புகைப்படத்தினுள் ஆழ்தல்
ஆழ்தல் இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்பது ஒரு புகைப்படக்கலைஞனுக்கு மிக முக்கியமானது ஏன்?. இந்தக் கேள்விக்கான காரணம் எனக்கு நடந்த ஒரு முக்கியமான சம்பவத்திலிருந்து நான் கற்றது. ஒரு நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு இருக்கலாம். வருடம் சரியாக நினைவில் இல்லை. என்னுடைய சொந்தங்களில் ஒரு தம்பி அவன் எனக்கு நல்ல நண்பனும் கூட, அவன் தான் பார்க்கும் வேலைகளுக்கிடையில் புகைப்படத்தின் மீது அவனுக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக, தான் வேலையில் இருக்கும் ஊரில் உள்ள தன்னுடைய நட்புவட்டத்தில், என்னுடைய புகைப்படம் பற்றி பேசி, ஏதாவது ஒரு வேலையை எடுத்து வந்து என் முன் நீட்டுவான். காரணம், அவனுக்கு நான் புகைப்படம் எடுக்கும்போது என்னுடன் வேலை செய்ய வேண்டும், அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென அதீத ஆர்வம். அப்படி ஒரு முறை அவன் ஒரு மருத்துவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அந்த மருத்துவர், ஒரு தனித்துவமான பெயர்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். அதே சமயம் சிறந்த புகைப்படக் காதலர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தான் தெரிந்தது, அவரிடம் சொந்தமாக ஒரு கேனான் 5டி கேமரா, அதற்குரிய அனைத்து உபகரணங்களோடும் வைத்திருக்கிறார் என்பது. எப்பொழுதெல்லாம் அவருக்கு நேரம் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அவருக்கென்று இருக்கும் நண்பர்கள் குழுவுடன், கேமராவை தூக்கிக் கொண்டு புகைப்படமெடுக்க கிளம்பிவிடுவார். அதுமட்டுமில்லாமல் அவர் எடுத்தப் புகைப்படங்களும் செம்ம. இப்படி ரெண்டு பேருக்குமான ரசனை ஒத்துப்போய் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். அவர் என்னிடம் அவருடைய மருத்துவமனையை அதன் இணைய தளத்துக்காக புகைப்படம் எடுத்து தரமுடியுமா எனக் கேட்டார். நானும் சரியென எடுத்துக்கொடுத்தேன். பொதுவாக நான் பெரும்பாலும் செயற்கை ஒளி உமிழும் விளக்குகள் போன்ற உபகரணங்களைத் தவிர்த்து, அந்தந்த இடத்தில் இருக்கும் இயல்பான வெளிச்சங்களை பயன்படுத்தி புகைப்படங்களை எடுப்பவன்.
எந்த வெளிச்சத்துக்கான விளக்குகளையும் பயன்படுத்தாமல், அந்த மருத்துமனையின் உள்ளே இருக்கும் விளக்கு வெளிச்சத்தை வைத்தே, நான் எடுத்த புகைப்படங்கள் அவருக்கு பிடித்துவிட்டன. நான் எடுத்தப் புகைப்படங்களையே பார்த்துகொண்டிருந்தவர், சட்டென அவர் மனதில் ஏதோ தோன்ற, எதிரில் இருந்த என்னைப் பார்த்து நாளை எனக்கு ஒரு முக்கியமான மூளை அறுவை சிகிச்சை இருக்கிறது, வெளியில் இருந்து இதற்காக ஒரு மருத்துவரும் வருகிறார். அவரும் நானும் தான் சேர்ந்து தான் அந்த அறுவைசிகிச்சை செய்கிறோம். அந்த அறுவைசிகிச்சையைப் புகைப்படமெடுத்து தரமுடியுமா என கேட்டார். எனக்கு ஒரு நிமிடம் என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. அப்புறம் ஒருவாராக சமாளித்து எடுத்துத்தருகிறேன் என தலை ஆட்டிவிட்டேன். ஆனால் உள்ளுக்குள் சின்ன உதறல் இருந்து கொண்டே இருந்தது. அவர் என்னிடம் இதை கேட்க முக்கியமான காரணம். அவரது மருத்துவமனையை புகைப்படமெடுக்கும் போது, புதியதாக வெளிச்சத்துக்கான விளக்குகள் எதையும் பயன்படுத்தாமல், அந்த மருத்துவமனை இயங்கி கொண்டிருக்கும் போதே, யாரையும் தொந்தரவும் செய்யாமல், அவருடைய மருத்தவமனை இணையதளத்துக்காக நான் எடுத்த புகைப்படங்கள் அவரை ஈர்த்துவிட்டன என்பது தான். ஆனால் அதற்காக, இப்படி ஒரு சவாலான விஷயம் வரும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அறுவைசிகிச்சை அறைக்குள் வெளிச்சம் மிக குறைவு. கிட்டதட்ட மிகக் குறைவான ஒளி அளவு தான் இருக்கும். சிகிச்சை அளிக்கப்படும் நபரின் தலைமீது மட்டுமே ஒரளவுக்கு நல்ல வெளிச்சம் இருக்கும். காரணம் நடக்க இருப்பது மூளைக்கான அறுவைசிகிச்சை. இந்த விஷயங்கள் எல்லாம் போக, சிகிச்சை நடக்க இருந்த அன்று காலை நான் கேட்டுத் தெரிந்துகொண்ட மற்றொரு தகவல். சிகிச்சை பெறும் நபர் பேருந்து ஏறும்போது தவறி விழுந்துவிட்டிருக்கிறார், அதனால் அவரின் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ரத்தம் அப்படியே உறைந்துவிட்டது. அந்த ரத்தத்தை நீக்குவதற்கான சிகிச்சைதான் நடக்கப் போகிறது. சரி சிகிச்சை அன்று மருத்துவமனை வந்தாயிற்று, விபரங்களை கேட்டாயிற்று. கேமராவை எடுத்துக்கொண்டு அறுவைசிகிச்சை அறைக்குள் நுழைந்தால், குறைவான வெளிச்சத்தின் நடுவில் ஒருவர் கிடத்தப்பட்டு, முழுமையாக அவரின் உடல்முழுவதும் மூடி, தலையில் எந்த இடத்தில் அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டுமோ, அந்த இடம் மட்டும் சரியாக குறிப்பிட்டு, துணி வட்டமாக நீக்கப்பட்டிருந்தது, தலையின் துணிநீக்கப்பட்ட இடத்தில் முடியெல்லாம் எடுக்கப்பட்டு இருந்தது. சிகிச்சை தொடங்கியது, கேமராவின் வ்யூஃபைண்டரின் வழியே என்னுடைய பார்வையை செலுத்தி, புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். தலையில் முடிநீக்கப்பட்ட இடத்தில் மேல் உள்ள தோல்பகுதி, சுற்றிலும் வெட்டி உறிக்கப்பட்டு, மண்டை ஓட்டை வட்டமாக வெட்ட ஆரம்பித்தார்கள். இதற்குமேல் விளக்கவேண்டாம் நிறுத்திகொள்ளலாம்.
