தனிமை எனும் அழகு…
பொதுவாகத் தனிமைப் பற்றி இங்கு மோசமாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் நாம் எதையுமே முழுமையான ஈடுபாட்டுடனும், காதலுடனும் செய்வதில்லை. எதையும் என்றால் வேலையிலிருந்து, வீட்டை கவனித்துக் கொள்வது வரை எதையுமே ரசிப்பதில்லை. ஒரு வித பதற்றம் பயத்தோடே எல்லாவற்றையும் எதிர் கொள்கிறோம். சமீபமாக அது மிக அதிகமாகி கொண்டிருக்கிறது. நாம் உண்மையில் எதை விரும்புகிறோம், என்பதில் யாருக்குமே சுத்தமாகத் தெளிவில்லை. யாரிடத்திலாவது உலகதிலேயே உங்களுக்கு பிடித்த, நாள்முழுவதும் ஈடுபட்டாலும் சலிக்காமல் இருக்கும் விஷயம் எது என கேளுங்கள். கண்டிப்பாக தெளிவான பதில் வராது. காரணம், ஒவ்வோரு நாளும் நாம் விரும்பும் விஷயத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். இவ்வளவு சிக்கலையும் வைத்துகொண்டு தனிமையிலிருந்தால் கண்டிப்பாக பைத்தியம் தான் பிடிக்கும்.
உண்மையில் தனிமை நம்மையே நமக்கு உணர்த்தும் அற்புதமான விஷயம். சில நாட்கள் முன்னதாக அம்மா, மனைவி & குழந்தை என மூவரும் வெளியே சென்று விட்டார்கள். இரண்டு நாட்கள் வீட்டில் யாருமில்லை. தனிமையிலிருக்கும் நேரத்தில் வீட்டை நோட்டமிட ஆரம்பித்தேன். சில விஷயங்கள் ஒழுங்கற்றதாக இருந்தது. ஒழுங்க படுத்த ஆரம்பித்தேன். ஒவ்வொன்றாக செய்ய, செய்ய அடுத்தடுத்து இதை சரி பண்ண வேண்டும் என தொடர்ந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட முழுநாளும் வேலை நீண்டது. ஆனாலும் மனது எப்பவும் சலிக்கவில்லை. திடீரென இந்த வேலையை இவ்வளவு தூரம் செய்ய என்னக் காரணம் என மனது யோசிக்க ஆரம்பித்தது.
முன்னாடியெல்லாம் இப்படியெல்ல. அம்மா வீட்டை ஒழுங்கு படுத்த ஏதாவது சொன்னால் மிகுந்த கோபத்துடன் சலித்து கொள்வேன். மனதில் இந்த மாற்றத்தை யோசிக்க ஆரம்பித்தவுடன். ஒரு விஷயம் பிடிபட ஆரம்பித்தது. அது என்றைக்கு புகைப்படங்களின் மீதான காதல் அதிகமானதோ, அன்றிலிருந்து பார்க்கும் பார்வையில் மிகப்பெரும் மாற்றம். பார்க்கும் அனைத்து விஷயங்களிலும் அதன் உள்ளிருக்கும் அழகை, அதன் ஆன்மாவை மனம் உணர ஆரம்பித்தது. வெளியில் எங்கு சென்றாலும் கண்டிப்பாக புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். புகைப்படங்களை பார்த்தவர்கள், தாங்கள் இருக்குமிடம் அருகில் இவ்வளவு அழகான இடங்கள் இருக்கிறதா என ஆச்சர்யப்பட ஆரம்பித்தார்கள். அந்த ஆச்சர்யம் இன்று என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் வரை நடந்து கொண்டிருக்கிறது.
என்னளவில் புகைப்படமெடுப்பதையும், அதைக் கற்று தருவதையும் ரசித்து காதலித்துச் செய்கிறேன். என் காதல் புகைப்படங்கள் எடுப்பதிலிருக்கிறது. அதையும் முழுவதுமாக புரிந்து, உணர்ந்து செய்கிறேன். அதற்காக எல்லோரையும் புகைப்படமெடுங்கள் எனச் சொல்லவில்லை. நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதை முதலில் நேசியுங்கள். பணமெல்லாம் அதன் பிறகு தான். உங்கள் வேலையின் மீதான அந்தக் காதலே உங்களுக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுக்கும். பணத்தையும் சேர்த்து. இல்லாவிட்டால், ஒரு நிலைக்கு மேல் எல்லாவற்றிலும் சலிப்பே மிஞ்சும். ஆதலால் ரசியுங்கள், உங்களுக்கான தனிமையையும் சேர்த்து, அப்போழுது தான் உங்களை நீங்களே கண்டடைவீர்கள். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916