வாழ்ந்து பார்த்த தருணம்…184

கர்மா…

கர்மா இந்த வார்த்தையைக் கேட்டதும், இங்கே பெரும்பாலானவர்களுக்கு உடனடியாக அதனை மதத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கும் பழக்கம் இயல்பிலேயே உருவாகி விட்டது அல்லது உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால் நான் கர்மாவினை அப்படிப் பார்ப்பதில்லை. அறிவியலில் ஒரு கருத்தியல் உண்டு. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு வினைக்கும், அதற்கு சமமான எதிர்வினை உண்டு. அது தான் நியூட்டனின் மூன்றாம் விதி. இதில் வினை என்கிற வார்த்தையின் முன்னர் ஒரு வார்த்தையை அல்லது எழுத்துக்களைச் சேர்த்து அதனை நல்வினை தீவினை என்று எடுத்துக் கொள்ளலாம். மேலே சொல்லியுள்ள வார்த்தைகளைச் சேர்த்துப் படித்தால் ஒவ்வொரு நல்வினைக்கும், தீவினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு என்று கொள்ளலாம். கர்மா என்பது இந்த நல்வினை, தீவினை சம்பந்தபட்டது தான் என ஆழமாக நம்புகிறேன். அதனை என் வாழ்வில் பல முறை அனுபவித்தும் இருக்கிறேன். அதன் அடிப்படையில் சமீபத்தில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு எனக்கு மீண்டும் அதனை நிருபித்தது. நம் வாழ்வில் பல நேரங்களில் நம்முடைய காதுகளில் கேட்கும் மிக முக்கியமான சொல்லாடல், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்பது தான். நம்மால் நம்முடைய வாழ்வியல் நிகழ்வுகளை கொஞ்சம் கூர்மையாக உற்று நோக்க முடிந்தால். எனக்கு மட்டும் அது நடப்பதற்கு நான் தான் காரணம். நான் மட்டும் காரணம் எனத் தெளிவாகத் தெரிந்துவிடும். பல நேரங்களில் ஒரு வேளை நமக்கு அப்படித் தெரிந்தாலும், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த சல்லிப்பய மனுசனோட மனம் இருக்கிறதே நான் நான் மட்டும் தான் அதற்கு காரணம் என்பதை அவ்வளவு சாமான்யமாக ஒத்துக் கொள்ளாது. காரணம், நம்முடைய மனநிலையின் டிசைன் அப்படி. என்றைக்குமே ஒரு விஷயத்தை நான் ஒத்துக் கொள்ளாமல், அதனை என்றைக்கும் நான் மாற்றி கொள்ள முடியாது, மாற்றிக் கொள்ளாமால் இங்கே மாற்றம் நடப்பது சாத்தியமில்லை. அப்புறம் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என யோசிப்பதினால் பத்து பைசா பிரயோசனமில்லை.

கடந்த ஒரு இருபது நாட்களுக்கு முன்பு திடீரென வயிற்றில் ஒருவிதமான வலி. சரியாக மார்பெழும்புகள் முடியும் இடத்தில் அரை வட்டமாக வயிற்றின் மேற் பகுதியில் ஒரு விதமான எரிச்சல் வலி. அது அப்படியே பரவி கீழே தொப்புள் வரை வலியும், எரிச்சலுமாக இருந்து கொண்டே இருந்தது. தாங்கமுடியாத அளவு வலி இல்லையென்றாலும், தூங்கும் நேரத்தைத் தவிர, முழித்திருக்கும் நேரம் முழுவதும் அந்த எரிச்சல் இருந்து கொண்டே இருந்தது. சரியென மருத்துவரிடம் போய் காண்பித்தால். வயிறு புண்ணாகி இருக்கிறது தொடர்ந்து சாப்பிடாமல் இருந்தீர்களா அல்லது அளவுக்கு அதிகமான காரம் எடுத்துக் கொண்டீர்களா எனக் கேட்டார்கள், இல்லை என்று சொன்னேன். உடனே அவர்களும் அப்படியில்லாமல் இந்த வலி வர வாய்ப்பில்லை. இருந்தாலும் மருத்துவம் பார்க்கலாம் என சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள். இந்த இடத்தில் ஒரு மிக முக்கியமான விஷயத்தை சொல்லிவிடுகிறேன். சமீபத்திய வருடங்களில் என் உடல்நிலையில் ஏதாவது பிரச்சனையெனில் முதலில் அக்குபஞ்சர் மருத்துவம் அல்லது ஹோமியோபதி இந்த இரண்டும் மட்டும் தான். இந்த முறை வயிற்று வலிக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை தான் எடுத்துக் கொண்டேன். சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நேரங்களில் வலியோ எரிச்சலோ இருக்காது. ஆனால் அதன் பின் அடுத்த கொஞ்ச நேரத்தில் எரிச்சல் வலி ஆரம்பமாகிவிடும். இப்படியே பத்து நாட்கள் ஓடி விட்டது, வலி முழுமையாய் சரியாவது போல் தெரியவில்லை. என்னிடம் ஒரு பழக்கம் உண்டு, உடல்ரீதியான எந்தவிதமான உபாதை என்றாலும், உணவிலோ அல்லது வேறு ஏதேனும் விஷயங்களிலோ சமீப நாட்களில் எங்காவது கவனக் குறைவாக இருந்திருக்கிறேனா எனப் பின்னோக்கி யோசித்துப் பார்ப்பேன். பெரும்பாலான நாட்களில் அப்படி யோசிக்கையில் அதற்கான விடை கிடைத்து விடும். உடனே அதனைச் சரி செய்யும் வேலையை தொடங்கியவுடன் உடல் உபாதையிலிருந்து விடுபட்டு விடுவேன். ஆனால் இந்த முறை என்ன யோசித்தும் எதுவும் பிடிபடாமலே இருந்தது. திடீரென ஒருநாள் காலை எங்கே தவறு செய்திருக்கிறேன் எனத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. எங்கே தவறு எனத் தெரிந்ததும் மனதினுள் அப்படி ஒரு வலி பரவியது, காரணம்?.

ஏற்கனவே இங்கே பலமுறை எழுதியது தான், ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து அன்றாட பணிகளுக்குக் கிளம்புகையில் என்னுடைய மதிய உணவு பொதியுடன் சேர்த்து இன்னுமொரு பொதியையும் சேர்த்தே எடுத்து வருவேன். அதனை வரும் வழியில் யாருக்கேனும் கொடுப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் காலணிகளைச் செப்பனிடும் ஒருவருக்கு கொடுத்தேன். அதனைப் பற்றி பசித்திருக்கும் காலணிகள் என எனது 172வது கட்டுரையில் விரிவாக எழுதியும் இருந்தேன். இப்படி ஒவ்வொரு நாள் மதிய உணவுப் பொதியும் சிறப்பாக கொண்டு சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அது சில நாட்கள் தடைபடும் காரணம், அலுவல் பணிகள் காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய நாட்களில் உணவைக் கொடுக்க முடியாது. அதனைத் தாண்டி உள்ளூரில் இருந்தாலும் வேலை நேரத்தில் மாற்றம் இருந்தால் உணவைக் கொடுக்க முடியாத சூழல் வரும். இம்முறையும் அப்படி உள்ளூரில் இருந்தும் என்னால் தொடர்ந்து சில நாட்கள் உணவைக் கொடுக்க முடியாத சூழல். அப்புறம் சூழல் சரியாகியது. ஆனால் அதன் பிறகும் என்னுடைய சோம்பேறித்தனத்தினால் மேலும் சில நாட்கள் உணவைக் கொண்டு போய் கொடுப்பதைத் தள்ளிப் போட்டேன். காரணம் அன்றாட அலுவல் பணிக்கு பயணப்படும் பிரதான வழியில் இருந்து, கொஞ்சம் சுற்றிக் கொண்டு போய் தான் அந்த காலணி செப்பனிடுபவருக்கு உணவு கொடுக்க வேண்டி வரும், வீட்டில் இருந்து கிளம்புவதே தாமதமாகி விடும். இல்லையேல் அப்படிச் சுற்றிப் போய் கொடுக்க சோம்பறித்தனம் என ஏதாவது காரணங்களை எனக்கு நானே கற்பித்துக் கொண்டு உணவைக் கொடுக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். பொதுவாக என்னுடைய வீட்டில் ஒரே நபருக்கு தொடர்ந்து கொண்டு போய்க் கொடுக்காதே அப்படிக் கொடுத்தால் அவருக்கு தினமும் தனக்கு உணவு வந்துவிடும் என எதிர்பார்த்துக் காத்திருப்பார், அப்படி காத்திருந்து ஏமாற்றம் அடைந்தால் அது நல்லது இல்லை எனச் சொன்னார்கள், ஆனால் நான் அதனைக் கேட்கவில்லை. தொடர்ந்து அந்தக் காலணி செப்பனிடுபவருக்கே உணவைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் நேரில் கொண்டு போய் கொடுப்பவனுக்கே உணவைப் பெறுபவரின் சூழல் தெரியும். அதன் அடிப்படையில் அந்த ஒருவருக்கு மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்படியான சூழலில் இது வரை என்னுடைய சோம்பறித்தனத்தால், அலட்சியத்தால் உணவைக் கொண்டு போய் கொடுக்காமல் இருந்ததில்லை. என்னால் ஒரு நாள் உணவு கொடுக்க முடியவில்லை என்றால் கூட அதற்கு மிக நேர்மையான காரணம் இருக்கும். ஆனால் இம்முறை அப்படியில்லை. உணவைக் கொடுக்காமல் விட்டது முழுக்க முழுக்க என்னுடைய அலட்சியத்தாலும், சோம்பறித்தனத்தாலும் எனத் தெளிவாகத் தெரிந்தது.

