வாழ்ந்து பார்த்த தருணம்…122

பிம்பம்…

இன்றைய சூழலில் என்னுடைய பிம்பம் என்னவாய் இருக்கிறது என்கிற எண்ணம், பல நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் என்னுடைய மனதுக்குள் ஓடியபடி இருக்கும். என்னுடைய பிம்பம் என்பது உண்மையில் என்ன என்பதும் மிகப் பெரும் கேள்வி. இந்தப் புள்ளியில் இருந்து யோசித்தால் இன்று பிம்பமற்ற மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதும் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய கேள்வி. உண்மையில் இங்கே ஒரு மனிதனைப் பற்றி கட்டமைக்கப்படும் பிம்பம் என்பது, அந்த மனிதனால் கட்டமைக்கப்படுகிறதா அல்லது அப்படியான கட்டமைப்புக்குள் போய் அவனாக சிக்கிக்கொள்கிறானா என்பது மிக. மிக முக்கியமாய் யோசிக்க வேண்டிய ஒன்று. இங்கே மனிதன் என்று பொதுவாய் குறிப்பிடுவது ஆண், பெண் இருபாலரையும் சேர்த்துத் தான். நாம் என்றைக்கு காட்சி மொழியாய் ஒன்றை பார்க்க ஆரம்பித்தோமோ, அன்றிலிருந்து நிஜத்தைப் பார்க்க, தெரிந்து கொள்ள மறந்து விட்டோம் அல்லது மறக்கடிக்கப்படுகிறோம். நிஜத்தில் இருந்து விலகி நாலு சுவற்றுக்குள் இருந்து கொண்டு நாம் பார்க்கும் காட்சி மொழியின் வழியே காட்டப்படும் கதாபாத்திர பிம்பங்களை மனதுக்குள் ஏற்றி வைத்து, அதன் வழியே தான், நாம் காணும் மனிதர்கள் அனைவரைப் பற்றியும் பல விதமான பிம்பங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டோம். அந்தக் காட்சிமொழி தொலைக்காட்சி நெடுந்தொடராக இருக்கலாம் அல்லது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படமாகவும் இருக்கலாம். ஒரு திரைப்படம் என்பது திரையரங்கில் பார்ப்பதற்கும், தொலைக்காட்சியில் பார்ப்பதற்குமே பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதனைப் பற்றி வேறு ஒரு சந்தர்பத்தில் பேசலாம். அப்படியாக நாம் ஒருவரை பற்றி நாமாக ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டு, அந்தப் பிம்பத்திற்குள் அந்த மனிதன் அடங்கவில்லையெனில், நான் நினைச்ச மாதிரி அந்த மனிதன் இல்லப்பா என நாம் நினைத்ததை நியாயப்படுத்தி, அந்த மனிதனை பற்றி நாம் உருவாக்கிய வைத்த பிம்பத்தின்படியே நாம் பேசும் நபர்களிடம் எல்லாம் சொல்ல ஆரம்பிப்போம்.

இப்படி நாம் ஆரம்பித்து வைக்கும் ஒருவனுடைய பிம்பம் என்பது அவனை அறியாமலேயே அவனை இறுக்க ஆரம்பிக்கிறது. அதனால் தான் நிறைய பேர் பேசும் போது கவனித்தால், என்னப்பா உன்ன பத்தி வேற மாதிரி சொன்னாங்க, ஆனா நீ அதுக்கு சம்பந்தமே இல்லாம வேற மாதிரி இருக்க என்கிற வசனத்தையோ, வார்த்தைகளையோ தன்னுடைய வாழ்வில் கடந்து வராதவர்களே இருக்க முடியாது. இது எல்லாம் ஒரு வகை என்றால், மற்றொரு வகை ஒன்று இருக்கிறது. அந்த வகை பிம்பம் என்பது நாம் சார்ந்து வேலையின் நிமித்தம் நாமாகவோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ நமக்கு பரிசளிக்கப்படுவது, அது நம்முடைய வேலையின் நிமித்தம் கொடுக்கப்படும் பொறுப்பு சார்ந்தோ அல்லது வேலையின் தன்மை சார்ந்தோ உருவாக்கப்படுவது. இன்று நாம் சந்திக்கும் பல மனிதர்கள் அப்படியான பிம்பத்தில் இருந்து வெளிவராமலே இருப்பதை கண் கூடாக பார்க்க முடியும். சில காலங்கள் முன் என்னிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு நபர் சொன்னது. அது என்னன்னு தெரியலங்க வேலை முடிந்து வீட்டுக்கு போனாலும் வேலை இடத்தில் என்னவாக இருக்கிறேனோ அப்படியே தான் வீட்டிலும் இருக்கிறேன். என்னால் ஒரு அப்பாவாகவோ, அம்மாவாகவோ, கணவனாகவோ, மனைவியாகவோ, அண்ணனாகவோ, தங்கையாகவோ, மகனாகவோ, மகளாகவோ மாற முடியவில்லை. என்னால் நான் அப்படி இருப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அப்படியே என்னை வலுக்கட்டாயமாக இயல்பாக இருக்கும்படி மாற்றிக்கொண்டாலும், மிக முக்கியமாக எனக்கு பிடிக்காத எதாவது ஒன்றை யாராவது செய்துவிட்டாலோ அல்லது எனக்கு கோபம் வந்துவிட்டாலோ நான் மேலே குறிப்பிட்டுள்ள எந்த கதாபாத்திரமாகவும் இல்லாமல் என்னுடைய வேலையின் வழியே எனக்கு கொடுக்கப்பட்ட அதிகார பிம்ப மனிதனாக மாறிவிடுகிறேன் என சொல்லி அழும் நிலைக்கு போய்விட்டார்.

