இசையாதல்
கடந்த மாதம் (டிசம்பர் 2018) வெளியூர் பயணம் ஒன்று இருந்தது. அது என்னுடய அம்மா போவதாக இருந்த பயணம். குளிர்காரணமாக கடைசி நேரத்தில் என்னை போக சொன்னார். நானும் மகிழ்ச்சியுடன் கிளம்பிவிட்டேன். ஒரு புகைப்பட கலைஞனுக்கு பயணம் தான் அவனுடைய கலையின் இதயம் போன்றது. தொடர்வண்டியில் முன்பதிவு தக்கலில் முன்பதிவு செய்தபடியால் பிரச்சனையில்லை. தொடர்வண்டியில் கிளம்பி போய்க் கொண்டிருக்கும் போது கரூரில் இருக்கும் நண்பர் மகேஷிடம் இருந்து அழைப்பு. நண்பர் மகேஷ் கரூரில் இசை ஆசிரியராக தனியாக இசை பள்ளி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மகேஷின் அழைப்பேசி அழைப்பை எடுத்தால் வரும் ஞாயிறு ஒரு முக்கியமான இசை பயிலரங்கை ஏற்பாடு செய்திருக்கிறேன் வரமுடியுமா என்றார். யோசித்து சொல்வதாக சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டேன். அவர் வரசொல்லும் நாளுக்கு ஒரு நாள் முன்னர் தான் நான் போகும் பயணம் முடிந்து திரும்புவதாக முடிவு. தொடர்வண்டியும் கரூர் வழியாகத் தான் வருகிறது. ஒரு நாள் முன்னதாகவே கரூரிலில் இறங்கி இசையை என்னவென்று பார்த்துவிடலாம் என முடிவெடுத்து மகேஷை அழைத்துச் சொல்லிவிட்டேன். திரும்பும் வழியில் கரூரில் இறங்கி ஆயிற்று. தங்குவதற்கு நண்பருடைய வீடே இருக்கிறது. இறங்கியவுடன் இசை பயிலரங்குக்கு வருபவரது விபரங்களை கேட்டேன். மகேஷ் சொல்ல ஆரம்பித்ததும் தான் தெரிந்தது வருபவர் சாதாரண ஆளில்லை இசையின் உள்ளே தன்னுடைய ஆய்வுகளின் வழி பல புதிய விஷயங்களை முயற்சிப்பவர் என்பது. அவர் பெயர் வாங்கல் மணிகண்டன். நேரடியாக இவரை அறிந்தவர்கள் சிலரே. இப்படிச் சொன்னால் நிறைய பேருக்கு உடனே புரிய வாய்ப்பிருக்கிறது. விஜய்டிவி சூப்பர் சிங்கரில் ஸ்டிபன்தேவசி எனும் ஒரு பியானோ இசை கலைஞன் வந்து தன்னுடைய விரல்களால் பியானோவில் வர்ணஜாலம் காட்டுவாரே, அந்த ஸ்டிபன்தேவசியின் இசை குரு தான் வாங்கல் மணிகண்டன் அவர்கள். ஸ்டிபன்தேவசி சென்னையில் நடத்தும் இசை கல்லூரியின் முக்கியமான பேராசிரியர்.
வாங்கல் மணிகண்டன் அவர்களுக்கு பலமுறை இசையமைப்பாளராக வாய்ப்பு வந்தும் மறுத்துவிட்டார். காரணம் தான் இசையமைப்பாளராக ஆகிவிட்டால் தான் கற்ற வித்தையை வைத்து தான் மட்டுமே புகழ்பெற முடியும், ஆனால், அதே கற்ற வித்தையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் பரவலாக நிறைய இசையமைப்பாளர்களை உருவாக்க முடியும் எனப் பரந்த மனதுடன் யோசித்ததால் இசையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதை தவம்போல் செய்துகொண்டிருக்கிறார். அவர் தான் கரூரில் இருக்கும் என்னுடைய நண்பரின் இசைப் பள்ளியான ஓம் அகடமிக்கு வருகிறார் என்பதால், ஆவலோடு காத்திருந்தேன். எனக்குப் பெரியதாக இசைப்பற்றியெல்லாம் தெரியாது. இசையைக் கேட்பதில் பல்வேறு வேறுபட்ட இசைக்கோர்வைகளைத் தேடிக்கேட்டிருக்கிறேன். இசையைக் கேட்பதில் மட்டுமே பல்வேறு சோதனை முயற்சிகள் செய்திருக்கிறேன். அதைத் தாண்டி இசையை படிக்கவேண்டுமென்றேல்லாம் யோசித்தது இல்லை. மாறுபட்ட இசைகளைத் தேடி கேட்கும் என்னுடைய ஆர்வமே அவரின் வருகையை ஆவலாக எதிர்நோக்கியது.
