வாழ்ந்து பார்த்த தருணம்…209

புத்தனின் பார்வையில் காயம்…

சில ஆண்டுகளுக்கு முன்னர் புத்தனின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றினை ஒரு புத்தகத்தில் வாசித்தது பசுமையாய் மனதிற்குள் தேங்கியிருக்கிறது. அந்தச் சம்பவத்தை நீட்டி முழக்காமல் மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஒரு நாள் ஒரு ஊரில் வழியாக செல்லும் போது புத்தனை காண வந்த ஒருவன் மிக மோசமான வார்த்தைகளால் அவரை தொடர்ந்து அவமானப்படுத்துகிறான். முடிவாக அவர் முகத்தில் காரி உமிழ்ந்தும் விடுகிறான். இவை எதற்கும் புத்தரிடம் இருந்து எவ்விதமான எதிர்வினையும் இல்லை. இதனால் புத்தனின் முகத்தில் காரி உமிழ்ந்தவனுக்கு மனம் உறுத்துகிறது. தனது மனதின் உறுத்தல் காரணமாக, அவன் புத்தனிடம் கேட்கிறான். நீங்கள் ஏன் நான் என்ன செய்தும் என்னிடம் கோபப்படவே இல்லை என்று. அதற்கு புத்தன் அளித்த பதில் தான் மிக, மிக முக்கியமானது. நீ நினைப்பது போல் நடந்து கொள்ள என் மனம் ஒன்றும் உனது அடிமை அல்ல என்கிறான் புத்தன். உண்மையில் நமது நடைமுறை வாழ்வில் புத்தனின் இந்தச் செயல்பாட்டினை எந்த அளவுக்கு செயல்படுத்த முடியும் என பல நூறு முறை யோசித்திருக்கிறேன். உண்மையில் நடைமுறை வாழ்வில் ஒரே ஒரு வார்த்தை போதும் நம்மை கோபப்படுத்துவதற்கு. அந்த ஒற்றை வார்த்தையைப் பிடித்துக் கொண்டு, ஒரு நாள் முழுமைக்குமே நம்மால் நிம்மதியை தொலைத்து உழல முடியும், ஒவ்வொரு நாளும் அப்படி உழலன்று கொண்டும் இருக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்வியல் சூழலில் புத்தனின் மனதை போன்றதொரு திடமான கட்டுக்கோப்பான மனம் சாத்தியமா என்கிற கேள்விகள் எல்லாம் பல நூறு முறை மனதினுள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் அதனைத் தொடர்ந்து ஆழமாக யோசித்துக் கொண்டே இருந்தோமானால் மட்டுமே நமக்கு அப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தினமுமே அப்படியான வாய்ப்புக் கிடைக்கும் என்பது வேறு விஷயம். அது போன்ற தினசரி சந்தர்ப்பங்களில் உள்ளிருக்கும் புத்தன் சடாரென காணாமல் போய்விடுவான். அதனை எல்லாம் தாண்டி உள்ளிருக்கும் புத்தனும் உயிர்ப்போடு இருந்து கண் முன்னே நம்மை சம்பவம் செய்யும் நிகழ்வும் நடந்தால் எப்படி இருக்கும்.

இப்படியான நிலையில் தான் சில நாட்களுக்கு முன்னர் ஒரு சம்பவம். இந்தச் சம்பவத்தில் என்னை எந்த இடத்திலும் இருத்தாமல், பொதுவான நிகழ்வாக மட்டுமே அதனைச் சொல்கிறேன். காரணம், அப்பொழுது தான் எல்லோராலும் இதனைத் தங்களுடன் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். ஒரு அறையில் மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அதில் முதலாம் நபரிடம் இருந்து ஒரு கேள்வி. மிகச் சாதாரணமான கேள்வி ஒன்று, இரண்டாம் நபரை நோக்கி எழுப்பப்பட, அது ரெண்டாம் நபரை அவர் அப்பொழுது இருந்த மனநிலையின் காரணமாக கோபப்படுத்த, அவர் அந்த கோபத்தோடே வெளிப்படுத்திய பதில் முதல் நபரை மட்டுமில்லாமல் மூன்றாம் நபரையும் சேர்த்தே தாக்குகிறது. இப்பொழுது வார்த்தையின் தாக்குதலால் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாம் நபரின் கண்களில் கண்ணீர் வழிகிறது. முதல் நபர் அந்த வார்த்தைகளை தனது அனுபவத்தின் வழியே பெரியதாக தன்னுள் கொண்டு போகாமல் தவிர்த்து விட, மூன்றாம் நபரின் அனுபவமின்மை அவருக்குள் காயமாக மாறி கண்ணீரை வர வைத்து விடுகிறது. இவை அனைத்தையும் விலகி சாட்சியாய் பார்க்கக் கூடிய மனநிலை என்பது புத்தனின் செயல்பாட்டை நோக்கி நகர்வதற்கான முதல் படியாக எனக்குத் தோன்றியது. அதனைத் தாண்டி, மிக, மிக நுணுக்கமாக, ஆழமாக யோசித்தால். இதில் இன்னுமொரு முக்கியமான கோணம் ஒன்று இருப்பதும். அது முன்னர் வாசித்த அறம் புத்தகத்தில் இருக்கிறது என்பதும் நினைவில் வந்தது. அறம் புத்தகத்தில் உள்ள உண்மை மனிதர்களின் கதையில், முதல் கதையான அறம் கதையை முதல் முறை வாசித்த போது கிடைத்த புரிதல் என்பதே வேறு. புத்தனின் பார்வையில் அதனை மீண்டும் வாசிக்கும் போது, முதல் முறை உண்டான புரிதலின் கோணம் அப்படியே 180 டிகிரி மாறி விட்டது. அந்தக் கதையில் சொல்லப்படும் மிக முக்கியமான விஷயம் ஒரே ஒரு ஒற்றைச் சொல், ஒரு மனிதனை எந்த அளவு காயப்படுத்தும் என்பதற்கு உதாரணமாக ஒரு விளக்கம் சொல்லப்பட்டிருக்கும். ஒரு சொல் என்பது வில்லில் இருந்து புறப்படும் அம்பைப் போல. அது அந்த வில்லின் நாணில் பூட்டப்படும் போது ஒரு சொல், வில்லில் இருந்து எய்யப்பட்டவுடன் அது நூறு சொல், அந்தச் சொல் தாக்கப்படும் நபரை அடைந்தவுடன் அது ஆயிரம் சொல் எனச் சொல்லப்பட்டிருக்கும். அது சத்தியமான உண்மை. ஆனால் புத்தனின் நிகழ்வில் அவரை நோக்கி வரும் சொல்லை புத்தன் தன்னை அடையவிடவே இல்லை. அப்படியெனில் ஒரு சொல் நூறு சொல்லாகவும், ஆயிரம் சொல்லாகவும் எங்கே உருப்பெறுகிறது எனத் தேடினால், அது தாக்குதலான நபரே அதனை உருவாக்குகிறார். அப்படித் தாக்கப்படும் நபராக நாம் இருந்தோமே ஆனால், நம்மை நோக்கி வரும் சொல்லை நூறாகவும், ஆயிரமாகவும் மாற்றாமல் இருந்தாலே போதுமானது. அப்படி நம்மால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தால். முதலில் காயம் என்பதே நம்மை அண்டாது. அதனையும் தாண்டி நாம் எந்தச் சொல்லையுமே பிறரை நோக்கி எப்பொழும் நாணில் பூட்ட மாட்டோம்.

