முன்குறிப்பு :
தமிழில் எழுதுவதும், அதனை புரிந்து படிப்பதும் அருகிக் கொண்டே இருப்பதால், ஒரு சின்ன முன் விளக்கம். இந்த கட்டுரையில் பிம்பம் என்கிற வார்த்தை பிரயோகம் கட்டுரை முழுவதும் வந்து கொண்டே இருக்கும். பிம்பம் என்கிற வார்த்தையை படிக்கையில் உடனடியாக அதனை அர்த்தப்படுத்திக் கொள்ள சிரமமாக இருக்குமானால், நாம் நம்முடைய வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும், எனக்குன்னு ஒரு Image இருக்கு என்கிற சொல்லாடலில் வந்து போகும் Image என்கிற வஸ்து தான் இங்கே பிம்பம் என சொல்லப்படுகிறது. மகிழ்ச்சி.
பேட்டைக்காரன்…
சில வருடங்களுக்கு முன்னால் நம் கண் முன்னே வெள்ளித்திரையில் உலவிய பேட்டைக்காரன் என்கிற கதாபாத்திரம் ஞாபகம் இருக்கிறதா. 2011 பொங்கலுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் பெயர் தான் பேட்டைக்காரன். படத்தின் பிரதான நாயகனான கே.பி.கருப்பு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த தனுஷின் பாத்திரத்தை விட, மிக முக்கியமான மையக் கதாபாத்திரமாக படம் முழுவதும் விரவியிருந்தது, ஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள் ஏற்று நடித்திருந்த பேட்டைக்காரன் கதாபாத்திரம். என்னளவில் ஒரு மனிதனின் (இங்கே மனிதன் என்று பொதுமைப்படுத்திக் குறிப்பிடுவது ஆண், பெண், மூன்றாம் பாலினம் என எல்லோரையும் சேர்த்துத் தான்) ஆழ்மன உளவியலின் மிகப்பெரும் பிம்பத்தை மிகச்சிறப்பாய் வெளிக்காட்டிய அட்டகாசமான கதாபாத்திரம் தான் பேட்டைக்காரன். ஏற்கனவே எனது 122வது கட்டுரையில் பிம்பம் என்கிற தலைப்பில் ஒரு மனிதனை பற்றி அவனை சுற்றியிருப்பவர்கள் உருவாக்கும் பிம்பத்தை பற்றி எழுதியிருந்தேன், அது ஒரு பக்கம் என்றால், ஒவ்வொரு மனிதனும் தன்னை பற்றி தானே உருவாக்குகிற பிம்பம் ஒன்று இருக்கிறது. அது தான் பல நேரங்களில் அவனை ஆட்டுவிக்கிறது, அப்படி ஆடுகளம் திரைப்படத்தில், ஒரு மனிதனின் ஆழ்மன உளவியல் வழியே உருவாக்கி கொள்ளும் பிம்பம் எவ்வளவு குரூரமானது என்பதும், தான் உருவாக்கிய அந்த பிம்பத்திலிருந்து வெளிவர விருப்பமில்லாமல், அந்த பிம்பத்திற்காக தன்னுடைய உயிரைக் கூட தானே மாய்த்து கொண்டு விடும் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தின் வழியே மிகச்சிறப்பாய் வெளிப்பட்டிருக்கும். அப்படி தனக்குள் தானே பேட்டைக்காரனாக உருமாற்றிய பிம்பத்தின் பிடியிலிருந்து கடைசி வரை வெளிவர முடியாமல் மடிந்து போகும் அந்த கதாபாத்திரத்தை பார்த்தவர்கள் இப்படியெல்லாம் இருப்பார்களா என யோசிப்பார்கள். ஆனால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் அப்படியான நம்மை பற்றி நாமே உருவாக்கி வைத்த பிம்பம் ஒன்று இருக்கிறது. அந்த பிம்பத்தை தான் நம்முடைய உண்மையான முகமாக நம்மை சுற்றியிருப்பவர்களையும், இந்த சமூகத்தையும் நம்ப வைத்து நடமாடிக் கொண்டிருக்கிறோம்.
