மீன் மேயும் கிணறு…
என்னது மீனு மேயுதா எனக் கேட்பவர்களுக்கு. ஆமாம் மீனும் மேயும், அதெப்படி!? பார்க்கலாம். முன்னர் எல்லாம் கிராமங்களில் மட்டுமில்லாமல் பெரியதாக வளர்ச்சியடையாத நகரங்களிலும் கூட அடிக்கடி காதுகளில் கேட்கும் ஒரு விஷயம், யம்மா கிணத்துல போய் குளிச்சிட்டு வர்றேன் என்பது தான். ஆனால் இன்று வடிவேல் நகைச்சுவையைப் போல் கிணற்றைத் தேட வேண்டி இருக்கிறது. அதுவும் இன்றைய தலைமுறை பிள்ளைகள் எத்தனை பேர் நேரடியாக கிணற்றைப் பார்த்து இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பொதுவாக எனக்குச் சிறுவயது முதலே கிணற்றின் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. காரணம் அன்றைய நாட்களில் கிணற்றை வைத்து சொல்லப்பட்ட பல வகையான கதைகள். அப்படிக் கேட்ட பல கதைகளில் வந்த கிணறுகளில் கண்டிப்பாக பேய் உண்டு. ஒரு வயதுக்கு மேல் அந்தப் பேய் எப்படியிருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கிணற்றை தேடிப் போனதுண்டு. பொதுவாக ஏதாவது ஒரு மலை உச்சியிலோ அல்லது உயரமான கட்டிடத்திலோ இருந்து கீழே பார்க்கையில் ஒரு விதமானந் பயப் பந்து அடிவயிற்றுக்குள் இருந்து மேல் நோக்கி வரும் இல்லையா, அதே போலத் தான் கிணற்றின் விளிம்பில் நின்று கிணற்றுக்குள் பார்க்கும் பொழுதும். வயிற்றிக்குள் பட்டாம்பூச்சிகள் தோன்றி மறையும். இன்றைக்கு நான் குடியிருக்கும் பகுதியினை சுற்றி நிறைய கிணறுகள் இருக்கின்றன. அதிலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில், கிட்டத்தட்ட எல்லா கிணறுகளுமே முறையாக பராமரிக்கப்பட்டு, உபயோகத்தில் உள்ளன என்பது தான். அவற்றில் பல கிணறுகளில் விட்டம் மிகப் பெரியது. ஆழமும் அதிகம். அதில் சில கிணறுகளின் பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு. அப்படி இப்பொழுது குடியிருக்கும் வீட்டின் எதிர்புறம் ஒரு பெரிய கிணறுடன் கூடிய தோட்டம் இருக்கிறது. அதனைப்பற்றி கொஞ்சமாக என்னுடைய 153வது கட்டுரையான மேய்ப்பனைத் தேடியில் எழுதியும் இருக்கிறேன்.
என்னுடைய வீட்டின் எதிர்புறம் இருக்கும் அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றைப் பற்றியும் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. அந்தத் தோட்டம் அமைந்திருக்கும் இடம் என்பது, அருகில் இருக்கும் கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையின் ஒரு சின்ன வளைவான திருப்பத்தில். அந்த கிராமத்திற்கு ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு முறை, நகரப் பேருந்துகள் தொடர்ச்சியாக வந்து செல்லும். அப்படி வந்து செல்லும் பேருந்துகள் ஒன்றில், ஒரு நாள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய வந்துக் கொண்டிருந்திருக்கிறது, அன்றைக்கு அந்தப் பேருந்தின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கிறது. சரியாக அந்த கிணறு இருக்கும் தோட்டத்தின் வளைவைத் தாண்டுகையில், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழக்க, அந்தப் பேருந்து நேராக கிணற்றுக்குள் பாய்ந்துவிட்டது. நல்லவேலையாக உயிர்சேதம் எதுவும் இல்லை. எப்படியோ மிகப்பெரிய பிரயத்தனத்துக்கு பிறகு அந்தப் பேருந்தை மீட்டு வெளியே எடுத்திருக்கிறார்கள். மேலே சொல்லிய நிகழ்வை கேள்விப்பட்டத்திலிருந்து எனக்கு அந்த கிணற்றின் மீது ஒருவிதமான பயத்துடன் கூடிய சுவாரஸ்யம் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் என்னுடைய வீட்டுக்கு புதியதாக வரும் நண்பர்களை, விருந்தாளிகளை அந்தக் கிணறு இருக்கும் தோட்டத்துக் கண்டிப்பாக கூட்டிப் போய் விடுவேன். அதோடு பேருந்து விழுந்த நிகழ்வையும் அவர்களிடம் சொல்லாமல் இருந்ததில்லை. அப்படி அந்த கிணற்றின் அருகில் இருந்து அந்த நிகழ்வை கேட்பவர்களுக்கு கண்டிப்பாக இது நடந்திருக்கும் எனத் தெரிந்துவிடும், காரணம், அந்தக் கிணற்றின் மேல் விட்டம் மிகப் பெரியதாக இருக்கும். அப்படியான மேல்புறம் பெரிய முகப்புடைய கிணற்றின் விளிம்பில் நின்று கிணற்றை ரசிப்பத்தில் ஒருவிதமான கிக் இருக்கிறது. அதனால் நானும் வீட்டில் இருக்கும் நேரங்களில் அந்த கிணறு இருக்கும் தோட்டதுக்கு அடிக்கடிச் செல்வதுண்டு. அந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பராமரிப்பவருக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் முறையே பதினொன்று, பன்னிரெண்டு வயது இருக்கலாம். விவசாயம் மற்றும் தோட்ட வேலைகளில் அந்த இரண்டு பசங்களும் கில்லாடிகள். அந்தப் பையன்களிடம் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது தான், அந்தக் கிணற்றில் ஏற்கனவே நிறைய மீன்கள் உண்டு, அதோடு வண்ண மீன்களையும் வாங்கி வீட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அப்படி அந்தக் கிணற்றில் உள்ள மீன்களை பார்பதற்காகவே கையில் பொரி எடுத்துப் போவதுண்டு.
