வாழ்ந்து பார்த்த தருணம்…181

கழற்றப்படாத, முடியாத கண்ணாடி…

இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது, ஆனால் எத்தனை பேர் அந்த மாற்றத்தை மாற்றமாக ஏற்றுக் கொள்கிறோம் என்கிற கேள்வி எனக்குள் எப்பொழுதும் எழுந்து கொண்டே இருக்கும். ஒருவேளை மாறவிடில் தேங்கி நின்றுவிடுவோம். சில நேரங்களில் அப்படி தேங்கி நிற்பது கூட தெரிவதில்லை. என்னுடைய அனுபவத்தில் மாற்றத்தை உணரும் மனிதர்கள் இரண்டு வகை. ஒன்று மாற்றத்துக்குள் அதனை முழுமையாய் புரிந்து கொண்டு தன்னை உட்படுத்தி மாற்றத்தையும் மாற்றத்துக்கு உட்படுபவர்களையும் தனக்கு ஏற்றார் போல் அரவணைத்துக் கொள்வது. இரண்டாவது வகை, மாற்றத்தை வெறும் பார்வையாளனாய் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது. ஆனால் வெறும் பார்வையாளானாய் இருப்பதன் வழியே தானும் மாறிவிட்டோம் என்று ஆழமாய் நம்புவது. இதனைப் பல நேரங்களில் எனக்கு ஏற்படும் நிகழ்வுகளின், அனுபவங்களின் வழியே தொடர்ந்து கடந்து வந்து கொண்டே இருக்கிறேன். இதில் முக்கியமானது மாற்றத்தை வெறும் பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருப்பவர்களுடன் பயணப்படுவது. அப்படி அவர்களோடு பயணப்படக்கூடிய சமயங்களில் எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் இருக்கிறது இல்லையா?. அதனைப் போன்றதொரு வாழ்வியல் மீதான ஆழமான புரிதல் அனுபவம் எத்தனைக் கோடி கொடுத்தாலும் வேறு வகைகளில் கிடைக்கவே கிடைக்காது. அப்படியான சில அனுபவ மனிதர்களை பற்றித் தான் இங்குச் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன். என்னுடைய கடந்த கால வாழ்வில் சுமார் இருபது வருடங்கள் பின்னால் என வைத்துக் கொள்வோம். அந்த நேரங்களில் என்னோடு பயணப்பட்ட பல்வேறு துறை சார்ந்த ஆட்கள் இருப்பார்கள் இல்லையா, அவர்களோடு அன்றைய காலகட்ட புரிதலோடு பேசியிருப்போம், சில கருத்து முத்துக்களையும் உதிர்த்திருப்போம். காலங்கள் செல்ல செல்ல என்னுடைய வாழ்க்கைப் பயணச்சாலையின் திருப்பங்கள் நம்மை எங்கெங்கோ கொண்டு போய்க் கொண்டே இருக்கும். அப்படியான திருப்பங்களினால் நம்மோடு பயணப்பட்டவர்களையும், பேசியவர்களையும் தெரியாமல் தவறவிட்டிருப்போம், தெரிந்தும் தவறவிட்டிருப்போம்.

சரி அப்படித் தவறவிட்ட மனிதர்களை மீண்டும் சந்திக்கும், சிறிது தூரமெனும் அவர்களோடு பயணப்படும் அவசியமோ, கட்டாயமோ ஏற்பட்டால். அந்த அனுபவத்தை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். ஒன்று அப்படியான பயணத்தில் ஏற்படும் அனுபவங்களையே பாடமாக எடுத்துக் கொள்ளலாம், இரண்டாவது அந்த பயணத்தையே மிக மோசமான ஒன்றாக மாற்றலாம். நான் முதல் வகையிலேயே எப்பொழுதும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏன் முதல் வகை என கடைசியாக சொல்கிறேன். முதலில் அப்படியான பயண அனுபவங்கள் சிலவற்றில் இடம் பெற்ற மனிதர்களை, நிகழ்வுகளை சொல்லிவிடுகிறேன். மனிதர்கள் எனும் பதத்தில் சொல்வதால் அதற்குள் பாலின பாகுபாடு கிடையாது எனப் புரிந்து கொள்க. சரி அப்படியான இப்பொழுதைய நாட்களின் பயணத்தில் அப்படி பல நபர்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன், அதாவது அந்த நபர்களுக்கும் எனக்குமான நேரடித் தொடர்பு நபர்களைப் பொறுத்து ஐந்து வருடங்களில் இருந்து இருபது வருடங்களுக்கு மேல் இல்லை. ஆனாலும், மிக அவசியமெனில் மட்டும் பேசிக் கொள்வோம். அந்த நபர்கள் அனைவருக்கும் என்னுடைய இந்த பத்து, இருபது வருட கால மாற்றம், வாழ்வில் நான் நகர்ந்திருக்கும் இடம் எல்லாமும் தெரிந்து தான் இன்றைய சந்திப்பு நடக்கிறது. அப்படியான சமயங்களில் என்னை சந்திக்கும் நபர்கள் என்னை நோக்கி கேட்கும் முதல் கேள்வியே, எப்படி, இப்படி ஒரு இடத்துக்கு வந்த, (நீ உருப்படமாட்டன்னு நினைச்சேன் என்கிற தோணியில்) முன்னாடி பாக்குறப்ப நீ இப்படி இல்லையே, நீயெல்லாம் எப்படி, இப்படி அது தான் எனக்கும் ஒண்ணும் புரியல என்கிற ரீதியில் தான் இருக்கிறது. மேலே சொல்லியுள்ள கேள்விகள் எல்லாமே பல்வேறு நபர்கள் சூழ்ந்திருக்கும் பொது சபையில் தான் கேட்கப்படும். அப்படிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னிடம் இருந்து கொடுக்கப்படும் பதில்கள் பணிவாகவும், மரியாதையாகவும் திருப்பி கேள்வி கேட்க முடியா வண்ணம் இருந்துவிட்டால், அதற்கு அடுத்த கட்ட நகர்வு தான் அட்டகாசமாய் இருக்கும்.

