திமிரும் திமிலுடன் தீப்பிழப்பாய் வீறு நடைபோட்டு வா…
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்பதை என்று குழித் தோண்டி புதைத்து தூக்கி எறிகிறோமோ, அன்றைக்குத தான் பொங்கல் போன்ற பண்டிகையையே நாம் கொண்டாடுகிறோம் என அர்த்தம். இல்லாவிட்டால் பொங்கல் கண்டிப்பாக தொலைக்காட்சிக்குள் பொங்கும். ஆனால் நம் வாழ்வில் என்றுமே பொங்காது. நம் பராம்பரியத்தை நம்மிடம் இருந்து பிரித்து ஒன்றுமில்லாமல் ஆக்குவது தான், நம் வீட்டின் ஒரு அங்கமாக மாறிவிட்ட அல்லது நாம் அங்கமாக ஏற்றுக்கொண்ட தொலைக்காட்சியின் வேலையே. அதனை உணராதவரை. நாம் நகர்புறத்திலேயே இருந்தாலும், அதன் அருகிலேயே நடக்கும் எந்த ஒரு பராம்பரிய நிகழ்வும், அதன் அருமையும், நம் புத்திக்கு உரைக்கப்போவதே இல்லை. நம்முடைய புத்தி, சொல், செயல் எல்லாவற்றையும் தொலைக்காட்சி திரைக்குள் அடகு வைத்துவிட்ட பிறகு. பராம்பரியமாவது மண்ணாவது. யாரைக் கேட்டாலும் பொங்கலின் பிரதான பராம்பரியமான ஜல்லிக்கட்டை பற்றி வாய் கிழிய பேசுவோம். அப்படி பேசும் எத்தனை பேர் அந்த காளைகளை எப்படி அந்த போட்டிக்கு தயார் செய்கிறார்கள் என்பதை பார்க்க கூட வேண்டாம், தெரிந்தாவது வைத்திருக்கிறோமா?.
மதுரைக்கு மிக அருகில் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் குலமங்கலத்தில், போன வருடம் போல், இந்த வருடமும் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று மாலை ஜல்லிக்கட்டு காளைகளின் அணிவகுப்பு, இதற்கு பல நாட்களுக்கு முன்னால் இருந்தே அந்த காளைகளை அதிகாலையிலேயே நடைபயிற்சிக்கு, ஒடுவதற்கு, நீந்துவதற்கு அழைத்து செல்வதை பார்க்க முடியும். ஒரு காளையுடன் பெரும்பாலும் இரண்டு பேர் அல்லது அதற்கு மேலும் அழைத்துச் செல்கிறார்கள். அது காளைகளின் வயது அதன் தன்மையை பொறுத்து, கூட்டி கொண்டு செல்பவர்களின் எண்ணிக்கை கூடும் அல்லது குறையும். சாலையின் இருபுறமும் பச்சை பசேலேன நெல் பயிர் காற்றில் அசைந்துகொண்டிருக்க. நடுவே செல்லும் அந்த சாலையில், காளையின் இருபுறமும் இருவர் கயிற்றை பிடித்துக்கொண்டிருக்க, நட்டநடுவில் ஜல்லிக்கட்டுக்காளை கம்பீரமாய் வீறு நடைப்போட்டு செல்வதை காண கண் கோடி வேண்டும். இது மாதிரி பொங்கல் சமயங்களில் தான், அதிகாலையில் ஜல்ஜல் என்ற ஒலி கேட்க ஆரம்பிக்கும். அந்த ஒலி வரும் திசையை கவனித்தால், சலங்கை கட்டிய மாட்டினை பூட்டிய வண்டிகள் கடந்து செல்வதை பார்க்க முடியும். அந்த வண்டியின் அலங்காரமும் அட்டகாசமாய் இருக்கும். அந்த ஜல் ஜல் சத்தத்தில் வெளிப்படும் ஒரு தாளலயம் இருக்கிறதே, அதுவே நம்மை அந்த வண்டியை காண வேண்டுமென்ற ஈர்ப்பை ஏற்படுத்தும். இதையெல்லாம் கண்டிப்பாய் பார்க்க வேண்டுமென்றால், முதலில் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும். அதை செய்வதே இன்றைக்கு பெரும்பாலும் கஷ்டம் தான். அப்படியே வந்தாலும் அதனை நின்று நிதானமாக ரசிப்போமா என்றால் அது தான் இல்லை. நம் அலைப்பேசியில் புகைப்படம் எடுப்பது தான் முதல் வேலை. அதுவும் எதற்கு நம் அலைபேசியின் வாட்ஸப் ஸ்டேடஸில் வைக்க.
