தயக்கச் சுவை…
நேற்று ஒரு வேலை விஷயமாக சில இடங்களுக்கு அலைய வேண்டி இருந்தது. இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கூடவே என்னுடன் வர வேண்டியவர்களையும் அழைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன். முதலில் ஒரு இடத்தில் போய் வேலையை முடித்த பிறகு, மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதாக முடிவெடுத்துக் கிளம்பினோம். காலை 9:30 மணிக்கு வண்டியை எடுத்தால் முதலில் போன இடத்தில் வேலை முடிய ஒரு மணி நேரம் ஆனது. அதனை முடித்துவிட்டு வாகனத்தை எடுக்க வெளியே வந்தால், வெயில் வெகுசிறப்பாக தன்னுடைய மண்டகபடியை ஆரம்பித்திருந்தது, அதே நேரம் இப்பவே இப்படியிருக்கே சித்திரை வந்தா வெளிய தல காட்ட முடியாது போலயே என ஆரம்பித்து, போன வருஷத்தையும் விட இந்த வருஷம் வெயில் கொஞ்சம் ஜாஸ்தி என வழக்கமான சொல்லாடல்களை காதுகளுக்குள் கேட்டும், கேட்காமலும் வாகனத்தை சொடுக்கினால், அடுத்த இடத்தில் போய் முடிக்க வேண்டிய வேலை பற்றி மண்டைக்குள் ஓட ஆரம்பித்தது. அதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வாகனத்தை செலுத்தினேன். இடைப்படும் ஒவ்வொரு போக்குவரத்து சமிஞ்கை சிகப்பு விளக்குகளிலும் வாகனத்தை நிறுத்தும் போதெல்லாம், வெயிலின் சூடு தோலினை சிறப்பாகப் பதம் பார்த்தபடி இருந்தது. சரியென ஒரு வழியாக அடுத்த வேலையை முடிக்க வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்தால், அங்கே கொஞ்சம் கூட்டம் அதிகம், வேலை முடிய எப்படியும் இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலாகவோ ஆகலாம் எனத் தெளிவாகத் தெரிந்தது, சரியெனக் கூட வந்தவர்களை அங்கேயே உள்ளே உட்கார வைத்துவிட்டு, வெளியே வந்து வாகான நிழலான இடமாக தேடி உட்கார்ந்து கொண்டு அலைப்பேசியில் படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தேன். கொஞ்ச நேரத்திலேயே வயிற்றுக்குள் பசியின் அறிகுறிகள் லேசாக தெரிய ஆரம்பிக்க, கண்டிப்பாக அதனை அலட்சியப்படுத்தினால், தலைவலி நிச்சயம் எனத் தெளிவாக தெரிந்தது.
சரியென தேநீர் கடை எதுவும் கண்களில் தென்படுகிறதா என உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தே சுற்றிலும் கண்களால் துலாவினால், எதுவும் அகப்படவில்லை. நான் இருந்த இடம் நகரத்தின் பிரதான சாலையில் இருந்து சிறிது உட்செல்லும் சாலை. சரியென இரண்டு நிமிட நடையில் பிரதான பரப்பரப்பான சாலைக்கு வந்தால், எந்தப் பக்கமாக போனால் தேநீர் கடை வரும் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வலது பக்கம் போகலாம் என உள்ளிருந்து பட்சி சொல்லியதால், வலது புறம் திரும்பி நடந்தால், மூன்று நான்கு கடைகள் தாண்டி ஒரு பரப்பரப்பான தேநீர் கடை இருந்தது. தேநீர் கடையின் உள்ளே பதின்ம, நடுத்தர, வயதான என பல தரப்பட்ட வயது ஆண்களின் கூட்டமொன்று, தேநீர் மற்றும் வடைகளை அப்படியே கபிளிகரம் செய்தபடி இருந்தது. நானும் ஒரு வடை, ஒரு காபி என ரசீதினை வாங்கிய பிறகு, முதலில் வடையை வாங்கி சாப்பிட்ட பின், சூடாக காபி வாங்கிக் கொள்ளலாம் என வடையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் தான், தேநீர் கடைக்குள் நுழைந்து கொண்டிருந்த அந்த பெண்மணியை கவனித்தேன், கைகளில் தூக்க முடியாத கட்டைப்பையொன்றை தூக்கியபடி வந்த அவருக்கு ஒரு முப்பது, முப்பத்தைந்து வயது இருக்கலாம், மாநிறத்தில் ஒல்லியாக இருந்தார். அவர் கூடவே ஒரு அறுபதை கடந்த வயதில் ஒரு பெண்மணியும் இருந்தார், அது முதலில் சொன்ன பெண்ணின் மாமியாரா அல்லது அம்மாவா என மண்டைக்குள் யோசனை ஓடியது, அந்த யோசனையை