புகைப்படம் எனும் ஆன்மா…
உங்களின் சிறு வயதில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களை காணும் நேரங்களில் உங்களின் இதயத்துடிப்பைக் கவனித்து இருக்கிறீர்களா. அப்பொழுது உங்களுக்குள் தோன்றும் உணர்வை நீங்கள் சரியாக உள்வாங்கினால் அதுவே தன்னை உணர்தல். அத்தோடு இப்பொழுதைய நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களின் இடைப்பட்ட கால மாற்றம் உங்களுக்கு முழு நிறைவைத் தருகிறதா. இல்லையென்றால் எங்கே எதை தவறவிட்டோம் என யோசிங்கள். எதைத் தவறவிட்டதாக உணர்கிறீர்களோ அதைத் தவறாமல் தேடுங்கள்.
காலத்தை உறையவைக்கும் அற்புதமான விஷயமே புகைப்படம். என்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்று என் வீட்டு அலமாரியில் உள்ளது. மிக அற்புதமான புகைப்படமது. அந்தப் புகைப்படத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. காரணம், என்னுடய அம்மாவிற்கு பெண் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால், எங்கள் வீட்டில் நானும், தம்பியும் தான். பெண் பிள்ளை இல்லை. அந்த ஏக்கத்தைப் போக்க, என்னுடைய அம்மா எங்கள் இருவருக்கும் பெண் பிள்ளை போல் அலங்காரம் செய்து. பூ வைத்து. போட்டோ ஸ்டுடியோ கூட்டிப் போய் எடுத்த புகைப்படமது. அந்த சமயத்தில் அந்தப் புகைப்படத்தால் பல முறை கிண்டலடிக்கப்பட்டிருந்தாலும். இன்று எனக்கு அது பொக்கிஷம்.
என் அம்மா எங்கள் இருவரையும் அலங்கரித்து தலைமுடியில் கொண்டை வைத்து. பூவைத்து. கிட்டத்தட்ட அசப்பில் பெண் பிள்ளை போல் அட்டகாசமாக மாற்றி இருந்தார். இன்று என் வீட்டுக்கு வரும் எங்களின் குடும்ப பின்னனி அறியாத நபர்களிடம் அதை காட்டும் போதெல்லாம். அதைப் பார்க்கிறவர்கள். அது நான் தான் என்பதைக் கண்டுபிடித்ததில்லை. அந்தப் புகைப்படத்தை வந்தவர்கள் கையில் கொடுத்தவுடன், மொத்த குடும்பமும் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் நபரின் மீதே பதிந்திருக்கும். என் மனைவிக்கு விஷயம் தெரியுமென்பதால். அவர் வீட்டிலிருந்து வருபவர்களிடம் அதை காண்பித்து சின்ன புன்முறுவலுடன் அவர்களைக் கவனித்தபடியே இருப்பார். அந்தப் புகைப்படத்தில் இருப்பது நான் தான் எனத் தெரிந்தவுடன், அவ்வளவு நேரம் அதை கையில் வைத்து பார்த்தவர்களின் கண்களில் சின்ன ஆச்சர்யம் கலந்த திகைப்பு தெரியும் பாருங்கள். அதன் பிறகு அவர்கள் கிளம்பி போகும் வரை ஐந்தாறு முறையேனும், என்னையும் அந்த புகைப்படத்தையும் மாற்றி, மாற்றிப் பார்ப்பார்கள். அந்த புகைப்படத்தினுள் உறைந்திருக்கும் என்னுடைய சிறுவயது காலச்சக்கரம் தான் அதன் ஆன்மா.
எனக்கு இப்போழுது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. என் அம்மா என்னுடன் தான் இருக்கிறார். இத்தனை வருடங்களுக்கு பிறகு என் அம்மாவின் ஏக்கம் நிறைவேறி இருக்கிறது. யோசித்துப் பாருங்கள், இத்தனை வருடங்கள் என்னுடைய அம்மா மனதினுள் தனக்கு ஒரு மகள் வேண்டும் என்ற ஆசையை ஏக்கமாகவே வைத்திருந்தவர், என் மகளிடம் அதை எப்படிக் காட்டுவார் என்று. என் அம்மா என் மகளின் மீது காட்டும் பிரியத்தை பார்த்து கொண்டே அந்த புகைப்படத்தையும் பார்க்கும் மனநிலை இருக்கிறதே, அது வரம். புகைப்படம் என்பது உங்களின் ஆன்மா என்பதற்கு மேலே சொன்னது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. நித்தம் நித்தம் அருகிலிருந்து அந்த பாட்டி பேத்தி பாசத்தை ர(ரு)சித்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் என்னை பற்றிய என் மகளின் புகாரே என் அம்மாவிடம் தான் பஞ்சாயத்திற்கு செல்லும். அடுத்த சிறிது நேரத்திற்கு நான் குற்றவாளிக் கூண்டில் நிற்ககவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவேன். என் மகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் என் மகள் என் அம்மாவை கட்டிபிடித்து கொஞ்சிக் கொண்டிருப்பாள். என் அம்மா என் மகளை ரசித்துக் கொஞ்சும் ஒவ்வோரு நொடியும் எனக்குள் தோன்றி மறையும் ஒரு வார்த்தை, நான் எங்கோ படித்தது. நீ நேசிக்கும் விஷயம் எதுவாக இருந்தாலும் உன் நேசிப்பு உண்மையாக உணர்வுபூர்வமாக இருந்தால் நீ நேசிக்கும் விஷயம் கண்டிப்பாக உன்னை வந்தடையும். புகைப்படக்கலை என்னை வந்தடைந்தது அப்படிதான். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916