன்று ஓர் நாள் இந்தக் கதவுகள்
திறக்கும் நிமிடத்திற்காக என் மனம்
அரற்றிக் கொண்டே இருந்தது, இன்று
அதே கதவு காலம் தின்று தொலைத்த
எச்சத்தின் எழும்புக் கூடாய் நிற்கையில்
காணத் திராணியற்ற மனதின் அரற்றலே
அழுகையாய்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

உந்தன் வருகை நேரத்தை வரவேற்க
வாசலில் காத்திருந்தவனின் கால்கள்
களைத்திருந்தாலும், கண்கள் மட்டும்
கதவின் காலடியில் நிலைக்குத்தி
கனவுகளோடு நின்றிருந்தவனுக்கு
காலத்தால் உந்தன் வருகையின்
அந்தக் கடைசி பக்கம் மட்டும்
திருப்பப்படவே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அந்தத் தார்ச்சாலையின் தகிப்பும்,
என் பாதத்தின் பரிதவிப்பும் இந்த
நீண்ட பயணத்தில் பக்குவப்பட்டு
விட்டன, இருந்தும் பயணத்தில்
பக்கத்தில் பயணப்பட்ட எந்த உயிரும்
இறுதி வரை இயல்பாய் உடன் வராது
என்கிற இயல்பை இருத்தலாய் இருத்தி
பாடம் கற்றபடியே நாடோடியாய்
பயணிக்கிறேன்…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அந்த இரும்புக் கம்பியினுள் ஒளிந்திருக்கும்
ஒலியினை மீட்டும் கரங்களாய் மாறிட
ஆசைப்பட்ட மனதினை மறக்காமல்
மறைத்து வைத்திருந்தேன். காலத்தின்
கால்களில் சிக்கி அது சிதைந்து
போனதைச் சொல்லும் கதைகள்
கேட்க இன்று காதுகளே இல்லை…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

பகிரப்பட வேண்டிய கதைகளின்
அடர்த்தியை குறைத்தும், வெம்மை
குறையா அந்தக் கதைகள், ஈரம்
காயாத அந்த மேஜையின் மீது
அதனைக் கேட்கும் காதுக்களுக்காக
காத்துக் கொண்டே இருந்தன…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அந்த நீண்டக் காத்திருப்பின் பக்கங்களில்
அலைந்த காற்று, இரைச்சல் எதுவுமின்றி,
உந்தன் வருகைக்காக நேரத்தை கொல்ல
முடியா இம்சையோடு, இயல்பை தொலைத்து
அலைபாய்ந்தபடி, தன்னையும் தொலைத்தபடி
கரைந்து பரவிக் கொண்டே இருந்தது…

ந.வெங்கடசுப்பிரமணியன்

 

அன்று ஓர் நாள் இந்தக் கதவுகள்
திறக்கும் நிமிடத்திற்காக என் மனம்
அரற்றிக் கொண்டே இருந்தது, இன்று
அதே கதவு காலம் தின்று தொலைத்த
எச்சத்தின் எழும்புக் கூடாய் நிற்கையில்
காணத் திராணியற்ற மனதின் அரற்றலே
அழுகையாய்…

ந.வெங்கடசுப்பிரமணியன்