வாழ்ந்து பார்த்த தருணம்…75

ஒரு நாள் கூத்தாகிப்போன உயிரான உறவுகள்…

இந்த உலகம் எனும் மிகப்பெரும் வணிக வளாகத்துக்குள் அடைந்து கிடக்கும் மானுடம், தன்னுடைய மானுடத் தன்மையின் ஆன்மாவையும் ஒரு நாள் வணிகக் கூத்துக்குள் அடக்க தொடங்கியிருக்கிறது. அதன் விளைவு கொஞ்சம் கொஞ்சமாய் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த உலகத்தோடு அதாவது உயர்குடி மக்கள் எனச் சொல்லப்படும் மக்கள் எதனை பின்பற்றுகிறார்களோ அதனை நாமும் பின்பற்றினால் உயர்குடிகளாக மதிக்கப்படுவோம் என்கிற பிம்பத்துக்கு மிகச் சிறப்பாய் சாதாரண அல்லது நடுத்தர வர்க்கம் என்று சொல்லப்படும் இந்த உலகின் பெரும்பான்மையான மக்கள் கூட்டம் இரையாகி கொண்டே இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுகள் இணைய வெளியில் கூட சிறப்பாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் இந்த வேகத்தைப் பார்த்தால். வருடம் முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்களுமே எதோ ஒரு வகையில் சிறப்பான நாட்களாக அறிவிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த சிறப்பு நாட்கள் கூத்து எந்த புள்ளியில் இருந்து தொடங்கியது எனத் தெரியவில்லை. ஆனால் அது மெல்ல தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களை பற்றிப் பரப்பும் வேகம் பிரம்மிக்க வைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வீட்டின் வெளிபுறம் வரை இருந்த இந்த நாட்களின் சிறப்பு, இன்று வீட்டிற்குள்ளேயே வந்து விட்டது. நாம் நம்முடைய அன்னையை எப்பொழுது வாழ்த்த வேண்டும் என்பதை எதோ ஒரு புள்ளியில் இருந்து ஒருவன் முடிவு செய்கிறான் இல்லையா?. அது தான் அவனுடைய வெற்றி. போனக் கட்டுரையின் பின்னூட்டத்தில் நண்பர் ஜானகிராமன் இப்படி குறிப்பிட்டிருந்தார். நம்மை இயக்கும் சூக்கும கயிறு வேறு எங்கோ இருக்கிறது என்று. அது முற்றிலும் உண்மை. கயிறாக இருப்பதையாவது உணர்வோம் எனச் சொல்லியிருந்தேன்.

அன்னையில் ஆரம்பித்து, காதலி, அப்பா, மகள், மகன், இயற்கை, சுற்றுசூழல் என நீண்டு கொண்டே போகும் அளவுக்கான சிறப்பு நாட்கள் பல மிகச் சிறப்பாய் கட்டமைக்கப்பட்டு விட்டது. இதனுள் இருக்கும் சூட்சமம் என்னவென்றால், ஒரு சின்ன உதாரணம் ஜீன் ஐந்தாம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம். வருடம் முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்களுக்கும் இந்த இயற்கைக்கு எதிராய் எல்லாவிதமான அயோக்கியத்தனங்களும் செய்துவிட்டு, ஜீன் ஐந்தாம் தேதி மாத்திரம் நம்முடைய பகிரியில் அதாவது வாட்ஸப்பில் உள்ள நம்முடைய அடையாள குறியீட்டில் உள்ள புகைப்படத்தை மாற்றிவிட்டு, இயற்கையை நேசிப்போம் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் என வைத்துவிட்டால் போதும். மேலும் இருக்கவே இருக்கிறது இணைய வெளி, அதில் பல லட்சம் புகைப்படங்கள் உலகச் சுற்றுசூழல் தினத்துக்காய் மிகச் சிறப்பாய் வடிவமைக்கப்பட்டு கொட்டிக்கிடக்கிறது. அதிலிருந்து நமது உன்னத ரசனையின் சொரிதலுக்கு சரியானதாய் இருக்கும் ஒன்றையோ அதற்கு அதிகமாகவோ தரவிறக்கி, அந்த புகைப்படங்களை நாம் நண்பர்கள் என நம்பும் அனைவருக்கும் பகிர்ந்துவிட்டு, அப்படியே முகநூல் பக்கம் போய் அங்கேயும் பகிர்ந்துவிட்டால் முடிந்தது கதை. இந்த உலத்தின் சுற்றுச்சூழல் நல்ல படியாய் காப்பாற்றப்பட்டு விடும். நாமும் இந்தச் சுற்றுச் சூழலை மிகச் சிறப்பாய் காப்பாற்றிவிட்ட பாவனையில் மிகத் திருப்தியுடன் அடுத்த வேலையை பார்க்கப் போய் அப்படியே தூங்கப் போய்விடுவோம். அடுத்தநாள் எப்பொழுதும் போல் வீட்டிற்கு தேவையான பொருளை வாங்க அங்காடிக்கு சென்று பொருளை வாங்கி முடித்தவுடன், அங்காடியின் பணியாள் கேட்பான், சார் பை ஏதாவது எடுத்து வந்திருக்கீங்களா என, நாமும் இல்லப்பா கேரிபைல போட்டு கொடு என வாங்கி வந்துவிடுவோம். நாம் தான் நேற்றைக்கே சுற்றுச் சுழலை காப்பாற்றிவிட்டோமே. அதனால் இன்னைக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.