உண்மையில் நடைமுறை வாழ்வில் இது எந்த அளவு சாத்தியம் என்றால், நம்மை நாமே சாட்சியாக பார்த்துக் கொண்டே இருக்க முடிந்தால் மட்டுமே, அது கொஞ்சத்துக்கு கொஞ்சமேனும் சாத்தியம். அறம் புத்தகத்தில் வரும் அறம் உண்மை மனிதர்களின் கதையை முதன் முறையாக வாசித்த போது எனக்குள்ளே இருந்த புத்தன் என் நினைவடுக்களில் இருந்து வெளி வரவே இல்லை. ஆனால் மேற்கண்ட நிகழ்வின் போது அதே புத்தன் வெளிவந்தான். குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னால் வாசித்த புத்தனின் கதை அது. ஆனால் அந்த புத்தனின் கதையில் சொல்லப்பட்டுள்ள காயப்படுத்த முடியாத மனம் என்பது சாத்தியமா என்கிற கேள்வி மட்டும் மனதின் ஒரு ஓரத்தில் நீர் மேல் மிதக்கும் தக்கையைப் போல் மிதந்து கொண்டே இருந்திருக்கிறது. அது எங்கு வெளிப்பட வேண்டும் என்பதும், எவ்வளவு நாட்களில் அல்லது மாதங்களில் அல்லது வருடங்களில் வெளிப்பட வேண்டும் என்பதும், தொடர்ந்து நம்மை நாமே கவனித்துக் கொண்டே இருக்கும் சூட்சமத்துக்குள் ஒளிந்திருக்கிறது என நினைக்கிறேன். ஒரு வாசிப்பு என்ன செய்யும் என்பதை இது போன்றதோரு ஆழமான சந்தர்ப்பத்தில் தான் முழுமையாக உணர முடிகிறது. அப்படி உணர முடிகிற அதே நேரம், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வாசித்த மிர்த்தாதின் புத்தகத்தில் வரும் மிகெய்ல் நைமியின் மிக முக்கியமான மேற்கோளான எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத சுதந்திரக் காற்றைப் போல் இருங்கள் என்கிற வார்த்தைகளும் மனதிற்குள் வந்து போகின்றன. இன்னொரு பக்கம் புத்தனின் கதை தொடர்ந்து மனதிற்குள் தக்கையைப் போல் மிதந்து கொண்டே மட்டும் இருந்தால் மனம் என்கிற நீரின் ஆழத்திற்குள் போகவே போகாது. அது மனதிற்குள் ஆழமாக போக வேண்டுமெனில் அது தன்னுள் நீரினை உள்வாங்க வேண்டும். இங்கு நீர் என்பதை நம் வாழ்வியல் அனுபவமாக எடுத்துக் கொள்ளலாம். அப்படி உள்வாங்கும் நீரினால் தக்கையே கல்லாக மாறி நீரின் ஆழத்திற்குள் செல்ல முடியும். நீரின் ஆழத்தில் செல்லும் போது மட்டுமே பேரமைதி என்கிற ஒன்றினை நம் மனதால் உணரவே முடியும். அப்படியான அமைதியை மனதிற்க்குள் உணர வேண்டுமெனில், காயம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் என்பது ஒவ்வொரு நாளும் நம்மை நோக்கி வந்து கொண்டே இருப்பதற்கான சுழலுக்கு இடையில், அது போன்ற சந்தர்ப்பங்களை புத்தனின் கோணத்தில் இருந்து அணுக வேண்டும். அதனை நம்மால் ஒவ்வொரு முறையும் சாத்தியப்படுத்த முடிந்தால், நம் மனம் மற்றவர்களின் அடிமையைப் போல் மாறும் நிலையிலிருந்து கொஞ்சத்துக்கு கொஞ்சமேனும் மாற்றம் காணும், அந்த மாற்றத்தை நம்மால் தொடர்ந்து செயல்படுத்தினால் மன அமைதி என்பதின் ரூசியினை சிறிதாவது உணரலாம். மீண்டும் ஒரு முறை எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத சுதந்திரக் காற்றைப் போல் இருங்கள் – மிர்தாதின் புத்தகத்தில் இருந்து மிகெய்ல் நைமி. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916