வாழ்ந்து பார்த்த தருணம்…24

வெள்ளித்திரையில் செதுக்கப்பட்ட இலக்கியம்…

கெட்ட பய சார் இந்தக் காளி, இந்த ஒற்றை வசனம் நடப்பு தலைமுறை வரை அதிரவிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஒற்றை வசனத்தின் ஆன்மாவின் மீது தான், தற்போது வரை உச்ச நட்சத்திரம் ரஜினி படங்களின் வரும் வசனங்கள் கட்டமைக்கப்படுகின்றன. வெகு சமீபத்திய உதாரணம் கபாலிடா. பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த என இன்னும் நிறைய. இந்தத் தலைமுறை இயக்குநர்களிடம் உச்சநட்சத்திரம் ரஜினியை நீங்கள் இயக்கினால் அவரின் கதாபாத்திரத்தை எப்படிப்பட்டதாக வடிவமைப்பீர்கள் என்று கேட்டால், கண்டிப்பாக முள்ளும் மலரும் படத்தின் பிரதான கதாபாத்திரமான காளியாக தான் இருக்கும். அப்படி தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக ஒளிவீசும் ஒருவருக்கு ஆகப்பெரும் வடிவத்தை கட்டமைத்து கொடுத்தவர். இன்னும், இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம். அவர் தன் படைப்புக்களின் வழியாக என்றும் தமிழ்த் திரையுலகின் அழியா பொக்கிஷமாக நிறைந்திருக்கும் இயக்குநர் மகேந்திரன். பெரும்பாலும் மகேந்திரன் அவர்களைப் பற்றி பேசும் போது எல்லாம் ரஜினியைப் பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது. மேலே சொன்னது உட்பட. உண்மையில் அவர் கட்டமைத்தது ரஜினியை மட்டுமல்ல, தமிழ்திரையுலகையே எனச் சொல்லலாம், இன்றைய தலைமுறையில் வெற்றிகரமாக இருக்கும் இளம் இயக்குநர்கள் அல்லது வருகால இயக்குநர்களாக மாறப்போகும் உதவி இயக்குநர்கள், என்று இயக்குநர் துறை சார்ந்து யாரைக்கேட்டாலும், மகேந்திரன் அவர்களின் திரைமொழியைப் போல் ஒரு ஆன்மாவோடு கூடிய ஒரு திரைப்படத்தையாவது இயக்கிட வேண்டும் என்பது தான், அவர்களின் பெரும் கனவாக இருக்கும். மகேந்திரனின் திரைமொழி என்பது நம்முடைய வாழ்வியலின் யதார்தத்திற்க்கும், உண்மைக்கும் மிக, மிக நெருக்கமானது. அவர் உருவாக்கி திரையில் உலவ விட்ட உலகங்கள் யாவும் நம்முடையது. இலக்கியத்தை மிகச்சரியாக திரைமொழிக்கு ஏற்றவாறு மாற்ற தெரிந்த, அதே சமயம் அதை வெற்றியும் பெறவைத்த தமிழ்திரையின் ஒரே இயக்குநர் என்று மகேந்திரன் அவர்களைச் சொல்லலாம்.

உதிரிப்பூக்கள் படத்தின் இறுதிகாட்சியை போல் ஒரு ஆழ்மனம் வரை சென்று உலுக்கும் காட்சியை காண்பது அரிதினும் அரிது. பெரும்பாலான கதைகளில் வரும் முக்கியமான எதிர்மறை கதாபாத்திரங்கள், தான் செய்த தவறை எல்லாம் உணர்ந்து, இறுதிகாட்சியில் திருந்தி மன்னிப்புகேட்டு, எல்லோருமே ஏற்றுக்கொள்ளும் ஒருவனாக மாறிவிடும். நடைமுறை யதார்த்த வாழ்வில், மிக மோசமாக தான் செய்த தவறுகள் அனைத்தையும், ஆழ்மனத்தினுள் உண்மையான உணர்வோடு உணரும் ஒருவன் என்ன செய்வான், அதுதான் உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் இறுதிக்காட்சி. அதில் விஜயன் பேசும் வசனம் மிக, மிக வீரியமானது. கடைசியாக அவர் ஊர்மக்களை பார்த்துச் சொல்வார். நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க, ஆனா இன்னைக்கு உங்க எல்லாரையும் நான் என்ன போல மாத்திட்டேன், நான் செஞ்ச தவறுகள்ளையே பெரிய தவறு அது தான். இந்த ஒற்றை வசனமும், அதன் பின்னால் வரும் அவரின் குழந்தையான அஞ்சுவின் அருகாமைக் காட்சியும், அதன் பின்னர் விஜயன் எடுக்கும் முடிவும் சத்தியமாக எப்பேர்பட்ட கல்நெஞ்சத்தோடு இருப்பவனையும் அசைத்துப் பார்த்துவிடும். விஜயன் எடுக்கும் முடிவிற்கு பின்னர், ஓடிக்கொண்டிருக்கும் அந்த நதியின் அருகாமை காட்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் இருக்கும் அர்த்தங்கள் சொல்லில் அடங்காதவை.

உதிரிப்பூக்கள் திரைப்படத்தையும், அதன் இறுதிக்காட்சியையும் பற்றி மட்டும் பல நாட்கள் பேச முடியும். மகேந்திரன் அவர்களின் திரைப்படங்களை கூர்ந்து கவனித்தால், அவரின் எல்லா படைப்புகளிலும், அந்த படைப்புக்களின் அடிநாதமாக அறம் என்பது ஒவ்வொரு தனி மனிதன் வாழ்விலும் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை உணர்த்தும் விதத்தில் இருக்கும். ஒரு திரைப்பட இயக்குநருக்கு கண்டிப்பாக அப்படிப்பட்ட சமூகம் சார்ந்தும், தனிமனிதன் சார்ந்தும் பொறுப்புணர்வோடு கூடிய பார்வை மிக, மிக முக்கியமென நினைக்கிறேன். தன்னுடைய எல்லா படைப்புகளிலும் கண்டிப்பாக அப்படிப்பட்ட பொறுப்புணர்விலிருந்து சற்றும் விலகாமல், மிகுந்த அக்கறையோடு தன்னுடைய அனைத்து படைப்புகளையும் இந்த சமுகத்திற்கு அளித்த மகேந்திரன் என்றுமே கொண்ட்டாடப் படவேண்டியவர். உயிர் பிரிவது என்பது மனித உடலினுள் என்றைக்காவது நடந்தே தீரும். ஆனால், அந்த உயிர் தான் வாழும் காலத்தில் தன் மனதினுள் அக்கரையுடன் கூடிய அறம் பிறழாமல் படைக்கும் படைப்பு என்பது எத்தனை நூற்றாண்டுகளையும் கடந்து வாழும் சாகாவரம் பெற்றது. இயக்குநர் மகேந்திரன் அப்படிப்பட்ட சாகாவரம் பெற்ற படைப்புகளைத்தான் தான் வாழ்ந்த சமூகத்துக்கு விட்டு சென்றிருக்கிறார், அதனை அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டுவதே அவரின் மீதான அன்புக்கும் அக்கறைக்கும் நாம் செய்யப்போகும் ஆகப்பெரும் மரியாதை. நன்றி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916