மனிதன் + விலங்கு = வித்தியாசம்
இரவு எட்டு மணி, தலைக்கு மேலே மின் விசிறி ஓடிக்கொண்டிருக்க, அது ஒரு முக்கிய அலுவலகத்தின் பத்தாவது தளம். அந்த தளத்தில் இருக்கும் அந்த அலுவலகத்தின் முக்கியமான பிரிவில் ஒரு உயர் பதவியில் இருக்கும் ஒரு பணியாளின் மேஜை அது. அந்த மேஜையின் மேல் இருக்கும் கணினியை பார்த்தபடி அமர்ந்திருக்கும் அந்த நபருக்கு 35 வயதிருக்கும். தன் முன் கணினித் திரையில் எதனையோ நோண்டியபடி இருக்கும் அந்த நபருக்கு, அவருடைய மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது. தன்னுடைய கீழாடையில் இருந்து அலைப்பேசியை எடுத்து பேசிய அந்த நபர், தன் மனைவியிடம் மிகவும் தடித்த வார்த்தைகளால் பேச ஆரம்பிக்கிறார். நீ யாரைக் கேட்டு வீட்டுக்கு தாமதமா வந்த, என்னிடம் ஏன் முன்னரே சொல்லவில்லை, இருட்டுறதுக்கு முன்னாடி எந்த வேலையாக இருந்தாலும் தூக்கிப் போட்டு வீட்டுக்கு வந்திரணும்னு பலதடவை சொல்லி இருக்கேன்ல, எந்த தைரியத்துல எட்டு மணி வரைக்கும் சுத்திட்டு வர்ற என தொடரும் அவரின் வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியா வண்ணம் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும், அவரின் அந்த மேஜையின் அருகே, அந்த நபருக்கு கீழ் பணி புரியும் ஒரு முப்பது வயதை ஒத்த ஒரு பெண் நின்று இவரிடம் பணி முடிந்து தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்கான அனுமதியை பெறுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இங்கே இன்னொமொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். அன்றைய வேலைகளை முடித்துவிட்டு அனுமதிக்காகக் காத்திருக்கும் இந்த பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் இவரின் வருகைக்காக வீட்டில் காத்துக் கொண்டிருக்கின்றன. சரி இப்பொழுது அலைபேசியில் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கும் பிரகஸ்பதியிடம் வருவோம், தன் மனைவிடம் பேசி முடித்து திரும்பிய அந்த பிரகஸ்பதி, தன் மேஜையின் அருகில் வெகு நேரமாக நிற்கும் தனக்கு கீழ் பணிபுரியும் தன் சக அலுவலக பணிப் பெண்ணைப் பார்த்து, என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீங்க என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது, ராத்திரி ஒன்பது மணி ஆனாலும் பரவாயில்லை, அந்த வேலைய முடிச்சிட்டு தான் நீங்க வீட்டுக்கு கிளம்பணும் என சொல்லிவிட்டு, அவரும் வீட்டுக்கு கிளம்பிவிட்டார். அவரிடம் என்ன சொல்வதென தெரியாமல் கண்களின் நீர் கோர்க்க மீண்டும் தன் மேஜையை நோக்கி நகரும் அதே நேரம், அந்த பெண்ணின் அலைபேசி அழைக்கிறது. அதனை எடுத்துப் பார்க்கும் அந்த பெண்ணின் கண்களில் வழியும் நீரின் ஒரு துளி அந்த அலைபேசியின் ஒளித்திரையில் விழ, தன் வீட்டில் இருந்து வந்த அழைப்பை எடுத்துப் பேச முடியாமல் துண்டிக்கிறார். இங்கே இன்னொரு முக்கியமான தகவல். அந்த அலுவலகத்தை பொறுத்த அளவில், இந்த பெண், அவருடைய மேல் அதிகாரியை விட, தனக்கு கொடுக்கப்படும் வேலையை மிகச் சிறப்பாக பொறுப்பாக செய்து முடிப்பதில் வல்லவர்.
மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் கதை அல்ல, சில வருடங்களுக்கு முன், என் கண்முன்னே நடந்தது. மேலே சொன்னவற்றில் எவ்வித மிகைப்படுத்துதலும் இல்லை. அதிலும் கடைசியாக சொல்லியிருக்கும் தகவலும் எதற்கு என்றால், இதனை படிக்கும் எந்த ஒரு பிரகஸ்பதியாவது, அந்த பெண் சரியாக வேலை செய்யாதவராக இருந்திருக்கலாம், அதனால் தான் அந்த பெண்ணிடம் அவரின் மேல் அதிகாரி அப்படி நடந்து கொள்கிறார் என அறிவுஜிவியாக யோசிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் தான். அந்தக் கடைசி வரி தகவலும், ஒரு ஆண் தன் வீட்டில் தன்னுடைய நேரடியான கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்ணை எப்படி நடத்துகிறான், அதே நேரம் தன் அதிகாரத்தின் வழியே கிடைத்த கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்ணை எப்படி நடத்துகிறான் என்பதற்கு, மேலே சொல்லியிருப்பது ரொம்பவே சின்ன உதாரணம் மட்டுமே. இன்னும், இன்னும், இன்னுனுனும்ம்ம்ம் நிறையயயய இருக்கிறது. சரி ஒரு ஆண் பெண்ணை எப்படி நடத்துகிறான் என்பது வாழ்வின் ஒரு முனை என்றால், மற்றொரு முனையான ஒரு பெண் என்பவள், ஆண் என்பவனை எப்படி நடத்துகிறாள் என்று பார்த்தால், அதுவும் மேலே குறிப்பிட்டுள்ள ஒரு ஆண் பெண்ணிடம் நடந்து கொள்ளும் விதத்திற்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல, அதற்கும் மேலே சொல்லியிருப்பதை விட மேலான பல சம்பவங்கள் உதாரணமாக இருக்கிறது, என்னுடைய தன்மை ஆண் என்பதாலும், பதிவின் நீளம் கருதியும் ஒரு பெண் என்பவள் ஆண் என்பவனை எப்படி நடத்துகிறாள் என்பதைப் பற்றி விரிவாக சொல்லவில்லை. சரி தலைப்பின் விஷயத்திற்கு வரலாம், இனி குறிப்பிடப் போவது ஆண், பெண் என்கிற பாலின பாகுப்பாட்டின்படி எல்லாம் அல்ல. தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் மனிதன் என்கிற பொதுவான வார்த்தையில் மட்டுமே. காரணம், இங்கு ஆணும் சரி, பெண்ணும் சரி தன் எதிர்பாலினத்திடம் நடந்து கொள்ளும் விஷயத்தில் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. அதனால் தான் மனிதன் என்கிற ஒரே சொல்லில் இனி தொடரலாம், மனிதனையும், விலங்கையும் வித்தியாசப்படுத்தி காட்டுவது எது என காலம்காலமாக நமக்கு இங்கே சொல்லப்படுவது மனிதன் சிந்திக்க தெரிந்தவன் என்கிற அடிப்படையில் தான். ஆனால் உண்மையில் அவனுடைய சிந்தனை எப்படியானதாக இருக்கிறது என யோசித்தால், உண்மையில் நாமெல்லாம் மனிதர்களா என்கிற கேள்வி கண்டிப்பாகத் தோன்றும்.
சரி ஒரு உதாரணம் பார்க்கலாம். இந்த பூமியில் எத்தனையோ விலங்குகள் தன்னுடைய பசிக்காக வேட்டையாடி உண்கின்றன. அது தான் இந்த இயற்கையின் நியதியும் கூட. சரி ஒரு புரிதலுக்கு புலியை எடுத்துக் கொள்வோம். புலி தனக்கான உணவுக்காக வேட்டையாட தயாராக இருக்கையில், அதன் மனதில் தான் வேட்டையாடப் போகும் விலங்கின் பின்னாலும் ஒரு குடும்பம் என்கிற ஒன்று இருக்குமென்பதோ அல்லது தன்னால் வேட்டையாடப்படும் விலங்கின் இ(ற)ழப்பால், அதன் குட்டிகள் பசியால் வாடிச் செத்துவிடும் என்றோ தெரியாது. புலியின் கண்களுக்கு தெரிவதெல்லாம் எதிரில் இருக்கும் விலங்கை தன்னுடைய பசிக்காக வேட்டையாட முடியுமா, முடியாதா என்கிற கேள்வி மட்டுமே. தன்னுடைய செயலால் எற்படும் விளைவை பற்றி அதற்கு எதுவுமே தெரியாது. காரணம் அது சிந்திப்பதே இல்லை. அதனால் தான் அது விலங்கு. ஆனால் தான் சிந்திப்பதால், தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் மனிதனுக்கு, கண்டிப்பாக தான் செய்யும் செயலின் விளைவுகள் பற்றி கண்டிப்பாகத் தெரியும். ஆனால் மனிதன் தான் செய்யும் செயல்களைப் பற்றி அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிறிதளவேணும் சிந்திக்கிறானா? அதற்காக வருந்துகிறானா? என்றால் கண்டிப்பாக இல்லை. இதில் இங்கே ஆண், பெண் என்கிற பாகுபாடடெல்லாம் கிடையாது. அதனால் தான் மேலே சொன்ன, குறிப்பிட்டுள்ள நிகழ்வில் சொன்னது போல, ஒரே மாதிரியான சூழலை தனக்கென்று வருகையில் ஒரு மாதிரியாகவும், அதுவே வேறு ஒருவராக இருந்தால் அதனை வேறு மாதிரியாகவும் கையாள்கிறான். ஆனால் இறுதியில் இரண்டிலுமே வெளிப்படுவது அப்பட்டமான சுயநலம் மட்டுமே. தனக்கு எது ஒத்துவரும், தன்னால் என்ன அடைய முடியும் என்பதை மட்டுமே இந்த மனிதன் சிந்திக்கிறானே ஒழிய, அதனால் தன்னுடைய சொந்த வாழ்விலும், தனக்கு கீழ் இருக்கும் மற்றவர்களது வாழ்விலும் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றி மனிதனுக்கு கவலையேயில்லை. எவனுக்கு என்ன நடந்தால் எனக்கு என்ன, எனக்கு தேவையானது நடக்குதா, கிடைக்குதா என்கிற மனநிலையோடே தான் சுற்றிக் கொண்டிருக்கிறான். தன் பசிக்காக வேட்டையாடும் விலங்கிடம் கூட பல சந்தர்ப்பங்களில் தான் செய்த செயலின் விளைவை பற்றி சிந்திக்கும் தன்மை வெளிப்படுவதை இணையத்தின் வழியே கிடைக்கும் பல்வேறு காணொளிகளில் பார்க்க முடியும். ஆனால் மனிதனிடம் அப்படியான சிந்தனை மழுங்கி கொண்டே போகிறது. யோசித்துப் பார்த்தால், ஒரு வேளை இந்த உலகம் அழியப்போகிறது என சொல்லப்பட்டதே, இந்த மனிதன் முற்றிலும் விலங்காக மாறிவிடுவான் என்கிற சிந்தனையில் தானோ…தெரிந்தவர்கள் சொல்லுங்கள். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916