திரு மணிகண்டன் அவர்கள் சரியாக மாலை மூன்று மணிக்கு ஓம் இசைப்பள்ளிக்கு வந்துவிட்டார். கச்சேரி ஆரம்பமானது. நானாக தொடங்குவதைவிட நீங்களாக ஒரு கேள்வி கேளுங்கள் அதிலிருந்து அப்படியே ஆரம்பிக்கலாம் என்றார் மணிகண்டன் அவர்கள். அவர் அப்படிச் சொன்ன மறுநிமிடம் ஒரு மாணவி எழுந்து முதல் கேள்வியைக் கேட்டார். முதல் கேள்வியே அட்டகாசம். இசையைக் கற்றுக்கொள்ளும் போது ஏன் சரிகமபதநிசவிலிருந்து தொடங்கிறோம் எனக் கேட்டார். கேட்கப்பட்டக் கேள்விக்கான பதிலை நேரடியாக சொல்லாமல் அதன் பின்னால் இருக்கும் வரலாற்றை மிகத்தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில், அதே சமயம் சுவாரஸ்யமாகவும் அழகாகவும் விளக்கினார். நான் இசை பயின்றவனில்லை. பயிலும், நோக்கமும் இல்லை. ஆனாலும், அவரின் விளக்கங்கள் என்னை ஈர்த்தது அருமை. இப்படிக் கேள்வி பதில்களாக அதகளமாக போய்கொண்டிருந்த பயிலரங்கில். இன்னுமொரு சுவாரஸ்மான சம்பவம் நடந்தது. ஒரு திரைப்படப்பாடலின் முதல் டியூன் எப்படி உருவாக்கப்படும், முதல் நிலையில் அதன் இசை கோர்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கும், அதை ஒரு பாடலாசிரியர் எப்படி உள்வாங்கி வார்த்தைகளை அந்த இசைக்கு ஏற்றவாறு எழுதுகிறார் என்பதை, மிகவும் விரிவான விளக்கங்களுடன் வாசித்தும் காண்பித்து விளக்கமளித்தார். இது நடந்துகொண்டிருக்கும் போதே நண்பர் மகேஷ் என்னுடய கைபேசியை வாங்கி அதிலுள்ள என்னுடைய முகநூல் பக்கத்தின் வழியே அந்த இசை பயிலரங்கை நேரடி ஒளிபரப்பில் கொண்டுவந்தார். திரு.மணிகண்டன் விளக்கமளித்த அந்த பாடல் ரோஜா திரைப்படத்தில் வரும் காதல் ரோஜாவே எனும் பாடல். இதையெல்லாம் பக்கத்தில் இருந்து உள்வாங்கும் போது புல்லரித்தது. எல்லோருக்குமே அவரவருக்கு பிடித்தபாடல் என்று ஒன்று இருக்கும். அதை கேட்கும்போதெல்லாம் அந்த பாட்டு எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணம் மனதில் ஏழாமல் இருக்காது. அப்படிபட்ட தருணம் நம் முன்னே நடத்திக் காட்டப்படும் போது, அதை அருகிலிருந்து கேட்பது வரம். திரு.மணிகண்டன் அவர்களுக்கு கோடி நன்றி. இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிறையவே அன்றைய பயிலங்கில் நடந்தேறின. அன்றைய மாலைப்பொழுது என் வாழ்வின் மிக முக்கியமான இசைமாலையாக மாறியது. இசையாவோம், மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916