இந்த லட்சணத்தில் இருக்கும் நாம் தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் மே பத்தாம் தேதி அன்னையர் தினத்தை வெகு சிறப்பாய் கொண்டாடினோம். அன்னையர் தினத்தை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகள். வருடம் முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்களும், தான் ஒரு ஊரிலும் அல்லது வேறு நாட்டிலும் அல்லது இரண்டு தெரு தள்ளிகூட இருந்து கொண்டு, வருடத்தின் ஒரு நாளை மட்டும் அன்னைக்காக ஒதுக்கி விட்டு, அந்த நாளில் கூட அவரை பார்க்க வராமல், எங்கிருக்கிறோமோ அந்த இடத்தில் இருந்தபடி ஒரு வாழ்த்து மடலை மட்டும் அதுவும் இணைய பொதுவெளியில் வெளியிட்டு, ஆமாம் கண்டிப்பாக பொதுவெளியில் வெளியிட வேண்டாமா?. பின்னே நாம் அன்னையர் தினத்தை இவ்வளவு சிறப்பாய் கொண்டாடுவதை, நம்முடைய அன்னை மட்டும் பார்த்தால் போதுமா?. இந்த உலகமே பார்க்க வேண்டாமா?. இந்த உலகத்தில் நாமும் மற்றவர்களுக்கு ஆகச் சிறந்த முன்னுதாரணம் இல்லையா?. அதனால் கவிதை, திரையிசை பாடல்கள், கண்ணீரை வரவழைக்கும் திரைப்பட காட்சி மொழிகள் என கொண்டாடி தீர்த்து. இந்த உலகம் முழுமைக்கும் அன்னையின் சிறப்பை எடுத்துச்சொல்லி. அப்படியே புல்லரித்து, புல்லரித்து, சொரிந்து, சொரிந்து வேர்வை சிந்தி கடைசியில் களைத்து தூங்கிவிடுவோம். அம்மா தான் பாவம் அடுத்த நாள் சமையலுக்கு என்ன செய்வது என யோசித்துக் கொண்டே, அடுத்தது எப்பொழுது நம்மை பார்க்க மகனோ, மகளோ அப்படியே அவர்கள் பெற்றடுத்த பேரனையோ, பேத்தியையோ கூட்டிக்கொண்டு வருவார்கள் என வானத்தை பார்த்தபடியே தூங்கிப் போவாள். அன்னையர் தினத்தை கொண்டாடி தீர்த்த பலருக்கு அந்த அன்னையின் பிறந்த தினமோ அல்லது அந்த அன்னையின் திருமண தினமோ தெரியாது என்பதைத் தாண்டி, அந்த அன்னை தன்னுடைய வாழ்நாளில் எந்த ஒரு அன்னையர் தினத்தையும் கொண்டாடியவள் இல்லை என்பதும், ஆனால் அவள் தன்னுடைய அன்னையை கடைசி மூச்சுவரை பார்த்துகொண்டவள் என்பதையும், இந்த உலகம் அறியப் போவதே இல்லை. மீண்டும் ஒரு முறை இந்த அன்னையர் தினத்தை கொண்டாடிய அனைவருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916