இயற்கையோடு இருத்தல்…
கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே வார இறுதி நாட்கள் அல்லது வார நாட்களில் அலுவல் சம்பந்தமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பயணமாகவே போய்க் கொண்டிருக்கிறது. அதில் அலுவல் சம்பந்தமாகப் பயணிக்கையில் இருக்கும் மனநிலையே வேறு. தனிப்பட்ட முறையில் பயணம் என்பது கூட்டாளிகளுடன் அது வேறு மாதிரியான பயணம். அப்படியான தனிப்பட்ட பயணங்கள் பற்றிய பேச்சு தொடங்கும் போதெல்லாம், அது மலை பயணமாக இருந்தால் மட்டும் சூழ்நிலையைப் பொறுத்து போகலாம் என முடிவெடுப்பேன். அப்படிப் போகலாம் என முடிவெடுக்கும் இடங்களைப் பற்றி பேச்சு வருகையில், முதல் கேள்வியே அங்க பாக்குற மாதிரி என்ன இடம் இருக்கு என்பது தான் முதலில் கேட்கப்படும். எனக்கு ஒன்று புரியவில்லை பாக்குற மாதிரி இடம் என்றால் இவர்கள் என்ன மாதிரியான வகைமையில் அதனை யோசிக்கிறார்கள் என்பது தான். மலைப் பயணம் என்பதே மிக சுவாரஸ்யமானது, அதுவும் அந்த மலை மரங்கள் அடர்ந்த வனம் நிறைந்த மலையாக இருந்தால் கேட்கவே வேண்டாம், அட்டகாசமாக இருக்கும். இதனையெல்லாம் ரசிக்காமல், அங்க பார்க்க மாதிரி என்ன இருக்கு என யோசிப்பவர்களை அல்லது அப்படிக் கேள்வி கேட்கும் பிரகஸ்பதிகளைப் பற்றி என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சரி அதை விடுங்கள், அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இப்படித் தான் கடந்த வார இறுதியில் ஒரு மலைப் பயணத்துக்கான அழைப்பு ஒன்று தம்பியிடம் இருந்து வந்தது, சரியென இப்பொழுது வசிக்கும் இடத்தில் இருந்து ஒரு இரண்டு மணி நேரப் பயணத்தில் இருக்கும் ஒரு மலைக்குப் போவதென முடிவு எட்டப்பட்டது. சரி எனத் தம்பி தனது காரை எடுத்துக் கொண்டு வந்ததும் அதில் கிளம்பி விட்டோம். எனக்கு அந்த மலையைப் பற்றி பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதனால் முற்றிலும் புதியதான ஒரு இடத்திற்குப் பயணிக்கையில் மனதிற்குள் ஒருவிதமான குறுகுறுப்பு இருக்குமில்லையா, அதனோடே பயணித்துக் கொண்டிருந்தேன். போகும் வழியில் காலை உணவையெல்லாம் முடித்துவிட்டு மலையை நெருங்குகையில் தான் தெரிந்தது, அந்த மலை வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பது. மலையேறத் தொடங்கும் இடத்தில் இருந்த வனத்துறை அலுவலகத்தில் ஒரு முக்கியமான எச்சரிக்கை தகவல் ஒன்று எங்களிடம் சொல்லப்பட்டது. அந்த தகவலைக் கேட்டதும் உள்ளுக்குள் ஒருவிதமான ரசாயன மாற்றம் நிகழ்வதை அவதானித்த அதே நேரம் மலையேறத் தொடங்கினோம்.
அந்த மலை ஒரு தொடர் மலை, அதாவது, பல மலைகள் ஒன்றிணைந்த ஒரு மலை, மலைகளுக்குள் இடையிடையே சிறு சிறு ஊர்கள் இருந்தாலும் மலையினுடைய பெரும்பாலான இடங்கள் அடர்வனங்கள் நிறைந்த பகுதி தான். அதனால் வனத்துறையினரின் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு சொல்லப்பட்ட தகவல் என்னவெனில், கடந்த சில வாரங்களாக பகலிலேயே சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும், அதனால் நீங்கள் இடையில் எங்கும் அவசியமில்லாமல் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். அதுவும் போக அந்த மலைப் பாதை நிறைய கொண்டை ஊசி வளைவுகளோடு பயணிக்கும் பாதை வேறு. சிறுத்தை நடமாட்டத் தகவல் சொல்லப்பட்ட இடத்தில் இருந்து தான் எங்களின் மலையேற்றம் தொடங்கியது. பொதுவாக உயரத்தை நோக்கிப் பயணிக்கையில் ஒருவிதமான பந்து வயிற்றுக்குள் இருந்து உருண்டு தொண்டை வரை வரும் இல்லையா, அதோடு சிறுத்தையின் நடமாட்டமும் சேர்ந்துவிட்டதால், மலையேற்றத் தொடக்கமே அதகளமாய் ஆரம்பமானது. வனத்துறை அலுவலகத்தில் சொல்லப்பட்ட தகவலின் நம்பகத்தன்மை பற்றிய உண்மைத் தெரியவில்லை என்றாலும். என்னுடைய கண்கள் அந்த மலைகளின் மீதிருந்த வனங்களின் நடுவில் சிறுத்தையின் கண்களை தேடியபடியே இருந்தன. மேலே ஏற, ஏற தற்பொழுதைய நிலையில் தரை மட்டத்தில் இருக்கும் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி மிதமான குளிர்காற்று அப்படியே உடல் முழுவதும் பரவுவதை