இன்று வியர்வை என்பதே துர்நாற்றம் என்றாகிப் போன அவலம்…
இன்று யாரெல்லாம் வியர்வையை துர்நாற்றம் என்கிற மனநிலையை நோக்கி நகர்ந்திருக்கிறோமா, அவர்கள் அனைவருமே, அதனைக் கண்டிப்பாக நம்முடைய அடுத்தத் தலைமுறைக்கும் கடத்துவோம். இந்த மனநிலை என்பது நம்முடைய அடுத்த தலைமுறையின் மனதிற்குள் எவ்வளவு பெரிய மோசமான விளைவை ஏற்படுத்தும் என ஏன் சிந்திக்க மறுக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நடுத்தர வர்த்தகத்தை விட பொருளாதாரத்தில் கொஞ்சம் உயர்வாக இருக்கும் சமூகத்தில் பரவ ஆரம்பித்த இந்த நோய். இன்று அப்படியான பொருளாதார பாகுபாடு எல்லாம் இல்லாத அளவுக்கு எல்லோரிடத்திலும் பரவி வியாபித்து விட்டது. 1982ல் வெளியான எங்கேயோ கேட்ட குரல் என்கிற ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், இரு வேறு கதாபாத்திரங்கள் வயல்வெளியில் உழைத்து வரும் தன்னுடைய கணவன் உடம்பில் படிந்திருக்கும் வியர்வையை எந்தக் கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள் என்பதை மிக சிறப்பாக காட்சிப் படுத்தியிருப்பார்கள். ஒருவர் அதனை நாற்றமாகவும், மற்றொருவர் அதே வியர்வையை, உழைப்பாளிகளின் வியர்வை என்பது கடவுள் கொடுக்கும் பரிசு, அந்த வியர்வையின் மனம் சந்தனத்தையும் பன்னிரையும் விட உயர்வானது என்பதாகவும் எடுத்துக் கொள்வார்கள், இரண்டாவதாக சொன்னது போல் நீங்கள் வியர்வையை சந்தனம், பன்னீர் அளவுக்கு எல்லாம் கொண்டு போக வேண்டாம். அந்த வியர்வையை நாற்றமாக உணராமல் இருந்தாலே போதுமானது. ஆனால் இன்றைய நடைமுறை உண்மை அப்படியானதாக இல்லை. இப்படியான விஷயங்களை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைத் தாண்டி, நம்முடைய அடுத்தத் தலைமுறைக்கு அதனை என்னவாக போதிக்கிறோம் என்பதில் தான், மிக, மிக மோசமான மனநிலையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். வியர்வையை நாற்றம் என மனதளவில் எடுத்துக் கொள்ளும் இன்றைய தலைமுறை கண்டிப்பாக முதலில் அப்படியான வியர்வை சிந்தும் உழைப்பாளிகளை மதிக்கவே மதிக்காது. அதையும் தாண்டி, தான் இன்று இருக்கும் நிலைக்குக் காரணமான, தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்திற்கும் பின்னால் பலதரப்பட்ட தொழிலை சேர்ந்த பல உழைப்பாளிகளின் வியர்வை இருக்கிறது என்பதை தன்னுடைய மனதளவில் அவர்கள் என்றுமே உணரப் போவதே இல்லை.
இன்று பல வீடுகளில் குழந்தைகள் தன்னுடைய அம்மாவோ, அப்பாவோ வெளியே போய் பல்வேறு அலுவல்களை முடித்துவிட்டு வியர்வையோடு வருகையில், அவர்களை முதலில் குளித்துவிட்டு வாருங்கள் நாற்றம் அடிக்கிறது என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகள் அப்படி சொல்வது தவறு என அவர்களுக்கு சொல்லிப் புரியவெல்லாம் வைப்பதில்லை. காரணம், அந்தப் பெற்றொர்களின் மனதிலேயே அது துர்நாற்றம் என்று தான் பதிவாகி இருக்கிறது. இத்தனைக்கும் அடிப்படைக் காரணம் உங்களின் உடலில் வியர்வையினால் துர்நாற்றம் வீசுகிறதா என்கிற ஒரே ஒரு விளம்பர வாசகம் தான். அப்படியான வாசகம் நம்மை நோக்கி வருவதற்கு முன்பு வரை, நமக்கு வியர்வை என்பது உழைப்பின் சின்னம். வியர்வை என்பது சாதனையின் வெளிப்பாடு. அது ஒரு மிகப்பெரும் மரியாதை. இப்படி நிறையவே சொல்லலாம். ஆனால் இன்றைக்கு நம்முடைய ஆரோக்கியதிற்காக என சொல்லி உருவாக்கப்பட்டிருக்கும் பல உடற்பயிற்சி கூடங்களே கூட குளிருட்டப்பட்ட வசதியுடன் தான் நிறுவப்படுகின்றன. அதாவது உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கூட நம்முடைய உடலில் இருந்து வியர்வை என்கிற ஒன்று வெளிவந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறோம். ஒரு வேளை அப்படி வியர்த்துவிட்டால் அதிகமாக சலித்துக் கொள்கிறோம். வியர்வை என்பது நம்முடைய உடற் பயிற்சியின் ஒரு முக்கியமான அங்கம் என்பது நமக்கு உரைக்காத அளவுக்கு நம்முடைய மூளையை இந்த விளம்பர மொன்னைகள் தயார் படுத்திவைத்திருகிறார்கள். வியர்வை வெளியேறாத உடம்பு எப்படி உருப்படும், கண்டிப்பாக வாய்ப்பேயில்லை. இதில் தினமும் உடற்பயிறசி கூடத்திறகு போய் வந்த பிறகு, இன்று தங்களுடைய உடலில் இருந்து எவ்வளவு கலோரிகளை எரித்திருக்கிறோம் என்கிற கணகெல்லாம் தவறமால் எடுத்து விடுகிறோம். அப்படியான கலோரி எரிப்பு கணக்குகளை பார்க்கையில் என்ன சொல்வதென ஒன்றும் விளங்கவில்லை.
