வாழ்ந்து பார்த்த தருணம்…204

ஒளிந்திருக்கும் மிருகம்…

மனித மனம் எப்பொழுதுமே இரு வேறு கூறுகளால் ஆனது. ஒன்று கடவுள் மற்றொன்று மிருகம். இது பொதுவான பெரும்பாலானவர்களால் ஒத்துக் கொள்ள முடியாத உண்மை. இங்கே தான் கடவுள் என்பதின் இன்னொரு அடக்கப் பெயராக நல்லவன் & நல்லவள் என்கிற பதத்தில், எல்லோரும் தங்களுக்குள் தாங்களே திருப்திப்பட்டுக் கொண்டு, எங்களுக்குள் மிருகம் என்கிற ஒன்று இல்லவே இல்லை என்று. இந்தச் சமூகத்தின் முன்பு மட்டுமல்லாது. நமக்கு நாமே அடையாளப்படுத்தி வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம் அல்லது பழகியும் விட்டோம். ஆனாலும் எனக்குள் எப்பொழுதும் ஒரு மிருகம் ஒன்று உருமிக் கொண்டும், உலவிக் கொண்டும் தான் இருக்கிறது என்பதை இந்தப் பொதுவெளியில் ஒத்துக் கொள்ள எனக்கு எவ்வித தயக்கமுமில்லை. மிருகத்திலிருந்து கடவுளாவதற்கான பயணத்தின் முதல் படியே எனக்குள் இருக்கும் மிருகத்தை கண்டடைந்து அதனை அடையாளப்படுத்துவது தான் என நம்புகிறேன். அதனைத் தாண்டிக் கண்டுபிடிப்புகள் என்கிற நாகரிகத்தின் தொடக்கப் புள்ளியின் பரிணாம வளர்ச்சியில் தான், மிருகமாய் இருந்தவன் மனிதன் ஆனான் ( இன்றும் அவன் முழுமையான மனிதன் ஆகிவிட்டானா என்பது கேள்விக்குறிய விஷயம் தான் ) என்கிற வரலாற்றின் எச்சத்தின் மிச்சங்கள் இன்றும் என் உடம்புக்குள் பரவியிருக்கிறது என்பதில் எனக்கு எவ்வித ஐய்யமுமில்லை.

தன் வாழ்நாள் முழுவதுமே மிருகத்தை வென்று கடவுளாகப் போராடிக் கொண்டிருப்புவனே மனிதனாக தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தோன்றும். அப்படியான போராட்டத்தில் எனக்குள்ளிருக்கும் மிருகத்துக்கு தீனிப் போட்டு அதனை எனக்கு கீழ்ப்படிந்த நடக்கவைக்க வேண்டுமில்லையா, அதற்கான வ(லி)ழிகளில் ஒன்று தான் திரைப்படம். காரணம் என்னளவில் எனக்குள் ஒளிருந்திருக்கும் மிருகத்தினை திரையில் உலவும் அதுவும் வன்முறை வெறியாட்டம் ஆடும் நாயகனோடு பொறுத்தி ஆடவிட்டு வேடிக்கைப் பார்த்துவிட்டு வருவது என்னுடைய பழக்கம். அது வாலாட்டும் நாய்க்கு பிஸ்கட்டை போட்டு காலடியில் நிறுத்தி வைத்திருப்பதைப் போல. மனதுக்குள் இருக்கும் மிருகத்தின் வாலாட்டுதலுக்கான பிஸ்கட் தான், வன்முறை அழகியலை கொண்டாடும் திரைப்படங்கள். அப்படி என்னுள் ஒளிந்திருக்கும் மிருகத்தின் வன்முறையை வாலாட்டி ரசிக்க வைத்தத் திரைப்படம் தான் ஜெயிலர்.மேலே சொல்லியுள்ள கூற்றினை கற்றது தமிழ் திரைப்படம் வெளியானதும், அதன் இயக்குநர் ராம் ஒரு நேர்காணலின் போது சொல்லியிருந்தார். அவர் சொன்னது இது தான். நான் என்னுடைய நிஜ வாழ்வில் பழிவாங்க முடியாதவர்களை எனதுத் திரைப்படத்தின் வழியாகப் பழிவாங்கினேன் என்று சொல்லியிருந்தார். ஒருவகையில் மனதின் சமநிலையை பேணுவதற்கான வழி அது. இல்லாவிடில் உண்மையில் அது நிஜவாழ்வில் நிகழ்த்தப்பட்டால் வாழ்வே நரகமாகிவிடும்.

பெரும்பாலும் ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்கள் கொண்டாப்படுவதும் இந்தப் பின்னனியில் இருந்து தான். தான் பெற்ற அல்லது தக்கவைத்துக் கொண்டிருக்கும் வெற்றி என்கிற நிலையில் இருந்து எப்பொழுது விழுந்தாலும், சறுக்கினாலும் உடனடியாக மனித மனதிற்குள் ஒளிந்திருக்கும் மிருகத்திற்கு தீனி போடும் திரைப்படத்தினைக் கொடுத்து. அதில் இருந்து தனக்குள் இருக்கும் வெற்றியை ருசிக்க நினைக்கும் மிருகத்துக்கு தீனி போட்டு தனக்குள் இருக்கும் மிருகத்தை அடக்கி கடவுளை நோக்கி நகர்வது தான் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பாணி. அந்த வகையில் இந்தத் தலைமுறை அலைப்பேசி விளையாட்டுக்களின் வழியே வன்முறைக்குள் ஊறிக் கொண்டிருக்கும் தலைமுறை இல்லையா. அவர்களுக்குத் திரையில் அப்படியான தீனி தான் தேவைப்படுகிறது என்பதினை விக்ரமின் வெற்றியின் வழியே உணர்ந்து கொண்டவர். அதனை தன்னுடைய சூப்பர் ஸ்டார் என்கிற மிருகத்துக்கான இரையாக எப்படி மாற்றுவது என யோசித்து, அதனை திரையில் கிட்டதட்ட கன கச்சிதமாக செய்துவிட்டார் அல்லது செய்ய வைத்துவிட்டார். அவரது இடத்தை அடைய வேண்டும் என நினைப்பவர்கள், அடுத்ததாக இந்த வன்முறைத் தாண்டவத்தை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னெடுக்க வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஒரு வகையில் எத்தனை பேர் மனதினுள் இருக்கும் மிருகத்துக்கான வன்முறை வடிகாலாக திரைப்படத்தினை அணுகுகிறார்கள் எனத் தெரியவில்லை. கண்டிப்பாக அப்படியான மனநிலையுடன் இப்படியான திரைப்படங்களை அணுகுகிறவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. அப்படியெனில் மற்றவர்கள் திரையில் நிகழ்வதை நேரில் நிகழ்த்திப் பார்க்க ஆசைப்படுபவர்களே. காரணம் அதிலிருக்கும் திரில் அப்படி. ஆனால் அந்தத் திரில் திரையைத் தாண்டி நிஜத்தை நோக்கி நகருகையில், அது எங்கு போய் முடியும் என்று தான் தெரியவில்லை. ஜெயிலர் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு மூன்று வாய்ப்புக்கள் கொடுக்கப்படும், அந்த வாய்ப்புக்களை அந்தக் கதாபாத்திரம் எப்படி பயன்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்தின் இறுதி நிலை என்ன என்பது, நமக்குள் இருக்கும் மிருகத்தினை நாம் எப்படிக் கையாளப் போகிறோம் என்பதற்கான எச்சரிக்கை மணி. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916