உண்மையில் இன்றைக்கு எத்தனை பேருக்கு தாம் சார்ந்து தொழில் நிமித்தமாக உருவாக்கி தம் தலையில் ஏற்றப்பட்ட பிம்பத்தை கழட்டி வைத்துவிட்டு, ஒரு சராசரி மனிதனாக வீட்டுக்குள் நடமாட முடிகிறது. கண்டிப்பாக இன்றைய அவசர யுகத்தில் சிந்தித்தே ஆக வேண்டிய கேள்வி, இந்த கேள்விக்கு எத்தனை பேரிடம் நேர்மையான விடை இருக்கும் எனத் தெரியவில்லை, அப்படியே பதில் சொன்னாலும் இல்லங்க வீட்டுக்கு போனா வெளிய எனக்கு என்ன பிம்பம் இருக்கோ அத வாசல்லயே கழட்டி வச்சுட்டு தான் வீட்டுக்குள்ள போவேன் என்று சொல்பவர்களுக்கு, மேலே சொல்லியிருப்பது போல், அதே வீட்டுக்குள் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது உங்களுக்கு பிடிக்காத ஒரு நிகழ்வு நடந்துவிட்டால், இங்கே குறிப்பிட்டுள்ளது உங்களுக்கு பிடிக்காத நிகழ்வே ஒழிய, தவறான நிகழ்வு அல்ல. அந்த நிகழ்வுக்கு நீங்கள் என்ன மாதிரியான நபராக இருந்து அதனை கையாள்கிறீர்கள் என்பதை கவனித்தால் நாம் உண்மையில் வீட்டுக்குள்ளும் யாராக இருக்கிறோம் என்கிற லட்சணம் பல்லிளித்துவிடும். இந்த லட்சணத்தில் பல நேரங்களில் சக மனிதனை பற்றி மட்டமான உதாரணம் காட்ட விலங்குகளோடே மனிதர்களை ஒப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் காட்டுக்குள் இருக்கும் விலங்குகளை என்றைகாவது கவனித்து இருக்கிறீர்களா, உதாரணத்திற்கு காட்டின் ராஜாவான சிங்கத்தையே எடுத்துக் கொள்வோம், அதனைப் பற்றி மனிதன் உருவாக்கிவைத்திருக்கும் பிம்பம் என்ன, சிங்கம் கொடூரமாக வேட்டையாடக் கூடியது, அதன் எதிரில் வரும் எதனையும் தாக்கி கொன்றுவிடும் என பல விதமான பிம்பங்கள் மனிதர்களாகிய நாம், சிங்கத்தை பற்றி உருவாக்கி வைத்திருக்கிறோம், ஆனால் நிஜத்தில் சிங்கம் 24 மணி நேரமும் கொடூரமாக வேட்டையாடும் மனநிலையுடனே சுற்றிக் கொண்டிருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. சிங்கம் கூட தன் பசி அடங்கியவுடன் இயல்பான நிலைக்கு மாறி, மிக சாதாரணமாய் சுற்றிக் கொண்டிருக்கும், அப்படியான நேரங்களில் தான் உணவாக உண்ணும் விலங்கு கண் எதிரில் நடமாடிக் கொண்டிருந்தால் கூட அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு தன்னியல்பில் இருக்குமே தவிர வேட்டையாடாது. ஆனால் மனிதன் தான் சதாசர்வ காலமும் இந்த சமூகமும், அவனை சுற்றி இருப்பவர்களும், அவனுடைய வேலை சார்ந்து கொடுப்பட்ட பொறுப்பு, பதவி என்கிற பலவிதமான பிம்பத்தோடு வேட்டையாடும் விலங்கை போல் சுற்றிக் கொண்டிருக்கிறான். உண்மையில் நாம் யார் என்பதையோ, நம்மை பற்றி நாம் என்ன மாதியான பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதையோ, உண்மையில் நாம் நமக்கு உண்மையாக, நேர்மையாக இருக்கிறோமா என்பதையோ பற்றி எண்ணிப் பார்க்க, நேரம் என்கிற ஒன்று நம்முடைய வாழ்நாளில் நமக்கு வாய்க்குமா!? விடை தேடியே ஆக வேண்டிய கேள்வி இது. விடையை தேடுவோமா, கண்டிப்பாக தேடினால் கண்டைய முடியும், மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு