வாழ்ந்து பார்த்த தருணம்…216

உனக்கென்னப்பா…

கொடுத்து வச்சவன்பா நீ. ஊர், ஊரா சுத்துற, வித விதமா போட்டோ பிடிச்சி போடுற போன்ற வார்த்தைகள் என் காதுகளில் வந்து விழும் போது எல்லாம், எனது மனம் ஒரு விதமான ஜென் நிலைக்குப் போய்விட்டு திரும்பும். ஜென் நிலை என்றால் என்ன என்கிற கேள்வியை அதனைப் பற்றி தெரியாதவர்கள், அறியாதவர்கள் தயவு செய்து கூகிள் ஆண்டவரிடம் கேட்டு ஊய்யவும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிழக்கு தொடர்ச்சி மலையில் ஒரு அலுவல் பயணம். அந்தப் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரிய உதயத்தை ஒரு ஆவணப்படத்துக்காக ஒளிப்பதிவுக் கருவியின் வழியே பதிவு செய்வதற்காக போயிருந்தோம். அப்பொழுது நான் அங்கே நின்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துப் பின்னனியில் பாடல் ஒன்றினை சேர்த்து என்னுடய இணைய சமூக ஊடகங்களில் பதிவேற்றினேன். அந்தப் பதிவேற்றம் முடிந்தவுடன் என்னை நானே கேட்டுக் கொண்ட முதல் கேள்வி. ஒரு மூன்றாம் நபராக வெளியில் இருந்து கொண்டு இந்தப் பதிவைப் பார்த்தால் எனக்குள் முதலில் என்னத் தோன்றும். சந்தேகமே இல்லாமல் உனக்கென்னப்பா என ஆரம்பித்து முதல் வரியில் சொல்லியிருப்பது தான் அப்படியே மனதுக்குள் ஓடும். எனது நண்பர் ஒருவர் அதனை அட்சரம் பிசக்காமல் என்னிடம் கேட்டும் விட்டார். ஆனால் உண்மையில் உனக்கென்னப்பா என்பது சரியா என்கிற மூன்றாம் மனிதனின் கோணத்தை தூக்கி கிடாசி விட்டு என்னுடைய கோணத்துக்கு வந்தால் கதையே வேறு. பதிவேற்றிய அந்தப் புகைப்படம் ஒருவரின் மனதுக்குள் ஏற்படும் பிம்பத்திற்கும் நிஜத்திற்குமான தூரம் மிக, மிக அதிகம். என்னால் பதிவேற்றப்பட்ட அந்த அதிகாலைப் புகைப்படத்தை வைத்தே சொல்ல வேண்டுமானால். அது கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தின் மேலிருக்கும் மலை முகடு. அங்கே சூரியன் எத்தனை மணிக்கு உதிக்கும் என முந்தைய நாளே கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கு ஒரு ஒரு மணி நேரம் முன்னதாக அங்கேப் போய் எல்லாவிதமான கருவிகளையும் பொருத்திச் சரி பார்த்து நின்றால் தான், சூரிய உதயத்தை ஒழுங்காக ஒளிப்பதிவு செய்ய முடியும் என்பது நிதர்சனம். சரி எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும் என்கிற கேள்விக்கான பதிலாக அங்கிருக்கும் மக்களிடம் இருந்து காலை ஐந்து முக்காலில் இருந்து ஆறே காலுக்குள் என்கிற பதில் வந்தது, சரியா.

இப்பொழுது நாங்கள் இரவு தங்கியிருக்கும் இடத்துக்கும் இந்த மலை முகட்டுக்குமான பயண தூரம் எவ்வளவு என யோசித்தால். தோராயமாக ஒரு மணி நேரம். சில நேரம் அதனைத் தாண்டியும் ஆகும். அப்படியானால் அதிகாலை இரண்டரை மணி நேரம் முன்னதாக தங்கும் இடத்தில் இருந்து பயணத்தை தொடங்க வேண்டும். ஐந்தே முக்கால் என்றால் அதிகாலை நாலரை மணிக்காவது அந்த இடத்தை அடைந்திருக்க வேண்டும், நாலரைக்கு அந்த இடத்தை அடைய ஒன்றரை மணி நேரம் முன்னதாக அதாவது அதிகாலை மூன்று மணிக்குள் பொருட்களை எல்லாம் சரி பார்த்து தயாராகி தங்கியிருக்கும் இடத்தில் இருந்து பயணத்தை தொடங்கியாக வேண்டும் சரியா. அதிகாலை மூன்று மணிக்கு பயணத்தை தொடங்கியிருக்க வேண்டுமெனில் எத்தனை மணிக்கு எழுந்து தயாராக வேண்டும் என்கிற கணக்கை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதனை எல்லாம் தாண்டி அந்த மலைக்கு மேலே பயணிக்கும் பாதை என்பது பாதை அவ்வளவே. வண்டியில் உட்கார்ந்து பயணிக்கும் போது உங்களின் உடம்புக்குள் இருக்கும் எலும்புகள் எல்லாம் பிரபுதேவா வளைந்து, நெளிந்து நடனமாடுவார் இல்லையா. அந்த அளவுக்கான வளைதல், நெளிதல் தன்மையுடன் இருத்தல் நலம். இல்லையேல் ஒரு முறை மேலேறி விட்டு இறங்கினால் நேராக எலும்பு மருத்துவரிடமோ அல்லது தசை பிடிப்பு மருத்துவரிடமோ செல்ல வேண்டும். இது எதுவுமே மிகைப்படுத்துவதற்காக சொல்லப்படுவது அல்ல. கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் தான் பொது போக்குவரத்து எல்லாம். அங்கு மலை மேலிருக்கும் கிராமங்களுக்கு பொது போக்குவரத்தே கிடையாது. இங்கிருக்கும் மலை கிராமங்களில் மின்சாரம் போனால் ரெண்டு மூன்று நாட்கள் கூட வராது. இப்படி நிறைய அந்த மலை கிராமங்களின் சிரமங்களைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். போதும்.

