வாழ்ந்து பார்த்த தருணம்…32

ஆழியின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் கூழாங்கல்…

தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்பது பேராவல். ஆனால் சூழல் வேறு மாதிரி இருக்கிறது. கடந்து மாதமும், இந்த மாதமும் சில வேலைகள் தொடர்பாக தொடர்ந்து அலைய வேண்டியதாக என்னுடைய சூழல் அமைந்துவிட்டது. அதனால் எழுதுவது தாமதப்படுகிறது. எழுதுவது என்று வந்துவிட்டால் அது தான் மூளையின் எல்லா நரம்புகளையும் எப்பொழுதுமே ஆக்கிரமிக்கும். வேறு சிந்தனைக்குள் போவது சற்றேக் கடினம். இரண்டு மாதங்களாக வேலை சம்பந்தமாக நிறைய விஷயங்களுக்கு யோசிக்க வேண்டி இருந்ததால், எழுத்து சிந்தனையைச் சற்றுத் தள்ளி வைத்து, தள்ளி வைத்து எழுதுகிறேன். சில நேரங்களில் தொடர்ச்சியான அலைச்சல் காரணமாக ஏற்படும் அயர்ச்சியில் வந்து வீட்டில் உட்காரும் போது, மூளையின் அயர்ச்சியை போக்க அலைபேசியில் வழியே உலகமெங்கும் நடைபெறும் பாடகர்களுக்கான குரல் தேர்வு போட்டியை பார்த்துக்கொண்டிருப்பேன். அதன் வழியாக சில அற்புதமான அயல்நாட்டு பாடல்களும், ஆங்கில பாடல்களும் அறிமுகமாகும்.

அப்படி ஒரு முறை உலகளாவிய குரல் தேடல் ஒன்றின் காணோளியை பார்த்துக்கொண்டிருக்கும் போது, Stevie McCrorie என்பவரின் அருமையான குரலின் வழியே அறிமுகமான ஒரு பாடல் தான் https://www.youtube.com/watch?v=DuL94uEketM இதைக் கேட்ட பின்னர். அந்தப் பாடல் ஏற்படுத்திய தாக்கத்தில் அசலான பாடலை தேடி கேட்டேன். https://www.youtube.com/watch?v=RzuXZfKg2YM. அப்புறம் இந்தப் பாடலை உருவாக்கியவர்கள் Kodaline என்ற Ireland நாட்டின் ராக் பேண்ட் இசைக்குழு என்பது தெரிந்தது. விஷயம் அதுவல்ல, சில பாடல்கள் மட்டுமே நாம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே நம் மனதின் அடி ஆழத்தில் படிந்திருக்கும், ஒரு விதமான மென்சோக நினைவலைகளின் மீது சலனத்தை ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை. இந்த பாடல் அப்படிப்பட்டது தான். நான் ஒன்றும் ஆங்கிலப் பாடலை வரிக்கு வரி புரிந்து உணர்ந்து உள்வாங்கும் அளவுக்கு ஆங்கில மொழியில் வித்தகன் அல்ல. ஆனாலும் இந்த பாடல் பாடப்பட்ட விதமும், அதன் இசையும், என் மனதின் ஆழத்தினுள் சென்று உலுக்குவதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உணர முடிகிறது.

இந்தப் பாடலின் அசலான காணொளியில் இருக்கும், காட்சி மொழியும் அது உருவாக்கப்பட்டிருக்கும் விதமும், நான் அதனை பார்க்கும் போதெல்லாம், தன் ஆன்மாவை தொலைத்துவிட்டு தேடும் ஒருவனின் தேடல் போலவே தான் எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படித் தொலைந்த அந்த ஆன்மா அவனுக்கு திரும்ப கிடைக்கப்பெற்றதும், அதன் வழியே அவன் வாழ்வில் வரும் ஒரு உறவும் அற்புதம். இதைப்படிப்பவர்கள் மேலே கொடுத்திருக்கும் இணைய சொடிக்கின் வழியே அந்தப் பாடலை பாருங்கள். நான் சொல்வது புரியும். இசையைப் பொறுத்த அளவில் நான் இளையராஜாவின் மிகப்பெரும் ரசிகன். இசைஞானியிடமும் ஆன்மாவை உலுக்கும் பாடல்கள் கணக்கில் அடங்காதவை உண்டு. அந்த இசையைத் தொடர்ந்து கேட்டு புரிந்துகொள்ளும் விதத்தின் வழியே தான், மொழிகளை கடந்தும் சில இசை கோர்ப்புகளை ரசிக்கமுடிகிறது.

மனதின் ஆழத்தில் சலனமற்று உறங்கும் கூலாங்கற்கள் போன்ற நினைவுகளை, சில நிமிட அசைவுகளின் வழியே கண்களில் ஓரத்தில் வழியும் நீருடன் அசைபோடவைக்கும், மனதை வருடும் இசை என்பது என்றைக்கும் அதி அற்புதமானது. அதற்கு மொழி என்றுமேத் தடையில்லை. அதற்கு இசைஞானியிடமும் பல உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று வருஷம் 16 படத்தின் தொடக்கத்தில், பெயர்கள் விரியும் திரையின் பின்னனியில் ஒலிக்கும் இசையைக் கண்ணை முடி பேரமைதிக்கு இடையில் கேட்டுப் பாருங்கள். https://www.youtube.com/watch?v=fkPDTHFwKKM அந்த இசைக் கோர்வை உங்களின் ஆழ்மன நினைவுகளை கண்முன்னே நிறுத்தவல்லவை. இது போன்ற இசையை கேட்டலின் வழியே தான் மொழியை கடந்த வேறு நாட்டின் இசையின் ஆன்மாவையும் புரிந்து கொள்ள எத்தனிக்கிறேன். அது ஒரு அற்புதமான இசை போதை, அந்த வகையில் என்னை பாதித்த பல்வேறு உலகாளவிய இசை கோர்வைகளை பாடல்களை தொடர்ச்சியாக எழுதவேண்டும் எண்ணமிருக்கிறது பார்க்கலாம். நன்றி, மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916