வாழ்ந்து பார்த்த தருணம்…90

போடா என்றொரு புனிதச் சொல்…

ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பிருக்கும் என நினைக்கிறேன். சரியாக வருடம் நினைவில் இல்லை. சென்னையில் திரைத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம். அப்பொழுது இருந்த திரைத்துறை நண்பர்களோடு ஒரு கலந்துரையாடலை முடித்துவிட்டு, மதியவேளை உணவருந்த சென்றோம். அது ஒரு மதியமும் இல்லாத மாலையும் அல்லாத ரெண்டும் கெட்டான் நேரம். திரைத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயங்களில் பல நேரங்களில் உணவருந்தும் நேரம் என்பது சரியான நேரமாக இருந்து விட்டால் கண்டிப்பாக அது பெரிய அதிசயம் தான். அதனைப் பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாக பேசலாம். அன்றைக்கு ரெண்டும் கெட்டான் நேரத்தில் நாங்கள் போன உணவகம் சென்னையின் பரபரப்பான பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரபலமான அசைவ உணவகம். நாங்கள் போன நேரம் பெரிதாக கூட்டம் இல்லாத நேரம் என்பதால், பிரதான உணவருந்தும் குளிருட்டப்பட்ட அறையில் எங்களையும், இன்னொரு குடும்பத்தையும் தவிர யாருமில்லை. நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் குளிரூடப்பட்ட அறையின் கதவுகளுக்கு பின்னால் இருக்கும் ஒரு மேஜையில் அமர்ந்துவிட்டோம். நாங்கள் மொத்தம் நால்வர். அந்த உணவகத்தை பற்றிச் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். அப்பொழுது தான் சொல்லப் போகும் விஷயம் எளிதாக புரியும். அந்த உணவகம் தொழில்நுட்பரீதியில் கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட உணவகம். அதில் ஒரு முக்கியமான விஷயம். நாங்கள் அமர்ந்திருந்த மேஜையில் ஒரு சின்ன சிகப்பு வண்ணதினால் ஆன அலங்கார நெகிழிப் பெட்டி ஒன்று இருந்தது. அந்தப் பெட்டி வெறும் அலங்காரதிற்கு என முதலில் நினைத்தோம். ஆனால் அந்த பெட்டியில் சில தொழில்நுட்ப விஷயங்கள் இருந்தது, நாங்கள் அதனைக் கையில் எடுத்து பார்த்ததும் தான் தெரிந்தது. அது என்னவென்றால் அந்த பெட்டியில் மூன்று அல்லது நான்கு பொத்தான்கள் இருந்தன. ஒவ்வொரு பொத்தானும் ஒவ்வொரு விஷயத்திற்காக வடிவமைக்கப்பட்டிருந்தன. உதாரணமாக ஒரு பொத்தனை அழுத்தினால் அடுத்த சில நிமிடங்களில் உங்கள் முன் அந்த உணவகத்தின் பணியாளர் வந்து நின்று என்ன வேண்டுமெனக் கேட்பார். இன்னொரு பொத்தனை அழுத்தினால் தண்ணீர் வரும். இன்னொன்றை அழுத்தினால் நீங்கள் சாப்பிட்டதற்கான ரசீது வரும். இப்படியான வடிமைப்பில் அந்த பெட்டியில் நான்கு பொத்தான்கள் இருந்தன. நம்முடைய கைகள் தான் சும்மா இருக்காதே. இது வேலை செய்கிறதா எனப் பார்க்கலாம் என்று, பணியாளரை அழைக்கும் பொத்தனை அழுத்தினால் சில நிமிடங்களில் என்ன வேணும் சார் என பணியாளர் வந்து நின்றார். முதலில் சாப்பிட வேண்டியதை முடிவெடுத்து சொல்லிய பிறகு, முதலில் இதனைக் கொண்டுவாருங்கள், அது வந்தவுடன் மற்றவைகளை சொல்கிறோம் என சொல்லி பணியாளரை அனுப்பிவிட்டோம். எங்கள் எல்லோருக்கும் அந்த பொத்தன்களின் மேல் ஒரு சின்ன குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது.

