வாழ்ந்து பார்த்த தருணம்…97

வார்த்தைகளின் வழியே நம்பிக்கை விதைத்தப் பாடலாசிரியன்…

எப்பொழுதும் போல் இன்றைய பதிவை நண்பர்களுக்கு அனுப்பிய பிறகு பகிரியில் நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்திருந்தது. அந்த வேண்டுகோள் இன்று கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள், அவரைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் எனக் கேட்டிருந்தார். பொதுவாக என்னுடைய எழுத்துக்களை எந்த விதமான அழுத்தத்ததிற்கு இடையேயும் எழுதுவதில்லை. காரணம் கண்டிப்பாக அப்படியான எழுத்து என்னுடைய ஆன்மாவில் இருந்து வெளிப்படாது. அப்படி ஆன்மாவில் இருந்து எழுத முடியாத போது, அது உயிரற்று இருப்பதை பலமுறை கவனித்திருக்கிறபடியால், அழுத்தம் காரணமாக எழுதுவதை முற்றிலும் தவிர்த்து விடுவேன். இதற்கு முன்னர் அப்படி எழுதி, பல முறை எழுதியது எனக்கு பிடிக்காமல் அப்படியே அழித்திருக்கிறேன். அது ஒரு வித பயிற்சியைப் போல, அதன் பின்னர் அழுத்தத்தினால் எழுதுவதில்லை என முடிவெடுத்தேன். தெரிந்தோ, தெரியாமலோ இன்று பதிவிட்ட பதிவில் குறிப்பிடிருந்த விஷயமே வார்த்தையை பற்றி தான் எனும் போது, அப்படியான வார்த்தைகளின் வழியே நம்பிக்கையை விதைத்த ஒரு ஆகச் சிறந்த கவிஞனை, பாடலாசிரியனை பற்றி எழுதுவதற்கு ஆழுத்தம் ஏதுமின்றி ஆன்மா தயாராக இருந்ததால் இந்தப் பதிவு. சில வருடங்களுக்கு முன்பு திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பு உணவகத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம், அந்த நேரங்களில் உணவகத்துறையில் வேலை நேரம் பெரும்பாலும் காலை எட்டு மணிக்கு தொடங்கினால், எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு உணவகத்தில் இருந்து தங்குமிடத்திற்கு வந்து சேர இரவு பன்னிரெண்டு மணிக்கும், அதற்கும் மேலும் கூட ஆகும். ஆக ஒரு நாளைக்கு குறைந்தது பதினாறு மணி நேரத்திற்கும் மேலாக வேலை இருக்கும். தினமும் வேலைக்கு வருவதற்கு முன்பு தயாராவதற்கும், இரவில் அசுவாசமாகி படுப்பதற்கும் உள்ள நேரத்தை கணக்கிட்டால் ஒரு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் தான் தினசரி தூக்கமே. வேலையிலும் பெரும்பாலான சமயங்களில் பல மணி நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டியிருக்கும். அப்படி தினமும் வேலையை முடித்து விட்டு தங்குமிடத்திற்கு இருபது நிமிடம் நடந்து செல்ல வேண்டும். அப்படி செல்கையில், கூடவே மூன்று அல்லது நான்கு நண்பர்கள் கண்டிப்பாக உடன் இருப்பார்கள். வேலை முடிந்து போகும் போது எல்லோரிடத்திலும் அன்றைய வேலையின் அழுத்தமும், மனச் சோர்வும் மனத்துக்குள் உழன்று கொண்டிருக்கும். அது மாதிரியான அழுத்தங்களில் இருந்து தப்பிக்க அல்லது அதிலிருந்து விடுபட கூடவே வரும் நண்பர்களுடன் இணைந்து இருபது நிமிட நடையில் ஒரு பாடலை மிக சத்தமாக அனைவரும் சேர்ந்து பாடிக் கொண்டே நடப்போம். அந்தப் பாடல் சுமைத்தாங்கி திரைப்படத்தில் இடம்பெற்ற, கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலான மயக்கமா கலக்கமா எனும் பாடல் தான் அது.