கிட்டத்தட்ட அறுவைசிகிச்சை முடித்து மறுபடியும், அந்த தோல் பகுதியை ஒட்டி தையல் போடும் கடைசி நிமிடத்தில் கேமராவின் மின் ஆற்றல் சுத்தமாக வடிந்து அணைந்தும் விட்டது. நானும் வெளியே வந்து என்னுடைய மடிகணினியில் எடுத்த புகைப்படத்தை சரிபார்க்கலாம் என திறந்தால், இரண்டு மூன்று புகைப்படங்களுக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. அந்தத் தலை பகுதி தோலையும், அதிலிருந்து வழியும் ரத்தத்தையும் பார்த்தவுடன், வயிற்றிலிருந்து ஒரு உருண்டை கிளம்பி மேல் நோக்கி வர ஆரம்பித்தது. பார்ப்பதை அப்படியே நிறுத்திவிட்டு. ஒட்டுமொத்தப் புகைப்படத்தையும் நகலெடுத்து, மருத்துவரின் நினைவக அட்டையில்(pendrive) மாற்றிவிட்டு, அவரிடமே கொடுத்தேன். அனைத்தையும் முழுவதுமாக பார்த்தவர், அருமை என சொல்லிவிட்டு, தான் ஏன் அறுவைசிகிச்சையை புகைப்படமெடுக்க சொன்னேன் என்ற காரணத்தை சொன்னார். எல்லா நேரமும் அறுவைசிகிச்சை சம்பந்தமாக பயிலும் எல்லா மாணவர்களையும், சிகிச்சை அறைக்குள் கூட்டிபோக முடியாது. அவர்களுக்கு அறுவைசிகிச்சையை படிப்படியாக விளக்கி கூற, இது ஒரு அருமையான புகைப்பட தொகுப்பு வேண்டும். அதற்காகத் தான், உங்களை எடுக்கச் சொன்னேன், கலக்கிவிட்டிர்கள் என்றார். பின்னர், எப்படி அறுவைசிகிச்சை முழுவதையும், பதற்றமில்லாமல் எடுத்தேன் என யோசித்தபோது தான், ஒன்று தெளிவாக விளங்கியது. தலைப்பில் சொன்னதுபோல் ஆழ்தல் என்ற ஒற்றை வார்த்தையின் வழி தான். இதைச் சாதிக்க முடிந்தது. எப்படி? அறுவைசிகிச்சை அறைக்குள் என்னுடைய முழு கவனமும், கேமராவின் வழியே தெரியும் பிம்பத்தின் மீது படும் ஒளியை அளப்பதிலும், பிம்பத்தின் தெளிவை சரிபார்ப்பதிலுமே இருந்தது. சிலநேரங்களில் அதிலிருந்து கண்கள் விலகிய சமயம் கூட, எடுத்த புகைப்படங்களில் ஒளியும், தெளிவும் சரியாக இருக்கிறதா, என்பதை சரிபார்ப்பதிலேயே கவனம் போய்கொண்டிருந்தது. அதுதான் ஆழ்தல் என்பதின் அர்த்தம் என பின்னர் விளங்கியது. மகிழ்ச்சி.
பின் குறிப்பு
அந்த சமயத்தில் எடுக்கும் போது ஏற்படாத பதற்றம், எடுத்துமுடித்த புகைப்படங்களை பார்க்கும்போது ஏற்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் அந்த புகைப்படங்களை மறுபடியும் பார்க்கும்போது, பதற்றம் சுத்தமாக இல்லை மனம் பக்குவப்பட்டுவிட்டது. ஆனால் அந்த மருத்துவருக்கும் எனக்குமான புரிதல் கருதி, ஒரே ஒரு புகைப்படத்தை மட்டுமே இந்த தொகுப்போடு பகிர்கிறேன். அதுவே எனக்கான தொழில் தர்மமாக இருக்கமுடியும் அதுவே ஆழ்தல். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916