அப்படி ஓவ்வொரு முறை அந்தக் கிணற்றுக்குப் போகும் போதும். கிணற்று நீரின் மேல் போடப்பட்ட பொரியை பல வண்ண மீன்கள் மேய்ந்து முடிக்கும் தருவாயில். அந்த கிணற்றின் உள்ளிறங்க கீழ் நோக்கி படிக்கட்டுகள் இருக்கும், நான் அதன் வழியாக இறங்கி தண்ணீருக்குள் கணுக்கால்கள் முழ்கும் வரை கால்களை வைத்துக் கொண்டு, அதற்கு மேல் இருக்கும் படிக்கட்டில் அமர்ந்துவிடுவேன். இங்கு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும், அந்தக் கிணற்றைப் பொறுத்தவரை, வருடத்தின் மழை பொழியும் மாதங்களில், கிணற்றின் கரையில் நின்று கொண்டே குனிந்து தண்ணீரைத் தொட்டு விடலாம், அந்த அளவுக்குக் கிணற்றின் மேல் மட்டம் வரை தண்ணீர் நிறைந்தே இருக்கும். வெயில் காலங்களிலும் ரொம்பவும் கீழ் இறங்காது. அந்தக் கிணறுக்குள் இறங்கும் படிக்கட்டுகளில் இரண்டு அல்லது மூன்று படிக்கட்டுகளை தொடும் படியாக மட்டுமே தண்ணீர் கீழ் இறங்கி இருக்கும். அப்படி இருக்கும் தண்ணீருக்குள் கால்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கையில் மீன்கள் ஒவ்வொன்றாக கால்களுக்கு அருகில் வர ஆரம்பிக்கும். பொதுவாக கால்களை வைத்தவுடன் மீன்கள் வந்துவிடாது. அதனை ஒரு தியானத்தை போல் பொறுமையாக, நிதானமாக, கவனமாக செய்ய வேண்டும். தியானத்தைப் போல் என்ன, அதுவும் ஒரு வகை தியானம் தான். மீன்கள் கால்களுக்கு அருகில் வந்து குதிங்கால்களில் இருக்கும் கசடுகளை சாப்பிட சில நிமிடங்களேணும் காத்திருக்க வேண்டும், அப்படி காத்துக் கொண்டிருக்கையில் கண்டிப்பாகப் பேசக் கூடாது, அலைப்பேசி உங்களிடம் இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும் அதனை அனைத்து வைத்திருத்தல் மிக முக்கியம். பெரும்பாலும் உடலுக்கு குறிப்பாக கால்களுக்கு அசைவு கொடுக்காமல், தண்ணீருக்குள் அலையும் மீன்களைப் பார்த்தபடி, அதனை ரசித்தபடி அமைதியாக அமர்ந்திருத்தல் பெரும் சுகம். சில நிமிடங்கள் கழித்து ஒரே ஒருவர் மட்டும் வந்து கால்களை முத்துமிட்டு செல்வார், பெரிய அசைவேதுவும் இல்லை, ஆபத்தும் இல்லை எனத் தெரிந்தவுடன் மீன்களின் எண்ணிக்கை கூடும். நம்முடைய தாங்கும் சக்தி, பொறுமையை பொருத்து மிகச் சிறந்த கால் சிகிச்சை, அங்கிருக்கும் மீன் கூட்டத்தால் அளிக்கப்படும். கண்டிப்பாக ஒரு விதமான கூச்சம் இருக்குமே ஒழிய, வலி கண்டிப்பாக இருக்காது. இது மாதிரியான ஒரு அற்புதமான உணர்வை, நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும், எந்த ஒரு பிரம்மாண்டமான வணிகவளாகத்தின் மீன் தொட்டிகளில் இருக்கும் எந்த மீன்களாலும் கொடுத்து விட முடியாது, காரணம், அந்த மீன்களின் குறுகலான உலகத்துக்குள் மனிதனின் கால்களை தவிர வேறெதும் இல்லை.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916