வாழ்ந்து பார்த்த தருணம்…186

எது அவமானம்…

இந்த முறை எழுத வேண்டும் என நினைத்த விஷயமும், தலைப்பும் வேறு. ஆனால் ஒரு சின்ன திருப்பம் மொத்த எழுத்தையும் மாற்றி விட்டது. அது என்ன திருப்பம், சமீப ஆண்டுகளாக பொதுவாக நான் பகிரியில் (வாட்ஸப்) யாருக்கும் எதையும் பகிர்வதில்லை. முகநூல் பக்கத்தில் நான் பதிவேற்றும் கட்டுரைகளின் இணைய சொடுக்கினை பகிர்வதோடு சரி. காரணம், நான் பகிர்வது, இந்த உலகின் ஆகச் சிறந்த கருத்தாக இருந்தாலும், அதனைப் படித்துவிட்டு செம்மயா இருக்கு என புளகாங்கிதம் அடைந்து, உடனடியாக அதனை அடுத்தவருக்கு பகிர்ந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம். அதனால் தான். அதனைத் தாண்டி நான் வாசிக்கும், என்னை ஆழமாய் சிந்திக்க வைக்கும், கருத்தியல் மேற்கோள்களை அதிகபட்சம் இருவரைத் தாண்டி பகிர மாட்டேன். அதுவும் அந்த இருவரும் அதனை வாசித்து உள்வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்திருப்பதால் தான். அதனையும் தாண்டி, சமயத்தில் அனுப்பிய கருத்தியல் குறித்து விவாதிக்கவும் செய்வார்கள். அதனால் தான் பகிர்தல் என்பது இருவருக்கு மட்டுமே. இதே போல் ஓஷோவின் கருத்தியல் மேற்கோள் ஒன்றினை நேற்று பகிர நேர்ந்தது. அந்த மேற்கோள் தான் இந்த எழுத்துக்கான முதல் கீற்று. அதனை ஒத்து தான் மேலே சொல்லியுள்ள தலைப்பும். அந்த ஓஷோவின் கருத்தியல் என்னவென்பதை கடைசியில் பார்க்கலாம், இப்பொழுது விஷயத்திற்குள். அது ஒரு மாநிலத்தின் பிரதான பெரு நகரம். அந்த நகரத்தில் இருக்கும் ஒரு முக்கியமான மண்டபத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட ஒரு பெரிய அறையில், ஒரு குழந்தை தன் பிறந்தநாள் விழா ஒன்றினை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த விழாவுக்கு நானும் குடும்பத்துடன் அழைக்கப்பட்டிருந்தேன். விழா தொடங்க சில மணி நேரங்கள் முன்பாகவே குடும்பத்துடன் அங்கே போய் விட்டேன். இன்னும் பிறந்த நாள் விழா தொடங்க அரை மணி நேரம் ஆகும் என்கிற நிலையில், என் மகள் அந்த விழா நடக்கும் அறைக்குள் தன் வயதை ஒத்தக் குழந்தைகளோடு ஓடியாடி விளையாடியபடி இருந்தாள். கொண்டாட்டம் தொடங்குவதற்கு முன்னதான நலம் விசாரிப்புகள், புரணிகள் என ஒரு சன்னமான பேச்சொலிகள் அந்த அறை முழுவதும் நிரம்பி இருந்தது. நாங்களும் அதில் ஒருவராய் ஐக்கியமாகிப் பேசிக் கொண்டிருந்தோம். இடையிடையே மகள் எங்கு விளையாடிக் கொண்டு இருக்கிறாள் என்பதையும் கவனித்தபடி இருந்தோம். விழா தொடங்குவதற்கான அறிகுறிகள் அங்கிருந்த மேடையில் தென்படத் தொடங்கின.

விழா ஆரம்பிக்கப் போகிறது எனச் சொல்லப்பட்டதும், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு குழுமி விட்டார்கள், என் மகளும் மேடையில் சக குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தாள். அங்கு நின்றிருந்த குழந்தைகளின் கண்கள் முழுவதும் மேடை மேல் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த கேக்கின் மேல் குவிந்திருந்தது. உடனே பிறந்தநாள் பாடல் பாடப்பட்டு கேக் வெட்டப்பட்டது. கேக் வெட்டப்பட்டதும் சில குழந்தைகள் கீழே இறங்கிவிட்டார்கள். சில பேர் மேடையிலேயே நின்றார்கள். என் மகள் கேக் இருக்கும் மேஜையில் சாய்ந்து கேக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். கேக்கை வெட்டி எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க ஆரம்பித்தார்கள். பல குழந்தைகள் அதனை வாங்கிக் கொண்டு மேடையில் இருந்து இறங்கிப் போய் விட, என் மகள் அந்த மேஜைக்கு அருகிலேயே இருப்பதை யாரும் கவனிக்கவில்லை. அவளும் பொறுமையாய் கேக்கை பார்த்தபடி ஏக்கமாய் நின்று கொண்டே இருந்தாலே ஒழிய, எனக்கும் கொடுங்கள் எனக் கேட்கவேயில்லை. இவை அனைத்தையும் மேடைக்கு கீழ் சில வரிசைகள் தள்ளி உட்கார்ந்திருந்த நான் கவனித்தபடியே இருந்தேன். அவள் கண்களில் தெரிந்த ஏக்கம் என்னை என்னவோ செய்தபடி இருந்தது. ஒரு தகப்பனாக என் மகளை யாரும் கவனித்துவிட மாட்டார்களா என என் மனம் அரற்றிக் கொண்டே இருந்தது. சில நிமிடங்கள் அங்கேயே நின்றவள் கண்கள் கலங்க மேடையிலிருந்து இறங்கி, நேரே என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். என் அருகில் வந்ததும், என்னடா கண்ணு எனக் கேட்டேன். யாருமே எனக்கு கேக் கொடுக்க மாட்றாங்கப்பா என ஒரு மாதிரியாக அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாள். உடனே இல்லடா கண்ணு, நீ நிக்கிறத அவங்க கவனிக்கலடா தங்கம், அதனால தான் கேக் உனக்கு கொடுக்கல, நீ போய் கேளு அப்பாவும் கூட வர்றேன் எனச் சொல்லி, என் இருக்கையில் இருந்து எழுகையில், மேடையில் இருந்த ஒரு முக்கியமான நபர் நடந்தவற்றை கவனித்து விட்டு, நாங்கள் மேடைக்கு போவதற்குள் கையில் கேக்குடன் வந்து, மகளின் கைகளில் கேக்கை கொடுத்து விட்டார். கேக்கை கைகளில் வாங்கிய அந்த நொடி அவளின் முகத்தில் படிந்திருந்த ஏக்கம், அழுகையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. அப்படியே கைகளில் ஏந்திய கேக்குடன் என் அருகில் இருந்த இருக்கையை வசமாக எடுத்துப் போடச் சொல்லி, கேக்கை சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.

ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு வேளை என் மகள் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என யோசித்தேன், கேக் எனக்கு கொடுக்கப்படவில்லை என உணர்ந்த மறுநொடி, அதனை எனக்கு நேர்ந்த அவமானமாக கருதி மொத்தமாகக் குடும்பத்துடன் விழா அரங்கத்தை விட்டு வெளியேறி இருப்பேன். வெளியேறியதோடு இது நிற்குமா என்றால் கண்டிப்பாக நிற்காது. அதன் பிறகு என்னனென்னவெல்லாம் மனதுக்குள் யோசிக்க வாய்ப்பிருக்கிறது, நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை இதனை வாசித்துக் கொண்டிருக்கும் தங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். அங்கே நடந்தது எதுவும் திட்டமிட்டு நடந்தது அல்ல. என் மகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டது மிக, மிக தற்செயலானது. ஒரு பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனக்கு அது மிக, மிக தெளிவாய் விளங்கியது. ஒரு தகப்பனாய் யாராவது அவள் அங்கு நிற்பதை கவனித்து கேக்கை அவள் கைகளில் கொடுத்துவிட வேண்டும் என யோசித்தேனே ஒழிய, யார் மீதும் எந்தக் கோபமும் எனக்கு வரவில்லை. இவையெல்லாம் பார்வையாளனாய் இருந்து கவனிக்கும் வரை தான். நானே பங்கேற்பாளனாய் இருந்தால் கதையே வேறு. யோசித்துப் பார்த்தால் என் மகள் அங்கே பங்கேற்பாளர் தான். ஆனால், அவளுக்கு தனக்கு யாரும் கேக் கொடுக்கவில்லை என்கிற ஏக்கம் தான் புகாராக மாறியதே ஒழிய, வேறு எதை பற்றியும், யாரைப் பற்றியும் அவள் யோசிக்கவே இல்லை. அந்தப் புகாரும் அவள் கரங்களுக்கு கேக் வரும் வரை தான். அதன் பின் தன்னை கவனித்துக் கொடுக்கவில்லை என்கிற புகார் கூட காணாமல் போய்விட்டது. கேக் கைக்கு வந்ததும் சிறிது நேரத்திற்கு முன்னால் நடந்த எந்த ஒரு நிகழ்வும் அவள் மனதினுள் இல்லை. அது ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டது. அவள் கேக்கை சாப்பிட்டு முடித்து விட்டு, அதே மேடை, அதே மேஜையைச் சுற்றி யாரெல்லாம் இவளை கவனிக்கவில்லையோ அவர்களோடு கவனமாக விளையாடப் போய்விட்டாள். ஆனால், அவள் இடத்தில் நாம் யாரேனும் இருந்திருந்தால், என்னவெல்லாம் சிந்தித்திருப்போம், எப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்போம் என யோசித்துப் பார்த்தால், அப்படியே தலைசுற்றி விட்டது. மேலே சொல்லியுள்ள நிகழ்வைப் போல், நம் வாழ்வில் நடந்து முடிந்த பல நிகழ்வுகளின் தேவையற்ற கசடுகளை எல்லாம் பல நாட்களாக, பல மாதங்களாக, பல வருடங்களாக நமக்குள் தூக்கி சுமந்தபடியே இருக்கிறோம். என் மகளின் கரங்களுக்குள் வந்த ஒரு சின்ன கேக் துண்டு எப்படி சிறிது நேரம் முன்பு நடந்த அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அழித்துப் போனதோ, அதனைப் போல் ஒரு கேக் துண்டு நமது கரங்களுக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும். யோசித்துப் பார்த்தால், இங்கே கேக் துண்டுகள் நிறையவே இருக்கின்றன. அதனை மகிழ்வாய் முழுமனதுடன் எடுத்து தின்பதற்கு நம்மிடம் குழந்தை மனம் தான் இல்லை. இப்பொழுது ஒஷோ சொல்லிய அந்த வார்த்தைகளோடு முடிக்கிறேன். அடுத்தவர் என்னை அவமதித்துவிட்டார் என்பது தவறு. நான் அவமானமாக உணர்கிறேன் என்பதே சரி – ஓஷோ. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916