ஒரு பாடல் வரி ஒருவனை எந்த அளவு மன அழுத்தில் இருந்து, வேலையின் சோர்விலிருந்து விடுபட வைக்கும் எனக் கேட்டால், என்னால் அதனை விளக்கி எல்லாம் கூற முடியாது. அது ஒரு மிகப் பெரும் தவநிலை. இதோ இதனை எழும்போது கூட அந்த நாட்களும், நண்பர்களோடு நடந்து போன அந்தத் தெருவும், அந்தப் பாடலும் நினைவலைகளில் தோன்றி கண்களின் ஓரத்தை ஈரமாக்குகின்றன. அந்த நேரங்களில் கண்ணதாசனை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தால் எங்களை மனசோர்வில் இருந்து வெளிக் கொணர்ந்த அந்த பாடலின் வரிக்களுக்காகவே அவரின் காலை என் கண்ணீரால் கழுவியிருப்பேன். இப்படி என்னுடைய வாழ்வில் திரையிசை பாடலுக்கும், திரையரங்குக்குமான பந்தம் மிக, மிக உன்னதமானது. அதைp பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசலாம். அப்படியே இன்றைக்கு வருவோம். இன்றும் அப்படியான பாடல்கள் நிறையவே உண்டு. எல்லா பாடல்களையும் பற்றி எழுதினால் நாடு தாங்காது என்பதால் ஒரே ஒரு பாடலைp பற்றி மட்டும். என்னுடைய தம்பி ஒருவன் தன்னுடைய அலைப்பேசியின் தன்னை அலைப்பவர்களுக்கான அழைப்பு மணியாக ஒரு பாடலை வைத்திருந்தான். அந்தp பாடல் புதுப்பேட்டை படத்தில் இடம் பெற்ற ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எனt தொடங்கும் பாடல். நா.முத்துகுமார் எழுதி யுவன் இசையமைத்த பாடல். கண்டிப்பாக என்னால் வாழ்வில் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று. ஒரு பாடலாசிரியன் எழுதும் பாடலின் வரிகள் வாழ்வின் ஒரு இக்கட்டான தருணத்தை கடந்து வர அது கொடுக்கும் நம்பிக்கை இருக்கிறது இல்லையா,?. அது ஆயிரம் முறை கடவுளை தரிசனம் செய்ததற்கு சமம். அந்தp பாடலின் முதல் நான்கு வரிகளை தான் தம்பி தனது அலைப்பேசியின் மணியாக வைத்திருந்தான். அந்த நான்கு வரிகள்.

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்

இந்தp பாடலை ஊன்றி ரசித்து லயித்து கேட்டால், இந்த வரிகள் கொடுக்கும் நம்பிக்கைக்கும், ஆற்றலுக்கும் முன்னால், நீங்கள் ஆயிரம் முறை, ஆயிரம் கடவுள்களை நோக்கி வேண்டினாலும் கிடைkகாதது இந்த பாடல் வரிகளில் கிடைக்கும் எனs சொல்வேன். இங்கே சொல்லியிருப்பது கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வதாக யாருக்கேனும் தோன்றலாம். ஆனால் இந்த வாழ்க்கை கொடுக்கும், அழுத்தத்தையும், எதிர்பார்ப்பின் மீதான ஏமாற்றத்தையும், அடியையும் தாங்க முடியாது நிர்கதியாகி நிற்கும் போது. ஒரே ஒரு பாடல் உங்களை மீண்டு எழ வைக்கும் என்பதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை. மேலே உள்ள பாடலின் வரிகளே அதற்குச் சாட்சி. ஒரு முறை கண்களை மூடி ஒலி வாங்கியை காதுகளுக்குள் பொருத்தி, ஆழமாக கவனித்து, ஆழ்மனதில் இருந்து இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். இங்கேச் சொல்லியிருப்பது எப்படியான சத்தியமான உண்மை என்பது உங்களுக்கு புரியும். இப்படி ஒரு பாடல் இல்லை நா.முத்துகுமாருடைய பல பாடல்கள் பல பேருக்கு ஆறுதலாகவும், தேறுதலாகவும் இருந்திருக்கின்றன. அப்படியான நா.முத்துகுமாரின் பிறந்த தினமான இன்று அவரை நினைவில் கொள்வதின் வழியே வாழ்வின் மீதான காதலை தக்கவைத்து கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த வாழ்வின் மீதான காதலுக்கும், மொழியின் மீதான காதலுக்கும், காரண கர்த்தாக்களில் முக்கியமானவரான என்றும் தன் வரிகளால் சகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நா.முத்துக்குமாருக்கு என்னுடைய ஆன்மாவின் வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916