செயலின் வெற்றி…
கடந்த பல நாட்களாக எழுதவில்லை. காரணம் இந்த மனித வாழ்க்கை எனக்கு போகிற போக்கில், மிக அட்டகாசமான பல பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கற்றுக் கொள்ளும் மனநிலையோடு அந்தப் பாடங்களை அணுக வேண்டுமெனில், அதனை ஆழமாய் கவனிக்க வேண்டும். அப்படியான கவனிப்பின் இடையில் எழுதுவது என்பது என்னளவில் சிரமம். அப்படியும் மீறி எழுதினால் கண்டிப்பாக இந்த வாழ்வு தரும் அந்த அதி அற்புதமான பாடத்தை, நின்று நிதானமாய் படிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டதால் தான் எழுதவில்லை. அதுவும் போக மனித மனதை கையாள்வதும், அதனை படிப்பதும், அதன் வழியே கிடைக்கும் அனுபவ பாடத்தை புரிந்து கொள்வதை போலானதொரு மிகப் பெரும் சுவாரஸ்யம் இந்த உலகத்தில் வேறெதிலும் இல்லை என எனக்குத் தோன்றுகிறது. அட்டகாசமான அந்த சுவாராஸ்யம், கண்டிப்பாக படிப்பதிலும், எழுதுவதிலும் கூட இல்லை. ஆயிரம் புத்தகங்கள் படித்து வரும் புரிதலை, ஒரே ஒரு வாழ்வியல் அனுபவம் அட்டகாசமாக கொடுத்துவிட்டு போகிறது. ஆனாலும் அந்த வாழ்வியல் அனுபவம் என்பது, நாம் அந்த அனுபவத்தை எந்த மனநிலையில் இருந்து அணுகுகிறோம் என்கிற புள்ளிக்குள் ஒளிந்திருக்கிறது. இப்படி வாழ்க்கை மிக சுவாராஸ்மாய் போய் கொண்டிருப்பதற்கு இடையில், அதனை மேலும் சுவாரஸ்யமாய், பரபரப்பாய், உற்சாகமாய் வைத்துக் கொள்ள எனக்கு பிடித்தமான விளையாட்டு போட்டிகளை பார்ப்பதும், அதனைப் பற்றி படிப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அப்படியான நிலையில் நம் இந்திய மட்டையாட்ட அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை வெகுவாய் கவனித்து வந்தேன்.
மட்டையாட்டத்தை பொறுத்த அளவில், ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகள் பற்றி, அதுவும் குறிப்பாக, அவர்களுடைய சொந்த மண்ணில் அவர்களின் செயல்பாடுகள் பற்றி தனியாக யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லாமே ஊரறிந்த ரகசியம். இப்படியான நிலையில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, மிக முக்கியமான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடப் போனது இந்திய அணி. இங்கே பல நேரங்களில், பல சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலியா எப்படி மட்டையாட்ட களத்தில் நடந்து கொள்கிறதோ, அதே போல் நாமும் நடந்து கொண்டு, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என சிலரின் எழுத்துக்களில் படித்திருக்கிறேன். அப்படியான பதிலடிக்கு மிக சிறப்பான ஆள் என நம்முடைய மட்டையாட்ட அணித் தலைவர் கோலியை சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால் இங்கே எழுதியது போல் அல்லாமல், இம்முறை இவர்கள் சொல்லும் மட்டையாட்ட அணித் தலைவர் கோலி இருந்தும், முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில், போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்குள் சுருண்டு கேவலமாய் தோற்றார்கள். அதன்பிறகு கோலியும் தன்னுடைய குழந்தையின் வருகைக்காக இந்தியாவுக்கு கிளம்பிவிட்டார். அதிலிருந்தே ஆஸ்திரேலியர்கள் நாலா பக்கமும் இருந்தும், முதலில் வார்த்தைகளாலேயே இந்திய அணியை பற்றி மகா மட்டமாக பேச ஆரம்பித்தார்கள். அதற்கு மிக சிறப்பாய் திரியை கொளுத்திப் போட்டது முன்னாள் ஆஸ்திரேலிய மட்டையாட்ட அணித் தலைவர் பாண்டிங். முதல் போட்டியில் இப்படியான கேவலமான தோல்விக்கு பிறகு இந்திய அணி மீண்டு வருவது கடினம். அதுவும் போக இந்திய அணியை வழி நடத்த ஆக்ரோசமான தலைமை இல்லை. அதனால் இந்தியா முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு வர இயலாது என பேட்டி கொடுத்தார்.
