அறையப்படாத சிலுவைகள்…
முடிந்த ஞாயிறு அன்று இரவு எட்டு மணிக்கு தகட்டூர் புத்தகப் பேரவை ஏற்பாடு செய்திருந்த, நான் தான் ஒளரங்ஸேப் நூல் அறிமுக நிகழ்வு, ஜூம் இணைய வழியில் நேரலையாக நடந்தது. நூல் அறிமுக உரையை நிகழ்த்தியது ஆர்.அபிலாஷ். ஏற்புரை சாரு. இந்த நிகழ்வில் கொஞ்சம் தாமதமாக 8:10த்துக்கு கலந்து கொண்டேன். ஆர்.அபிலாஷின் நூல் அறிமுகம் அட்டகாசம். அத்தோடு அவர் சாரு எழுத்தின் தனித்துவத்தைப் பற்றி மிக விரிவாகப் பேசியது எல்லாம் செம்ம. நிகழ்வின் முடிவில் ஆர்.அபிலாஷின் கருத்துக்குச் சாருவின் பதிலில், தான் எழுதும் ஆட்டோ ஃபிக்ஷன் எழுத்துப் பற்றி சொல்லும் போது, நான் பிரேதங்களின் மீது நடந்து செல்கிறேன், சமயங்களில் அங்கே என்னுடைய பிரதேமும் இருக்கும் என்று சொன்னார். நேரலையின் ஒட்டு மொத்த காணொளித் தொகுப்பும் தகட்டூர் புத்தகப் பேரவையின் யூ டுயூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. விருப்பமிருப்பவர்கள் போய் பார்த்துக் கொள்ளலாம். மேலே சாரு சொல்லியுள்ளதை ஏற்கனவே எழுதியும் இருக்கிறார். அதனை நான் வாசித்தும் இருக்கிறேன். இருந்தும், அந்த நேரலை நிகழ்வில் சாருவின் வார்த்தைகளை ஆழமாக உள்வாங்கும் போது, அவர் சொன்னதில் இருந்த நடைமுறை யதார்த்தம் முகத்தில் அறைந்தது. அதில் சிலவற்றை நான் அனுபவித்தும் இருக்கிறேன். இப்படி, அவரின் வார்த்தைகளைப் பற்றி ஆழமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது மனம் பின்னோக்கி சென்றது. சில வருடங்களுக்கு முன்பு வரை, என் மீது எனக்கே நம்பிக்கையற்ற தன்மையோடு மிக, மிக மோசமான சுய கழிவிரக்கத்தோடு சுற்றிக் கொண்டிருந்தவன் தான் நான். அதுவும் என்னுடைய அடையாளம் என்பது உடன் இருப்பவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது என்கிற ஆழமான நம்பிக்கையுடன் இருந்தவன். அவர்கள் வெற்றி பெற்றால் நாமும் அந்த வெற்றியின் வழியே நம்முடைய அடையாளத்தை நிறுவி விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தவன். ஆனால், என்னைப் பற்றி சொல்லியுள்ள எதனையும் அந்த காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ளாதவன். ஆனால், ஒரே ஒரு பெரிய இழப்பு என்னை மொத்தமாக மாற்றியது. அந்த இழப்பை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இப்பொழுது சொல்ல வந்தது வேறு. ஏன் அந்த இழப்பு என்னை மாற்றியது, அதற்கு முன் அப்படி ஒரு இழப்பு உன்னுடைய வாழ்வில் ஏற்படவில்லையா எனக் கேட்டால். அதற்கு முன்பும் நிறைய இழப்புகள் உண்டு. ஆனால், அதுவரை இழந்தவற்றில் நான் எதுவுமே உணரவில்லை அல்லது உணரத் தயாராக இல்லை. ஆனால், குறிப்பிட்ட அந்த இழப்பில் சாரு சொன்னது போல் சமயங்களில் என் பிரேதத்தின் மீது என்று சொன்னார் இல்லையா. அப்படி ஒரு மனநிலையை அந்த இழப்பின் போது எனக்குள் ஆழமாக உணர்ந்தேன். அது தான் என்னுள் ஏற்பட்ட மாற்றத்துக்கான முதல் படி.
