வயலின் கம்பிகளின் வழியே கண்டைந்த கவிதை…
SEÑORITA என்கிற பாடலைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன், படிக்காதவர்கள் 101வது கட்டுரையில் அந்தப் பாடலைப் பற்றி படிக்கலாம். அந்தப் பாடலை கண்டைந்ததும் Alan Milanனின் வயலின் இசையின் வழியே தான். இந்த Alan Milanயைப் பற்றியும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பேன். Alan Milan ஒரு மிக அட்டகாசமான வயலின் இசைஞன். இணையத்தில் சர்வதேச குரல் இசை தேடலின் வழியே என் ரசனைக்குள்ளாக வரும் பாடலை தேடிக் கேட்டுக் கொண்டிருக்கையில், அந்தப் பாடலின் வரிசையின் இடையே எட்டிப் பார்த்த ஒரு வயலின் இசைஞன் தான் Alan Milan. இணையத்தை பொறுத்தவரை ஒருவரின் இசையை நீங்கள் கேட்டு முடித்தவுடன், அடுத்ததாக என்ன மாதிரியான இசைக் கோர்வை உங்களுடைய ரசனையுடன் ஒத்துப் போகும் என அதுவே சிலப் பரிந்துரைகளை உங்களுக்குக் கொடுக்கும். தேர்ந்தெடுப்பதும் தேர்ந்தெடுக்காததும் நம்முடைய விருப்பம் சம்பந்தப்பட்டது. அப்படி Alan Milanனின் வயலின் இசையில் SEÑORITA கேட்டு முடித்ததும், என்னுடைய கண் முன் தோன்றிய பரிந்துரைப் பட்டியலில் வந்ததை தான் தவிர்க்காமல் கேட்போம் எனக் கேட்டேன். அப்படி கேட்டதற்கு காரணம், சந்தேகமேயில்லாமல் வயலின் மீது எனக்கு இருக்கும் காதலும், அப்படியான வயலினை மிக, மிக லாவகமாக Alan Milan வாசித்த விதமும் தான். எனக்குப் பிடித்தமான, மிகப் பெரும் காதலுடன் என்னுள் விரும்பும் இசை கருவி ஒன்றை, அதே அளவு காதலுடன் ஒருவன், ஆளுமை செய்து இசை மீட்டுகிறான் என்றால் அது எப்படியானதாக இருக்கும் என்பது Alan Milanனின் இந்த இசை கோர்வையை கேட்கையில் விளங்கும். அப்படி Alan Milanனின் இசை அருவியில் தெறிக்கவிட்ட பாடல் DANCE MONKEY எனும் இணையத்தை தெறிக்கவிட்ட பாடலின் வயலின் இசை வடிவம் தான். என்னுடைய காதுகளுக்குள் இசை ஜாலத்தை நிகழ்த்தியது.
பொதுவாக பெரும்பாலானவர்கள், அசல் பாடலை முதலில் கேட்டு விட்டுத் தான், அதன் பின் அதேப் பாடலை பல்வேறு இசை கருவிகளின் வழியே இணையத்தில் வாசித்திருப்பவர்களின் வாசிப்பைத் தேடிக் கேட்பார்கள். இங்கேப் பெரும்பாலானவர்களிடம் ஒரு நல்லப் புகழ் அடைந்தப் பாடல் அதன் அசல் பாடலாக அவர்களின் நண்பர்களாலோ அல்லது வேறு யாராலோ பரிந்துரை செய்யப்படும். ஆனால் என்னுடைய கதை அப்படியே தலைகீழானது. அப்படி எந்தப் பரிந்துரையும் இல்லாமல், இசைக் கேட்க வேண்டும் என்கிற மனநிலையை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அப்படியே சர்வதேச குரல் தேடலின் வழியே தேடிக் கொண்டிருந்தால், என்னுடைய ரசனையுடன் ஒத்துப் போகும் சில முத்துக்கள் வந்து விழும். அப்படிக் கண்டைந்த வயலின் முத்து தான் Alan Milan. Alan Milanனின் வயலினை கேட்ட பிறகு, Alan Milanனின் வயலினின் வழியே என்னுடைய ரசனைக்குள் ஈர்க்கப்படாத எந்த ஒருப் பாடலும், எனக்கு ஒத்துவராது எனத் தோன்றிவிட்டது. அப்படித் தான் சர்வதேச குரல் தேடலின் வழியே பாடலை கண்டடைவதைத் தாண்டியும், இணையத்தில் Alan Milanனின் வயலின் தந்தி கம்பிகளின் வழியேயும் ஒவ்வொரு பாடலாக கண்டைந்து கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த அளவில் Alan Milanனின் வயலின் வாசிப்பின் வழியே கேட்கும் இசை