வாழ்ந்து பார்த்த தருணம்…217

நூலிழை பலகீனம்…

மனித வாழ்வில் இந்த மனதினை சமநிலையில் வைத்துக் கொள்வதைப் போல் ஒரு சவாலான விஷயம் வேறெதுவும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அப்படியான சவாலினை எதிர்கொள்ள மிகச் சிறந்த வழி வாசிப்பு. வாசிப்பின் உள்ளிருப்பவர்களுக்கும், வெளியில் இருப்பவர்களுக்குமான வித்தியாசத்தை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதனும் என் கண் முன்னே நிகழ்த்திக் காட்டிக் கொண்டே இருக்கிறான். இரண்டுக்குமான வித்தியாசம் ஒரு சின்ன நூலிழை தான் என்றாலும், அதன் தாக்கம் நம் அன்றாட வாழ்வில் மிகப் பெரியதாக இருப்பதை வாசிப்பு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக எழுதாமல் இருந்ததற்கு மிக முக்கியமான காரணம் கொஞ்சம் வாசிப்பிற்குள் மட்டுமே உள் சென்று லயித்து வரலாம் என்பதால் தான். இங்கே வாசிப்பவர்களுக்கும் அது இல்லாமல் இருப்பவர்களுக்குமான நூலிழை வித்தியாசத்தை என் அளவில் நான் சந்தித்த மனிதர்களின் வழியே உணர்ந்ததை மட்டுமே இங்கே சொல்லி இருக்கிறேன். இது பொதுவானதா எனக் கேட்டால் தெரியாது என்பது தான் நேர்மையான பதில். இது என்னுடைய மற்றும் நான் கடந்து வந்த மனிதர்களின் வழியே கிடைத்த அனுபவம் மட்டுமே. என்னுடைய வாசிப்பு என்பது என்னுடைய பலகீனங்களை, அழுக்குகளை என்னுடைய ஏற்றுக் கொள்ள முடியா பக்கங்களை என்னைப் பற்றிய அப்பட்டமான உண்மையை எவ்வித சமரசமும் இல்லாமல் அப்படியே எனக்கு காட்சிப் படுத்திக் கொண்டே இருக்கிறது. முதல் விஷயம் அப்படியான காட்சியை முழுமையாய் ஏற்றுக் கொள்ள நம்முடைய உடலுக்கும், மனதுக்கும் தனித் திராணி வேண்டும். இரண்டாவது ஆம். நான் தான் அது, என ஒத்துக் கொள்ளும் தைரியம் வேண்டும். இந்த இரண்டையும் தாண்டி மூன்றாவதாக அதனை மாற்றிக் கொள்ளும் நிலை எல்லாம் தொடர்ந்து பயிற்சி செய்தால், திரும்பவும் சொல்கிறேன் முயற்சி செய்தால் அல்ல. பயிற்சி செய்தால் மட்டுமே மாற்றிக் கொள்வதற்கான சாத்தியம் கொஞ்சமேனும் உண்டு. மேலே சொல்லியுள்ள காரணத்தினால் தான் நம்முடைய உண்மையான பக்கத்தை நமக்குக் காட்டிக் கொடுத்து விடும் என வாசிப்பின் பக்கமே வராமல் தலைதெறிக்க ஓடிக் கொண்டும். வாசிப்பவனைப் பார்த்து அவன் கிறுக்கன் என்பதைப் போலான வார்த்தை வீச்சுக்களை வீசிக் கொண்டும் இருக்கும் வேடிக்கை நிகழ்வுகளை நித்தமும் கடந்த படியே இருக்கிறேன்.

