உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 01
நீ எதில் லயித்து ஈடுபடுகிறாயோ அந்த லயித்தலிருந்து சற்று விலகி உன்னை நீ கவனி – ஒஷோ
ஒஷோவின் இந்த வார்த்தையிலிருந்து இந்த கட்டுரையை தொடங்க மிக மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இதைப் படிக்கையில் அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்துவிடும். சரி விஷயத்திற்கு வருகிறேன். இரண்டு நாட்கள் முன்னதாக மீண்டும் ஒரு முறை ஸ்கைஃபால் (Skyfall) எனும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வளவு நாள் பார்த்த கோணத்தில் இருந்து, வேறு ஒரு கோணத்தில் திரைப்படத்தை உள்வாங்க முடிந்தது. ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படத்தை பொறுத்தவரை படமாக, ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திர படைப்பில் இது வரை வெளிவந்த திரைப்படங்களில் மிக, மிக முக்கியமான திரைப்படமாக கொண்டாட்டப்பட்ட திரைப்படம். அதில் எனக்கும் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. காரணம், சமகாலத்தில் வெளிவந்த பாண்ட் படங்களிலும் சரி, பழைய பாண்ட் படங்களிலும் சரி, ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படம் கதை, திரைக்கதை, வசனம் என எல்லாவற்றிலும் மிக முக்கியமான மறக்கமுடியாத மைல்கல்லான திரைப்படம். ஆனால் பேசப்போவது இந்த திரைப்படம் எந்த வகையில் சிறந்த திரைப்படம் என்பதை பற்றி அல்ல. இது முற்றிலுமாக வேறு ஒன்றை பற்றியது. இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் இப்படியான வேறு ஒரு கோணம் தேவை எனத் தோன்றியது.
இங்கே பொதுவாக எல்லாத் தரப்பு மக்களுடைய மனநிலையிலும், ஜாதி, மத, இன வித்தியாசமில்லாமல் சில குறிப்பிட்ட நாடுகளை மட்டும் வல்லரசு நாடுகள் என்ற பிம்பம் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. நாம் எந்த வயதில் இருந்து இப்படியான கட்டமைப்பை மிக, மிக தீவிரமாக நம்பத் தொடங்கினோம் என யோசித்தால், நடப்பு தலைமுறை இளைஞர்களிடமும் சரி, பல தலைமுறை முன்னால் இருந்த இளைஞர்களிடமும் சரி, திரைப்படம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அதனை பார்க்க ஆரம்பித்த நாளிலிருந்து, அதை பற்றிய பல்வேறு விதமான கருத்துகளுடான கலந்துரையாடல் என்பது நடந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆங்கிலப்படங்களை உலகமெங்கும் பார்க்க தொடங்கிய காலகட்டங்களில், திரைப்படங்களை பற்றிய கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்களின் வார்த்தைகளின் வழியே மறக்காமல் இடம்பெறும் கருத்து ஒன்று உண்டு. ஆயிரம் தான் சொல்லு ஆங்கில படம் போல் வருமா? என்பது தான் அது. இன்றளவும் இந்த கருத்தை கண்டிப்பாக பேசிக்கொண்டேடேடேடேடே இருக்கிறோம். இந்த கருத்தை எதன் அடிப்படையில் பேசினோம் அல்லது பேச வைக்கப்பட்டோம் என்பது தான் மிக, மிக முக்கியமான கேள்வியே. அந்தக் கருத்தை தயக்கமே இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் தான் இங்கே அதிகம். அந்த கருத்துடன் உடன்படாமல் எதிர்கருத்து சொல்பவர்கள் எத்தனைபேர் என கவனித்தால். அப்படியானவர்கள் மிக, மிக சொற்பமானவர்களாக தான் இருப்பார்கள். மேலே சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்கையில், நம்மை பற்றிய நம்முடைய பிம்பத்தை இயல்பாகவே குறைவாக மதிப்பீடு செய்ய ஆரம்பித்து விடுகிறோம் என்பது தான் ஒத்துக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.
மேலே உள்ள பத்தியில் சொல்லப்பட்ட கருத்துடன் ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படத்தை கவனித்தால், வல்லரசு நாடுகள் என்ற பிம்பம் எதன் அடிப்படையில் நம்முடைய ஆழ்மனதில் கட்டமைப்படுகிறது எனப் புரிந்துவிடும். இங்கே ஸ்கைஃபால் (Skyfall) என்பது ஒரே ஒரு உதாரணம் மட்டுமே. இப்படி பல நூறு திரைப்படங்களை சொல்ல முடியும். குறிப்பாக ஆங்கில திரைப்படங்கள், சமகாலத்தில் எல்லோருக்கும் புரியும் படி சொல்ல வேண்டும் என்பதால் ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படத்தை எடுத்துக்கொள்கிறேன். பாண்ட் திரைப்படங்களில் அது எந்த திரைப்படமாக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தை எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் எனப் பார்த்தால், அந்தக் கதாபாத்திரம் என்ன செய்தாலும் அது சரியானதாக தான் இருக்கும், என்ற மனநிலைக்கு முதலில் நம்மை மிக, மிக சிறப்பாக கட்டமைத்து விடுகிறார்கள். அதன் அடிப்படையில் அந்த கதாபாத்திரம் கொலையே செய்தாலும் அது இந்த உலகத்தின் நன்மைக்காக மட்டுமே என நம்பத் தொடங்கிவிடுகிறோம். இந்தப் புள்ளியின் ஆரம்பத்தில் நாம் கேள்வியே கேட்காமல் நம்பத் தொடங்குவதிலிருந்து இந்த விளையாட்டு ஆரம்பிக்கிறது. பாண்ட் எந்த ஒரு நாட்டுக்கும் செல்வார், அங்கே போய் என்ன வேண்டுமானாலும் செய்வார். அவர் எப்படி அந்த நாட்டுக்கு போனார், எப்படி இவ்வளவையும் செய்துவிட்டு நோகாமல் திரும்பி வந்து குஜாலாக இருக்கிறார் என்று மூச் கேட்கவேக் கூடாது. நன்றாக கவனித்தால் சமகாலத்தில், பாண்ட் கதாபாத்திரம் என்றில்லை அந்தக் கதாபாத்திரத்தை அடியொற்றி பல கதாபாத்திரங்கள் ஆங்கில படங்களில் உண்டு. ஒரு சின்ன எளிமையான எல்லோருக்கும் தெரிந்த உதாரணம் மிசன் இம்பாசிபிள் திரைப்படத்தில் வரும் ஈத்தன் கதாபாத்திரம். இதையெல்லாம் சொல்ல மிக மிக முக்கியமான காரணம், இங்கே திரைப்படம் என்பது பொழுது போக்கு என்பதைத் தாண்டி, அது நம்முடைய ஆழ்மனத்தில் மிகப் பெரும் பிம்பத்தை கட்டமைக்கிறது. அப்படியான பிம்பம் நம்முடைய ஆழ்மனதினுள் ஆழமாக ஊடுருவுகிறது என்பதை உணராமல் தான், பெரும்பான்மையான மக்கள் இங்கே திரைப்படம் பார்க்கிறார்கள். அந்தக் கட்டமைப்பு தான் பல நேரங்களில் நம்முடைய எண்ணங்களை செலுத்துகிறது என்பது புரிவதேயில்லை. இந்த மனநிலை தான் வல்லரசு எனும் கட்டமைப்பின் முதல்படி.
இந்த கட்டமைப்பை ஒரே கட்டுரையில் அடக்கிட முடியாது என்பதால் மீண்டும் தொடர்வோம். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916