இப்படி வியர்வையை நாற்றமாக எடுத்துக்கொள்ளும் சமூகம் உருவாகும் வரை. அனைவரும் போய் குளிருடப்பட்ட அறைகளில் உட்கார்ந்து கொண்டு, பீட்சா, பர்கர்களை சாப்பிட்டு, தாகத்திற்கு குளிர்பானங்களை பருகிக் கொண்டு மிக, மிக ஆரோக்கியமாக இருப்போம். ஒரு வகையில் யோசித்துப் பார்த்தால் இன்றைய தலைமுறை அப்படியான சட்டையே கசங்காத, உடலை வளைக்காத, குனியாத, நிமிராத, நடக்காத, இருந்த இடத்தைவிட்டு நகரவே அவசியப்படாத, நோகாமல் நோன்பு கும்பிடும் வேலையைத் தான் எதிர்பார்க்கிறது. அப்படியான வேலை வாய்த்த பிறகு, திருமணத்திற்கு பெண் பார்க்கும் விஷயத்தில் கூட அப்படியே தன் முன்னால் இருக்கும் மடிகணினியில் கூகிள் ஆண்டவரின் தயவில் தேடி தனக்கான பெண்ணாக நம்பும் அல்லது நம்பவைக்கப்படும் ஒருவரை கண்டுபிடித்து, ஒருவேளை அப்படி கண்டுபிடிக்கும் பெண்ணோடு திருமணம் வரை போய் சுமூகமாக வாழ முடிந்தால், குழந்தைகளை பெற்றுக் கொள்வதே பெரிய வேலையாக பொறுப்பாக எண்ணி, அதையும் தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு, அதற்கும் தப்பி தவறி வேர்த்து விட கூடாது என படுக்கை அறையிலும் குளிர்சாதன பெட்டியை தவணையிலாவது வாங்கி மாட்டி, பின்னர் வாழ்க்கையில் தேவையான அளவு சம்பாதித்து ஆயிற்று, இனி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுக்கையில், அப்பவும் வியர்வை வராமல் இருக்கும் படியாய் யோசிக்கையில், குழந்தை பெற்றுகொள்ள முடியாமல், வியர்வையும் வராமல், அதற்கும் தனித்துவமான மருத்துவமனை மருத்துவர்களை நாடி அலோசித்து, இதுவரை சம்பாதித்த பணத்தில் பாதியை அந்த மருத்துவரின் கைகளில் கொடுத்து, ஒரு வழியாக குழந்தை பிறந்தவுடன் அதனையும் குளிருடப்பட்ட அறையில் பாதுகாத்து வளர்த்து, மிகச் சிறப்பானதொரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம். சரியா?. மேலே சொன்ன இப்படியான மனநிலையை நாம் தக்க வைக்கும் வரை. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும், சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையிலும், நாம் உடலை மறைக்க பயன்படுத்தும் உடையிலும், நாம் வசதியாக வாழும் வீட்டிலும் இன்னும், இன்னும், இன்னும் நிறைய என அனைத்திலும், கண்ணுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் பல பேரினுடைய ரத்தமும், வியர்வையையும் பற்றி அறியாத வரை. அதனை உணர்ந்து கொள்ள நம்முடைய அறிவாளித்தனம் தயாராகாத வரை, அதனையும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறாத வரை, மேலே சொன்ன இவ்வளவு விஷயங்களுக்கு பின்னாலும் சில, பல பெருநிறுவனங்களின் வணீக சந்தையின் கொடூர கரங்களுக்குள் நாம் மிக, மிக மோசமான பலிகாடாவாக இருக்கிறோம் என்பதை நாம் என்றைக்குமே உணரப்போவதும் இல்லை. அவர்களும் நம்மை வச்சு ஆடும் சாவு விளையாட்டுகளை நிறுத்தப் போவதும் இல்லை. மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916