பகிர்தல் எனும் புண்ணாக்கு…
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது இல்லையா? ஒரு மிக, மிக, மிகப் பொறுப்பான வேலை ஒன்றினை பெரும்பாலான மக்கள் மிகச் சிறப்பாகச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அது என்ன வேலை எனில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக என்னுடைய அலைப்பேசி பகிரியில்(Whatsapp) ஒரு செய்திப் பகிரப்பட்டிருந்தது. அது என்னவென்று பார்த்தால் ஒரு சின்ன குருவி பறக்கும் சிறிய சலனப்படமும், அதன் அருகிலேயே வெயில் காலமுங்க எங்களுக்குத் தண்ணி வைக்க மறக்காதீங்க என்கிற வாசகமும் இடம்பெற்றிருந்தது, அதனைப் பார்த்த பிறகு, யார் இதனை அனுப்பியிருக்கிறார்கள் எனக் கவனித்தால், இது வரைத் தப்பித் தவறி ஒரு முறை கூட தண்ணீரே பறவைகளுக்கு கொண்டு போய் வைக்காத நபர் (இங்கே நபர் எனக் குறிப்பிடுவது ஆண் என்கிற பொருளில் அல்ல மனிதன் என்கிற பொதுவான அர்த்தத்தில்). சரிதான் என நினைத்துக் கொண்டேன். மற்றொரு பக்கம் அந்தச் செய்திப் பகிரப்பட்ட என்னுடைய வீட்டுக் கதையே வேறு, வெயில் காலம் என்றில்லை, வீட்டில் நாங்கள் இருக்கும் ஒவ்வொரு நாளும் தவறாமல் வீட்டின் மொட்டை மாடிக்குத் தண்ணீரும் உணவும் பறவைகளுக்குப் போய்விடும். அதுவும் எந்த அளவுக்கு எனில், காலை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மாடிக்கு உணவையும், தண்ணீரையும் கொண்டு போய் வைத்துவிடுவோம், ஒரு வேளை வீட்டில் ஆள் இருந்தும் உணவை வைக்கத் தாமதமாகிறது என்றால், காலை 6:30 மணி வரை பொறுத்துப் பார்த்துவிட்டு, சரியாக 6:31க்கு காகம் ஒன்று, எங்கள் வீட்டின் மாடத்தின் எதிரில் போகும் மின்சார கம்பியில் வந்து உட்கார்ந்து கொண்டு, கரைய ஆரம்பித்துவிடும், அதன் கரைதலை கேட்ட மாத்திரத்தில், முதல்ல மாடியில கொண்டு போய் சாப்பாடும், தண்ணீயும் வச்சிட்டு வந்து வேறு எந்த வேலையாக இருந்தாலும் பாரு என்று என்னிடம் உத்தரவிடப்பட்டுவிடும். இது தான் தினசரி நடைமுறை.
இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு குடிபோன சில மாதங்களில் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய் ஒன்று ஒரு நாள் மிகப் பரிதாபமாக வாலை ஆட்டியபடி வந்து கீழே நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்தவுடன் புரிந்துவிட்டது அது மிகுந்த பசியில் இருக்கிறது என்பது. நான் குடியிருப்பது முதல் மாடியில், மாடியில் வீட்டில் இருந்தவர்களிடம் ஒரு பிஸ்கட் பாக்கெட்ட தூக்கிப் போடுங்க எனச் சொல்லி வாங்கி, அதனைப் பிரித்து அந்த நாய்க்குப் போட்டேன். அது என்னருகில் வர மிகவும் பயந்தது, அப்பொழுது தான் அங்கிருந்த ஒருவர் சொன்னார், யாராவது இப்படி சாப்பாடு போடுற மாதிரி போட்டு அதை அடித்திருப்பார்கள், அதனால் தான் அது பயப்படுகிறது, நீங்கள் பிஸ்கட்டை வைத்துவிட்டு விலகிவிடுங்கள், அதுவாக சாப்பிட்டு போய்விடும் என்றார். அவர் சொன்னபடி தான் நடந்தது. நான் பிஸ்கட்டை வைத்துவிட்டு விலகியவுடன், அது சாதுவாக வந்து சாப்பிட்டு முடித்து என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் போய்விட்டது. அப்பொழுது தான் கவனித்தேன், அந்த நாயின் வலது கண்ணில் அடிப்பட்டு ரத்தக்கட்டியாக இருந்தது. என்றைக்கு நான் பிஸ்கட் போட்டேனோ அன்றிலிருந்து, நான் அந்தப் பகுதியில் நடை பயிற்சிக்கு போனாலோ அல்லது எங்காவது போய்விட்டு என்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்தாலோ, பின்னாலேயே சில அடிகள் இடைவெளியில் என்னைப் பின் தொடர்ந்து வந்து, வீட்டின் வாசலில் நின்றுவிடும். அந்த பின் தொடர்தலில் இருந்த சில அடிகள் இடைவெளி கூட, இவன் உணவு கொடுத்துவிட்டு அடிக்கவெல்லாம் மாட்டான் எனத் தெரிந்தவுடன் படிப்படியாக குறைந்து, என் கூடவே வந்து சாதுவாக நின்றுவிடும். பின்னாட்களில் தான் அந்த நாயின் பெயர் ராமு என்பது தெரிந்தது. இப்பொழுது எப்படியென்றால் ராமு என்னுடைய கைகளில் இருந்து கொடுக்கும் பிஸ்கட்டை பயமில்லாமல் வந்து கவ்விக் கொண்டு போய்விடும். அதன் கண்களின் இருந்த காயமும் இப்பொழுது ஆறியும் விட்டது. தினசரி அதற்கான சமையலும் வீட்டில் தனியாக நடக்கிறது. ராமுவிற்கு என்று சோறு தனியாக வடித்து விடுவார்கள், எல்லாம் தயாரான பிறகு மேல் மாடத்தில் இருந்து அழைத்தால் எங்கிருந்தாலும் ராமு சாப்பிட வந்துவிடும். இது ஒரு பக்கம் என்றால், தினசரி மாலையோ, இரவோ என்னுடைய வாகனத்தின் சத்தத்தை எப்படித் தான் கேட்குமோ தெரியாது, எத்தனை மணிக்கு போனாலும் மிகச் சரியாய் பின்னால் வந்து நிற்கும். நானும் என் கைகளால் உணவு வைக்கும் நேரங்களில் எல்லாம் அதனுடன் பேசிக் கொண்டிருப்பேன்.