ரசித்தபடி மேலேறிக் கொண்டிருந்தோம். போகும் வழிகளில் நிறைய மிளகு பயிரடப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. மிளகு கொடியாக வளரக்கூடியது. அது கொடியாக வளர நெடிய உயரமான மரங்கள் தேவைப்படுகின்றன, அதனால் நெடிய மரங்களுக்கு பக்கத்தில் மிளகு பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகிறது. மிளகுக் கொடியின் மீது வெயில் அதிகமாகவும் படக்கூடாது, குறைவாகவும் படக் கூடாது. பொதுவாக நிழல் அதிகமாக தேவைப்படும் பயிர் மிளகு, அதனை மிளகு படரும் அந்த உயர்ந்த மரங்கள் மிகச் சரியாய் செய்கின்றன. பொதுவாக சமநிலங்களில் பாக்கு மரங்களுக்கு இடையில் தான் மிளகினை வளர்ப்பார்கள். ஆனால் மலை மீது இயற்கையாகவே உயரமான மரங்கள் இருக்கும் இல்லையா அதனால் மிளகு அந்த மரங்களில் கீழாகவே பயிரடப்படுகிறது. இதனை எல்லாம் நின்று நிதானமாக ரசிப்பதை, தெரிந்து கொள்வதை விட, பார்ப்பதற்கு வேறு என்ன வேண்டும் எனத் தெரியவில்லை. யாராவது இது போன்ற புதியதான மலை பயணத்துக்குச் செல்லும் போது நொறுக்கி தீனிகளை எல்லாம் வாகனத்தில் நிரப்பிக் கொண்டு அங்க sightseeing ஏதாவது இருக்கா பாஸ் என்று கேட்டால் செம காண்டாகி விடுகிறது.
இதனை எல்லாம் தாண்டி இது போன்ற வனங்கள் அடர்ந்த மலைகளில், அதுவும் வெயில் காலங்களில் பயணிக்கும் பொழுது, அங்குள்ள மண்தரையில் எல்லாம் நெடுந்துயர்ந்த மரங்களில் இருந்து காய்ந்து உதிர்ந்து கிடக்கும் சருகுகளாக இருக்கும். அப்படி உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகுகளுக்கு இடையில், நடக்கையில் வெளிப்படும் ஒலி அட்டகாசமாய் இருக்கும். என்ன தான் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது என பயமுறுத்தினாலும், அந்த மலைவனத்தின் பயணிக்கும் பாதையில் பெரும் நிசப்தம் நிறைந்திருக்கும் இடங்களாக பார்த்து வாகனத்தை நிறுத்தி, அங்கு உதிர்ந்திருக்கும் சருகுகளை வருடிக் கொண்டிருந்தேன். பொதுவாக இது போன்ற நெடிய மரங்கள் சூழ்ந்திருக்கும் மலைக் காடுகளில் வாகனங்கள் குறைவாக கடந்து செல்லும் இடங்களில் நின்று கவனித்தீர்கள் என்றால். இந்த வனங்களுக்கு இடையில் இருந்து ஒருவிதமான பறவையின் ஒசை, வண்டுகளின் ரிங்காரம் எல்லாம் கலந்து கட்டி தாளலயத்தோடு சேர்ந்திசை ஒன்று காற்றில் பரவியபடி இருக்கும். அந்த இசையை கேட்டுணர நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால், இந்த செல்பி எடுக்கிறேன், இயற்கையைப் புகைப்படம் எடுக்கிறேன் என்கிற இத்தியாதி, இத்தியாதி இம்சைகளை எல்லாம் ஒரு ஓரமாக வைத்து விட்டு, உங்களிடம் உள்ள அலைப்பேசியை எல்லாம் அணைத்து கிடாசிவிட்டு, அமைதியாக எதாவது ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்தீர்கள் அல்லது நின்று கொண்டீர்கள் என்றால், உலகத்தின் ஆகச் சிறந்த இசையை எல்லாம் அங்கே கேட்க முடியும். அப்படி ஒரு வாகான இடமாக பார்த்து வாகனத்தை நிறுத்தி இறங்கினால். அங்கிருந்த மெல்லியதான குளிர் காற்று, நெடிய மரங்கள், அதன் கீழே விழுந்து கிடக்கும் சருகுகள், அந்த சருகுகள் காற்றில் ஒன்றொடு ஒன்று உரசும் ஒலி, அதோடு உயரமான மரங்களுக்கிடையில் எங்கிருந்தோ அழைக்கும் பறவையின் குரல் என அந்த சூழலே மிக ரம்மியமாய் பிரமாண்டமாய் இருந்தது. அமைதியாக அங்கிருந்த சூழ்நிலைக்குள் நாம் அமிழ்ந்து கரைந்து போகையில் கிடைக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் வகைப்படுத்த முடியாது. இயற்கையாய் இயற்கையோடு இருத்தல் என்பது ஒரு செயல். அந்தச் செயலின் உன்னதத்தை நீங்கள் உணர வேண்டும் என்றால், உங்களிடம் உள்ள “எல்லாவற்றையும்” தூக்கி கிடாசிவிட்டு இயற்கைக்கு உங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும். இயற்கையோடு இருத்தல் அப்படின்னா என்ன பாஸ் எனக் கேட்பவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்க அந்த மரத்துகிட்ட நின்னு ஒரு செல்பி மட்டும் எடுத்துக்கோங்க மரம் நல்லா வளரும் சரியா மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916