பார்த்துப் போங்க…
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அன்புக் கட்டளை, எனக்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லை ஆவிபிடிப்பதற்காக நொச்சி இலை பறித்துவா எனக் கட்டளையிடப்பட்டதால், ஏற்கனவே மரம் பதிவில் சொல்லியிருந்த இப்பொழுது வசிக்கும் இல்லத்திற்கு அருகில் இருக்கும் அந்த நொச்சி மரத்தில் இலை பறிப்பதற்காக போயிருந்தேன். அந்த நொச்சி மரம் நெல் பயிரிடும் வயல்களுக்கு நடுவில், ஒரு அகத்திக்கீரை தோட்டத்தின் வேலி பக்கத்தில் இருக்கும். மரத்தைப் பார்க்க போவதென்றால் காலை வேளையில் மட்டுமே செல்வது வழக்கம், அன்றும் அப்படித்தான் நொச்சி மரத்தில் இலைப் பறிக்க போனால் காலை சரியான குளிர், அதுவும் போக நெல் வயல்களுக்கு தண்ணீர் நிறுத்தும் நாட்கள் என்பதால் வரப்பு முழுவதும் ஈரம், வரப்பில் தண்ணீர் பாய்ச்சும் இடத்தில் கணுக்கால் அளவு கால் உள்ளே போகும் நிலையில் மண் நெகிழ்ந்து போய் இருந்தது. அந்த அதிகாலை குளிரோடு அந்த ஈரமண்ணில் இறங்கி நடந்தால் அது தனி சுகம், நான் வரப்பில் நடந்து போய்க் கொண்டிருக்கையில், அகத்திகீரை தோட்டத்தில் இருந்து தோட்டத்துக்காரர் கீரை பறித்துக் கொண்டு, அதனை தோளில் சுமந்தபடி எதிரில் வந்து கொண்டிருந்தார், என்னைப் பார்த்தவர் என்ன நொச்சி இலைக்கா? எனக் கேட்டார், ஆமாம் எனச் சொல்லி தலையாட்டிக் கொண்டே அவரை கடந்தேன். உடனே அவர் என்னிடம் பார்த்து போங்க சார், பாம்பு இருக்கும் என்றார். நான் சிரித்துக் கொண்டே சரிங்கண்ணே எனச் சொல்லிவிட்டு நகர்ந்தேன். மனதுக்குள் ஒரு சின்ன குறுகுறுப்புத் தோன்ற, வரப்பில் எங்காவது என் கண்களுக்குப் பாம்பு தட்டுப்படுகிறதா என ஒருவித ஆர்வத்தோடு உன்னிப்பாகப் பார்த்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தேன். கால்களில் பட்ட தொட்டா சிணுங்கி செடிகள் சிணுங்கியதே தவிர வேறு எதுவும் தட்டுப்படவில்லை. வரப்பில் பாம்பை என் கண்கள் தேடிக் கொண்டிருந்த அதே நேரம், காலம் என்னை பின்னோக்கி இழுத்துச் சென்றது, ஒரு நேரத்தில் இதே பாம்புக்காக நான் எப்படி அலறி அடித்து ஓடினேன் என்பதை நினைத்து சிரித்துக் கொண்டே நொச்சி மரம் நோக்கி நடந்தேன்.