பொதுவாக இங்கே நாம் நிறையவே இழந்து கொண்டிருக்கிறோம், அதன் காரணமாக வருத்தத்திற்கு, மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். பின்னர், அந்த இழப்பிற்காக பிறர் மீது பழி போடுகிறோம், ஆனால், இழப்பிற்கான காரணத்தில் இருக்கும் நம்முடைய பங்கைப் பற்றி யோசிப்பதே இல்லை. சுருக்கமாக சொல்வதானால் நாம் எந்த சிலுவையையும் சுமக்கத் தயாராக இல்லை. வேடிக்கை பார்க்க மட்டுமே தயாராக இருக்கிறோம். கொஞ்சம் அதிலிருந்து விலகி எனக்கு நடந்த இழப்பின் சிலுவையை நானே சுமக்கத் தயாரான போது தான், நான் எங்கெல்லாம் கோட்டை விட்டிருக்கிறேன் எனத் தெரிந்தது. முதலில் நான் தான் கோட்டைவிட்டிருக்கிறேன் என்பதை எனக்கு நானே ஒத்துக் கொண்ட பிறகு தான், என் மனநிலையையே அது மாற்றியது. அன்றிலிருந்து எது நடந்தாலும், அது நல்லதோ, கெட்டதோ அது எதுவாக இருந்தாலும், அதில் என்னுடையப் பங்கு என்ன என்கிற கேள்வியை, என்னை நோக்கி நான் கேட்காமல் விட்டதே இல்லை. அது போன்ற நேரங்களில் செய்த செயலில் என்னுடைய தவறு இருப்பின், என்னை நானே சிலுவையில் ஏற்றத் தயங்குவதே இல்லை. எந்தளவு என்னை நானே சிலுவையில் அறைகிறேனோ அந்த அளவு பக்குவம் அடைகிறேன் என நம்புகிறேன். அந்த அனுபவம் மிக்க பக்குவம் தான், நிதானம் என்கிற ஒன்றை ஆழமாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது தான் எதிலும் உடனடியான எதிர்வினைகளைத் தடுத்தும் விடுகிறது. இங்கே உடனடியான எதிர்வினைகளைத் தடுத்தாலே இழப்புகள் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இப்படியான அனுபவ வழிப் பாடங்களை கற்றுக் கொண்டும், அதனை எழுதிக் கொண்டும் இருக்கும் நேரத்தில். எவ்விதத்திலும் தன் வாழ்வினை அனுபவ படிப்பினையாக பார்க்க முடியாத, ஆனால் ஒரே தாவலில் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட வேண்டும், அப்படி நகர்ந்தும் விட முடியும் என்று ஆழமாக நம்புகிற மனிதர்களை சந்தித்தால், அந்த சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்கும், பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், நான் திரைத்துறையில் இருந்த சமயத்தில், அப்பொழுது பணி செய்து கொண்டிருந்த திரைப்படம் ஒன்றில் ஒரு சின்ன கதாபாத்திரத்திற்காக, என்னை முறையாக நடிப்புப் பயிற்சி எடுக்கச் சொல்லிக் கேட்டதால் பயிற்சியும் எடுத்திருக்கிறேன், அந்தப் பின்னனியில், இன்று சில நேரங்களில் எனது நெருக்கமான நண்பர் ஒருவரின் வாயிலாக திரைத்துறைக்குள் நடிகராக மிளிர வேண்டும் பயிற்சிக் கொடுக்க முடியுமா எனக் கேட்டு சில விண்ணப்பங்கள் வரும். சரி வாருங்கள் பேசலாம் எனச் சொல்லி நேரில் என்னை சந்திக்க வருபவர்கள் அனைவரிடம் அடிப்படைத் தகுதியான ஒன்றே ஒன்று மட்டும் தான் எதிர்பார்த்தேன், எதிர்பார்ப்பேன். ஆனால், இதுவரை வந்த யாரிடத்திலும் அதனை நான் பார்த்ததில்லை. அது என்ன?. வாழ்வியல் அனுபவம்.
ஒரே ஒரு உதாரணம் மட்டும் போதுமானது, நடிப்பு பயிற்சி வேண்டும் எனக் கேட்டு வந்த அவருக்கு ஒரு இருபத்தி நான்கு அல்லது இருப்பத்தி ஐந்து வயது இருக்கலாம். வந்திறங்கியது மூன்று லட்சம் மதிப்புள்ள ஒரு இரு சக்கர வாகனத்தில். அதனை வாங்கிக் கொடுத்ததும் அவருடைய தந்தை. என்னை சந்திக்கும் நொடி வரை வெகு குறைவான காலகட்டத்திற்குள் தான் வேலை செய்த நிறுவனங்களை கிட்டத்தட்ட மூன்று முறை மாற்றியிருந்தார். ஏன் எனக் கேட்ட போது, அவங்க பேசுனது எனக்கு பிடிக்கல அதனால மாறிட்டேன் என சர்வ அலட்சியமாக பதில் வந்தது. அவரிடம் பேசியதிலிருந்து ஒன்று தெரிந்தது. தான் வேலைப் பார்க்கும் இடத்தில் எல்லாமே தனக்கு சாதகமாக இருக்க வேண்டும். இல்லையெனில், தனக்கு ஒத்துவராது என்பதில் உறுதியாக இருந்தார். அதன்பின் அவரிடம், இதுவரை சென்னை போயிருக்கிறீர்களா எனக் கேட்டேன். ஆங் போயிருக்கேன் பிரண்ட்ஸ பார்க்க எனச் சொன்னார். ஏதாவது புத்தகம் வாசித்திருக்கிறீர்களா எனக் கேட்டேன். இல்லையென உதட்டைப் பிதுக்கினார். சரி உங்களில் வாழ்வில் நடந்த உங்களை பாதித்த ஏதேனும் ஒரு அனுபவத்தை சொல்ல முடியுமா எனக் கேட்டேன். இல்ல சார் நீங்க கேட்குறது எனக்கு புரிஞ்சா மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. இருந்தாலும் என்ன இன்ஸ்பயர் பண்ணுற மாதிரியோ, இல்ல அபக்ட் பண்ணுற மாதிரியோ எதுவும் நடந்ததில்ல. அப்படி எங்க வீட்ல என்ன அபக்ட் பண்ணுற மாதிரி எதையும் நடக்கவிட்டதில்ல சார் என்றார். அப்ப சரி நான் ஒண்ணு சொல்லுவேன், நீங்க அத செய்யணும், அத செஞ்ச பிறகு நடிப்புப் பயிற்சி பற்றி யோசிக்கலாம் எனச் சொல்லிவிட்டு. ஒரு பதினைந்து நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னைப் போங்கள், போகும் போது மறக்காமல் நீங்கள் இதுவரை எடுத்த உங்களின் புகைப்படங்களில் எதுவெல்லாம் நன்றாக இருப்பதாக நினைக்கிறீர்களோ அதனைக் கையோடு நகல் எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொல்லும் மூன்று, நான்கு இயக்குநர்களின் அலுவலகத்தைத் தேடிப் போய், உங்களின் புகைப்படத்தை கொடுத்து நடிக்க வாய்ப்புக் கேளுங்கள், கிடைத்தால் அப்படியே போய் நடிக்க ஆரம்பித்துவிடுங்கள். இல்லையெனில், அங்கு உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தை என்னிடம் வந்துச் சொல்லுங்கள். அதன் பின் நடிப்புப் பயிற்சி பற்றி யோசிக்கலாம் என்று சொன்னேன். இவருக்கு மட்டுமல்ல இது வரை வந்த ஏழெட்டு பேருக்கும் இந்த பதிலைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அதன் பின் ஒருவரும் இதுவரை திரும்பி வரவில்லை. பின்னாட்களில் அதில் யாருமே சென்னை பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை என்பது தெரிந்தது. காரணம் மிக, மிக எளிமையானது. பெரும்பாலும் இங்கு யாருமே அனுபவம் என்கிற சிலுவையை சுமக்கவோ அல்லது அதில் அறையப்படவோ தன்னை ஒப்புக் கொடுக்கத் தயாராக இல்லை. வெறும் வெற்றுப் பார்வையாளராய் இருந்து விட்டு உயிர்தெழ வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒன்றே ஒன்று தான். இங்கே சாகத் தயாராய் இருந்தால் மட்டுமே உயிர்தெழ முடியும். உயிரோடு இருந்து கொண்டே உயிர்தெழ முடியாது. பொதுவாக இங்கே செதுக்கப்படும் கல் வலி தாங்கினால் தான் சிலையாக முடியும் எனச் சொல்வார்கள். இல்லை, கல் மட்டுமல்ல உளியும், சுத்தியலும், அதனை செதுக்கும் கரங்களும் சேர்ந்து வலி தாங்கினால் தான் செதுக்கப்படும் கல் சிலையாக முடியும். ஒரு வகையில் மனிதன் இங்கே எப்பொழுதுமே தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் நிலையில் இருக்கிறான். அப்படியெனில், அவன் எந்ததெந்த வலியை எல்லாம் தாங்க வேண்டும் என யோசித்துக் கொள்ளுங்கள். கடைசியாக, நீங்கள் அறையப்படாத சிலுவையாக இருக்கும் வரை, அது அடையாளமில்லாமல் இருக்கும் வெறும் மரக்கட்டையைப் போலத் தான். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916