அப்பொழுது தான் கவனித்தோம் நாங்கள் அமர்திருந்த மேஜைக்கு பின்னால் தான் அந்த அறையின் ஓரத்தில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. கணவன், மனைவி மற்றும் இரண்டு மகன்கள். அதில் ஒருவனுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம். அந்த நேரத்தில் அந்த உணவகத்தின் பணியாளர் ஒருவர் அந்த அறைக்குள் கதவை திறந்து வருவதும் போவதுமாக இருந்தார். அந்தப் பணியாளரை கவனித்தால் உள்ளே வரும் ஒவ்வொரு முறையும் அவரது கைகளில் எதனையும் எடுத்து வரவில்லை. அவர் அப்படி மூன்றாம் முறையாக வந்த போது தான், அவர் ஏன் எதற்காக வெறும் கையுடன் வந்து வந்து செல்கிறார் என்கிற விஷயமே எங்களுக்கு விளங்கியது. எங்களுக்கு பின்னால் ஒரு குடும்பம் இருந்ததை சொன்னேன் இல்லையா. அந்த குடும்பத்தில் இருந்த அந்த எட்டு வயது பையன் அவர்களின் மேஜை மேல் இருந்த அந்த அலங்கார பெட்டியில் உள்ள பணியாளரை வரவழைக்கும் பொத்தனை அழுத்திக் கொண்டே இருந்திருக்கிறான். யார் சொல்லியும் கேட்கவில்லை. மூன்றாம் முறை பணியாளர் உள்ளே வந்தபோது கோபம் கொண்ட அந்த பையனின் தந்தை, அந்த அலங்கார பொத்தான் இருக்கும் பெட்டியை பணியாளரின் கைகளில் எடுத்துக் கொடுத்து, நாங்கள் உணவருந்தி கிளம்பும் வரை தயவுசெய்து இந்த பெட்டியை இந்த மேஜையில் கொண்டு வந்து வைக்காதீர்கள். இப்பொழுதே எடுத்து போய்விடுங்கள் எனச் சொல்லிவிட்டார். இதனைக் கேட்டதும் அந்தப் பையனுக்கு கோபம் தலைகேறி அந்த அறையே அதிரும் படியாக தந்தையை பார்த்து போடா எனக் கத்திவிட்டான். அந்தப் பையன் கத்தியதை கேட்டதும் எங்கள் மேஜையில் இருந்த அனைவருக்கும், அந்த பெட்டியை கையில் வாங்கிய பணியாளருக்கும் ஒரு முறை மூச்சு அடங்கி இயல்புக்கு திரும்பியது. எங்கள் மேஜையில் இருந்த நால்வரும் சட்டென திரும்பி அந்த பையனைp பார்க்க, அவன் எதைp பற்றியும் கவலைப்படாமல் கைகளில் வேறதையோ வைத்துக் கொண்டு உருட்டிக்கொண்டிருந்தான். அந்தப் பையனின் அப்பாவுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை. அடுத்தாக எதாவது சொல்லப் போய் இதைவிட மரியாதை இல்லாமல் அந்த பையன் நடந்து கொண்டு விட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதை உணர்ந்தவராய் நொந்துபோய் தலையை கவிழ்ந்துவிட்டார். திரும்பி பார்த்த எங்களுக்கும் தர்மசங்கடமாகி விட்டது. அதே நேரம் எங்கள் நண்பர்களில் ஒருவர் அந்த பையனை பார்த்து சிரித்துவிட, அந்த இடம் மேலும் இறுக்கமானது. உணவக பணியாளரும் அடுத்து என்ன சொல்வதென தெரியாமல் அந்தப் பெட்டியைக் கொண்டு போய் விட்டார், அதன் பின் எதையோ வரவழைத்து, என்னவோ சாப்பிட்டோம். நண்பர்களுக்கு பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. உணவும் அன்றைக்கு ருசிக்கவில்லை, எனக்கோ எவ்வளவு கோபமாக இருந்தாலும் ஒரு பொது இடத்தில் வைத்து தன்னுடைய தந்தையை ஒரு மகன் இப்படி பேசுகிறானே என உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