அடுத்த நகர்வு என்னுடைய வாழ்வில் பழைய பழகிய நாட்களில் அதாவது பத்து, பதினைந்து வருடத்துக்கு முன்பு நடந்த ஏதாவது ஒரு நிகழ்வில் அப்பொழுது இருந்த என்னுடைய புரிதலற்ற தன்மையால் படு பயங்கரமாக மொக்கை வாங்கி அசிங்கப்பட்டிருப்பேன், அதனை மிகச் சரியாய் நினைவு படுத்தி இப்பொழுது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அப்படியான நேரங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் கண்களில் தெரியும், தெறிக்கும் பதற்றத்திற்கு பின்னால் ஒரு முக்கியமான கருத்து ஒன்று இருப்பதை எப்பொழுதும் பார்க்கிறேன். அது வேறொன்றுமில்லை. பல வருடங்களுக்கு முன்னால் நீயும் நானும் பயணப்பட்ட பொழுது இருந்த இடத்தில் தானே இன்னும் நான் நிற்கிறேன். ஆனால் நீ மட்டும் எப்படி, இப்படி ஒரு இடத்திற்கு வந்தாய், இந்த இடத்தை அடைய உனக்கு என்ன தகுதி இருக்கிறது. இதில் எழுத வேறு செய்கிறாய் என்பது போன்ற பலவிதமான எண்ண ஓட்டங்கள் அவரின் கண்களின் வழியே அவர்களின் மனதிற்குள் ஓடுவதை பார்த்துக் கொண்டே இருப்பேன். என்னுடைய பழைய அசிங்கப்பட்ட நிகழ்வினை எடுத்துச் சொல்லியும், எந்த எதிர்வினையும் இல்லாமல் இருப்பது, அதுவும் சிரித்துக் கொண்டே இருப்பதை பார்க்கையில், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், அப்புறம் சொல்லு அடுத்த பிளான் என்ன என வெகு சாமார்த்தியமாக பேச்சு மடை மாற்றப்படும். இது போன்ற நேரங்களில் ஊரில் சொல்லப்படும் ஒரு சொலவடை தான் ஞாபகத்திற்கு வரும், கருப்பு கலர் கண்ணாடி மாட்டிட்டு பார்த்தா எல்லாம் கருப்பாத் தான் தெரியும் என்று. அதனைப் போலத் தான் எனைப் பார்க்கையில் எல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னால் பார்த்த கோணத்தில் இருந்து கொண்டு பார்க்கும் பார்வையை இது போன்ற நபர்களால் மாற்றவும் முடியவில்லை, ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அந்த இருபது வருட பழைய கண்ணாடி மாற்றவும் மாட்டேன், கழட்டவும் மாட்டேன் அதன் வழியே தான் உன்னைப் பார்ப்பேன் எனச் சொல்பவர்களை சந்திப்பதின் வழியே தான் இது போன்ற சிறப்பான கட்டுரைகளை எழுத முடியும். அந்தக் காரணத்தால் தான் மேலே சொல்லியுள்ள முதல் வகையிலேயே நான் நிற்கிறேன், அதுவும் போக இது போன்ற வேடிக்கை மனிதர்களின் முன் கோபத்தால் வீழ்ந்து போகாமல் கவனமாக வேடிக்கைப் பார்க்கும் சுகமே அலாதியானது, மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916