வாழ்ந்து பார்த்த தருணம்…85

எதை வாழ்க்கையென நம்புகிறோம் எனப் புரியவேயில்லை…

இன்று ஞாயிறு சற்றே ஓய்வான நாள், வாரத்தின் மற்ற நாட்களில் செய்ய முடியாத அலுவல்கள் அல்லாத சில தனிப்பட்ட வேலைகள் மற்றும் வெளியே சென்று முடிக்கவேண்டிய வேலைகள் என ஞாயிறும் குடும்ப வாழ்க்கையில் இருப்பவனுக்கு ஏதோ ஒரு வகையில் வேலை நிமித்தமாக தான் நகர்கிறது. அப்படி இன்று என்னுடைய வீட்டில் இருக்கும் ஒருவரின் உடல் நிலைக்காக மருத்துவரிடம் போய் வர வேண்டி இருந்தது. சென்று பார்த்த மருத்துவரும் எனக்கு மிகவும் நெருக்கமான வட்டத்தில் இருப்பவர் என்பதால், மதிய உணவையும் அவரது இடத்திலேயே முடித்துவிட்டு வர மதியதிற்கு மேல் ஆகிவிட்டது. போகும் போதும் வரும் போதும் நல்ல வெயில். அதனால் வந்தவுடன் சிறிது கண்கள் அயர்ந்து தூங்கிவிட்டேன். பொதுவாக பகலில் எக்காரணத்தை கொண்டும் தூங்குவதில்லை. ஆனால் இன்று கொஞ்சம் கதிரவனின் உக்கிரம் சாய்த்துவிட்டது. ஒரு நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் தான் தூங்கியிருப்பேன். சிறிது முழிப்பு வந்ததும் அலைபேசியில் யாரோ அழைத்தாக காட்ட, எடுத்துப் பார்த்து கொண்டிருந்தேன். அப்படியே முகநூல் பக்கம் வந்தால், முதலில் என் கண்களில் பட்ட விஷயத்தை என்னால் நம்ப இயலவில்லை. காரணம் ஹீந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரண செய்தி தான் கண்களில் பட்டது. முதலில் நம்பவேயில்லை. உடனடியாக இணையத்தில் செய்திகளைச் சென்றுப் பார்த்தவுடன், தற்கொலை என்பது தெரிந்து அதிர்ந்துவிட்டேன். ராஜ்புத் என்கிற நடிகரை பற்றி எனக்கு பெரியதாக வெல்லாம் தெரியாது. ஆனாலும் அவருடைய படங்களில் Kai Po Che! மற்றும் M.S. Dhoni: The Untold Story என இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமான திரைப்படங்கள்.

தோனி திரைப்படத்தில் வரும் சாக்சியை முதன்முதலில் சந்திக்கும் அந்த உயர்ரக விடுதி அறை காட்சியை பல முறை திரும்ப, திரும்பப் பார்த்திருக்கிறேன். மிக, மிகக் கவிதையான காட்சி அது. அந்தக் காட்சியில் நடித்திருந்த ராஜ்புத் மற்றும் கீரா அத்வானி இருவருமே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஒரு வகையில் என்னுடைய ரசிப்பு வட்டத்திற்குள் மட்டையாட்டமும் உண்டு. அப்படியான என்னுடைய மட்டையாட்ட ரசிப்பின் வழியே தோனியின் மீது மிகப் பெரும் மரியாதையும் அபிமானமும் என்றும் என்னிடம் உண்டு. ஆட்டக்களத்தின் உள்ளே எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலை தன்னை சுற்றி இருந்தாலும், அப்படியான சூழ்நிலைக்குள் இருந்து கொண்டு, எவ்விதமான உணர்ச்சிகளுக்கும் ஒப்புக் கொடுக்காமல், தன்னை மிகவும் நிதானமாக கட்டுக்குள் வைத்துக் கொள்வதோடு, இயல்புடன் அந்த நிமிட பரபரப்பை லாவகமாக கையாளத் தெரிந்த மிகச் சிறந்த இந்திய அணியினுடைய மட்டையாட்ட குழுவின் தலைவர்கள் மிக சிலரில் ஒருவர் தான் தோனி. அப்படியான என்னுடைய மரியாதைக்குரிய மட்டையாட்ட வீரர் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்றும் நடிக்கும் நடிகர் என்கிற முறையில், அவர் மீதான கவனம் அந்த சமயத்தில் அதிகமாக இருந்தது. திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாக முன்னேடுக்கப்பட்ட பல்வேறு விளம்பர நிகழ்சிகளில் தோனியுடன் பங்கேற்ற ராஜ்புத்தின் பல சுவாரஸ்மான நையாண்டியான காணொளிகள் இணையத்தில் இன்றும் இருக்கிறது. தோனி போன்ற ஒரு விளையாட்டு ஆளுமையினை பற்றிய திரைப்படத்தில், அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகராக, கண்டிப்பாக தோனியைப் பற்றி மிக உன்னிப்பாக கவனித்து நிறையவே அறிந்து, தெரிந்த பிறகு தான், அந்தக் கதாபாத்திரத்தை ராஜ்புத் ஏற்று நடித்தார் என்பது அவரது மிகச் சிறப்பான உடல் மொழியின் வழியே தோனித் திரைப்படத்தில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும்.

