கடந்து…
நேற்று நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அந்தப் பேச்சு இயல்பாக இறப்பைப் பற்றி பேசுவதாக மாறியது, பின்னர் அதனைப் பற்றி ஒரு சின்ன விவாதம் போனது. பேச்செல்லாம் முடிந்த பின்னரும் மனதிற்குள் மரணத்தைப் பற்றிய எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அப்பொழுது தான் சாருவின் தளத்தில் வாசித்த இரண்டு கட்டுரைகள் மனதிற்குள் வந்து போனது, அதில் ஒரு கட்டுரை சாரு மரணத்தை என்னவாகப் பார்க்கிறார் என எழுதியிருந்தார், அதில் அவர் சொன்னது. இப்பொழுதெல்லாம் இறப்பை அணுகும் விதம் மாறியிருக்கிறது. புரியும்படி சொல்வதானால் இறப்பு வீட்டில் ஒரு பூனை எப்படிச் சுற்றிக் கொண்டிருக்குமோ அப்படித் தான் என்னுடைய மனநிலையும் இருக்கிறது என எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் தலைப்பை மறந்து விட்டேன். வேறு வார்த்தைளைப் போட்டு மீண்டும் வாசிக்கத் தேடினேன் கிடைக்கவில்லை. மற்றொன்று பாலகுமாரனும் நானும் என்கிற கட்டுரை. அதில் பாலக்குமாரன் முன்னரே தன் இறப்பை பற்றி அவரிடம் சொன்னதை சாரு சொல்லியிருப்பார். நான் அடிக்கடி தேடி வாசிக்கும் கட்டுரைகளில் ஒன்று அது. பொதுவாக இங்கே நாம் நம் அருகில், நம் குடும்பத்தில் நிகழும் மரணங்களைச் சற்றே உற்று கவனித்தால் ஒரு உண்மை பொட்டில் அடிக்கும் படி விளங்கும். ஆனால், நாம் பொதுவாக எந்த ஒரு மரணத்தையும் ஆழமாக கவனிப்பதில்லை. அதற்கு மிக, மிக முக்கியமான காரணம். அடிப்படையில் மரணத்தின் மீது இயல்பாகவே ஒரு பயம் நமக்குள் சுற்றியலைந்தபடியே இருக்கிறது. ஏன் அந்த அடிப்படை பயம் எனக் கேட்டால், நாம் வாழும் காலத்தில் நாம் வாழும் வாழ்க்கைக்குள் நாம் முழுமையாக இல்லை என்கிற உண்மை எளிதாய் விளங்கிவிடும். ஏன் இல்லை எனக் கேட்டால், உள்வயமான எண்ணங்களை விட, புறவயமான எண்ணங்கள் நம்மை ஆக்கிரமிப்பது தான் அடிப்படைக் காரணம். மரணம் நெருங்கும் மனிதர்களின் கண்களை நேருக்குநேர் எதிர்கொள்ளும் நேரத்தில் எல்லாம், அந்த கண்களுக்குள் ஊடுருவி உங்களால் பார்க்க முடிந்தால், இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து விட வேண்டும் என்கிற வலி மிகுந்த ஏக்கம் ஒன்று அந்தக் கண்களுக்குள் ஓடிக் கொண்டிருப்பதை காணலாம். அது ஏன்?.
காரணம், மிக, மிக எளிமையானது, நாம் மரணத்தைக் கடந்து வரவில்லை. இறப்பு என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை என நமக்கு உரைப்பதே இல்லை. அதனால் தான் வாழும் காலத்தில் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய, நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தள்ளி வைத்துப் பழகியிருக்கிறோம். மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அது ஒரு நாள் நம் உடலின் வாசற் கதவையும் தேடி வந்து தட்டும் என்கிற ஆழமான புரிதல் வருகிற கணத்தில், நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் பிம்பமே மாறிவிடும். மரணத்தின் மீதான பயமும் போய்விடும். ஆனால் நாம் அதனை லட்சியப் படுத்துவதே இல்லை. அலட்சியப் படுத்துகிறோம். அப்படி அலட்சியப்படுத்தும் மனிதர்களின் மரணங்களை அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கையில், அது கொடுக்கும் பாடம் ஓராயிரம். அப்படி என் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். அதனுள் உள்ள நபர்களை இங்கே நேரடியாக என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால் நிகழ்வின் சாரத்தை மட்டும் இங்கே சொல்ல முற்படுகிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான கட்டத்தில் ஒரு இறப்பின் பொறுப்பை நான் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் வந்த போது, அந்தப் பொறுப்பினை நான் முழுமையாய் தவிர்த்தேன். அதற்கு ஆன்மீகரீதியில் ஒரு முக்கியமான காரணம் இருந்தது. அந்த நேரத்தில் அந்தப் பொறுப்பை வேறு ஒருவர் ஏற்றார். அவர் ஒரு வகையில் எனக்கு என்னுடைய ஆன்ம தேடலுக்கான முதல் விதையைப் போட்டவர், ஒரு வகையில் என்னுடைய இறைத் தேடலுக்கான வழிகாட்டியும் கூட. அந்த இறப்பின் நிகழ்வெல்லாம் முடிந்து காலங்கள் ஓடியது. அன்று நான் தவிர்த்த இறப்பின் பொறுப்பை தானே ஏற்றவருக்கான இறுதி காலம் என் கண்முன்னே நிகழ வேண்டிய, நிகழ்த்தப் பட வேண்டிய சூழலை காலம் உருவாக்கியது. என்னுடைய ஆன்மத்தேடலுக்கான விதையைப் போட்ட அவரின் இறுதி நாட்கள் என்னுடன் கழிந்தது நானே எதிர்பாராதது. அதன்பின் அவரின் இறப்பின் பொறுப்பை நான் ஏற்றே ஆக வேண்டிய சூழல். இதனையும் நான் எதிர்பார்க்கவில்லை. இறப்பின் பின்னர் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யும் போது தான், எந்தக் காரணத்துக்காக முதல் இறப்பிற்கான பொறுப்பை நான் தவிர்த்தேனோ, அதற்கான விடை இவருக்கான பொறுப்பை ஏற்று நடத்துகையில் எனக்கு உணர்த்தப்பட்டது.
முதலில் ஒரு இறப்பு, அந்த இறப்புக்கான பொறுப்பை ஏற்பதிலிருந்து நான் முற்றிலும் விலகுகிறேன். அதற்கான காரணத்தை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். உடனடியாக அந்தப் பொறுப்பை வேறு ஒருவர் மனமுவந்து ஏற்கிறார். அப்படி ஏற்றவரின் இறப்பின் பொறுப்பை காலம் என் கைகளில் கொடுக்கிறது. அதிலிருந்து எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கப்படுகிறது. இப்படி ஒரு வட்டம் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் என்பதை நான் உள்வாங்கிக் கொள்ள எனக்கு சிறிது காலம் ஆனது. இரண்டு இறப்பிலுமே அது நிகழ்வதற்கு முன், நான் கண்ட அந்தக் கண்களில் இருந்து வெளிப்பட்ட ஏக்கமான மற்றொரு வாய்ப்பு கிடைக்காதா என்கிற தேடலுக்கு பின்னான வலியை வேறு எதனுடனும் என்னால் ஒப்பிடவே முடியாது. அந்த வலி கொடுத்த பாடம் இருக்கிறது இல்லையா, அந்த பாடத்தை வேறு எங்கும் உங்களால் கற்றுக் கொள்ளவே முடியாது. அப்படியான பாடத்தை நாம் கற்றுக் கொள்ளத் தயாராகும் போது மட்டுமே மரணம், இறப்பு பற்றிய புரிதலுடன் அதன் மீதான பயத்தையும் கடந்து வரமுடியும். அதனையும் தாண்டி நாம் நம்முடைய உடலையும், மனதையும் பற்றியும் முழுமையாய் புரிந்து கொள்ள முடியும். அப்படிப் புரிதல் வருகிற தருணத்தில் தான் நாம் நம் உடல் பேசும் மொழியையும், ஆழமனம் பேசும் மொழியையும் புரிந்து கொள்ள முடியும். மகாபாரதத்தில் யுத்தத்தின் இறுதியில் அஸ்வத்தாமனை கொல்லப் புறப்படும் பாண்டவர்களை கிருஷ்ணர் தடுத்து அஸ்வத்தாமனுக்கு மரணம் தண்டனை அல்ல, அவன் மரணமே ஏற்படாமல் காலம் முழுமைக்கும் தான் செய்த குற்ற எண்ணங்களுடன் வாழட்டும் என சாபமிடுகிறார். அழுத்தும் நினைவுகளுடன் வாழ்வது மரணத்தை விட மிக மிகக் கொடியது. அதனை அஸ்வதாமனாய் இருந்து பார்த்தால் தான் உணர முடியும். இதிகாசம், மதம் என எதனுடன் தொடர்புபடுத்தாமல் மேலே சொல்லியுள்ள மகாபாரத நிகழ்வை நாம் அணுகுவோமேயானால். நம் ஒவ்வொருவருக்குள்ளும் குற்ற எண்ணங்களுடன் வாழும் அஸ்வத்தாமன்கள் உண்டு. அந்த அஸ்வதாமனைப் போல் நமக்கு மரணமற்ற வாழ்வு இல்லை என்றாலும், நம் வாழ்வின் இறுதி நாட்களுக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலங்கள் நம் எண்ணங்களால் மட்டுமே நிரம்பி இருக்கும். அப்படி நிரம்பி இருக்கும் எண்ணங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நாம் நன்றாக வாழும் காலங்களில் செய்யும் செயல்களே முடிவு செய்யும். என் முன் மரணிக்கும் ஒவ்வொருவரின் கண்களிலும் எண்ணங்களின் வலிகளை தொடர்ந்து கவனித்தே வருகிறேன். அப்படியான கவனித்தல் தான் அஸ்வத்தாமனின் அழுத்தும் நினைவுகளின் வலியை எனக்கு ஆழமாய் உணர்த்தியபடி இருக்கிறது. அந்த உணர்தல் தான் இறப்பை கடந்து வருவதற்கான முதல் படி என ஆழமாய் நம்புகிறேன். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916