மேலே சொல்லியிருப்பதைப் போல் வாசிப்பு அப்படி என்னத்த கிழிக்கும் என யோசிப்பவர்களுக்காக. சில நேரங்களில் நாம் வாசித்துக் கொண்டிருக்கும் பக்கத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை நீங்கள் ஆழமான வாசிப்பாளனாக இருந்தால், அவ்வளவு சுலபமாக எல்லாம் அதனைக் கடந்து போக முடியாது. அந்த வார்த்தைகள் கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் நம்மை நிற்க வைத்து கழுவில் ஏற்றும். நாம் கழுவில் ஏறத் தயாராக இருந்தால் வலியும் சுகமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பெரும்பாலும் வாசிப்பின் வழியே கழுவில் ஏற்றப்படுவதற்குள் என்னை ஒப்புக் கொடுத்து விடுவேன். அப்படி சமீப நாட்களில் வாசிப்பில் முழ்கி இருந்து கழுவில் ஏற்றிய வரிகளை கொண்ட ஒரு புத்தகம் சாரு எழுதியது. கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் 2022 விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு போன போது வாங்கியது. புத்தகத்தின் பெயர் ரஜினி காந்தின் சூரிய மேடு. அந்த புத்தகத்தில் பக்கம் 83ல் மனுஷ்ய புத்திரன் பற்றிய சாருவின் உரையாடலில் சில வரிகளை இங்கே அப்படியே கொடுக்கிறேன். “இப்பொழுதெல்லாம் இம்மாதிரியான எளிய பண்புகள் கூட நம்மிடையே அரிதாகி விட்டன. மற்றவர்களின் பலகீனங்களை மட்டுமே கவனித்து ஞாபகத்தில் வைத்திருக்கிறோம். சந்தர்ப்பம் வரும் போது அந்த பலகீனமான இடத்தில் குறிபார்த்துத் தாக்குகிறோம். அந்த அளவுக்கு நமது வாழ்க்கை நீதியையும், அறவுணர்வையும் இழந்து போயிருக்கிறது.” மேற்சொன்ன வரிகளை வாசித்து முடித்த போது என்னால் அந்த 83ம் பக்கத்தை சுலபமாகத் தாண்டிப் போக முடியவில்லை. இயல்பாக இப்படியான வரிகளை வாசிப்பவர்களுக்கு, முதலில் தோன்றுவது நாம் அப்படி நம்முடைய பலகீனங்களால் எப்பொழுதெல்லாம் யாரால் எல்லாம் தாக்கப்பட்டிருக்கிறோம் என்கிற பட்டியலை மனம் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் தான் மிக, மிக அதிகம். இந்த பட்டியலால் மீண்டும் நாம் மிக மோசமாக திருப்பி தாக்கும் பலகீனத்திற்குள் போய் தான் விழுவோம். ஆனால் மேலே சொல்லியிருந்ததைப் போல் கடமைக்கு வாசிக்காமல், ஆழமாக வாசிக்கும் பழக்கம் இருந்தால். அப்படியே நேர் எதிராக நாம் யாரை எல்லாம் அவர்களின் பலகீனம் அறிந்து அந்த பலகீனத்திலேயே நாம் தாக்கி இருக்கிறோம் என்கிற பட்டியலைத் தேடிக் கொண்டிருப்போம்.

ஏன் நேர் எதிராகத் தேட வேண்டும். காரணம் நாம் மற்றவர்களை அடிப்பதற்காக அவர்களின் பலகீனங்களை எதன் அடிப்படையில் கண்டறிந்தோமோ, அதன் வேறு ஒரு வடிவம் நமக்குள்ளேயே இருக்கிறது. இப்பொழுது இருந்து கொண்டும் இருக்கிறது என்பது தான் நாம் இங்கே ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய முகத்தில் அறையும் உண்மை. அந்த உண்மையை நம்மால் எவ்விதமான சமரசமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடியும் எனில், நமக்கான பலகீனங்களை கண்டறிந்து நம்மால் நம்மை மீட்டெடுக்க முடியும். அதனைத் தான் பயிற்சி என்கிறேன். அந்த பயிற்சியின் முதல் படி தான் ஆழமான வாசிப்பு. வாசிப்பின் மூலமே பல சந்தர்ப்பங்களில் என்னுடைய பலகீனங்களை கண்டறிய முடிந்தது. ஆம் நான் பலகீனமானவன் என்பதை ஏற்றுக் கொள்வதற்கே இங்கே நமக்கு பலகீனமற்ற மனம் தேவைப்படுகிறது. பொதுவாக இங்கே நம்மைப் பற்றி நாம் உணர்வதை, அறிவதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளுதல் என்கிற பதமே நம்மிடம் இல்லை. இங்கே பலகீனம் என்பது நூலிழை அளவு தான். ஆனால் நாம் அந்த இழைக்கு அந்தப் பக்கமா, இந்த பக்கமா என்பதில் தான் மிகப் பெரும் மாறுபாடே இருக்கிறது. இங்கே மற்றொரு மிக முக்கியமான விஷயம், நம்மிடம் இருக்கும் பட்டியல் அடிவாங்கியதா அல்லது அடிக்கொடுத்ததா என்பதைப் பொறுத்து எல்லாமே மாறுபடும். இரண்டிலுமே வலி உணர்தல் உண்டு. அடிக் கொடுத்த பட்டியலின் வழியே உருவாகும் வலி தான் அடுத்ததாக அடியும் கொடுக்காமல், அடியும் வாங்காமல் இருக்க வைக்கும். நூலிழைக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா எனக் கேட்டால் கொடுத்ததும், வாங்கியதும் என எந்த வலியும் இன்னும் உங்களுக்கு வலிக்கவே இல்லை அல்லது அந்த வலியின் வழியே எதையுமே உணரவேயில்லை என்று பொருள். வாழ்க்கையின் அக்கப்போர் தங்களுக்கு வலியையும் அதன் வழியே உணர்தலையும் கொடுக்கக் கடவது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *