சாட்சியாய் இரு…
என்னுடைய வாசிப்புப் பழக்கம் ஆரம்பித்து சில வருடங்களுக்குப் பிறகு ஓஷோ என்கிற ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த புள்ளியில் இருந்து என் வாழ்வின் பலவிதமான கேட்கப்படவே முடியாத பல கேள்விகளுக்கு அவரிடம் இருந்து பதில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், அவரின் பேச்சின் சாரமாய் இன்று கிடைக்கப் பெறும் பல்வேறு புத்தங்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அப்படி வாசித்த பல புத்தகங்களில் இருந்து, இந்த வாழ்வின் மீதான பல விதமான தெளிவுகளை கண்டடைகையில். ஒரு மிக முக்கியமான கட்டத்தில், ஒரு மிக, மிக முக்கியமான வார்த்தை இன்றளவும் என்னை மிகச் சிறப்பாக வழி நடத்தியபடியே இருக்கிறதென்றால் அந்த வார்த்தை “சாட்சியாய் இரு” என்பது தான். அதென்ன சாட்சியாய் இரு என அந்த வார்த்தையைத் தேடிப் போனால், இன்று இங்கிருக்கும் எல்லாவிதமான ஆன்மீக மார்க்கங்களிலும் எதோ ஒரு வடிவத்தில் இந்த வார்த்தை பல காலமாய் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. அப்படித் தான் மகாபாரதத்தில் கிருஷ்ணர் எல்லா நிலையிலும் தனக்கும் சாட்சியாய் இருந்து, மற்றவர்களையும் சாட்சிபாவமாய் இருந்து கவனித்தவர். உதாரணமாக மகாபாரத போர் முடிந்து வீரமரணம் அடைந்தவர்களுக்கான யாகம் ஒன்றை வளர்க்கையில், அந்த யாகத்தில் முதல் மரியாதை யாருக்கு என்கிற கேள்விக்கு கிருஷ்ணர் அளிக்கும் பதில் மிக, மிக முக்கியமானது. அந்த யாகத்தில் முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டியது என கிருஷ்ணர் பரிந்துரைப்பது இங்கு யாருமே எதிரே பார்க்காத சகுனிக்கு. ஏன் சகுனியின் பெயரை கிருஷ்ணர் பரிந்துரைத்தார், அதுவும் போருக்கு பின்னான வீரமரணம் அடைந்த ஆன்மாக்களை திருப்திபடுத்தும் யாகத்தில், முதல் மரியாதை சகுனிக்குத் தான் தரப்பட வேண்டும் என ஏன் கிருஷ்ணர் சொன்னார். அது தன்னை மட்டுமல்ல மற்றவர்களையும் தன் நிலையில் இருந்து விலகியிருந்து சாட்சிப் பூர்வமாய் பார்க்க முடிந்தால் மட்டுமே சாத்தியம். அது எப்படி எனத் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள், சகுனியை பரிந்துரைத்த கிருஷ்ணரின் பதிலை இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள். இரண்டாம் உதாரணம், இயேசு தன் வாழ்வில் நடத்திய அற்புதத்தின் பின்னனியில் ஒளிந்திருக்கிறது. ஒரு கிராமமே சேர்ந்து பாலியல் தொழிலாளி ஒருத்தியை கல்லால் அடிக்கத் துரத்திக் கொண்டு வருகையில், இயேசு சொல்லும் சொற்கள் துரத்தியவர்களின் மனநிலையை ஒட்டு மொத்தமாக மாற்றுகிறது. அந்தச் சொற்கள் உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மேல் முதல் கல்லை எறியட்டும் என்பது தான் அது. இயேசு அந்த சொற்களைச் சொன்ன அந்த ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் தங்களை தாங்களே சாட்சியாய் இருந்து பார்த்த அனைவரும் கல்லை கிழே போட்டு விட்டார்கள். சாட்சியாய் இருந்தலின் ஆகச் சிறந்த நொடியாய் இன்றும் காலத்தின் முன் உறைந்து நின்றுவிட்டது அந்த நிகழ்வு.
சாட்சியாய் இரு என்கிற சொற்களின் அர்த்தத்தை முழுமையாய் உள்வாங்க ஆரம்பித்த பிறகு, என் வாழ்வில் கடந்து போன தருணங்களில் எங்கெல்லாம் நான் ஒரு சாட்சியாய் இருந்திருக்கிறேன் என்கிற மிகப் பெரும் கேள்வி என்னுள் ஒரு சூறாவளிளைப் போல் சுற்றி அலைந்தபடி இருந்தது. அப்படிச் சில தருணங்கள் என் மனக்கண் முன் வந்த போது என்னுள் நான் உணர்ந்த நடுக்கத்தை எதைக் கொண்டும் என்னால் நிறுத்த முடியவில்லை. அதில் மிக முக்கியமானது அப்பொழுது எனக்கு ஒரு பத்து வயது இருக்கலாம், நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு, அப்பொழுது நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறம் பெரிய விசாலமான இடம் உண்டு. வீட்டின் முன் பகுதி முடியும் இடத்தில் இருந்து ஒரு பத்து அடி இடைவெளிக்குப் அப்புறம், நன்கு உயரமாக வளர்ந்த ஆறு தென்னை மரங்கள் ஐந்து அல்லது ஆறு அடி இடைவெளியில் மூன்று மூன்றாக இரண்டு வரிசைகளில் இருக்கும். அந்த இடத்தின் அகலம் நாற்பது அடி இருக்கும். அப்படியெனில் அந்த பின்புற இடத்தின் நீள அகலத்தை புரிந்து கொள்ளுங்கள். அன்றைய காலக்கட்ட பள்ளி பருவ நண்பர்களுடன் அந்த இடத்தில் மட்டையாடுவது தான் என்னுடைய பிரதான பொழுது போக்கு. பின்னால் அவ்வளவு பெரிய இடம் இருந்ததால் அந்த வீட்டின் சொந்தக்காரர் அங்கே கோழிகளை வளர்த்து வந்தார். அவர் வளர்க்கும் கோழி, சேவல் எல்லாம் அங்கே சுற்றிலும் மேய்ந்தபடியே இருக்கும். அப்படி ஒரு நாள் அங்கிருக்கும் கோழி ஒன்று, தன் குஞ்சுக் கூட்டத்துடன் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த கோழிக் குஞ்சுகள் பிறந்து ஒன்றரை மாதமிருக்கும், ஓரளவு வளர்ந்திருந்தன. அதனை என்னுடைய வீட்டின் வெளி முற்றத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நான், திடீரென ஒரு கல்லை எடுத்து அது மேய்ந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி எறிந்தேன். என்ன காரணத்துக்காக கல்லை எறிந்தேன் என என்ன யோசித்தும் என் நினைவடுக்குகளில் இருந்து அதனை மீட்டுக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் அதன் பின் நடந்து தான் இன்று வரை என்னை சாட்சியாய் இருத்தலின் உணர்வு மிகுந்த வலியை என்னுள் கடத்திக் கொண்டு இருக்கிறது. கல்லை எறிந்த எனக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆனால் என்னால் எறியப்பட்ட கல் மிகச் சரியாய் ஒரு கோழிக் குஞ்சின் உடலின் மீது எங்கோ பலமாய் தாக்கியது. தாக்கிய நொடியில் அந்தக் குஞ்சு கிழே விழுந்து துடிக்க ஆரம்பித்தது. அதனை அந்த தாய் கோழியும் மற்ற குஞ்சுகளும் பார்த்தபடியே இருந்தன அதோடு சேர்ந்து என்னுடைய கண்களும். சில நொடிகளில் அந்தத் துடிப்பு அடங்கிவிட்டது. கையேறு மனநிலையில் அந்த நிகழ்வை நான் ஒரு மெளன சாட்சியாய் பார்த்த அந்த நிமிடங்கள் அப்படியே எனக்குள் உறைந்துவிட்டது. இன்று வரை இந்த நிகழ்வு எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. இது நடந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்றும் மெளன சாட்சியாய் இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது என் ஆழ்மனம் நடுங்குவதையும், என் கண்களில் நிற்காமல் கண்ணீர் கசிவதையும் என்னால் தடுக்கவே முடியவில்லை.
நாம் நம் சிறு வயதில் அறியாமல் செய்த பிழைகளை, பின்னாட்களில் நம்முடைய அனுபவத்தின் வழியே உணர்ந்து, செய்த பிழைகளைச் மீண்டும் ஒரு முறை சாட்சிப் பூர்வமாய் பார்க்க முடிந்தால் அது எப்பேர்ப்பட்ட மாற்றத்தை நமக்குள் ஏற்படுத்தும் என்பதற்கு மேலே சொல்லியுள்ள நிகழ்வே எனக்குப் போதுமானதாய் இருந்தது. இன்றும் பள்ளிகளில் நான் எடுக்கும் புகைப்பட பயிற்சி வகுப்புகளில் ஒரு விஷயத்தை தவறாமல், மறக்காமல் குறிப்பிடுவேன். ஒரு மிக வெற்றிகரமான திருட்டை நீங்கள் நிகழ்த்தி விட்டீர்கள். உங்களின் திருட்டை இந்த உலகின் எப்பேர்ப்பட்ட புலனாய்வு புலி வந்தாலும் கண்டே பிடிக்க முடியாது. இருந்தாலும் ஒரே ஒருவர் மட்டும் அந்த திருட்டின் ஒட்டு மொத்த சாட்சியாய் இருக்கிறார் அவர் யார் எனக் கேட்பேன். சில மாணவ, மாணவிகளிடம் இருந்து கடவுள் என்கிற பதிலும், இன்னும் சில பேரிடம் இருந்து அது நான் தான் என்கிற பதிலும் வரும். இதில் நான் தான் அது என்கிற பதில் வந்தவுடன் கடவுள் என்று சொன்னவர்கள் கூட அது நான் தான் என்கிற பதிலை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். இது தான் சாட்சியாய் இருத்தலின் முதல் படி எனக் கருதுகிறேன். இன்று ஒவ்வொரு மனிதனும் அறத்திலிருந்து பிறழும் ஒவ்வொரு நொடியும் அவன் தான் சாட்சியாய் இருத்தலின் இருப்பை மறந்துவிடுகிறான். அன்று அந்தக் கோழிக் குஞ்சின் இறப்பைச் சாட்சியாய் கண்டதை உணர்ந்த என் மனம் அதன் பிறகு இன்று வரை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சொல் கூட தவறுதலாக மற்றவர்களைக் காயப்படுத்தி விடக்கூடாது என்கிற நிலையை நோக்கி நகர்ந்தபடியே இருக்கிறது. ஆனாலும் முழுமையாய் நகர்ந்திருக்கிறேனா என்று கேட்டால் நகர்ந்து கொண்டேயிருக்கிறேன் என்பது தான் பதில். இன்று மனிதன் தனக்குத் தானே சாட்சியாய் இருத்தலில் இருந்து தப்பிக்கவே வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறான். அவனுக்குத் தான் பயந்து ஓடுவது தன்னைப் பார்த்துத் தான் என்பது கடைசி காலம் வரை புரிவதே இல்லை. புரியும் தருணத்தில் இந்த வாழ்வு தனது இறுதி அத்தியாயத்தை எழுத ஆரம்பித்து விடுகிறது. வாழும் போதே சாட்சியாய் இருத்தல் என்பது ஒரு விதமான வலி மிகுந்த சுகம், அதனைச் சுமக்கத் தயாராய் இருந்தால் மற்ற சுமைகள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்று எளிதாக விளங்கிவிடும். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916