இப்பொழுது மலை முகட்டுக்கு வருவோம். அதிகாலை நான்கரை மணிக்கு இடத்தை அடைந்தாயிற்று. சரியான இருட்டு. சூரியன் எந்தப் பக்கம் உதிக்கும் என்று அங்கிருக்கும் மக்களிடம் ஏற்கனவே கேட்டு தெரிந்து வைத்திருந்தோம், அங்கிருப்பவர்கள் தோராயமாக இந்தப் பக்கம் என கை நீட்டி சொல்லி விட்டார்கள். அப்படி அந்த மலை முகட்டில் இருந்து பார்க்கும் போது கண் முன் இருப்பதோ மிகப் பெரிய மலைத் தொடர். ஆனால் ஒளிப்பதிவு கருவியின் சட்டகத்துக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தான் உள்ளடங்கும் இல்லையா. அதனால் கொஞ்சம் துல்லியமாக சூரியன் உதிக்கும் இடம் தெரிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து, அலைப்பேசியில் பதிவேற்றி வைத்திருக்கும் மென் பொருள் வழியாக பார்க்கலாம் என அலைப்பேசியை எடுத்தால். சுத்தம். அலைப்பேசியில் அலையே இல்லை. இல்லவே இல்லை. அங்கே இருந்த யாருடைய அலைபேசியிலும் அலை இல்லவே இல்லை. சரி இது வேலைக்கு ஆகாது என கூட வந்திருந்தவர்களின் உயர் ரக அலைபேசிகள் மற்றும் சின்ன ஒளிப்பதிவு கருவி பிரதான ஒளிப்பதிவு கருவி என நான்கினையும் குறிப்பிட்ட இடைவெளியில் நிலை நிறுத்தி அதனை எல்லாம் விடியலை பதிவு செய்ய சொடுக்கி விட்டு ஐந்து மணியில் இருந்து அந்த இருட்டில், குளிரில் காத்திருக்க ஆரம்பித்தோம். அப்படியே கொஞ்சம், கொஞ்சமாக விடிந்து மணி ஏழே கால் ஆனது. ஆனால் அன்று பார்த்து மேக மூட்டம் அதிகமாக இருக்க சூரியன் வெளிவரவே இல்லை. ஆனால் விடியல் காட்சியாவது கிடைத்ததே என ஆறுதல் பட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். கிளம்பும் போது பசி வயிற்றைக் கிள்ளியது. அங்கேயே நின்று கொண்டு இருக்கும் போது ஆறு மணிக்கே பசிக்க ஆரம்பித்திருந்தது. ஆனால் சூரியன் அங்கே தான் வரும், இங்கே தான் வரும் என எங்களுக்குள் பேசி கண்ணாமூச்சி ஆடிக் கொண்டே இருந்ததில் பசியின் மீது கவனம் போகவில்லை. ஆனால் வேலை முடிந்து கிளம்பும் போது வயிறு தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. அந்த மலைத் தொடரைப் பொறுத்த வரை ஒரு தேநீர் கடையோ, சாப்பாட்டுக் கடையோ அருகில் இருக்காது. சாப்பிட வேண்டுமெனில் குறைந்தது முக்கால் மணி நேரமாவது அதுவும் பாதை என்கிற பெயரளவில் இருக்கும் பாதையில் பயணித்துப் போக வேண்டும். அந்த நேரத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எட்டு மணிக்குப் பின்பாக அங்கிருக்கும் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் சாப்பாடு வாங்கி வர அனுப்பினோம். அவர் போய் சாப்பிட்டினை வாங்கிக் கட்டி மீண்டும் நாங்கள் இருக்கும் இடத்தை அடைய ஆகும் நேரம்?. இதனை எல்லாம் தாண்டியும் இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. போதும் புலம்பல் போல் ஆகிவிடக் கூடாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். மேலே சொல்லியுள்ள எதுவும் என்னுடைய புலம்பல் அல்ல. ஒரு புகைப்படத்துக்கு பின்னால் இருக்கும் நீண்ட நெடிய பயணம். அது அன்றைக்கான பயணம் மட்டுமல்ல. இன்றைக்குப் போன இந்தப் பயணத்திற்குப் பின்னால் தோராயமாக இருபது இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய குப்பை மேடான சென்னைப் பள்ளிக்கரனை குப்பை மேட்டினைக் கூட விடாமல் கையில் புகைப்பட கருவியினை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்த பயணத்தின் தொடர்ச்சியே என்னை இந்த மலை முகட்டின் முன்னே கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பயணம் இன்னும் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இந்தப் பயணத்தை ஜாலியான சுற்றுலாவாக எண்ணிக் கொள்வோரிடம் இருந்து எப்பொழுதுமே வரும் வார்த்தைகள் உனக்கென்னப்பா நீ கொடுத்து வச்சவன் ஊரு ஊரா சுத்துற… (ஆனா எங்க கொடுத்து வச்சேன்னு தான் இது வரைக்கும் எனக்குத் தெர்லப்பா. மகிழ்ச்சி…)

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *