முழுமையடையா உண்மைக்குள் பல்லிளிக்கும் பொய்மை…
இங்கே நம்மை நோக்கி வரும் செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக நாம் களமாடுவதை பார்த்தால் நம்மை விட மிகச் சிறப்பான போராட்டக்காரர்கள் இந்த உலகத்திலேயே இல்லை என ஆணித்தரமாக சொல்லிவிடலாம். இருவரின் மீது செலுத்தப்பட்ட வன்முறைக்காக, அவர்களின் இறப்பிற்காக, ஒட்டுமொத்த தேசத்தையும் தாண்டி, சர்வதேச அளவில் நம்முடைய போராட்டத்தை திரும்பி பார்க்க வைத்து, பல கண்டனங்கள், பல அறிக்கைகள் வெளியிட வைத்து, இருவரின் மறைவிற்காக மிக, மிக சிறப்பான முறையில் நீதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம் அல்லது நம்பவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நீதியை நோக்கியதான நகர்தல், அதன் இறுதி வடிவத்தை அடையும் வரை இதே போன்று வீரியம் மிக்கதாக போய்ச் சேருமா?. இந்தக் கேள்விக்கான விடை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சரி இப்பொழுது நேரடியாக பேச வந்த விஷயத்தை பேசலாம். நம்முடைய ஊரிலோ அல்லது நம்முடைய மாவட்டத்திலோ அல்லது நம்முடைய மாநிலத்திலோ ஒரு நிகழ்வு நடக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு நடந்து முடிந்தவுடன், அந்த நிகழ்வு நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு ஐந்து கீலோ மீட்டர் சுற்றளவைத் தாண்டி, நடந்து முடிந்து விட்ட நிகழ்வை பற்றி ஓரளவுக்கேணும் முழுமையாய் யாராவது அறிந்திருக்க வாய்ப்புண்ட., அதையும் தாண்டி அந்த ஐந்து கீலோ மீட்டர் சுற்றளவுக்குள் கூட நடந்த நிகழ்வின் பின்னால் இருக்கும் முழுமையான உண்மை பின்னனி எல்லாத தரப்பிடமும் முழுமையாய் போய் சேருமா?. இப்படியான உருப்படியான கேள்விகளை கேட்பதோ, இல்லை அப்படியான சிந்தனையையோ சிறிதளவு கூட நம்முடைய மூளைக்குள் யோசிக்க கூடிய வாய்ப்பை உங்களுக்கு இங்கிருக்கும் எந்த ஒரு செய்தி ஊடகமும் தரப்போவதில்லை.
காரணம் மிக, மிக எளிமையானது. நீங்கள் எதற்கு பொங்க வேண்டும். எதற்குப் பொங்க கூடாது என்பதை இங்கே வெகு சிறப்பாக 24/7 பம்பரமாய் களமாடும் அனைத்து செய்தி ஊடகங்களும் முன்னரே முடிவு செய்து தான் உங்களிடமே ஒரு நிகழ்வை பற்றிய செய்தியை கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அப்படியான செய்தி ஊடகங்கள் அனைத்தும், நமக்காகவே நம்முடைய நன்மைக்காகவே, இங்கு நடக்கும் ஒரே ஒரு அநீதி கூட பொது மக்களின் பார்வைக்கு வராமல் கடந்து போய்விடக் கூடாது என்பதற்காக, மிகப்பெரிய பொது நோக்கத்தோடு செயல்படும். நம் மாநிலத்தின், நம்முடைய தேசத்தின் செய்தி ஊடகத்தின் உண்மைத் தன்மையை நினைக்கையில் உடலும், மனமும் புல்லரித்து விடுகிறது. இப்படிப்பட்டச் செய்தி ஊடகத்தின் வழியே நம்மை நோக்கி வரும் செய்திகளை குறைந்த பட்ச கேள்விகளுக்கு கூட உட்படுத்தாமல் எதன் அடிப்படையில் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் என்கிற சூத்திரம் மட்டும் இன்னும் விளங்கவில்லை. இதையெல்லாம் தாண்டி இன்று காவல்துறைக்கு எதிராக சாட்டையை சுழற்றும் பல பேர் சொல்லும் மிக, மிக முக்கியமான விஷயம் சட்டத்தை அவர்களே கையில் எடுத்து கொ(ல்)ள்கிறார்கள். அவர்கள் என்ன கடவுளா என்பதான பல குரல்களை கேட்க முடிகிறது. அப்படியான குரல்களுக்கு ஒரு கேள்வி ஒன்று இருக்கிறது. போன வருடம் டிசம்பர் மாதம் நம்முடைய பக்கத்து மாநிலத்தில் நடந்து முடிந்த ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறதா. கண்டிப்பாக ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை. ஞாபகம் இல்லாதவர்கள் இணையத்தில் போய் தேடுங்கள் கிடைத்துவிடும். அந்த நேரம் பக்கத்து மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்கு காரணமாக இதே செய்தி ஊடகங்களால் முன் நிறுத்தப்பட்ட மூன்று பேரை நோக்கி தோட்டக்கள் பாய்ந்தே ஆக வேண்டும் என நாம் தான் மாநிலம் தாண்டி போராடினோம். அப்பொழுதே இந்த போக்கு நல்லதல்ல என ஒரு சில குரல்கள் சூட்டிக்காட்டியது. ஆனால் அப்படியான குரல்கள் அப்படியே வந்த சுவடே தெரியாமல் காற்றில் கரைந்து போனது. இன்றைக்கு பெரும்பான்மையோரால் விமர்சிக்கப்படும் காவல்துறை அன்றைக்கு சட்டத்தை கையில் எடுத்தற்காக வரலாற்று நாயகர்களாக கொண்டாடப்பட்டார்கள். அதாவது நாம் எப்போழுது சட்டத்தை கையில் எடுக்க சொல்கிறோமா அப்பொழுது சட்டத்தை அவர்கள் கையில் எடுக்க வேண்டும். எப்பொழுது அது நமக்கே எதிராக திரும்புகிறது என நினைக்கிறோமா அந்த நேரம் அவர்கள் சட்டத்தை கையில் எடுத்தது தவறு எனச் சொல்லி, அவர்களை நோக்கி பொங்கி எழுவோம். ஒரு வகையில் டிசம்பர் மாத சம்பவத்தை நினைவில் வைத்திருப்பவர்கள் விசாரணை என்கிற திரைப்படத்தை மனதினுள் ஒரு முறை ஓட்டிப்பாருங்கள். அப்படியும் நடக்க வாய்ப்பிருப்பதை இங்கே யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் நடந்த முடிந்த விஷயங்கள் அனைத்துக்கும் நாமும் ஒரு வகையில் காரண கர்த்தா என்கிற அடிப்படையில் நம்முடைய மனம் அதனை ஒப்புக் கொள்ளாது.
சரி இப்பொழுது நடந்து முடிந்திருக்கும் விஷயங்கள் மிகப்பெரும் தவறு என ஏற்றுக் கொண்டால். எதன் அடிப்படையில் நாம் அதனை தவறு எனச் சொல்கிறோம் என யோசியுங்கள். இதில் எத்தனை பேருக்கு நடந்து முடிந்த சம்பவத்தை பற்றி செய்தி ஊடகங்களின் வழியே சொல்லப்பட்ட விஷயங்களை தாண்டி, ஏதாவது ஒரு விஷயம் தெரியுமா அல்லது நீங்கள் நேரில் சென்று விசாரித்து அறிந்து கொண்டீர்களா?. வாய்ப்பேயில்லை. நாம் எதிர்வினையாற்றுவது எல்லாமே இந்த செய்தி ஊடகத்தின் வழியே நாம் அறிந்து கொண்ட செய்தியை வைத்துத் தான். இந்தச் செய்தி ஊடகத்தின் வழியே நம்முடைய காதுகளுக்கு என்ன கேட்கிறதோ அதனை வைத்து தீர்ப்பு எழுதி விடுகிறோம். இந்தச் செய்தி ஊடகங்களுக்கும் இப்படியான ஒரு நிகழ்வு தான் தேவை. இதை வைத்துக் கொண்டு மிகப்பெரும் விவாத மேடை. இன்றைய விசாரணையின் முக்கியமான நகர்வு என தெறிக்கவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இன்றைக்கு நம்மை நோக்கி இந்த செய்தி ஊடகங்களின் வழியே வந்தடையும் செய்தி எதிலுமே முழுமையான உண்மை என்பதே கிடையாது. நடந்து முடிந்த விஷயத்தில் நம்மிடம் எது வந்து சேர வேண்டும் என இங்குள்ள செய்தி ஊடகங்களும், அதன் பின்னால் இருப்பவர்களும் மிக, மிக நுணுக்கமாக முடிவு செய்து விடுகிறார்கள். அந்தக் கண்ணுக்கு தெரியாத கயிற்றில் கட்டப்பட்டு ஊசலாடிக்கொண்டிருக்கும் பொம்மைகள் தான் நாம். குறைந்தபட்சம் அப்படியான கயிறு நம்முடைய உடலின் மீது பின்னப்பட்டிருக்கிறது என்பதையாவது உணராதவரை, நம்மை நோக்கி வரும் எந்த ஒரு செய்தியும் முழுமையான உண்மையோடு வந்தடையவே செய்யாது. இப்படி இதற்கு முன்னர் நடந்து முடிந்த பல்வேறு நிகழ்வுகளுக்கு பின்னால் இருக்கும் அரைகுறை உண்மைகளை மட்டுமே நம்மை வந்தடைந்ததை நாம் வசதியாக மறந்துவிட்டோம். இன்னொன்றையும் இங்கே சொல்லி விடுகிறேன். மேலே குறிப்பிட்டுள்ள கண்ணுக்கு புலப்படாத நூலிழைக்குள் நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதை விசாரணை, தனி ஒருவன், கோ, அடங்கமறு எனச் சில திரைப்படங்கள் கொஞ்சமாய் சுட்டிக்காட்டி இருக்கின்றன. ஆனால் அதனை திரையில் பார்ப்பதோடு நமக்கான சிந்தனை அங்கே முடிந்து விடுகிறது. அதனைத் தாண்டி யோசிப்பதெல்லாம் நமக்கு நடக்காத காரியம். உங்களின் ஞாபகத்திற்காக சில கேள்விகள் சகாயம் என்றோரு மனிதரை இதே நீதிமன்றம் தன்னுடைய நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கச் சொன்னது. அந்த அறிக்கை எங்கே?. அதிலும் சகாயம் விசாரித்த வழக்கின் பின்னனியில் குழந்தைகளை நரபலியெல்லாம் கொடுத்திருக்கிறார்கள் எனச் சொன்னார்கள். அடுத்தாக இங்கே பொன்மாணிக்கவேல் என்றோரு அதிகாரி சிலை கடத்தலை வெளி கொண்டு வந்து கொண்டே இருந்தார். இப்பொழுது அவரை பற்றிய எதாவது செய்தி உண்டோ?. அவர் எங்கே போனார்?. நேரடியாக நீதிமன்ற கண்காணிப்பில் தான் அவரும் பணியாற்றினார். அவர் கண்டுபிடித்த சிலைகள் எங்கே?. அது யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?. இவையெல்லாவற்றுக்கும் மேலாக தற்பொழுது முடிந்திருக்கும் மரணத்தின் கூராய்வு அறிக்கையை முழுமையாய் வெளியிட முடியுமா?. இதற்கு முன்னர் இப்படியான வழக்குகளில் கூராய்வு செய்யப்பட்ட எதாவது ஒரு வழக்கில் அதனை பற்றி முழுமையான உண்மை வெளிவந்திருக்கிறதா?. இது போன்ற எதாவது ஒரு வழக்கையாவது இது வரை எந்த ஒரு செய்தி ஊடகமாவது தொடர்ச்சியாய் செய்திகளை சேகரித்து பொது தளத்தில் கொண்டு சேர்த்திருக்கிறதா?. கேள்விகள். கேள்விகள். கேள்விகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன. கண்டிப்பாக முழுமையான உண்மை என்கிற ஒன்று வெளிவர வாய்ப்பேயில்லை. நமக்கும் அது முழுமையாய் தெரியும். ஆனாலும் நாம் பொங்குவதில் ஒரு மிகப் பெரும் நியாயம் இருக்கிறது என நம்முடைய ஆழ்மனம் எதோ ஒரு வகையில் நம்புகிறது. அல்லது அப்படியான நம்பிக்கைக்கு நம்முடைய ஆழ்மனதை பழக்கப்படுத்திவிட்டார்கள். இல்லாவிட்டால் நீதி கிடைக்க போராடாத பாவிகள் ஆகிவிடுவோம் என்கிற எண்ணமே நம்மை தூங்கவிடாது. நமக்கு அநியாயத்திற்கு எதிராக போராட வேண்டுமே தவிர, அதற்கு பின்னால் இருக்கும் முழுமையான உண்மை எப்படியானது என்பதை பற்றி கவலை இல்லை. இன்றைக்குப் போராட நமக்கான களம் வாய்த்திருக்கிறது. அதுவே நமக்கு போதுமானது. கடைசியாக ஒன்று இங்கு ஊடகங்களால் உண்மையின் மீது பாய்ச்சப்படுவதாக காட்டப்படும் வெளிச்சம் என்பது என்றைக்குமே முழுமையான உண்மையை நமது கண்களுக்கு காட்டப்போவதே இல்லை. அது நமக்கும் தெரியும். தெரிந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம். காரணம் அந்த வெளிச்சம் பாய்ச்சப்படாத மறைவான உண்மைக்குள் நம்முடைய உண்மை முகமும் ஒளிந்திருக்கிறது. அதனால் இந்த பாதி வெளிச்சத்தில் நீதியை தேடுவதே நமக்கு போதுமானதாய் இருக்கிறது. காரணம் கிடைக்கப் போகும் நீதியும் இங்கே முழுமையானதாய் இருக்க போவதில்லை. மகிழ்ச்சி.
இறுதியாக :
மரித்த யானை கர்ப்பமாக இருந்தது நமக்குத் தெரியும். அதற்கு காரணமானவர்களின் பெயர் தெரியுமா?. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை யார் மீது உடல்ரீதியான வன்கொடுமை நடந்ததோ அவர்களின் பெயர் நமக்குத் தெரியும். ஆனால் அதனை நடத்தியவர்களின் பெயர் நமக்கு தெரியுமா?. நினைவில் இருக்குமா?. யாரின் பெயரை வைத்து நாம் ஒவ்வொரு நிகழ்வையும் விவாதிக்கிறோம்?. இன்னும், இன்னும், இன்னும்.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916