மண்டைக்குள் இருந்து தூக்கி வீசிய அதே நேரம், அந்த நடுத்தர வயதுப் பெண் இரண்டு வடை மற்றும் இரண்டு தேநீருக்கான ரசிதீனை வாங்கிக் கொண்டு, வடை கொடுக்கும் இடத்தில் போய் இரண்டு வடைகளை காகிதத்தில் பொதித்து வாங்கிவிட்டு, நேராக தேநீர் போடும் இடத்தில் போய் ரசீதினைக் கொடுத்து தேநீரையும் வாங்கிக் கொண்டு, அந்தக் கடைக்குள் இருந்த ஒரு தூணின் பின்னால் போய் மறைவாக நின்று கொண்டார். அந்த தூணுக்கு பின்னால் நின்று கொண்டால் கடைக்கு வெளியில் இருந்து பார்த்தால் அங்கே ஒருவரோ, இருவரோ நிற்கிறார்கள் என்பது தெரியாது. அப்படியே கடைக்குள் நுழைந்தாலும் தேநீர் கொடுக்கப்படும் இடத்திற்கு அருகினில் போகும் போது தான், அந்த தூணுக்கு பின்னால் ஆள் இருப்பது தெரியும். அப்படியான தூணுக்கு பின்னால் நின்று கொண்டு, தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்கிற ஒருவித தயக்கத்தோடு வெளியே எட்டிப் பார்த்தபடியே வடையையும், தேநீரையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கடைக்குள் நுழைக்கின்ற ஒவ்வொரு ஆணும் தேநீர் கொடுக்குமிடத்தை நோக்கி நகர்கையில், சில நிமிடங்கள் அந்த பெண்கள் நின்று தேநீர் அருந்திக் கொண்டிருப்பதை தாங்கள் இயல்பானதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தங்களின் உடல்மொழியின் வழியே நாரசமாக வெளிப்படுத்தியபடியே நகர்ந்து கொண்டிருந்தார்கள். அது அங்கிருந்த அந்தப் பெண்ணை அதிகம் சங்கடப்படுத்தியது.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சில வருடங்களுக்கு முன் எஸ்.ராவின் எழுத்துக்களில் வாசித்த சில வரிகள் ஞாபக அடுக்குகளில் வந்து போனது. அது அநேகமாக துணையெழுத்து புத்தகமாக இருக்கலாம், புத்தகத்தின் பெயர் சரியாக நினைவில் இல்லை. அந்த புத்தகத்தில் எஸ்.ரா அவர் குடியிருந்த வீட்டில் நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டிருப்பார், வெயில் கொளுத்தி எடுக்கும் ஒரு நாளின் மதிய வேளை, வீடுவிடாக போய் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு விற்பனை பிரதிநிதி பெண் ஒருவர் ஒருமுறை எஸ்.ராவின் வீட்டிற்கும் வருகிறார், அங்கே எஸ்.ராவிற்கும் அந்த பெண்ணிற்கும் நடக்கும் உரையாடலில் அந்த பெண்மணி இப்படிச் சொல்வார், வீடு வீடா போய் அலைஞ்சி கிட்டே இருக்கப்ப, இந்த வெயிலுக்கு தொண்டைக்கு இதமா ஒரு டீ சாப்பிட்டா நல்லாயிருக்கும்னு தோணும், ஆனா எல்லா டீக்கடையிலும் ஆண்களாக நின்று டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கே ஒரு பெண் நின்று டீ குடித்தால் அந்த பெண்ணை இவர்கள் பார்க்கும் பார்வையே தவறானதாக இருக்கிறது எனச் சொல்லிவிட்டு, ஏன் சார் ஆம்பிளைங்க ஒண்ணுக்கு வருதுன்னா அது எந்த இடம், யாரு இருக்காங்க, பெண்கள் இருக்கிறார்களா, இல்லையா என எதனைப் பற்றியும் யோசிக்காமல், அனைவரும் நடமாடிக் கொண்டிருக்கும் பொது இடத்தில் சுவற்றை பார்த்து நின்று கொண்டு, கைகளில் பிடித்து மூத்திரம் போய்விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களை இங்கே யாருமே சங்கடமாக பார்ப்பதில்லை, அது ஏதோ இந்த மனித இயல்பில் முக்கியமானதாக ஆகிவிடுகிறது. ஆனால் ஒரு பெண் ஒரு டீக்கடையில் போய் டீ சாப்பிடுவதை, இந்த ஆண்களால் இந்த சமூகத்தால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடிவதில்லையே ஏன் எனக் கோபமாக எஸ்.ராவைப் பார்த்துக் கேட்பார். எஸ்.ராவிடம் கேள்வி கேட்ட அந்த விற்பனை பிரதிநிதிப் பெண்ணின் வார்த்தைகள் எவ்வளவு சத்தியமானவை என அன்று நான் நேரில் கண்ட காட்சி எனக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.
