நம்முடைய சமூக பொறுப்புணர்வின் அளவுகோல் தெரியப்போகும் நாட்கள்…?
ஒரு பக்கம் அரசு, மறுபக்கம் மக்கள் இருவரும் சேர்ந்து களம் காண வேண்டிய சூழலில், நம்முடைய சமூக பொறுப்புணர்வின் வெளிப்பாடு கண்டிப்பாக சரியானதாக இல்லை. நம்முடைய தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையும், அந்தத் துறையின் அமைச்சரான திரு விஜயபாஸ்கர் அவர்களால் முடுக்கிவிடப்படும் முன்னேடுப்புகளும் உண்மையில் பொறுப்புணர்வுடனும், விழிப்புணர்வுடனும் இருக்கையில், அதிலுள்ள குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி கொண்டும், மீம்களின் வழியே அதனை நக்கலடித்து கொண்டிருக்கும் நேரமல்ல இது. சுய ஊரடங்கின் இடையே யாரும் அத்தியாவிசய தேவையிருந்தால் ஒழிய வெளியில் செல்ல வேண்டாம் அத்தனை முறை சொல்லியும், நாம் உண்மையில் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டோமா என்கிற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொண்டாலே, கண்டிப்பாக மாநில அரசை குறை சொல்ல மனசு வராது. குறை சொல்லவே கூடாது என்பதல்ல என்னுடைய வாதம். குறை சொல்வதின் வழியே மேலும், மேலும் இந்த சமூகத்தின் அலட்சியத்துடன் ஒத்துப்போகிறோம் என்பது தான் ஆதங்கம். முதலில் நாம் ஆட்சியாளர்களை குறை சொல்லும் முன்னர், நம்முடைய சமூகத்தின் ஒழுங்கினத்தை சீர்தூக்கி பார்த்தால் நல்லது. ஒரு அரசின் பேச்சை கேட்காமல் அலட்சியம் செய்ததின் விளைவை இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் அனுபவித்து கொண்டிருக்கின்றன. அதனைப் பார்த்த பிறகும், கேட்ட பிறகும் இவ்வளவு தூரம் அலட்சியமாக இருக்கிறோமென்றால் என்ன சொல்வதென தெரியவில்லை.
கடந்து ஞாயிறுக்கு முன்னரே உண்மையில் அவ்வளவு தூரம் படித்துப் படித்து சொல்லியும், ஞாயிறன்று எத்தனை பேர் மதித்து நடந்தோம் என்பதை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் இணையதள சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படங்களே சாட்சி. தூங்கா நகரின் இந்த வீதி இப்படி இருக்கிறது. இந்த சாலைகள் இப்படி இருக்கின்றன என்பதை உங்களிடம் யார் வந்து கேட்டு அழுதார்கள். அங்கே எல்லாம் நண்பர்களோடு குழுவாக சென்று தங்களின் அலைபேசியின் முன்னால் நின்று கும்பலாக, எதையோ பெரியதாக யாருமே செய்யாததை செய்துவிட்ட பாவணையில் புகைப்படத்தை எடுத்து, பகிரியில் பகிரவேண்டிய அவசியமென்ன. அந்த புகைப்படத்தினை பகிர்ந்து எதைச் சாதித்து கிழிக்கப்போகிறீர்கள். 144 தடை உத்தரவை தாண்டி யாரெல்லாம் பொதுவில் நின்று தங்களின் அலைபேசியில் புகைப்படம் எடுக்கிறார்களோ, அவர்களின் அலைபேசியை பறிமுதல் செய்து, குறைந்தது ஒரு வாரத்துக்காவது அவர்களை சிறையில் அடைத்தால் நல்லது. இவ்வளவு தூரம் வருத்தப்பட்டு சொல்லக் காரணம். இன்று இவர்கள் செய்யும் செயலால், நாளை இதனை ஏதோ பெரிய சாகச செயல் போல் உருவகப்படுத்திக்கொண்டு, எத்தனை பேர் தெருவில் இறங்குவார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். அப்பொழுது தான் மேலே சொல்லிருப்பது எவ்வளவு தூரம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என புரியும்.
இப்படியான செயல்களுக்கு இடையில், இது ஏதுவோ விடுமுறை கொண்டாட்டம் போன்ற மனநிலையில் இன்றைய தலைமுறையின் பதின்ம வயது நபர்கள் சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்தால், இது எங்கே போய் முடியும் என்ற பயம் மனதிற்குள் இயல்பாகவே எழாமல் இல்லை. உண்மையில் நம்மை நோக்கி வரும் கிருமியை விட இந்த சமூக பொறுப்புணர்வற்ற தன்மை தான் மிக, மிக மோசமாக பயமுறுத்துகிறது. நாளை இந்த பொறுப்புணர்வற்ற தன்மையின் பின் விளைவுகளின் வீரியம் வெளியே தெரிகையில் கொஞ்சம் கூட கூசாமல், அரசின் மீது பழிபோடுவோம். உலகின் எந்த அரசாக இருந்தாலும் இன்றைய இக்கட்டான சூழல் என்பது வெறும் அரசின் கைகளில் மட்டும் தான் உள்ளது என்பது போன்ற மனநிலை கண்டிப்பாக ஏற்புடையதாக இல்லை. அதனைத் தாண்டி ஒவ்வொருக்குமே மிகப்பெரும் பொறுப்பு இருக்கிறது. அதனை உணரத்தவறினால் கூட பராவாயில்லை. அதனை மிக, மிக மோசமாக நக்கலடித்தும், கிண்டலடித்தும் கொண்டிருப்பதன் விளைவுகள் கண்டிப்பாக கிண்டலடிக்கும் வகையில் இருக்க போவதில்லை என்ற உண்மையை, நாம் மிக, மிக மோசமான இழப்புகளை சந்தித்த பின் தான் கற்றுக்கொள்ளப்போகிறோமா. இதையெல்லாம் தாண்டிய நம்முடைய சமூக பொறுப்புணர்வை கண்டிப்பாக வரும் நாட்களில் இந்த உலகமே பார்க்கப்போகிறது. மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916