வாழ்ந்து பார்த்த தருணம்…102

நாடி நரம்புகளை தெறிக்கவிட்ட ஒரு அதகளமான இசை மேடை….

2017ம் வருடம் பிரான்சில் நடைபெற்ற ஒரு சர்வதேச குரல் தேடல் மேடை. ஒருவரை கையைப் பிடித்து அழைத்து வந்து மேடையிலிருக்கும் பியானாவின் முன் அமரவைக்கிறார்கள். வந்தவரின் கரங்கள் பியானாவை மீட்ட ஆரம்பிக்கிறது. அவரின் குரல்கள் சில உச்சதாயில் போகின்றன. விருப்ப குறியிட்டினை தாங்கியிருக்கும் சுழல் நாற்காலியின் பின்னனியில் அமர்ந்திருக்கும் நடுவர்கள் நான்கு பேரும் உச்சதாயில் ஒலிக்கும் குரலை கூர்ந்து கவனிக்க, சரியாக நாற்பத்தி ஐந்தாவது நொடியில் பின்னனி இசையுடன் பாடுபவரின் குரல் சற்று கீழிறங்கி அப்படியே பாடலுக்குள் நுழைகிறது. அரங்கம் அதிர ஆரம்பிக்கிறது. ஐம்பத்து இரண்டாவது நொடியில் முதல் நடுவரின் சுழல் நாற்காலி திரும்புகிறது. அதுவும் எப்படி, அந்த நடுவரின் அதகளமான ஆட்டத்துடன், 1.03வது நிமிடத்தில் அடுத்த நடுவர், 1.26வது மூன்றாம் நடுவரின் சுழல் நாற்காலியும் திரும்ப அரங்கம் அதிர அதிர ராப் பாடல் ஒன்று பாடுபவரின் தெறிக்கும் குரலில் மிகப் பெரும் உற்சாகத்தை வெளியிட்டபடி அரங்கத்தை அதிரவிடுகிறது. போனக் கட்டுரையில் சொல்லியிருந்தது போல் சர்வதேச பாடலை தேடி கேட்கும் ஆவலில் இணையத்தில் தேடுகையில், ஒரு குறிப்பிட்ட குரல் தேடல் மேடையில் நடந்தவை தான் மேலே சொல்லியிருப்பது. பொதுவாக எனக்கு ராப் பாடல் என்றால் கொஞ்சம் அசூயை. பெரும்பாலும் அப்படியானப் பாடலை கேட்க நேர்கையில், கேட்பதையே பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். காரணம் அது நம்முடைய ரசனைக்கு ஒத்துவராது என்கிற எண்ணம் தான். இந்தியாவின் ஒரு முளையின் தென்பகுதியில் அமர்ந்து சர்வதேச இசையை தேடுகையில், இது போன்ற ரசனைக்குள் அடங்காதவைகளும் வருவதை தவிர்க்க முடியாது. ஆனாலும் மேலே சொன்ன குரல் தேடலில் பாடப்பட்ட ராப் பாடலை அப்படி தவிர்த்து விட்டு கடந்து செல்ல இயலவில்லை. மொத்த அரங்கத்தையும், நடுவர்களையும் பெரும் உற்சாகத்தில் ஆட விட்ட பாடல் அது. அப்படியே என்னுடைய காதுகளுக்குள் மீண்டும், மீண்டும் ஒலித்தபடி அதிரவிட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பாடல் ராப் இசை உலகின் கடவுள் எனப் போற்றப்படும் எமினம் (Eminem) என்கிற மிகப்பெரும் பாடகனின் Lose Yourself என்கிற பாடல் தான் அது.

அந்த மேடையில் Lose Yourself என்கிற பாடலை கேட்ட பிறகு, அதன் அசலான பாடலை தேடிக் கேட்டேன். அசல் பாடலும் என்னை ஈர்க்கத் தவறவில்லை. ஆனாலும் என்னைக் கவர்ந்த அந்தப் பாடலுக்குள் வேறு ஒரு ஆன்மாவை கண்டு கொள்ள தவறுகிறேன் எனத் தோன்றியது. இந்தப் பாடல் என்னை ஈர்க்கிறது, நன்றாக இருக்கிறது என்பதையெல்லாம் தாண்டி வேறு ஒரு உன்னதமான தன்மையை இந்த பாடல் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. அதனை என்னால் கண்டு கொள்ள முடிவயில்லை என என் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. உடனே ராப் இசையின் கடவுளான எமினம் (Eminem) பற்றி தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அவரது பிறந்தநாள் அன்று ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த மிகச் சிறப்பான கட்டுரை ஒன்று வாசிக்கக் கிடைத்தது. அதனை வாசித்து முடிக்கையில் ஒரு விதமான உணர்வெழுச்சியான மனநிலைக்கு அந்தக் கட்டுரை என்னை இட்டுச் சென்றது. அப்படியே அந்த உணர்வெழுச்சியான மனநிலையில் எமினம் (Eminem) என்கிற மிகப் பெரும் பாடகனின் Lose Yourself என்கிற பாடலை கேட்டால், அந்த பாடலின் ஆன்மா எனக்குள் மிகச் சிறப்பாக இறங்க ஆரம்பித்தது. அதுவும் அந்தப் பாடலின் காணொளில் எமினம் (Eminem)த்தின் கண்களில் தெறிக்கும் ஏக்கம் கலந்து சாதிக்கும் வெறி அப்படியே என்னுடைய அழ்மனம் வரை இறங்கியது. வாய்ப்பேயில்லை, அந்த மனிதனின் கண்களில் தான் என்ன மாதிரியான வெறித்தனமான தேடல். Lose Yourself என்கிற அந்தப் பாடல் பல பேருடைய வாழ்வின் மீதான நம்பிக்கையை தூக்கி நிறுத்தியிருக்கிறது. பல பேருக்கு இந்தப் பாடல் தான் வாழ்நாள் உயிராற்றலே என்று சொன்னால் கண்டிப்பாக அது மிகையான வார்த்தையில்லை.

பொதுவாக நாம் காலம் காலமாக கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் ரசனை எனும் வட்டத்தில் இருந்து, சற்று மாறுப்பட்ட வேறு சில இசைக் கோர்வைகளை கேட்க நேரும் போது, அப்படியான வேறுபட்ட இசை தொகுப்பின் பின்னனியின் அடிப்படையை தேடிப் படித்து தெரிந்து கொண்டு கேட்டல் நலம். இல்லையெனில் அப்படியான பாடல்களை மிக மோசமாக அலட்சியப்படுத்திவிடுவோம். கடைசி வரை அந்த இசைக்குள் இருக்கும் ஆன்மாவை கண்டடையவே முடியாது. அதுவும் போக இந்தப் பாடலின் தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ள Lose Yourself என்கிற வார்த்தையை தமிழில் சொல்வதானால், உன்னை இழந்துபோ என்பதாக வரும். இந்த ஒற்றை வார்த்தை வெளியிடும் அர்த்தம் ஓராயிரம். அந்தப் பாடலின் தலைப்பே என்னை வெகுவாக ஈர்த்தது எனச் சொல்லலாம். இந்த வாழ்வு கொடுக்கும் அனைத்துவிதமான அழுத்தங்களையும், சோதனைகளையும் தாண்டி, அதே நேரம் வாழ்வின் மீதான தீராக் காதலுடன் வெறியுடன் எதனையும் எதிர்கொள்ளும் ஆற்றலை உணரும் ஒருவன் எப்படியானவனாக இருப்பான் எனத் தேடினால்?. கண்டிப்பாக அதனை Lose Yourself பாடலில் வரும் எமினம் (Eminem)த்தின் கண்களில் உங்களால் காண முடியும். இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் எமின (Eminem)த்தை பற்றிய கட்டுரை, அவரின் Lose Yourself பாடலை குரல் தேடலில் பாடிய இணைய காணொளி மற்றும் Lose Yourself பாடலின் அசல் இணைய காணொளி என வரிசைப்படுத்தி தேடிப் பிடித்து வாசியுங்கள், கேளுங்கள். இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களுக்கு என்னிடமிருந்து ஒரே கண்டிப்பான வேண்டுகோள் மட்டுமே, எமினம் (Eminem) என்கிற ராப் இசையின் கடவுளை பற்றிய கட்டுரையை படித்துப் பார்க்காமல், Lose Yourself பாடலை கண்டிப்பாக கேட்க வேண்டாம். காரணம் பாடலின் ஆன்மா எமின (Eminem)த்துக்குள் இருக்கிறது. எமின (Eminem)த்தின் ஆன்மா அவர் கடந்து வந்த வலியான வாழ்க்கைக்குள் இருக்கிறது. எமின (Eminem)த்தின் ஆன்மாவுக்குள் இருந்து கொண்டு இந்த பாடலின் ஆன்மாவை கண்டடையுங்கள். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916