இத்தனையையும் உள்வாங்கியபடி எனக்கு தாமதமாகிவிட்டதால் அங்கிருந்து பழையபடி வேலை முடிய வேண்டிய இடத்திற்கு வந்தால். போன வேலை முடியும் தருவாயில் இருந்தது. சரியென வேலையை முடித்துவிட்டு கிளம்பினால், கூட வந்தவர்களுக்கும் பசி எடுக்கிறது எனச் சொல்ல, மீண்டும் அதே தேநீர் கடை, இப்பொழுது அந்த கடைக்குள் நுழைகையில், அதன் வாசலில் யாசகம் கேட்டபடி நின்றிருந்த ஒரு அறுபது வயது மதிக்கத் தக்க பெண்ணை கவனித்தேன். அவர் என்னுடன் வந்த ஒருவரிடம் யாசகம் கேட்க, அவர் யாசகம் கொடுக்க விருப்பமில்லாமல் டீ சாப்பிடுறீங்களா என அந்தப் பெண்ணிடம் கேட்டவுடன், அவரும் சரியென தலையாட்டி விட்டார். நான் போய் எல்லாருக்குமான தேநீர் ரசீதை வாங்கி, தேநீர் போடும் இடத்தில் கொடுத்து விட்டு திரும்பிய போது தான், வெளியில் யாசகம் கேட்ட பெண்மணி என் பின்னால் வந்து நின்றிருப்பதை கவனித்தேன். அவரைப் பார்த்ததும் தேநீர் போடுபவரிடம், ஒரு டீய அவங்களுக்கு கொடுத்திடுங்க எனச் சொல்லிவிட்டுப் பார்த்தால், அந்தப் பெண் டீ மாஸ்டரை பார்த்து சினேகமாக புன்னகைக்க, அவரும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு, அவர் அந்தப் பெண்ணுக்கு தயார் செய்து கொடுத்த தேநீரின் திடம் வழக்கத்தைவிட குறைவாக இருந்ததில் அவர்கள் இருவருக்குமான இணக்கமான நட்பு எனக்கு விளங்கியது. அப்படி தனக்குக் கொடுக்கப்பட்ட தேநீரை கைகளில் ஏந்தியபடி, அந்த கண்ணாடி டம்ளரை அப்படியே ஒரு சுழற்று சுழற்றி அதனைப் பருகிக் கொண்டே, அங்கே தேநீர் குடித்துக் கொண்டிருந்த ஆண்கள் யாவற்றையும் நோக்கி சர்வ அலட்சியமாக ஒரு பார்வையை வீசியபடி தனக்கான தேநீரை ருசித்துக் கொண்டிருந்தார். இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அதே இடத்தில் சற்று நேரத்திற்கு முன்னால் தயக்கத்தோடு தேநீர் அருந்திய அந்த பெண்ணின் முகம் ஒரு நிமிடம் மனதிற்குள் வந்து போவதை ஏனோ என்னால் தடுக்க முடியவில்லை. இதனையெல்லாம் உள்வாங்கியபடி தேநீர் பருகிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தேநீரை முடித்துவிட்டு, நேராக அந்த கடையின் வாசற்படிக்கட்டுகளில் போய் ஓரமாக உட்கார்த்து கொண்டு, சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் தேநீர் கடையில் இருந்து கிளம்புகையில் அவரிடம் இருந்து எங்களை நோக்கி ஒரு திருப்தியான புன்முறுவல் வந்தது. இம்முறை எனக்கு நான் வாசித்த எந்த வரிகளும் ஞாபகம் வரவில்லை. காரணம், இம்முறை அந்தப் பெண்ணே எனக்கு மிகப்பெரிய கதை சொல்லியாகத் தெரிந்தார். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916