வித்தைக்காரன் கையிலிருக்கும் வண்டி…
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில், நடுத்தர வர்க்கத்துக்கும், ஏன், அதற்கும் கீழான நிலையில் இருப்பவர்களுக்கும் கூட, இருசக்கர வாகனம் என்பது மிக, மிக முக்கியமான போக்குவரத்து சாதனம், இரு சக்கரம் வாகனம் வாங்க வேண்டும் என்றால் இங்கே, அதற்கான பெருநிறுவனங்கள் பலவும் வரிசைகட்டி நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தனித்துவடன் இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் பறைசாற்றுகின்றன. அதனால் ஒரு இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு முன்பாக ஒருவன், இங்கே ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சியுடன் கூடிய புலனாய்வு விசாரணையை முடித்த பிறகு தான், வாகனத்தையே வாங்குகிறான். அதுவும் போக, ஒருவன் இரு சக்கர வாகனம் வாங்கும் போது, அவனை தன்னுடைய நிறுவனத்தின் வாகனத்தை வாங்க வைக்க, வகை வகையான விளம்பரங்களுடன் நிறுத்தாமல், ரோட்டிலேயே ஒரு பெரிய குடையை நிறுத்தியோ அல்லது பந்தலை அமைத்தோ, தன் நிறுவனத்தின் வாகனத்தை வாங்க வைக்க, என்ன என்ன குறளி வித்தைகள் காட்டமுடியுமோ அத்தனையும் காட்டி, வாங்க வைக்க தன்னை நோக்கி இழுக்கின்றன அனைத்து பெறுநிறுவனங்களும். சரி ஒருவன் தேடி ஆராய்ந்து, புலனாய்வு செய்து வாகனத்தை வாங்கியவுடன் திருப்தியடைந்து விடமுடியுமா என்றால் அது தான் இல்லை.
இங்கே வாகனத்தை வாங்கிய பிறகு தான் பிரதான கதையே ஆரம்பிக்கிறது. கிட்டத்தட்ட இங்குள்ள அனைத்து நிறுவனங்களுமே வாகனம் வாங்கிய வாடிக்கையாளரை ஈர்க்க பயன்படுத்தும் முதல் யுக்தி. எங்களிடம் நீங்கள் புதியதாய் வாங்கும் வாகனத்துக்கு, வாங்கிய தினத்திலிருந்து அடுத்த 7 முறையிலிருந்து 10 முறை வரையோ. அல்லது அதற்கு மேலாகவோ வாகனத்தை முழுமையாக பரிசோதனை செய்துகொள்ளலாம். அதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது என்பது தான் அது. உண்மையில் மேலே சொன்ன வாக்குறுதியை முழுமையாய் ஒருவன் நம்பினால் அவனை காலம்தான் காப்பாற்ற முடியும். வாகனத்தை வாங்கிய பிறகு இலவசம் என்று சொல்லப்பட்ட முழு பரிசோதனைக்கு நம்முடைய வாகனத்தை கொண்டு செல்லும் ஒவ்வொரு முறையும், கண்டிப்பாக வண்டிக்குள் ஏதாவது ஒரு பொருள் உடைந்து போயிருக்கும் அல்லது செயல் இழந்து போயிருக்கும். அம்மாதிரியான பொருட்களை உடனடியாக மாற்றாவிட்டால் வண்டி பாதிக்கப்படும் என்கிற ரீதியிலான அறிவுரைகள் நமக்கு சொல்லப்படும். அப்படி மாற்றா விட்டால் நாம் வண்டி ஓட்டும் போது ஏதாவது நடந்துவிட்டால் என்ற பயமே நம்மை சரி மாற்றுங்கள் என தலையாட்ட வைத்துவிடும். இலவசம் என்று சொல்லப்பட்ட வாகன பரிசோதனையின் முடிவில் குறைந்தது 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய்க்கும் குறைவில்லாதபடியான ரசீதை நம்மை நோக்கி நீட்டுவார்கள். நாம் காசை கட்டித்தான் தீரவேண்டும் வேற வ(லி)ழியேயில்லை.
இவ்வளவும் நடந்த பிறகு நாம் தெளிவடைந்துவிட்டோம் என முடிவுசெய்து, இனி இந்த இரு சக்கர வாகன நிறுவனத்தில் நமது வாகனத்தின் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய கொடுக்கக்கூடாது என முடிவு செய்து, நிறுவனமாய் அல்லாது தனிநபராக வாகனத்தை பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கும், ஒரு பழுதுபார்க்கும் நபரை தேடுவோம். இந்த தேடல் தான் ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போன்றது. ஒருவேளை நம்முடைய வாகனத்தை சரியாக பராமரிக்க நாம் அலையும் இந்த இரண்டாம் பாக கதையிலும் சரியான நபரை தேர்ந்தடுக்கவில்லையெனில், கதைக்குள் என்ன மாதிரியான திருப்பங்களை அடிக்கடி நாம் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது இதை படிக்கும் இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்குத் தெரியும். இந்த இடத்தில் நான் வைத்திருக்கும் வாகனத்தின் கதையை சொன்னால் மிக சுவாரஸ்யமாய் இருக்கும். என்னுடைய வாகனத்துக்கான பழுதுநீக்கி தரும் நபருக்கான தேடுத்தலிலும், பல இடங்களில் அடிபட்ட பிறகு, என் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு நபர் அறிமுகமாகி. அவர் தான் என் வாகனத்தை தொடர்ச்சியாகப் பழுதுபார்த்து கொடுத்துக் கொண்டிருந்தார். குடும்பத்துக்கு நெருக்கமான நபர் என்பதால் ஒரு வசதி இருக்கிறது. என்னுடைய வாகனத்தின் உள்ள பழுதை நீக்க ஒரு நாளுக்கு மேல் ஆகும் என்றால், அவருடைய இரு சக்கர வாகனத்தை எனக்கு கொடுத்துவிடுவார். அவருடைய வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் போது தான் ஒரு விஷயம் தெரிந்தது. என்னுடைய வாகனத்தை ஓட்டுவதை விட பல மடங்கு கவனம் இருந்தால் ஒழிய. அவரின் வாகனம் என் சொல்ப் பேச்சைக் கேட்காது. காரணம் தன்னுடைய வாகனம் எங்கு, எப்படி திடிரென நின்றாலும் அதனை மிக எளிதாக சரிசெய்து விடுகிற நம்பிக்கையில் அவருடைய வாகனத்தின் இயக்கத்தை வைத்திருப்பார். இதனால் அவருடைய வாகனத்தில் உள்ள அனைத்து பாகங்களுமே நம்மை சோதிக்கும் வகையிலே இருக்கும்.
