வாழ்ந்து பார்த்த தருணம்…89

கேள்விகளை நம்பிய கூமுட்டைகளாய் உலவிக் கொண்டிருக்கிறோம்…

குழந்தையின் வயிறு நிறைந்திருக்கும் எழும்பு வழுப்பட்டிருக்குமா?
முழுமையான போஷாக்கு உங்கள் குழந்தைக்கு கிடைக்கிறதா?
தினமும் தலைவலியில் அவஸ்தையா?
கொசுக்களின் தொந்தரவா?
உங்களின் பற்பசையில் உப்பிருக்கா?
உங்கள் உப்பில் அயோடின் இருக்கா?
செரிமானம் சரியாக ஆகவில்லையா?
உங்கள் தேநீரில் ஆயுர்வேத மூலிகை இருக்கா?
வேற எந்த மட்டையாட்ட வீரனும் உனக்கு கிடைக்கலயா?
உனக்கு திரும்பவும் உடம்பு சரியில்லையா?
உங்களின் முதுகெழும்பு வழுவாக உள்ளதா?
உங்கள் வீட்டின் கழிப்பறை சுத்தமாக உள்ளதா?
உங்களின் வீட்டின் தரையில் கிருமிகள் இருக்கிறதா?
உங்களின் எடையை குறைக்க வேண்டுமா?
உங்களுடைய உடலின் ஆரோக்கியத்தில் அக்கரையுடன் உள்ளீர்களா?

கேள்விகள், கேள்விகள், கேள்விகள் என நித்தம், நித்தம் எத்தனைக் கேள்விகள் நம்மை நோக்கி நம்முடைய வீட்டின் நடுநாயகமாக நாம் வாங்கி வைத்திருக்கும் திருவாளர் தொலைக்காட்சியின் வாயிலாக கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. முடிந்தால் நம்முடைய வீட்டில் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் சராசரியாக தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைக் கணக்கிட்டு, அந்த நேரத்திற்குள் எத்தனை எத்தனை கேள்விகள் அதில் வரும் விளம்பரங்களின் வழியே நம்மை நோக்கி எழுப்பப்படுகிறது எனக் கணக்கெடுத்தால். கண்டிப்பாக இந்தத் திருநாட்டில் உள்ள உயரிய படிப்பாக எதனை குறிப்பிடுகிறோமா. அப்படியான படிப்புக்காக கேட்கப்படும் கேள்விகளை விட, இந்த தொலைக்காட்சி விளம்பர கேள்விகள் அதிகமாக இருக்கும் என்பதில் எள்ளவிலும் சந்தேகம் வேண்டாம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இன்றைக்கு தோராயமாக ஒரு வீட்டில் குறைந்த பட்சம் ஆறு மணி நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரை தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் குறைந்தது நூறில் இருந்து நூற்றி ஐம்பது கேள்விகள் நம்மை நோக்கி கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அப்படிக் கேட்கப்படும் நூற்றி ஐம்பது கேள்விகளும் வேறு வேறாக இருக்காது. ஒரே கேள்வியே ஒரு நாளைக்கு பலமுறை கேட்கப்படும். அந்தக் கேள்விகளுக்கு நாம் நேரிடையாக பதில் அளிப்பதில்லை அல்லது அதனை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை எனச் சப்பை காரணம் இதனை படிக்கும் போது உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் உண்மையில் நாம் பல்பொருள் அங்காடிக்கோ அல்லது மளிகை கடைக்கோ ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் செல்கையில் நாம் கையோடு எடுத்து செல்லும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதனை ஒரு முறை கூர்மையாக பார்த்தால். உங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியின் மூலம் உங்களின் மூளைக்குள் செலுத்தப்பட்ட கேள்விக்கான விடைகள் நீங்கள் எழுதி வைத்திருக்கும் மாதந்திர வீட்டின் தேவைக்கான பட்டியலில் இருக்கும்.

பொதுவாக வீட்டிற்கு தேவையான பொருட்களை மாதமாதம் பட்டியலிட்டு வாங்குவது பெண்கள் தான். சில நேரங்களில் ஆண்களும். அப்படி ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் பட்டியலில் குடும்ப உறுப்பினர்களின் பங்கும் உண்டு. அப்படியான பட்டியலை தயாரிக்கையில் கவனித்தால். ஒவ்வொரு பொருளின் பக்கத்திலும் அது எந்த நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என தவறாமல் குறிப்பிடப்பட்டிருக்கும். இது அந்த நிறுவனம் உங்கள் வீட்டின் தொலைக்காட்சி வாயிலாக உங்களை நோக்கி எழுப்பிய கேள்விக்கான விடையும். வெற்றியும். ஆனால் நாம் பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்வது எல்லாம், நாங்க எங்க வீட்ல இந்த நிறுவனத்தோட இந்த பொருளை தான் பயன்படுத்துறோம் தெரியுமா என்பதாகத் தான் இருக்கிறது. இதற்கும் மேலாக எனக்கும் என்னோட கணவருக்கும் அந்த நிறுவனத்தோட பொருட்கள் தவிர வேற எதைப் பயன்படுத்தினாலும் பிடிக்கவே பிடிக்காது எனச் சொல்லி சிலாகிப்போம் பாருங்கள் வாய்ப்பேயில்லை. காரணம், நாம் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தினுடைய பெயரின் வாயிலாக நம்மை பற்றியும் நம்முடைய குடும்பத்தை பற்றியும் இந்த சமூகத்தில் மிகப்பெரும் பட்டோபமான பிம்பம் ஒன்று உருவாகி உலவுவதாக நம்பவைக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம். இப்படியாக பயன்படுத்தும் பொருட்களை நிறுவத்தினுடைய பெயர்களின் வழியே பெருமையடித்து கொள்பவர்கள் தான் மிக சிறப்பான முதல் வரிசை பலியாடுகள். அதனைத் தாண்டி யாரெல்லாம் எப்போழுதெல்லாம் இந்த நிறுவனத்தோடு பொருட்கள் தான் சிறப்பாக இருக்கும் என மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறோமோ அப்பொழுது எல்லாம் நாம் அந்த நிறுவனத்தினுடைய சம்பளம் வாங்காத மக்கள் தொடர்பு அதிகாரியாக மாறிவிடுகிறோம் என்பது அந்தத் தருணத்தில் நம்முடைய புத்திக்கு உரைப்பதே இல்லை. ஒரே ஒரு முறை கொஞ்சத்திற்கு கொஞ்சமேனும் கவனமாக சற்று சிந்தித்து, உங்களது வீட்டை சுற்றி நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை கவனியுங்கள். அங்கிருக்கும் பொருட்கள் தாங்கி நிற்கும் நிறுவனத்தின் பெயரைகளை கவனியுங்கள். அப்படி கவனிக்கையில் அந்த நிறுவனம் உங்கள் வீட்டின் தொலைக்காட்சி வாயிலாக கண்டிப்பாக நடக்கும் என உறுதியளித்த ஏதாவது ஒன்று, அந்த நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்துவதால் உங்களுக்கு நடந்திருக்கிறதா,?. கண்டிப்பாக வாய்ப்பேயில்லை.

