பயணத்தினூடே ஒரு பயிற்சி
போனமாதம் குழந்தைகளுக்கான ஒன்றுகூடலின் முடிவில், நல்லசோறு ராஜமுருகனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, பெரியவர்களுக்கும் புகைப்பட பயிற்சி அளிக்க முடியுமா எனக் கேட்டார். உங்களுக்கு சரி என்றால் சொல்லுங்கள், அடுத்தமாதம் குழந்தைகளுக்கான ஒன்றுகூடலுக்கு முந்தய தினம் வைத்துக்கொள்வோம் என சொன்னார். அறிவிப்பு வெளியிடலாம், ஆர்வமுள்ளவர்கள் வரட்டும். யாருமே வரவில்லையென்றால் கூட நாம் இருவரும் பேசுவோம். எனக்கு மட்டும் கூட பயிற்சி கொடுங்கள் என்று சொன்னார். சரியென்றேன். அறிவிப்பு வெளியிட்டார். நாள் நெருங்க விசாரிப்புகள் வந்தன பரவாயில்லை, நிறைய பேருக்கு ஆர்வமிருக்கிறது எனத் தோன்றியது, ஆனால், சில விசாரணைகள், விசாரணையோடு நின்றுவிட்டது. ராஜமுருகன் அவர்களிடமும் வருகிறேன் எனச் சொல்லி, கடைசி நேரத்தில் சில பேர் விலகினார்கள். கடைசியில் 5பேர் மட்டும் உறுதியானது.
பயிற்சி எப்படி சென்றது என்பதை சொல்வதற்கு முன் ஒரு விஷயம். இன்றைய இளைஞர்களை தலைகுனிய வைக்கப் பெரிதாக ஒன்றும் செய்ய தேவையில்லை. புத்தம் புதியதாக ஒரு அலைப்பேசியை வாங்கிக் கொடுத்தலே போதுமானது. தலை நிமிரவே மாட்டார்கள். இன்றைய இளைஞர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் முதற்கொண்டு தனக்கான உலகத்தை தங்களின் கைபேசியில் தேடிக்கொண்டேடேடே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். உங்களால் சாகும் வரை, உங்களின் உலகத்தை அதற்குள் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த உண்மையை உணர்ந்தவன், அதை வேறு வகையில் பயன்படுத்த ஆரம்பிப்பான். அதன் தொடக்கமே இன்றைய பயிற்சி.
ஒரு அற்புதமான விடுமுறை நாளை மிகச்சரியான விஷயத்துக்காக தேர்தேடுத்து, இந்த பயிற்சிக்கு வந்திருந்த ஐவருக்கும் எனது மானசீகமான நன்றிகள். அதில் 3பேர் கல்லூரி படித்து கொண்டிருப்பவர்கள். மீதம் இருவர் சொந்த தொழில் செய்பவர்கள். ஒருவர் (இவர் ராஜூமுருகன் அவர்களின் மாமா) சின்ன சேலத்தில் இருந்து காரை எடுத்துக்கொண்டு மூன்றரை வயது மகனையும் அழைத்து வந்திருந்தார். மற்றோருவர், அதே பகுதியில் (திருசங்கோடு) டெக்ஸ்டைல் தொழில் செய்பவர். ஒன்று சொல்லவேண்டும் 5ல் 4பேர் கையில் DSLR கேமரா கிடையாது. மீதம் ஒருவர் கிட்டதட்ட 2வருடம் முன்னால், அப்போதைய விலையில் ஐம்பத்திரெண்டாயிரம் செலவில், நிக்கான்5300 கேமரா வாங்கி அதை பயன்படுத்தாமலேயே வைத்திருந்திருக்கிறார். நிறைய பேரிடம் கேட்டும், சரியாக யாரும் அவருக்கு சொல்லி கொடுக்கவில்லை எனச் சொன்னார். பயிற்சி காலை கொஞ்சம் தாமதமாக 11மணிக்கு ஆரம்பித்தாலும், மாலை 5மணி வரை சென்றது.