கோர்வை ஒன்று மிகவும் பிடித்து விட்டதென்றால், அதனை எத்தனை முறை திரும்ப, திரும்பக் கேட்பேன் என்பதற்கு கணக்கே கிடையாது. தினமும் கண்டிப்பாக தோராயமாக மூன்று கீலோ மீட்டர்களாவது அதிகாலை நடை போவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அப்படி என்னுடைய நடையில் என்னுடன் என் காதுகளின் ஒலி வாங்கியின் வழியே கண்டிப்பாக குறைந்தது, Alan Milanனின் மூன்று வயலின் பாடல்களாவது பயணித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் அதிகாலை ஏகாந்த காற்று சுற்றி சுழன்று உடலினைத் தீண்டிச் சென்று கொண்டிருக்க, நடைபோகும் போது கண்களின் எதிரே பெரும்பாலும் பெரும் வெட்ட வயல்வெளி, அப்படி நடக்கும் சாலையும், அந்த அதிகாலையில் பெரும்பாலும் தன்னுடைய பரபரப்புக்குள் இன்னும் உள்நுழையாத நேரம், சூரியன் தன்னுடைய கதிர்களை மெதுவாக வெளிகொணரும் தருணம் என சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களும் அத்துடன் மிதமான நீங்கள் விரும்பும் வயலின் இசையும் சேர்ந்தால்…
DANCE MONKEY என்கிற பாடலை Alan Milanனின் வயலினில் கேட்ட பிறகு அசலான பாடலைத் தேடிக் கேட்டால், அது ஒரு அட்டகாசமான அனுபவம். ஒரே வரியில் அந்த பாடலை பற்றிச் சொல்வதானால், வாழ்வின் மிகப் பெரும் அனுபவத்தை தனக்குள் வைத்திருக்கும் இளைஞர்களின் அதகளமான ஆட்டம் தான் இந்தப் பாடல். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதை அசலான பாடலைப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். TONES AND I என்கிற ஆஸ்திரேலிய பாடகியின் அதகளமான குரலில், அதைவிட அதகளமாய் படம் பிடிக்கப்பட்ட பாடல் தான் DANCE MONKEY. இந்தப் பாடலின் அதகளமான ஆட்டத்தை, இந்தப் பாடலை எத்தனை பேர் கண்டு ரசித்திருக்கிறார்கள் என்பதே சொல்லும். இந்தப் பாடலை Alan Milanனின் வயலின் கோர்வையில் கேட்கையில், எனக்கென்னவோ அசல் பாடலையே Alan Milanனின் வயலின் இசை கோர்வை சில இடங்களின் தூக்கி சாப்பிட்டுவிடுவதாக தோன்றுகிறது. குறிப்பாக DANCE MONKEY என்கிற பாடலுடைய Alan Milanனின் வயலின் இசை கோர்வையில், தொடக்கமே அதகளமாய் தான் ஆரம்பிக்கும். காரணம், பாடலின் அமைப்பே அப்படித் தான். அதையும் தாண்டி அந்த வயலின் இசை கோர்வையில் 1:08 நிமிடத்தில் இருந்து தொடங்கும் இடத்தில் இசை மாற்றம் ஒன்று வரும் பாருங்கள் யப்பா வாய்ப்பேயில்லை. அதுவும் அந்த நிமிடத்தில் இருந்து அப்படியே ஆன்மாவின் உள்ளே இறங்கி, அப்படியே மேலே கொண்டு போய், நதியில் மிதக்கும் தக்கையை போல் மனம் மாறி, அப்படியே அங்கிருந்து காட்டாறாய் பெருக்கெடுத்து, அருவியாய் கிழிறங்கி, அதன் பின் மீண்டும் நதியாக மாறி, சலனமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும், இவையனைத்தும் Alan Milanனின் வயலின் தந்திக் கம்பிகளில் வழியே வழிந்தோடும் இசைக் கவிதையாய் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது, இந்தப் பாடலினுடைய Alan Milanனின் வயலின் கவிதையினையும் மற்றும் அசலான DANCE MONKEY என்கிற பாடலையும் இணையத்தில் தேடிகேட்டு, பாடலின் ஆன்மாவுக்குள் நுழைந்து அருவியாய் ஆர்ப்பரியுங்கள், மனம் தக்கையை போல் கவிதையாய் மிதக்கட்டும்…மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு 917171925916