வாழ்ந்து பார்த்த தருணம்…73

முடிவின்மை என்கிற புள்ளியில் ஒளிந்திருக்கும் உன்மத்தம்…

நேற்றைய கட்டுரையின் முடிவில் இருந்த முடிவின்மையை பற்றி பின்னூட்டத்திலேயே கேள்வியாகவும், பின்னர் தனிப்பட்ட முறையில் என்னை நோக்கி பகிரியில் (வாட்ஸப்) கேள்விகளாகவும் வந்திருந்தது. கடந்த கட்டுரையைப் போலான இன்னும் ரெண்டு கட்டுரைகள் எழுதும் அளவுக்கு நிறைய சம்பவங்கள் அதன் தொடர்ச்சியில் இருக்கிறது. அதையும் எழுதுவேனா எனத் தெரியவில்லை. அப்படியே எழுதினாலும் கடைசியில் அந்த முடிவின்மை என்கிற புள்ளியில் கொண்டு போய் தான் முடிப்பேன். காரணம் அந்தத் தன்மையில் இருக்கும் ஒரு வித உன்மத்தம். அப்படியான உன்மத்த தன்மையை உணர்ந்தாலே ஒழிய அதன் சுவையை உணர முடியாது. அப்படியான ஒரு உன்னத மனோநிலை அது. உன்மத்தம் என்கிற தமிழ் வார்த்தையின் அர்த்தம் இங்கே எத்தனை பேருக்கு விளங்குமென தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்தில் கிக் எனச் சொல்வார்கள் இல்லையா ஓப்பிட்டளவில் அந்த வார்தையை யோசித்துக் கொள்ளுங்கள். மதுவைப் பற்றி சொல்லும் போது எல்லாம் அந்த கிக் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். அதுவும் போக சில பேர் புரணி பேசுதல் என்று வட்டார வழக்கில் சொல்லப்படும், புறம் பேசுவதின் வழியே அப்படியான உத்தமத்த நிலை, புளாங்கிதம் அடைதலை பார்த்திருக்கிறேன். அப்படியான பேச்சுக்களின் வழியே கிடைக்கும் போதைக்கு அடிமையாகிறவர்கள் வாழ்வில் ஒன்றுமில்லாமல் போனதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் தாண்டி நம் வாழ்வின் பல உன்னதமான தருணங்களில், கடந்த கட்டுரையின் முடிவில் இருக்கும் முடிவின்மை என்கிற முடிவை போல் பல உன்மத்தங்கள் உண்டு. அதனை மிகச் சரியாய் அவதானிப்பவர்கள் மிக, மிகக் குறைவு, அந்த உன்மத்த நிலைக்கு முன் மது, புறம் பேசுதல் போன்ற இந்த உலகின் எவ்வித போதையும் முன்னால் நிற்க முடியாது.

நாம் படிக்கும் சில விஷயங்களோ அல்லது நாம் காதால் கேட்கும், கண்களால் பார்க்கும் சில விஷயங்களோ போகிற போக்கில் நம் மனக்குளத்தின் மீது கல்லெறிந்து விட்டுப் போகும். அப்படியாக ஏறியப்படும் கற்கள் கண்டிப்பாக நேர்மறையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே இங்கே முக்கியம். அப்படியே நேர்மறையாக இல்லாமல் போனாலும், அதனைக் கடந்து வர தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவே. அப்படி எறியப்படும் கற்கள் ஏற்படுத்தும் சலனம் மிக, மிக அழகானது. ஆழமானது. அதெப்படி என்று கேட்டால் ஒரு சின்ன கற்பனையில் இப்படிச் சொல்லலாம். நீங்கள் ஒரு குளத்தின் அருகே இருக்கும் ஒரு அழகான மரத்தின் அடியில், நிழலில் அமர்ந்து கொண்டு, அந்த குளத்தின் தண்ணீரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், சுற்றிலும் யாரும் இல்லை, பேரமைதி, ஒரு மெல்லிய காற்று மட்டுமே வீசிக் கொண்டிருக்கிறது. அந்த பேரமைதியின் இடையில் வீசும் காற்றை கவனித்து கொண்டிருக்கையில், அந்த குளத்தில் இருக்கும் நீரின் மீது நீங்கள் அமர்ந்திருக்கும் மரத்தின் இலையோ, அல்லது காய்ந்த சருகோ மிதந்து கொண்டிருக்கிறது, தண்ணீரில் அது மிதந்து கொண்டிருப்பதை உன்னிப்பாக ரசித்துக்கொண்டே இருக்கிறீர்கள், அந்த சமயம் எங்கிருந்தோ அக்குளத்தின் நீரை நோக்கிய ஏறியப்பட்ட கல், மிதந்து கொண்டிருக்கும் இலையின் அருகில் வந்து விழுகிறது, உங்களிடம் ஒரு சின்ன அதிர்வு எழுந்து அடங்கும் அதே நேரம், அந்த கல் விழுந்த இடத்தில் ஏற்பட்ட சலனம் அப்படியே மிதந்து கொண்டிருந்த இலையை ஒரு வித தாள லயத்தில் அசைத்தபடியே இருக்கும் இல்லையா, அதிர்ந்து அடங்கிய மனம் இப்பொழுது அந்த லயத்தை ரசிக்க ஆரம்பிக்கும் புள்ளி இருக்கிறது இல்லையா, அது தான், அதே தான் நீங்கள் வாசிக்கும் நேர்மறை எழுத்துக்கள் உங்களின் மனதினுள் ஏற்படுத்துவது, அதை தான் என் நேர்மறை எழுத்துகளின் வழியே சொல்ல ஆசைப்படுகிறேன்.