அப்படியே நம்மை பற்றி நாம் உருவாக்கி வைத்த அந்த பிம்பத்தின் வழியே நமக்கு கிடைக்கும் அங்கிகாரம், மரியாதை, புகழ்ச்சி என இன்ன பிற இத்தியாதிகள் உருவாக்கும், கொடுக்கும் போதையின் திளைப்பில் தான் இந்த வாழ்வு பெரும்பாலான நேரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதே பிம்பத்திற்கு பின்னால் இருக்கும் நம்முடைய உண்மையான முகத்தை பற்றி முழுமையாக புரிந்து, உணர்ந்து நம்முடைய பிம்பத்தை உதறி தள்ள முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். ஆனால் அப்படி உதறித் தள்ளுபவர்களின் எண்ணிக்கை இங்கே மிக, மிக, மிகக் குறைவு. அப்படியான உண்மை முக மனிதர்களை சந்திப்பதும் அறுகிக் கொண்டே வருகிறது. பல தருணங்களில் எழுதும் போது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பல முறை குறிப்பிட்டிருக்கிறேன், அது என்னவெனில். மனிதனின் ஆழ்மன உளவியல் ஒன்றினை உணர்ந்து, புரிந்து கொள்வதை விட சிறப்பானதொரு வாசிப்பு வேறெதுவும் இல்லை. தன் பிம்பத்தை கட்டிக் கொண்டு அதனையே தானாக நம்பி உலவிக் கொண்டிருக்கும் மனிதர்களின் பிம்பம் என்றாவது ஒரு நாள் வெளிப்படும் இல்லையா? அப்பொழுது நம் கண்முன்னே விரியும் அந்த மனிதனின் நிஜ முகத்தை கண்டு எவ்வித சலனமும் இல்லாமல், நிதானமாய் அதனை அணுகும் மனநிலை இருக்கிறது இல்லையா? அது அந்த தருணம் தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த நாவல் ஒன்றின் மிகச் சிறப்பானதொரு திருப்பத்தை விட பல மடங்கு அட்டகாசமானதும், சுவாரஸ்யமானதும் கூட. ஆனால் அதனை மிக, மிக நிதானத்துடன் கூடிய, சலனமற்ற மனநிலையில் எதிர்கொள்ளும் மனநிலை நமக்கு வாய்த்திருக்க வேண்டும். அதற்குக் கண்டிப்பாக நமக்கு நாமே ஒரு பிம்பத்தை உருவாக்காமல் உண்மையான முகத்தோடு இருத்தல் முக்கியம். அதையும் தாண்டி ஏற்கனவே நம்மைப் பற்றி நாமே ஒரு பிம்பத்தை இந்த சமூகத்துக்குள் உருவாக்கி விட்டிருந்தோமேயானால், அதனை உணர்ந்து, அந்த பிம்பத்தை நாமே சிறப்பாக சுக்குநூறாக உடைத்துவிடக் கூடிய மனநிலையை கொண்டிருக்க வேண்டும். மேலே சொல்லியிருக்கும் இரண்டு விஷயங்கள், ஒன்று ஒருவரின் உண்மையான முகம் வெளிப்படும் தருணத்தை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது. இரண்டு நீங்கள் உங்களின் உண்மையான முகத்தை தான் உணர்ந்து வெளிக்காட்டுகிறீர்களா என்பது. இந்த இரண்டையும் நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் அல்லது இதற்கு முன் கையாண்டிருக்கிறீர்கள் என பல முறையேனும் யோசித்து, சோதித்துப் பாருங்கள்.
ஒரு மனிதன் தான் உருவாக்கிக் கொள்ளும் பிம்பத்திற்க்காக என்னவெல்லாம் செய்வான் என நீங்கள் யோசித்தால், அது நம்முடைய கற்பனைக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டு இருக்கிறது. (மீண்டும் ஒரு முறை இங்கே ஞாபகப்படுத்துகிறேன் இங்கே மனிதன் என குறிப்படுவது ஆண், பெண் பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லா பாலின மனிதர்களையும் சேர்த்துத் தான்) உதாரணம் சொல்வதானால், தான் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் தான், தான் என ஒருவன் முழுமையாய் நம்ப ஆரம்பித்து விட்டால், அந்த பிம்பம் உடைந்து நொறுங்கி நிஜ முகம் பல்லிலிக்கும் தருணத்தில், அந்த தன்னுடைய உண்மை முகத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்த பிம்பம் தான் நான் என இந்த சமூகத்தை நம்ப வைப்பதற்காக, தன்னுடன் பல ஆண்டுகளாக பயணித்த தாய், தந்தை, மனைவி, மகன், மகள், தோழன், தோழி இன்னும் இன்னும் என எல்லாவிதமான உறவுகளையும் பற்றி கவலைப்படாமல், அந்த உறவுகளையும், அவர்களின் அடிப்படை குணங்களையும் மட்டமான கேள்விக்கு உட்படுத்தி, சிதைத்து, அதன் மேல் ஏறி நின்று கொண்டு தன்னுடைய பிம்பத்தை காப்பாற்றவே போராடுகிறான். அதில் சில பேராவது தன்னுடைய பிம்பத்தை சில தருணங்களிலாவது கழட்டி வைத்துவிட்டு உண்மையான முகத்தோடு இருக்க முயற்சியாவது செய்வார்கள். ஆனால் 24 மணி நேரமும், சதா சர்வ காலமும், தன்னுடைய குடும்பத்தோடு இருக்கும் நேரத்தில் கூட, தன்னுடைய குடும்பத்தையும் அந்த பிம்பம் தான். தான் என நம்பவைக்க போராடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை காண்கையில் அவர்களின் மீது பரிதாபமே மிஞ்சுகிறது. இப்படி தன்னுடைய பிம்பத்தை மட்டுமே தூக்கிப் பிடித்துக் கொண்டு உலவும் மனிதர்களுக்கு மத்தியில் தன்னுடைய உண்மையான முகத்தை எவ்வித பூச்சு வேலைகளும் இல்லாமல் வெளிப்படுத்தும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை உணர்ந்து கொள்ள நீங்கள் பிம்பமற்றவர்களாக உங்களை உருமாற்ற வேண்டும். அதனை உங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்தால், உங்கள் முன்னால் இருப்பவர்களின் பிம்பம் உங்களின் கண்முன்னே கிழிந்து தொங்க ஆரம்பிக்கும், ஆனால் அப்படியான உண்மையான முகங்களை காண அசாத்திய பொறுமையும், அந்த தருணத்தை மிக நிதானமாக அணுகும் மனநிலையும் மிக, மிக, மிக முக்கியம். இல்லாவிட்டால் தான் நம்பும் தன்னுடைய பிம்பத்திற்காக ஆடுகளம் திரைப்படத்தின் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தை போல தங்களை தாங்களே சிதைத்துக் கொண்டு, கூடவே உங்களையும் சேர்த்தே சிதைத்து விடுவார்கள். கட்டுரையின் நீளம் கருதி இப்பொழுதைக்கு பேட்டைக்காரனைப் பற்றி இவ்வளவு போதும். வேறொரு சந்தர்ப்பத்தில் இந்தச் சமூகத்தின் உலவும் பேட்டைக்காரர்களின் வேறு ஒரு முகத்தைப் பற்றி பேசலாம், மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916