வாழ்ந்து பார்த்த தருணம்…26

எளிய மனிதர்களின் தடம் பதிந்த நிலம்…

நேற்று என்னுடைய நண்பன் அழைத்தான், நாளை உங்களுக்கு நேரம் இருப்பின், பரளிப்புதூர் வரைக்கும் சென்று, ஒரு விவசாயியை என்னுடைய வேலை நிமித்தமாக சந்திக்க வேண்டியிருக்கிறது, உடன் வரமுடியுமா எனக் கேட்டான். அவர் ஒரு தோட்ட விவசாயி, தோட்ட பயிரின் வழியே வாழ்வியலை அமைத்து வாழ்கிறார் எனச் சொன்னான். விவசாயம் சார்ந்து வாழும் மனிதர்களை சந்திப்பது ஒரு அற்புதமான அனுபவம். அப்படி ஒரு சந்தர்ப்பம் எப்போழுது கிடைத்தாலும் அதனைத் தவறவிடுவதில்லை. உடனடியாகச் சரி என்று சொன்னேன். இன்று காலை பத்து மணிக்கு செல்வதாக பேசி வைத்தோம். சொன்னபடியே பத்து மணிக்கு என்னுடைய இரு சக்கர வாகனத்தில் கிளம்பிவிட்டோம்.

நண்பனின் வீடு என் வீட்டின் எதிர்புறம் தான். அவனையும் அழைத்துக்கொண்டு இருவருமாக, வீட்டிலிருந்து கிளம்பினோம். சரியாக ஒரு நாற்பத்தைந்து நிமிடங்கள் இருசக்கர வாகன பயணம். போகும் வழியெங்கும் மதுரையிலிருந்து நத்தம் செல்லும் சாலையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சாலையை இவ்வளவு பெரிதாக விரிவாக்க வேண்டிய அவசியம் என்ன என தெரியவில்லை. மதுரை நத்தம் சாலையில் கடவூரை தாண்டி ஆறு அல்லது ஏழு கிலோமீட்டரில் பிரதான சாலையிலிருந்து இடது பக்கம் திரும்பினால பரளி. பரளியைத் தாண்டியதும் புதூர். புதூர் சென்றதும் அந்த விவசாயி எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார். அவர் கூடவே தொடர்ந்து சென்றால் சின்ன சாலையிலிருந்து ஒரு இடத்தில் திரும்பினார், திரும்பிய இடத்திலிருந்து சாலையே கிடையாது. கிட்டத்தட்ட ஒற்றையடிப் பாதை தான். நடக்கலாம் அல்லது இருச்சக்கர வாகனங்கள் செல்லலாம் அவ்வளவே. மண்தரையில் கற்களுடன் பாதை கரடுமுரடாக இருந்தாலும், தென்னந்தோப்பு வரை இருசக்கர வாகனத்தைக் கொண்டு செல்ல முடிந்தது.

அந்த விவசாயின் தோட்டத்துக்குள் இருக்கும் ஒரு நீர் தொட்டியின் விளிம்பில் அமர்ந்து நண்பன் பேச ஆரம்பித்தான். அவரின் தினசரி வாழ்வு முழுவதும் இந்த தோட்டத்துக்குள் தான். முழுக்க, முழுக்க அந்த மண் சார்ந்தே சிந்திக்கிறார், பேசுகிறார். ஊரிலிருந்து விலகி மிக எளிமையான ஒரு செம்மண் வீட்டினுள் தான் அவரின் வாசம். இரவு மட்டும் ஊருக்குள் இருக்கும் தன்னுடைய வீட்டுக்குச் செல்கிறார். மற்ற நேரம் முழுவதும் தோட்டத்தில் தான். சரியான நேரம் பார்த்து தண்ணீர் பாய்ச்ச, வாய்காலைச் சரிசெய்ய, மாங்காய் பறிப்பு, தென்னை என அவரின் தினசரி வாழ்வியல், தோட்டத்தில் தொடங்கி, தோட்டத்திலேயே முடிந்துவிடுகிறது. நாம் எப்படி நம்முடைய குழந்தைகளுக்கு பிறர் கண்பட்டு அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது எனப் பார்த்து, பார்த்து ஒவ்வொன்றாக செய்கிறோமோ, அதேப் போல் அந்த விவசாயியும் அப்படித்தான், தன் தோட்டத்து மரங்களை தன் பிள்ளைகளைப் போல் தான் பார்த்துக்கொள்கிறார். இது போன்ற எளிய மனிதர்களிடம் தான் இயற்கையை எப்படி ஆன்மாவோடு நேசிக்க வேண்டுமெனக் கற்றுக்கொள்ள முடியும். சீரான உடல் உழைப்பு, எவ்வித பட்டோபமும் அற்ற மிக, மிக எளிமையான வாழ்க்கை. பெரும்பாலும் எதிர்மறை புலம்பலற்ற நேர்மறையான பேச்சு. இயற்கையை அவர் புரிந்த நேசிக்கும் விதம். தன் தோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு மரத்தையும் அவர் புரிந்து வைத்திருக்கும் விதம். இப்படி இன்னும் நிறைய அவரிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் இருக்கின்றன. மண் சார்ந்து நிபுணத்துவம் பெற்று நிறைய விஷயங்களை தனக்குள்ளேயே வைத்திருந்தாலும். எவ்விதமான பட்டோபமும் அற்ற பேசும் இது போன்ற எளிய மனிதர்களை சந்தித்து பேசுவது வரம். அப்போழுது தான் கொஞ்சமே, கொஞ்சம். அதுவும் இந்த விஞ்ஞான கண்டுப்பிடிப்புகளை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் மனதிற்கு, தம்பி நீயேல்லாம் ஒண்ணுமேயில்ல என சம்மடி அடியுடன் புரியும். அந்த அடி தான் என்னை தேடலுடன் வைத்திருக்கும் அருமருந்து… தேடல் இல்லையேல் வாழ்க்கை இல்லை…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916