அதுவும் போக நாம் எல்லாவற்றிலுமே ஆமாவா, இல்லையா என்ற கேள்வியுடன் முடிவை நோக்கியே நகரப் பழகிவிட்டோம். அதில் ஒரு பொழுதும் சுவாரஸ்யமே இல்லை. இப்பொழுது கடந்து கட்டுரையை எடுத்துக்கொண்டாலே, முடிவில்லா அந்த முடிவு தான். அந்த முடிவின்மை தான் அதன் ஆன்மாவே. அதை விடுத்து, ஆம் இல்லை என்ற பதிலின் வழியே முடிவில் இது தான் நடந்தது என தெரிந்துவிட்டால், அது முடிவடைந்த நிலைக்கு போய்விடுகிறது. அதன் பிறகு அதில் எவ்வித சுவாரஸ்யமும் இல்லை. யப்பா இது தான் நடந்துச்சா என கேட்டு விட்டு தூங்கப்போய்விடுவோம். அப்படியில்லாமல் யப்பா கடைசியா என்ன தாம்பா நடந்தது என ஒரு வித ஆற்றாமையான கேள்வியுடன் முடிக்கையில், அது உங்களின் கற்பனையில் ஓராயிரம் கேள்விகளாக கண்டிப்பாக சுவாராஸ்யமான கேள்விகளாக, கல்லேறிந்த குளத்தின் நீரின் மேல் ஏற்பட்ட சலனத்தை போல், இலையின் மீதான தாள லயத்தை போல் படர்ந்து பரவிக் கொண்டே இருக்கும். அந்தப் பரவலின் சுவாராஸ்யத்தை கண்டடைந்து உணவர்வதே உன்மத்தம். இப்பொழுது கூட ஏற்கனவே வல்லரசு என்று நம்பப்படும் அமெரிக்க நாட்டை பற்றி எழுதிக்கொண்டிருந்த தொடர் கட்டுரையை விட்டுவிட்டு, பவா மற்றும் ஜெயமோகன் என்ற இரு எழுத்தாழுமைகளின் பேச்சு காணொளியின் வழியே என் மனக்குளத்தில் எறியப்பட்ட கல் ஏற்படுத்திய அற்புதமான சலனம், மூன்றாவது கட்டுரை வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. நண்பன் ஒருவன் இந்த கட்டுரைகளும் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் அந்த வல்லரசு கட்டுரையையும் எழுதினால் நன்றாக இருக்கும் என அந்த கட்டுரை எனும் கல் அவன் மனக் குளத்தில் ஏற்படுத்திய சலனத்தால் கேட்டுக் கொண்டே இருக்கிறான். அந்தக் கட்டுரை எழுதுவதற்கு கொஞ்சம் விஷயங்களை இணையத்தில் தேடிப் படிக்க வேண்டி இருக்கிறது. காரணம், எதை எழுதினாலும் குறைந்த பட்ச நம்பகத்தன்மையோடு, அதே சமயம் சுவாரஸ்யம் குறையாமல் எழுத வேண்டும். இந்தக் கல்லின் சலனத்தில் இருந்து இன்னும் விடுபடமுடியாமல் இருக்கையில், அந்த கட்டுரைக்காக இணையத்தில் தேடி படிப்பதில் ஒரு அசூயை இருக்கிறது. பார்க்கலாம் அடுத்தது, எந்தக் குளத்தில் எறிப்படும் கல் கைகளில் மாட்டப்போகிறதென்று, மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916