இப்படி எல்லா வகையிலும் தன்னுடைய இளம் வயதில் பணம், பெயர், புகழ் என மூன்றையும் அடைந்து விட்ட ஒருவருக்கு ஏன் தன்னை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் வந்தது என யோசித்துக் கொண்டே இருக்கிறேன். உண்மையில் இன்றைக்கு வாழ்வில் வெற்றி பெற என்கிற பாவனைகளின் அடிப்படையில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் பல தரபட்ட பயிற்சி வகுப்புகளில் என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்று பார்த்தால் முதலில் பணம், அப்புறம் பெயர், அப்புறம் புகழ் இந்த மூன்றையும் அடைய எப்படியெல்லாம் உங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்படியான நிலையை அடைந்த பிறகு, தான் அடைந்துவிட்ட இலக்கை எப்படி தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுவதே இல்லை. என்னுடைய புகைப்படப் பயிற்சி வகுப்புகளிலும், சரி வாழ்வியல் பயிற்சி வகுப்புகளிலும் சரி, குறிப்பிட்டு சொல்லும் முக்கியமான விஷயம். உன் வாழ்வில் நீ நீர்ணயிக்கும் உச்சமான இடத்தை அடைவதை விட, அந்த இடத்தை அடைந்த பிறகு அதனை தொடர்ந்து தக்க வைக்க மிகப் பெரும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அதனால் உன்னை நோக்கி வரும் ஒவ்வொரு விஷயத்திலும் இருந்தும் கற்றுக் கொள்ளும் மனநிலையை தக்கவைப்பதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து வாசியுங்கள் என சொல்லிக் கொண்டே இருப்பேன். எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் எழுத்துகளில் புருஸ்லீயை பற்றி சண்டையிடாத சண்டை வீரன் என்கிற புத்தகம் ஒன்று இருக்கிறது. அந்த புத்தகத்தில் புருஸ்லீயை பற்றி குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான விஷயம். மிக இளம் வயதில் மிகப்பெரும் வெற்றியை சுவைத்துவிட்ட அவருக்கு. அதன்பின் தன்னை நோக்கி வந்த பணம், பெயர், புகழ் இந்த மூன்றையும் கையாள்வதில் ஏற்பட்ட தடுமாற்றமே, புருஸ்லீயின் இறப்புக்கு காரணம் என்பது எப்படி என விளக்கப்பட்டிருக்கும். முடிந்தால் அந்தப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். மிகச் சிறப்பான புத்தகம் அது. அதனைத் தாண்டி சில நாட்களுக்கு முன்னதாக தன்னை தானே மாய்த்து கொள்பவர்களை பற்றி எழுத்தாளர் அபிலாஷ் தன்னுடைய மின்னம்பலம் பக்கத்தில் எழுதியிருந்ததும் ஞாபகத்திற்கு வந்து போனது. அதனையும் வாசிக்க வேண்டும் என ஆர்வமிருப்பவர்கள் மின்னம்பலம் தளத்திற்கு சென்று வாசியுங்கள். இவையெல்லாவற்றையும் விட, இன்றைக்கு வாழ்வின் வெற்றி என்பதே பணத்தை சம்பாதித்து குவிப்பதில் தான் இருக்கிறது என தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட கவனிக்க முடியாத இன்றைய சமூகம் ஆணித்தரமாய் நம்புகிறது. அப்படியான நம்பிக்கையில் பணம் என்பதைத் தாண்டி, உயிர்வாழ்தலின் மீதான காதல் என்பதே வேறு. அதனை முதலில் மிகச் சரியாய் உணர்ந்து கொள்ளுங்கள் என தன்னை தானே மாய்த்துக்கொண்ட ராஜ்புத்தின் மரணம் மிக உரக்கச் சொல்லியிருக்கிறது. அந்த சொல்லிற்கு மதிப்பளிப்போமா என்பது தான் இன்றைக்கு நம்மை நாமே ஓராயிரம் முறை கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916