இதில் இன்னொரு சூட்சமமும் இருக்கிறது. நம்முடைய வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளின் வழியே நம்மை நோக்கி வரும் கேள்விகளில் பெரும்பாலானவை நம் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாக தான் இருக்கிறது. அந்த அடிப்படையில் யோசித்தால் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் வீடுகள் அனைத்திலுமே ஆரோக்கியமான மக்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் நடைமுறை உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. நம்முடைய வீட்டின் தேவை பட்டியலில் பெரு நிறுவனங்களின் பெயர்கள் எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ?. அதற்கு இணையாக அந்த வீட்டின் மருந்துகளின் பட்டியலும் நீளமாக இருக்கிறது. இதைத் தாண்டி நம்மை நோக்கி வரும் ஆரோக்கியம் சம்பந்தபட்ட கேள்விகளுக்கு விடையாக இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் முன்னிறுத்துவது, பதப்படுத்தப்பட்டு நெகிழி பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஊட்டசத்து மாவுகளையும், வேறு சில பதப்படுத்தப்பட்ட ஒன்றுக்கும் உதவாத பொருட்களையும் தான். ஆனால் அவர்கள் அம்மாதிரியான பொருட்களில் சேர்ப்பதாக காட்டும் பொருட்களின் பட்டியலை பார்த்தால் மொத்த ஆரோக்கியமும் அப்படியான ஊட்டசத்து பானத்துக்குள் தான் இருக்கிறது என மனம் நம்ப ஆரம்பித்து விடுகிறது. அதனை நம்பி வாங்கும் யாரும் அந்த பொருள் அடைப்பட்டிருக்கும் பெட்டியில் இவர்கள் சொன்ன பொருட்கள் எதாவது சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதையோ அல்லது அது எந்த அளவில், எப்படியான நிலையில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை பற்றியோ பார்ப்பதும் இல்லை. யோசிப்பதும் இல்லை. காரணம் மேல இருக்கவன் சொன்ன சரியா தான் இருக்கும் என மனத்துக்குள் ஒரு வித சுயதிருப்தியோடு அந்த பானத்தை பருக ஆரம்பித்து விடுகிறோம். அப்படியான பானத்தை குடித்துக் கொண்டிருக்கையில் அலைபேசியில் யாரேனும் அழைத்தால் போதும் நான் இப்ப என்ன குடிச்சிட்டு இருக்கேன் தெரியுமா?. செம்மயா இருக்கு என பரிந்துரையை ஆரம்பித்துவிடுவோம். ஆனால் அந்த பானம் நாளை நம்முடைய ஜீரண சக்தியை செம்மயாய் வச்சு செய்யும் என நம்முடைய அறிவுக்கு உரைக்காது. இப்படியாக நம்முடைய வீட்டின் கழிவறை சுத்ததில் இருந்து, நம்முடைய உடலின் சுத்தம் மற்றும் நம்முடைய உடலின் ஆரோக்கியம் என வகை வகையாய் வகை தொகையில்லாமல் நம்மை வைத்து செய்து கொண்டிருக்கும் பெரு நிறுவனங்களை நம்பியதால் தான். இன்றைக்கு ஒரு கண்ணுக்கே தெரியாத நுண்ணியிரி நம்மை வச்சு வச்சு செய்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி.

கடைசியாக :

இங்கே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் எதிலுமே, அவர்கள் தங்களின் நிறுவன பொருட்களாக நம்முடைய கண்களில் காட்டும் பொருட்கள் எதுவுமே உண்மையாய் நாம் பயன்படுத்தும் பொருட்கள் இல்லை. அதைப் பற்றி இன்னொரு முறை வேறு ஒரு கட்டுரையில் விரிவாக பேசலாம். இதையெல்லாம் தாண்டி நம்முடைய சமையலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியில் இல்லாத நம்முடைய ஆரோக்கியத்தை பேணும் உணவு பொருள் ஒன்று. வெளியில் இருப்பதாக தோன்றவில்லை.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916