இதையெல்லாம் தாண்டி பொங்கலுக்கு அடுத்த நாள், அந்த காளைகளின் அணிவகுப்பு குலமங்கலம் ஊரின் பிரதான மந்தையின் வழியே நடைபெறும். அட்டகாசமான கம்பீர அணுவகுப்பு அது. பல்வேறு விதமான இனங்களில், பல்வேறு விதமான வயதில், சிறியதும், பெரியதுமாக கிட்டதட்ட 100 காளைகள் அந்த அணிவகுப்பில் வீறு நடைபோட்டு வரும் அழகே தனி. திமிறும் காளைகளும், அதை காண ஊரிலிருக்கும் திமிறும் இளவட்ட இளைஞர்களும் என அந்த இடமே ஒவ்வொரு காளைகளின் வருகையின் இடையே வரும் விசில் சத்தத்தால் அதிருந்தபடியே இருக்கும். அதுவும் அவ்வளவு கூட்டத்தின் நடுவே இரு பெண்பிள்ளைகள் காளை மாட்டை வீறுநடைபோட்டு அழைத்துவருவார்கள் பாருங்கள், அந்த நடை இளைய ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என சொல்வது போலவே இருக்கும். அப்படியான அணிவகுப்பில் ஜல்லிக்கட்டுக்கு தயார் நிலையில் இருக்கும் சில காளைகள் வரும் போது அதன் கண்களில் தெறிக்கும் அந்த கனலை பார்க்க வேண்டுமே, அதுவும் காளைகள் வரும் போது தமிழ்திரைப்படங்களின் மிக முக்கியமான காளைகளை பற்றிய தெறிக்கும் பாடல்கள் அதிர்ந்தபடியே இருக்கும். அதுவும் கொம்புல பூவ சுத்தி நேத்தியில பொட்டு வச்ச காளை மாடு என்ற விருமாண்டி பட பாடல் ஒலிப்பெருக்கியில் பின்னனியில் அதிர, இருபுறம் கூடி நிற்கும் ஊர்மக்கள் நடுவே அந்த காளைகளை அழைத்து வருகையில், ஒரு நிமிடம் உடம்பு புல்லரித்து அடங்கும். காளைகள் என்றால் கம்பீரம், வீரம், அது தமிழரின் அடையாளம். ஒரு ஊரின், தமிழ் மரபின், பராம்பரியத்தின் அடையாளம். அந்தப் பராம்பரியத்தை முடக்க எத்தனிக்கும் எந்த ஒரு சவாலையும், இந்த காளைகளை கண் கொண்டு வரவேற்று போற்றும் எவனும் சாதாரணமாக எதிர்கொள்ள மாட்டான். இந்தக் காளைகள் என்பது இந்த மண்ணோடு, மரபோடு ஏன் தமிழனின் ரத்தத்தோடு ஊடாடி கலந்து பரவியது. அந்தக் காளையின் திமிலை பற்றுவது ஏறுதழுவுதல் என்பது வீரம். அதே திமிலை அடக்க நினைத்தால், திமிலை பிடித்த கரத்தின் வீரம் வேறு வடிவம் பெறும். அதனை பீட்டா அல்ல, அந்த பீட்டாவின் பாட்டனாலும் அடக்க முடியாது…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916