பசித்திருக்கும் ஒருவரின் வலி எப்படி இருக்கும் என பசித்திருந்திருந்த என்னுடைய பழைய நாட்களில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்தலில் இருந்து யோசிக்கையில் என்னுடைய வயிறு வலியின் பின்னனிக்கான காரணம் விளங்கியது. காரணம் தெளிவாகத் தெரிந்ததும் ஒரு விதமான ஆழமான வலி மனதினுள் கீறிப் பரவியது. அதன்பின் எவ்வித யோசனைக்கும் போகாமல் மறுநாள் உணவுப் பொதியை அந்தக் காலணி செப்பனிடுபவரிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. மறுநாள் அதே போல் உணவுப் பொதியுடன் அவரைப் போய் பார்த்தேன், அவர் என்ன சார் இடையில் ஆளையேக் காணோம் எனக் கேட்டார். எனக்கு ஒரு மாதிரியாக ஆனது. உடனடியாக உணவைக் கொடுக்க முடியாமல் போனதற்கு நானே காரணம், என்னை மன்னித்து விடுங்கள் எனச் சொன்னவுடன் அவர் சரிங்க, சரிங்க பரவாயில்லைங்க என்றார். என்னுடைய பணிச் சூழல் காரணமாக சில நாட்கள் என்னால் உணவைக் கொடுக்க முடியாமல் போகலாம். காலை பத்து மணிக்குள் நான் வராவிட்டால் என்னால் அன்று வரமுடியவில்லை என புரிந்து கொள்ளுங்கள் எனச் சொன்னேன். அவரும் அதனை மனதில் உள்வாங்கியபடியே பரவாயில்லைங்க, விடுங்க என்றார். எனக்கும் மனதுக்குள் ஒரு வித திருப்தி பரவியது. அன்றிலிருந்து சரியாக ஐந்து நாட்களில் என்னுடைய வயிற்று வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அதன்பின் வலி சுத்தமாக மறைந்தும் விட்டது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது எனக் கேட்பவர்களுக்கு ஒன்றே ஒன்று தான். பல நேரங்களில் நம்முடைய வாழ்வின் ஓட்டத்தில் நாம் எங்கோ நம்முடைய அலட்சியத்தால் கவனித்தல் என்கிற விஷயத்தில் மிக, மிக மோசமாக கோட்டை விடுகிறோம். இருந்தாலும் அதனை ஒத்துக் கொள்ளவோ அல்லது கூர்ந்து கவனிக்கவோ நமக்கு பொறுமையோ, நிதானமோ இருப்பதில்லை. அதனை அருகில் இருப்பவர்கள் எடுத்துச் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்பதேயில்லை. இன்றைய காலகட்டத்தில் பல நேரங்களில் அலட்சியத்தின் மொத்த உருவமாக மாறிக் கொண்டே இருக்கிறோம். அதற்கான விலையைக் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் அந்த விலை எந்த வடிவத்தில் திருப்பி அடிக்கும் எனத் தெரியாது. அது நம்மை நேரடியாக அடிக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை, நம்மை எந்த வடிவத்தில் அடித்தால் வலிக்கும் எனத் தெரிந்து தான் அடிக்கும், அது எங்கே என்பது தான் இந்த வாழ்வின் ஆகச் சிறந்த பிரபஞ்ச ரகசியம். மீண்டும் ஒரு முறை நியூட்டனின் மூன்றாம் விதி தான். எல்லா வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு. அந்த சமமான எதிர்வினை நீங்கள் செய்யும், செய்யப் போகும், செய்து கொண்டிருக்கும் நல்வினை மற்றும் தீவினைக்குள் ஒளிந்திருக்கிறது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916