இதன் பின்பு ஒரு நாள் எனக்கு வீடு மாற வேண்டிய சூழல் வந்தது. வீட்டை மாற்றினேன். எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள ஒரு நண்பரின் வழியான தேடுதலில் புதிய வீடு கிடைத்தது. அருமையான வீடு. புதிய வீட்டின் அருகே இருக்கும் என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் இன்னொரு நண்பரின் தம்பி தான். அந்தச் சுற்றுவட்டாரத்தில் மிக முக்கியமான இரு சக்கர வாகனங்களை பழுது நீக்கும் நபர். என் நண்பரின் வழியே அவருடைய தம்பி அறிமுகமானார். என்னுடைய வாகனத்தை அவரிடம் ஒப்படைத்தேன். இவரும் எனது நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் இருப்பதால், காலையில் கொடுத்தால் மாலையிலேயே என்னுடைய வாகனம் திரும்ப கிடைக்கும் என்றாலும் கூட, அவருடைய வண்டியை எனக்கு கொடுத்து விடுவார். இந்த நண்பரின் வாகனத்தை ஓட்டும் போது தான் தெரிந்தது, தன் தொழிலை நேசித்து, ரசித்து செய்பவனின் வண்டி எப்படி இருக்கும் என்பது வாய்ப்பேயில்லை. என்னுடைய வண்டியைச் செலுத்தும் போது, எப்படி ஒரு காதலான மனநிலையில் முன்னோக்கி செலுத்துவேனோ, அதைவிட சிறப்பான மனநிலையில் அவரின் வாகனத்தில் பயணித்தேன்.
தன்னுடய வாகனத்தின் ஒவ்வொரு அதிர்வையும் ஒருவர் மிக, மிக நுணுக்கமாக கவனிக்கும் ஒருவனால் மட்டுமே, தன்னுடைய வாகனத்தை யார் செலுத்தினாலும், செலுத்துபவரின் மனநிலையோடு ஒத்துபோகும்படி செய்யமுடியும். அப்படியான நபரால் தான், எந்த ஒரு வாகனத்தையும் தன்னை தேடிவரும் வாடிக்கையாளரின் மனநிலைக்கு ஏற்றபடி ஒத்திசைவோடு செல்லும்படியாக பழுது பார்த்துத்தரமுடியும். இந்த இடத்தில் தான் முன்னர் என் வாகனத்தை பழுது பார்த்த நபருக்கும், இந்த நபருக்குமான வித்தியாசம் பெரிய அளவில் வேறுபடுகிறது. அது அவரவர்கள் வேலை பார்க்கும் சூழ்நிலையிலேயே தெரிந்தது. என் வீட்டின் அருகில் இருக்கும் நண்பரின் வாகனம் பழுது நீக்கும் கடையில் அவர் மட்டுமில்லாமல், அவருக்கு கீழாக நான்கு, ஐந்து நபர்கள் வேலைப்பார்க்கிறார்கள். எப்பொழுதுமே பரப்பரப்பாக நிறைய வாகனங்களை வைத்து வேலை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் முன்னால் நான் குறிப்பிட்ட என் குடும்பத்துக்கு நெருக்கமான நபரின் பழுதுபார்க்கும் கடையில் அவர் மட்டும் தான். பெரும்பாலான நேரங்களில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே பழுது நீக்க நின்றுகொண்டு இருக்கும். ஒருவனின் வளர்ச்சி என்பது, அவன் எந்த துறை சார்ந்தவனாக இருந்தாலும், தன்னுடைய துறைசார்ந்த அறிவை மேம்படுத்துவதோடு இல்லாமல், அந்த அறிவை எந்த தன்மையோடு அவன் வெளிப்படுத்துகிறான் என்பதில் தான் அவனுடைய வளர்ச்சியும், வெற்றியும் இருக்கிறது. இன்றைக்கு மிக வேகமாக முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில், கண்டிப்பாக, இங்கே வித்தைகாரனாக இருந்தால் மட்டும் பத்தாது, தான் கற்றவித்தையை மிகச்சரியான இடத்தை தேர்ந்தெடுத்து பொறுத்துவதில் தேர்ந்தவனாக இருக்கிறோமா என்பது மிக, மிக முக்கியம். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916