ஆட்டத்தின் விதி…
சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஜானகிராமன் தன் முகநூல் பக்கத்தில் சாரு 2021 ஆகஸ்ட் 26ம் தேதி, நான் தான் ஒளரங்ஸேப் பற்றி பகிர்ந்திருந்த கடிதம் ஒன்றினை எடுத்து மீண்டும் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் பின்னூட்டத்தில் போய் நான் தான் ஒளரங்ஸேப் பற்றி எழுத வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். அதனைப் பின்னூட்டத்தில் சொன்ன போதே மேலே குறிப்பிடுள்ள தலைப்பு தான் முதலில் மனதுக்குள் வந்தது, நான் தான் ஒளரங்ஸேப் நாவலை பிஞ்ஜ் என்கிற அலைப்பேசி செயலியின் வழியே சாரு எழுதிக் கொண்டிருந்தார், நானும் தொடர்ந்து அதனை வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் 36வது அத்தியாயத்திற்கு பிறகு அடுத்த அத்தியாத்தை வாசிக்க மிகப் பெரும் இடைவெளி விழுந்தது. அதனால் 36 அத்தியாயங்களையும் நினைவில் கொண்டு மீண்டும் வாசிப்பைத் தொடர முடியவில்லை. அப்படியே விட்டு விட்டேன். அதன் பின் படிக்கத் தொடங்கி 27 அத்தியாயங்கள் கொண்ட அ காலம் எல்லாம் வாசித்து விட்டேன், ஆனால் நான் தான் ஒளரங்ஸேப்பை தொடர முடியவில்லை. ஆனாலும் வாசித்த 36 அத்தியாயங்கள் என்னுள் ஏற்படுத்திய உணர்வை வார்த்தைகளால் இங்கே முழுவதுமாக கடத்துவது எளிதான காரியம் அல்ல. இருந்தும் வாசித்த 36 அத்தியாயங்களுக்குள் ஒரு மிக, மிக முக்கியமான கட்டத்தில் ஒளரங்ஸேப் சொல்லும் ஒரு வார்த்தை என்னை மொத்தமாக உலுக்கியது. அதனை வாசித்த நாளில் இருந்து குறைந்தது 10 நாட்களாவது என்னால் தூங்க இயலவில்லை. சில நேரங்களில், திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களிடம், ஒலி வாங்கியை அவர்களின் முன்னே நீட்டும் பொழுது, ஒரு வார்த்தை சொல்வார்கள் இல்லையா, அந்த ஒரு சீனுக்கே கொடுத்த காசு செத்தது தலைவா, செம்மயான சீனு என்று. அந்த ஒரு மனநிலை தான் ஒளரங்ஸேப் சொல்லும் அந்த வார்த்தையை வாசித்த பொழுதும் எனக்குள் தோன்றியது. ஒளரங்ஸேப் சொல்லும் அந்த வார்த்தை, ஆட்டத்தின் அர்த்தமும், ஆட்டத்தின் விதிகளுக்கும் தெரிந்து விட்டன. ஆனால் ஆட்டத்தை திரும்பி ஆட முடியாது என்பது தான். ஒளரங்ஸேப் எந்த வயதில், ஏன் அப்படி சொல்கிறார் என்பதை நான் தான் ஒளரங்ஸேப் நாவலை நீங்களே புத்தகம் வழியாகவோ அல்லது அலைப்பேசி செயலியின் வழியோ வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன்னர் ஒரு சின்ன தகவல் Bynge செயலியின் பெயர் இப்பொழுது Notion Press என மாற்றப்பட்டு விட்டது. செயலியை தரவிறக்கம் செய்து வாசிக்க விரும்புபவர்கள் பெயர் மாற்றத்தை குறித்துக் கொள்ளுங்கள்.