மேலே சொன்னவைகள் எல்லாம் ஒரு பக்கம் என்றால், முதல் பத்தியில் சொன்னப் பறவைக்குத் தண்ணீர் வைக்கப் பகிரப்பட்ட செய்தி இருக்கிறது இல்லையா, அது வெவ்வேறு பிரகஸ்பதிகளிடம் இருந்து தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவிலோ வந்து கொண்டே இருக்கிறது. இந்தச் செய்தியைப் பகிரும் எத்தனை பேர் முதலில் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் கொண்டு போய் பறவைக்குத் தண்ணீர் வைக்கிறார்கள் என்பதைக் கண்காணித்தால், கண்டிப்பாக பத்தில் ஒன்று தேறினால் பெரிய விஷயம். இதனைப் போகிற போக்கில் எல்லாம் சொல்லவில்லை. கொஞ்சம் இறங்கி சோதனை செய்துவிட்டே சொல்கிறேன். இந்தப் பகிரி(Whatsapp) என்கிற வஸ்து நம்முடைய அலைபேசியில் வந்ததில் இருந்து, இது போன்ற செய்தியை பகிர்ந்தவுடன் நம்முடைய கடமை முடிந்தது என்கிற மனநிலைக்குப் போய்விட்டோம். அது எப்படி என்றால், பறவைக்குத் தண்ணீர் வையுங்கள் என்கிற செய்தியை தனிப்பட்ட முறையிலும், குழுவிலும் ஒரு ஐம்பது பேருக்கு பகிர்ந்துவிட்டால், அது ஐம்பது பறவைகளுக்கு தண்ணீர் வைக்கப்பட்டுவிட்டதாக நமக்கு நாமே ஒரு போலியான சமாதானத்தை உருவாக்கிக் கொண்டு திருப்திப்படுகிற மனநிலைக்கு பழகிவிட்டோம். நம்மால் பகிரப்பட்ட செய்தி அப்படியே கடைசி வரை பகிரியில்(Whatsapp) பகிரப்பட்டுக் கொண்டே தான் இருக்குமே ஒழிய, அது கண்டிப்பாக செயலாக மாறி நூற்றில் ஒன்று நடந்தால் அது அதிசயம் தான். கிட்டதட்ட நம்முன் உள்ள பலவிதமான தனிமனித பொறுப்புக்களின் கதி இது தான். சாரு தன்னுடைய எழுத்தில் அடிக்கடி சொல்வார், தெரிந்தவர்கள் யாராவது, எங்காவது வெகு நாட்கள் கழித்துப் பார்த்தால், என்னப்பா நடைப்பயிற்சி தொடர்ச்சியா பண்ணுறியா சுகர், இகர் இருக்கா என்று எனை நோக்கி நலம் விசாரிக்கும் எந்த ஒரு நபரும், அவர்கள் முதலில் அதனைக் கடைபிடிக்கிறார்களா என்றால் இல்லை என்பார் சாரு. அதே கதை தான் இந்த பகிர்தல் புண்ணாக்கிலும். இப்படி பகிரும் செய்திகளை எந்த பறவையாவது பார்த்தால் என்ன சொல்லும் என யோசித்தேன், வேண்டாம் அதனை இங்கே சொல்ல விரும்பவில்லை. நீங்க அனுப்புற அந்த மெசேஜ் உண்மையிலேயே செம்ம, இத தொடர்ந்து பண்ணுங்க சார், இந்த மாதிரி செய்தி உங்க மூலம் இந்த உலகம் பூரா போகணும், அப்ப தான் இந்த Environment பாதுகாக்கப்படும் சரியா, உங்களின் இந்தச் சிறப்பான சேவைப் பணி கடைசி வரை இப்படியே தொடரட்டும் ஜீ வாழ்த்துகள். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916