அதன் பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் கூர்ந்து கவனித்த போது தான் ஒன்று விளங்கியது. அந்தப் பையன் அன்றைக்கு பேசிய வார்த்தைகளுக்கு அவன் மட்டுமே காரணம் அல்ல என்பது. கடந்து இரண்டு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகளில் உளவீயல்ரீதியான புகைப்பட பயிற்சி வகுப்புகளை சொல்லிகொடுக்கும் ஆசிரியராக இருக்கிறேன். அதற்கான பாடதிட்டத்தை தயாரிக்கும் பொழுது தான் அந்த பாடத்திட்டத்துக்கான தயாரிப்பு பணிக்காக குழந்தைகள் சம்பந்தமான பல உளவியல் விஷயங்களை படித்ததோடு மட்டும் அல்லாது நேரிலும் பல்வேறு அனுபவங்களின் அடிப்படையில் பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. முதல் விஷயம் ஒரு கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் எப்படியான புரிதலுடன் இருந்தாலும், தங்களின் குழந்தைகளின் முன்னர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது. இரண்டாவது அப்படியே இருவருக்குமிடையே மனஸ்தாபம் வந்தாலும் பேசிக்கொள்ளும் போது தங்களின் குழந்தைகளின் முன்னால் எப்படியான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பது. மூன்றாவது உங்களின் குழந்தைகளை எப்படியான வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்கிறீர்கள் என்பது. நான்காவது உங்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் எப்படியான நிகழ்வுகளை உங்களின் குழந்தைகள் பார்க்கிறார்கள் என்பது. ஐந்தாவது உங்களின் வீட்டை சுற்றி இருக்கும் சுற்றதார்கள் குறிப்பாக உங்கள் குழந்தைகள் அவர்கள் முன் இருக்கையில் எப்படியான வார்தைகள் பயன்படுத்தபடுகின்றன என்பது. இதையெல்லாம் தாண்டி குழந்தைகள் முதன் முதலில் பேச கற்றுக்கொள்ளும் நாட்களில் எப்படியான வார்த்தைகளை அந்தக் குழந்தைக்கு நாம் சொல்லிக்கொடுக்கிறோம் என்பது. இப்படி சொல்லிகொண்டே போக நூறு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு குழந்தை பேச ஆரம்பித்தவுடன் கண்டிப்பாக பெரும்பாலான குடும்பங்களில் இன்று சொல்லி கொடுக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று அந்த மாமாவ போடா சொல்லு என்பதாக தான் இருக்கிறது. அதற்கும் மேலாக அப்படி அந்தக் குழந்தை மாமாவை பார்த்து போடா எனச் சொல்லி விட்டால் நாம் சிலாகிப்போம் பாருங்கள் யப்பா முடியல. அந்த போடா என்கிற வார்த்தை நம்முடைய முகத்தை நோக்கி திரும்ப வெகுநாட்கள் ஆகாது என்பது நம்முடைய புத்திக்கு என்றக்கும் உரைப்பதே இல்லை. இப்படியான வார்ததைகள் நிறையவே இருக்கின்றன. அவற்றை எல்லாம் சொன்னால் இந்த ஒரு கட்டுரை பத்தாது. இதற்கும் மேல் இன்றைக்கு வெளிவரும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் மற்றும் விளம்பரங்களிலும் தங்களின் வயதுக்கு மீறிய பேச்சுக்களை பேசும் குழந்தைகளை தான் நாம் குடும்பத்தோடு அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வளவையும் செய்துவிட்டு அவர்களிடம் இருந்து மரியாதையான வார்தைகளை எதிர்ப்பார்த்தால் நம்மை என்னவென்று சொல்ல. இன்றைக்கு அந்த குழந்தைகள் அப்படி பேசுவதற்கு காரணமான நாம் தான் முழு முதல் குற்றவாளிகள். அதில் கொஞ்சம் கூட சந்தேகமே வேண்டாம். நாம் கொடுக்கும் தைரியத்தில் தான் நம்முடைய குழந்தைகள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசப் பழகுகிறார்கள். அதுவும் நமக்கு பிடிக்காத பக்கத்து வீட்டுக்கார்களையோ அல்லது எதிர்வீட்டில் உள்ளவர்களையோ நம்முடைய குழந்தைகள் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசிவிட்டால் அதனை கண்டிக்காமல் ஊக்கப்படுத்த பழக்கி இருக்கிறோம். இதனைப் பல இடங்களின் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. இன்றைக்குப் பக்கத்து வீட்டில் உள்ளவர்களையும், எதிர்வீட்டில் உள்ளவர்களையும் நம்முடைய குழந்தைகள் மரியாதை இல்லாமல் பேசுவதை நமக்கு கண்டிக்க திராணி இல்லையெனில், அந்தக் குழந்தைகளின் வார்த்தைகள் நம்மை நோக்கியும் திரும்ப வெகுகாலம் ஆகாது என்பதை கொஞ்சமாவது சிந்தித்தால் நல்லது. மகிழ்ச்சி

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916