ஒரு பத்து அல்லது பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு இருக்கும், அப்பொழுது திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணியிலிருந்த நேரம், தமிழின் மிக முக்கியமான ஒரு இயக்குநரின் திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அன்றைக்கான படப்பிடிப்பில் ஒரு முக்கியமான காட்சியில் பாம்பு தேவைப்பட்டதன் காரணமாக, ஒரு நிஜப் பாம்பும் மற்றும் ரப்பரால் உருவாக்கப்பட்ட பாம்பையும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நிஜப்பாம்புடன் அதனை நன்கு பழக்கியவர் உடனிருந்து படப்பிடிப்பிற்கு உதவிக் கொண்டிருந்தார். நிஜப்பாம்புடன் எடுக்கப்படும் காட்சிகளில் மிக சொற்பமான ஆட்கள் மட்டுமே இருந்து, காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அப்பொழுது திடீரென பாம்பை ஏதோ தவறுதலாக கையாண்டதில், அது பயிற்சியாளர் கைகளில் இருந்து தவறி ஓடி விட்டது. அப்பொழுது அந்த படப்பிடிப்புகான இடமே அல்லோலப்பட ஆரம்பித்தது. ஆளுக்கு ஒரு புறம் பாம்பைத் தேட ஆரம்பித்தார்கள், படப்பிடிப்பு நடந்த இடமோ பொட்டல் காடு வெட்டவெளி, அங்கிருந்த அனைவருக்கும் உள்ளுக்குள் பய பந்து உருண்டபடி இருந்தது. அதே பயத்தோடு பாம்பு போன திசையில் அனைவரும் தேடிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு பக்கமாக உள்ளிருக்கும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பாம்பைத் தேடிக் கொண்டிருந்தேன், அப்பொழுது எனக்கு நெருக்கமான உதவி இயக்குந நண்பன் ஒருவன் ஏதோ ஒரு குச்சியை எடுத்து வந்து, எனக்குத் தெரியாமல் என் பின்னால் இருந்து என்னுடைய பின்னங்கால்களில் மெதுவாக கீழிருந்து மேல் நோக்கி அந்த குச்சியால் கோடு போல் இழுத்தான், பயத்துடன் பாம்பை தேடிக் கொண்டிருந்த என்னுடைய மனநிலைக்குப் பாம்பு தான் கால்களுக்குள் ஏறுகிறது என நம்பி, மரண பயத்தில் கத்திய கத்தில் அருகில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் என்னை திரும்பிப் பார்த்த அதே நேரம், என் அருகில் என்னுடைய கால்களில் குச்சியை விட்டு ஆட்டிய நண்பன் தரையில் விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருந்தான். அவனுடைய சிரிப்பில் என்ன நடந்தது என எனக்கு விளங்கிவிட, எனக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் கொலைவெறியில் நான் என் நண்பனைப் பார்க்க, என்னுடைய கோபமான மூஞ்சியை பார்த்து மேலும், மேலும் அவன் சிரிக்க. அதற்குள் பாம்பை பிடித்து வந்துவிட்டார்கள்.
இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்று என்னுடைய வீடு இருக்கும் பகுதியில் பாம்பின் நடமாட்டமெல்லாம் சர்வ சாதாரணம். அதுவும் மழை பொழியும் நாட்களில் கண்டிப்பாக தினசரி எங்காவது கண்களில் பாம்பு தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கும், எனக்கு ஒரு பழக்கமுண்டு தினசரி இரவு உணவை முடித்தவுடன், அலைப்பேசியில் யாருடனாவது பேசியபடி வீட்டின் கீழ் இருக்கும் பிரதான சாலையில் நடந்தபடியே சிறிது தூரம் போவதும், வருவதுமாக பேசிக் கொண்டிருப்பது வழக்கம், இப்பொழுது நான் குடியிருக்கும் வீடு இருக்கும் பகுதி எப்படியெனில், அது அடுத்து ஒரு ஐநூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலை, அந்தச் சாலையின் ஒரு புறம் இப்பொழுது குடியிருக்கும் வீடு, அதே சாலையின் மற்றொருபுறம் வயல்வெளி, வழக்கம் போல் அன்றும் அப்படித் தான், இரவு உணவை முடித்துவிட்டு அந்த சாலையில் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தேன், அப்பொழுது சிறிது தூரம் போய்விட்டு, திரும்பி வீட்டை நோக்கி பாதி தூரம் வந்திருப்பேன், அப்பொழுது வயல்புறமிருந்து ஒரு ஐந்து அடி நீள பாம்பு சாலையைக் கடந்து என்னுடைய வீட்டை நோக்கி ஊர்ந்தபடி வந்து கொண்டிருந்தது. அந்த வீடு இரண்டு தளங்கள் கொண்டது, என்னுடைய வீடு மேல் தளத்திலிருந்தது, கீழ் தளத்தில் ஒருக் குடும்பம் இருந்தது. அந்தப் பாம்பு வந்தால், நேராக கீழ் தளத்திலிருக்கும் வீட்டுக்குள் போக எல்லா சாத்தியக்கூறும் இருந்தன. கீழ் தளத்தில் இருந்த நண்பர் அவர் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள வெற்றிடத்தில் அமர்ந்திருந்தார். நடந்து வந்து கொண்டே அவர் பெயரை சொல்லி சாலையில் கவனியுங்கள் எனச் சத்தமாக சொல்லியபடி வேகமாக நடந்து வீட்டை நோக்கி வந்தால், சாலையில் நடந்து வந்த அதிர்வினாலோ அல்லது என்னுடைய சத்தத்தை கேட்டதாலோ, பாம்பு பாதி சாலையைக் கடக்கையிலேயே, அப்படியே வந்தப் பாதை பக்கமே திரும்பி வயலை நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டது. சாலையின் மறுபுறம் வயல் கொஞ்சம் இறக்கமாய் இருக்கும், அந்த இறக்கத்தில், செடிக்கள் அடர்ந்திருக்கும், அந்த செடிகளுக்குள் அது ஓடிவிட, அதற்குள் அதன் மிக அருகில் போய் விட்டேன். அப்படியே கைலிருந்த அலைபேசியின் வெளிச்சை அதன் மீது பாய்ச்சியபடி அதனையே பார்த்துக் கொண்டிருந்தேன், அது நகராமல் அப்படியே நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மிகச் சரியாக அந்த நேரத்தில் ஒரு அலைப்பேசி அழைப்பு அதனை மறுக்க திரும்பிய ஒரு நொடியில் அது அங்கிருந்து மறைந்து விட்டது. அப்புறம் சிறிது நேரம் அந்த இடத்தை துலாவிவிட்டு, அதனை காணாமல் தேடலைக் கைவிட்டோம். ஆனால் அன்றைக்கு அந்த பாம்பைப் பார்த்த போது பயமெல்லாம் சுத்தமாக இல்லை. ஒருவித சுவாராஸ்யமான குறுகுறுப்பு மட்டுமே மனதிற்குள் இருந்தது. அதே நேரம் அந்தப் பாம்பை அடிக்கும் எண்ணம் துளியும் இல்லை. ஒருவேளை அது பிடிப்பட்டிருந்தால் கூட கண்டிப்பாக தூரமாக கொண்டு போய் விட்டு விடலாம் எனச் சொல்லிக் கொண்டிருந்தேன். அது என்னவோ, இந்த வாழ்வு தந்த அனுபவப் பாடமா அல்லது வாசிப்பினாலோ அல்லது வாசிப்பதை உள்வாங்கிய விதத்திலா எது எனத் தெரியவில்லை. இந்த பூமி கண்டிப்பாக மனிதர்களுக்கு மட்டுமானதல்ல என்கிற எண்ணம் மிக ஆழமாக மனதினுள் வேர் ஊன்றி விட்டது. அப்படியான எண்ணம் எப்பொழுது எனக்குள் ஆழமாக போனதோ, அதிலிருந்து இந்த சமூகம் இதெல்லாம் மோசமான கொடுரமான விலங்குகள் என கட்டமைத்து வைத்திருக்கும் எந்த ஒரு விலங்கின் மீதும் எவ்விதமான சூழலிலும், எப்பொழுதும் பயத்தையோ. பாதுகாப்பின்மையையோ உணர்ந்ததே இல்லை. இவையெல்லாவற்றையும் தாண்டி மனிதனைப் போல் மோசமான, குருரமான ஒரு உயிரினம் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன?.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916