ஆனால் நடந்த கதையே வேறு. தன்னை நோக்கி வந்த எந்த ஒரு எதிர்மறையான வார்த்தைக்கும் அடுத்த மூன்று போட்டிகளுக்கு தலைமையேற்ற ரகானே காது கொடுக்கவோ, பதில் சொல்லவோ இல்லை. இரண்டாவது போட்டியில் தன்னுடைய மட்டையாலே எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அப்பொழுதே வாயை மூடிக்கொண்டு விளையாட்டில் மட்டும் ஆஸ்திரேலிய அணி கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எங்கள் வாயை எல்லாம் கண்டிப்பாக மூடுவது நடக்காத காரியம் என்பதை போல் தான் நடந்து கொண்டார்கள். அதுவும் போக இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என யாரும் யோசிக்கக் கூட இல்லை. அடுத்ததாக மூன்றாவது போட்டி சமநிலையை நோக்கி போக ஆரம்பித்ததுமே, ஆஸ்திரேலிய அணியினருக்கு தங்கள் திறமை மேல் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய், வார்த்தைகளாலும், உடலை குறிவைத்து காயப்படும் வகையில் போடப்பட்ட பந்துகளாலும் மிக கேவலமான விளையாட்டை விளையாட ஆரம்பித்தார்கள். என்றைக்கு ஆஸ்திரேலிய அணித் தலைவர் டிம் தன் அணி மீது நம்பிக்கை வைக்காமல், தன்னுடைய கேவலமான, சீண்டலான வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்தாரோ அங்கேயே கிடத்தட்ட ஆஸ்திரேலிய அணியின் கதை முடிந்தது. அதன் பின்னர், நான்காவது போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மூலம் இந்திய அணி வீரர்கள் மீது தற்போதைய நோய் சூழலை காரணம் காட்டி கொடுக்கப்பட்ட அழுத்தம் எல்லாம், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல், என்ன செய்தாவது வெற்றிபெற வேண்டும் என்கிற மனநிலைக்கு ஆஸ்திரேலிய அணியினர் போய்விட்டார்கள். இப்படியான நிலையில் பிரிஸ்போனில் உள்ள கப்பா மைதானத்தில் கடந்து முப்பத்தி மூன்று வருடங்களாக ஆஸ்திரேலிய அணி தனக்கு எதிராக விளையாடும் எந்த ஒரு அணியையும் வெற்றி பெற விட்டதே இல்லை என்கிற சாதனையை கையில் வைத்துக் கொண்டு, அதனையே பெருமையாக சொல்லிக் கொண்டு களம் கண்டது, இந்திய அணியை பொறுத்த அளவில் கிட்டத்தட்ட ஏழு முன்னனி வீரர்களுக்கு மேல் காயமடைந்து விளையாட முடியாத சூழலில், அனுபவம் இல்லாத, ஆனால் தங்கள் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துக் கொண்டு விளையாடும் வீரர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணி என்றைக்கு தன் திறமை மீது நம்பிக்கை வைக்காமல் பேச ஆரம்பித்தோ, அன்றிலிருந்து இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பேச்சால் பதில் சொல்லாமல், செயலால் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். அந்தச் செயல் தான் இன்றைக்கு ஆஸ்திரேலியா பீற்றிக் கொண்டிருந்த பிரிஸ்போனில் உள்ள கப்பா மைதானத்தின் முப்பத்தி மூன்று வருட வெற்றி வரலாற்றை மாற்றி எழுத வைத்திருக்கிறது. தொடரையும் இந்திய அணி கைப்பற்ற முடிந்திருக்கிறது. இப்படி இந்திய அணி தன் மீது செலுத்தப்பட்ட எல்லாவிதமான அழுத்தங்களுக்கு இடையிலும், பேச்சின் மீதான கவனத்தை விட செயலின் மீதான கவனமே எல்லா நிலையிலும் வெற்றி தேடி தரும் என்பதை மிகச் சிறப்பாக நிருபித்திருக்கிறது. அதுவும் போக செயல் மீதான கவனத்தின் வெற்றி என்பது விளையாட்டில் மட்டுமல்ல, நம்முடைய அன்றாட வாழ்விலும் தான் என சொல்லாமல் சொல்லியிருக்கிறது. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916