ஒளரங்ஸேப் சொல்லிய அந்த வார்த்தை தான், நம் வாழ்வின் ஆட்டதில் அதன் அர்த்தமும், விதிகளும் தெரிந்து தான் நாம் ஆடுகிறோமா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பியது. அந்த வார்த்தை தான் இது வரை வாழ்ந்த வாழ்வினை மொத்தமாக களைத்துப் போட்டு யோசிக்க வைத்தது, அந்த யோசனை தான் சுத்தமாக என்னை தூங்கவிடாமல் செய்தது. வாழ்க்கையில் இதுவரை கடந்து போன நாட்களில் எங்கெல்லாம் ஆட்டத்தின் அர்த்தம் தெரியாமல், விதிகளை மீறி இருக்கிறோம் என்கிற தேடல் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது, இருக்கிறது. காரணம், நாவலில் ஒளரங்ஸேப் அந்த வார்த்தையை சொல்லிய இடமும், வயதும் அப்படி. சரி இது வரை ஆட்டத்தின் அர்த்தமும், விதியும் தெரிந்து ஆடவில்லை. இனிமேல்?. இது போன்ற கேள்விகள் மனதுக்குள் ஒரு அலையைப் போல் மீண்டும், மீண்டும் எழும்பி அடங்கியபடியே இருந்தது, இருக்கிறது. வாசிப்பு ஒருவனை என்ன செய்யும் கேட்பவர்களுக்கு மேலே சொல்லியுள்ளது தான் பதில். என்றைக்கும் ஒரு மனிதன் தன்னை தானே பாரபட்சமற்று சுயவிமர்சனம் செய்பவனாக இருக்க வேண்டியது மிக, மிக அவசியம் எனக் கருதுகிறேன். அப்படியான ஒரு எண்ணத்தை எனக்குள் விதைத்தது கண்டிப்பாக என்னுடைய இருபது வருட கால வாசிப்புத்தான். அந்த வாசிப்பு அனுபவம் தான் நான் தான் ஒளரங்ஸேப் நாவலை மிக ஆழமாக வாசிக்கத் தூண்டியது. அதனைத் தாண்டி இந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் விதமும், அதன் நடையும் கண்டிப்பாக ஆகச் சிறந்த புத்தம் புதியதான அனுபவம், வாய்ப்பேயில்லை சும்மா ஜெட் வேகத்தில் பறந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசிக்கத் தொடங்கும் வேகம் அந்த அத்தியாயம் முடியும் வரை கொஞ்சம் கூட குறையவே இல்லை. முப்பத்தி ஆறு அத்தியாயங்களை வாசித்ததே இப்படியெனில் மொத்த அனுபவமும் எப்படி இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்த போது நான் தான் ஒளரங்ஸேப் நாவல் புத்தகமாக வெளியாகும் அறிவிப்பு சாருவிடம் இருந்து வந்தது.
4.8.2022 அன்று காலை தன் முகநூல் பக்கத்தில் சாரு புத்தகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். நான் மாலை தான் அதனைப் பார்த்தேன், அதுவும் முதலில் முன் பதிவு செய்பவர்களுக்கு சலுகை விலையுடன், சாருவின் கையெழுத்தும் இருக்கும் என்கிற அறிவிப்பைப் பார்த்தவுடன் உடனடியாக முன் பதிவு செய்துவிட்டேன். புத்தகமும் சாருவின் கையெழுத்தோடு சில நாட்கள் முன் கைக்கு வந்துவிட்டது. சாருவின் கையெழுத்துடன் புத்தகத்தை பார்க்கையில் அப்படி ஒரு மகிழ்ச்சி. மீண்டும் முதலில் இருந்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இங்கே வாசிப்பு பற்றிய மிக முக்கியமான விஷயத்தை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். சில வருடங்களுக்கு முன்பு என் பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் திரைப்படம் அதிகமாகப் பார்த்துக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் வெளியாகி மிக பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்திற்கு எப்படியோ நுழைவு சீட்டு வாங்கி திரைப்படம் பார்க்கப் போய் ஆயிற்று. திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், அந்தத் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தில், மீண்டும் அடுத்த காட்சிக்கு செல்வதற்காக நுழைவுச்சீட்டு கொடுக்கும் வரிசையில் போய் நின்றுவிட்டேன். அதனைப் பற்றி தனி பதிவு எழுத வேண்டும் என்பதால் முழுமையான கதை இப்பொழுது தேவையில்லை. ஆனால் அதே போன்றதொரு நிலைபாடு இன்று வாசிப்பிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னை வாசிப்பில் கட்டிப் போடும் புத்தகத்தை வாசித்து முடித்ததும் உடனடியாக மீள் வாசிப்பு செய்யும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு முறையல்ல பலமுறை மீள் வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய புத்தகம் தான் நான் தான் ஒளரங்ஸேப். அப்படி ஒவ்வொரு முறை மீள் வாசிப்பு செய்யும் போதும் வேறு வேறு கோணத்தில் அதனைப் பற்றி எழுத முடியும் என ஆழமாக நம்புகிறேன் பார்க்கலாம். இதற்கு முன் மீள் வாசிப்பு செய்ததில், செய்து கொண்டிருப்பதில் மிக முக்கியமான புத்தகங்கள், சாருவின் தொழுகையின் அரசியல் மற்றும் கடவுளும் நானும், பாலோ கொய்லோவின் ரசவாதி, ஜெமோவின் அறம் மற்றும் ஊமைச் செந்நாய். ராஸலீலாவும் வரிசையில் இருக்கிறது ஆனால் அதனை இன்னும் முதல் முறையே முழுதாய் முடிக்கவில்லை. வெகு சமீபத்தில் என்னுடைய மீள் வாசிப்பிற்கு உட்பட்ட புத்தகம் பா.ராகவன் அவர்கள் எழுதிய எழுதுதல் பற்றிய குறிப்புகள். அதில் ஒரு இடத்தில் பா.ரா ஹெமிங்கே பற்றி இப்படி குறிப்பிடுகிறார். ஹெமிங்கே ஒரு மாஸ்டர். அவருக்கு வெட்டிக் கொடுப்பதென்றால் நூறு கட்டை விரல்கள் கூட போதாது என எழுதியிருந்தார். உடனே என் கட்டை விரல்களை பார்த்த போது என் ஆசான் சாருவின் முகம் தான் மனதுக்குள் வந்து போனது. மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916