முதல் விஷயம், போதுவாக இன்றைய இளைஞர்களுக்கு சொல்லி கொடுக்கிறேன் என்ற பெயரில் வாத்தியராக நடந்து கொண்டால் வேலைக்கே ஆகாது. ரெண்டாவது விஷயம், டெக்னிக்கலாக சொல்லி கொடுக்கிறேன் என அவர்களை குழப்பாமல் இயல்பாக சொல்லி கொடுத்தல் நலம் எனத் தோன்றியது. இது ரெண்டையும் மனதில் இருத்தியபடியே பயிற்சியைக் கொடுத்தேன். பயிற்சிக் கொடுத்தேன் என்பதைவிட, ஒரு அற்புதமான உரையாடலின் ஊடே ஒருவருக்குகொருவர் எங்களுக்குள் தெரிந்த தெரியாத விஷயங்களை பகிர்ந்து கொண்டோம் என்பது தான் உண்மை. இன்றைய சூழலில் சொல்லிக்கொடுக்கிறோம் என்ற பெயரில் நாமே பேசிகொண்டிருந்தால் நாம் எதையும், யாரையும் புரிந்து கொள்ள முடியாது. எதிரில் அமர்திருப்பவர்களையும் பேச சொல்ல வேண்டியது மிக முக்கியம் என நினைக்கிறேன். காரணம், அப்பொழுது தான் அவர் எதை தெரிந்து கொள்ள வந்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் நாம் சொல்ல வந்ததை மட்டும் சொல்லி விட்டு கலைந்துவிடுவோம். அது எந்த வகையிலும், அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது. நமக்கும் பயனுள்ளதாக இருக்காது. நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடத்திலும் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன, கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் விஷயமே.
ஒரு விஷயம் கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டும். பல்வேறு சமயங்களில் பல பேர் பேசிக்கொண்டிருக்கும்போது குறிப்பிடும் முக்கியமான விஷயம், இன்றைய இளைஞர்கள் யார் பேச்சையும் கேட்பதில்லை என்பதைத்தான். ஆனால் அவர்கள் எப்பொழுதும் கேட்க தயாராக இருக்கிறார்கள், ஆனால், நாம் எதை எப்படி சொல்கிறோம் என்பதில் தான் அவர்களை கேட்க வைப்பதின் சூட்சமம் இருக்கிறது. குறிப்பாக, அந்த காலத்து ஹிட்லர் பாணி வேலைக்கே ஆகாது. கட்டளையாக சொல்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. அது நேற்றைய நிகழ்வில் கண்கூடாக தெரிந்தது. மாலை நடையினூடே அவர்கள் எடுத்த புகைப்படங்களிலேயே அவர்களாகவே பெரும் வித்தியாசத்தை உணர ஆரம்பித்தார்கள். மாலை 3மணியிலிருந்து ஒரு 1:45 மணிநேரம் நடந்தே ராஜமுருகன் அவர்களின் வீட்டை சுற்றி, பல்வேறு தோட்டம் சோள காடுகளில் புகைப்படமெடுத்தோம்.
பயிற்சி முடித்து கிளம்பும் முன், அடுத்தது எப்ப பயிற்சி எடுப்பீங்க என்ற கேள்வி அனைவரிடமிருந்தும் வந்தது. குறிப்பாக, அதில் இருவர் கோவையில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்து பயிற்சி அளிக்க முடியுமா எனக் கேட்டார்கள். வருகிறேன் எனச் சொல்லியிருக்கிறேன். குழந்தைகளுக்குச் சொல்லி கொடுக்க ராஜமுருகனை போன்று நிறைய நண்பர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வளர்ந்த குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்கத் தான் ஆள் இல்லை. இன்றைய இளைஞனும் செல்பி எடுத்தே செத்துக்கொண்டிருக்கிறான். கைபேசிக்குள் உலகத்தையே தேடலாம். ஆனால் எதை தேடிக்கொண்டிருக்கிறோம் என அனைவருக்கும் தெரியும்.
ஒளிப்பதிவாளர் திரு பி.சி.ஶ்ரீராம் அவர்கள் ஒரு முறை சொன்னார். கைபேசி என்று வந்ததோ, அன்றிலிருந்து நாம் விரும்புகிறோமோ, இல்லையோ. நம்மை நோக்கி அடுக்கடுக்கான செய்திகள் வந்துகொண்டேயிருக்கிறது. நாமும் விரும்பியோ விரும்பாமலோ அதனைப் பார்த்து, படித்துத் தீர்க்கிறோம். அடுத்தவர்களுக்குப் பயன்படுமா என யோசிக்காமலேயே, அதையும் சிரத்தையுடன் மற்றவர்களுக்கு அனுப்பியும் வைக்கிறோம். அதில் பெரும்பாலும் உருப்படாத, மோசமான செய்திகள் தான் அதிகம். அப்புறம் எப்படி மூளையில் மாற்று சிந்தனை வளரும். இதையெல்லாம் தவிர்த்து அதே கைபேசியை மாற்று வழியில் ஆக்கபூர்வமான பதிவிற்கு பயன்படுத்த, குறிப்பாக, இளைஞர்களிடத்தில் அதை கொண்டு செல்ல தொடர்ந்து பயணித்தல் அவசியம். பயணிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கான தொடக்கமே நேற்றைய பயிற்சி. இந்த பயிற்சியை முன்னெடுக்க மிக முக்கிய காரணம் நல்லசோறு ராஜமுருகன் அவரை எவ்வளவு பாராடினாலும் தகும். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
+91 9171925916