ஒரு அதகளமான திரை முன்னோட்டமும், ஆண் என்கிற ஆன்மாவின் உண்மையான அர்த்தமும்…
நேற்று காலை எழுந்து வழக்கப்படியான வேலைகள் மற்றும் உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு , அலைபேசியை எடுத்து இணையத்தை சொடுக்கினால், முகநூல் பக்கத்தில் பக்கத்தில் என்னுடைய சகோதரன் பகிந்திருந்த தமிழின் தவிர்க்கவே முடியாத ஒரு முக்கியமான திரைப்படத்தின் முன்னோட்டம் ஒன்று கண்ணில் பட்டது. உடனடியாக ஒலிவாங்கியை காதுகளில் பொறுத்தி முன்னோட்டத்தைப் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது, மிக, மிக நேர்த்தியான படதொகுப்புடன், அதகளமாய் நச்சென்று தெறியாக இருந்தது முன்னோட்டம். இவ்வளவு தூரம் ஒரு முன்னோட்டதில் அதகளமாய் தெறிக்கவிட்ட அந்த திரைப்படம் நாயகன். நாயகன் வெளிவந்த புதிதில், சிறுவயதில் அந்த வயதுக்கே உரியதான அனுபவ அறிவோடு அதனைப் பார்த்த போது அதன் வீச்சு அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை. அந்த வயதில் திரையில் தோன்றும் எழுத்துகளில் அதிகமாக என் மனம் தேடியது சண்டையக் காட்சி என்கிற எழுத்துக்கள் தவறாமல் திரையில் தோன்றுகிறதா என்பதைத் தான். அதனால் அப்படியான மனநிலையில் இருந்து நாயகன் திரைப்படத்தை அணுகுகையில் என்னுடைய அப்பொழுதைய ரசிப்பு வட்டத்தினுள் அந்தத் திரைப்படம் அடைபடவில்லை. அதனாலேயே நாயகன் திரைப்படத்தில் வரும் தன் மகனின் இறப்பு தாங்காமல் கமல் அழும் காட்சியை அப்பொழுதைய என்னுடைய நட்பு வட்டத்துக்குள் இருக்கும் நண்பர்களால் (என்னையும் சேர்த்தே சொல்கிறேன்) அதிகமாக எள்ளி நகையாடப்பட்டது. இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான். அதன்பின் நாயகன் திரைப்படம் என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிக, மிக பெரியது. இருந்தாலும் இயக்குநர் மணிரத்தினத்தின் மீது இன்றளவும் எனக்கு பல்வேறு விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் தாண்டி அவருடைய இயக்கத்தில் வெளிவந்த மிக முக்கியமான ஒரு மைல்கல் என்றால் அது நாயகன் தான். நாயகன் திரைப்படம் வெளியான அன்றைய காலகட்டதினுடைய மணிரத்தினத்தின் ரத்தினத்தை இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. காரணம் சமீப ஆண்டுகளில் மணிரத்தினத்தின் ரத்தினத்தை தேடி திரையரங்கு போய் வாங்கிய அடியின் வலி இன்னும் உடம்பில் மிச்சமிருக்கிறது.
பொதுவாக நாயகன் திரைப்படத்தின் மீது ஒரு மிகப்பெரும் குற்றச்சாட்டு உண்டு. அது என்னவெனில் நாயகன் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படமான காட்பாதர் திரைப்படத்தின் அப்பட்டமான நகல் என்பது தான் அது. திரைத்துறையினுள் பணி செய்து கொண்டிருந்த போது அந்தக் குற்றச்சாட்டை பல முறை பல விவாதங்களில் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறேன். ஆனால் பின்னாட்களில், அப்படியான குற்றச்சாட்டை முன்னிட்டு பேசிய பேச்சுக்களை தாண்டிய பல விஷயங்கள் அந்தத் திரைப்படத்தில் இருக்கின்றன என்பதும், அதை கவனிக்கத் தவறியிருக்கிறேன் என்பதும் பின்னர் விளங்கியது. பொதுவாக காட்பாதர் மற்றும் நாயகன் இரண்டையுமே பார்த்திருக்கிறேன் என்ற நிலையில் இருந்து கொண்டு, என்னளவில் இரண்டையும் ஒப்பிடுவதே தவறு எனத் தோன்றுகிறது. கண்டிப்பாக நாயகன் காட்பாதரின் பாதிப்பில் உருவானது தான் என்றாலும், அப்பட்டமான நகல் அல்ல என்பது என்னுடைய ஆழமான எண்ணம். நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் இது நகல் அல்ல என்பதை இன்றும் பறைசாற்றி கொண்டே இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் கண்டிப்பாக காட்பாதரின் நகல் போல் தோன்றும் ஒரு திரைப்படம் தான் நாயகன். அதற்கு மிக முக்கியமான பிரதானமான காரணம், காட்பாதரில் வரும் மார்லன் பிராண்டோவின் கதாபாத்திர வடிவமைப்பை கமல் என்கிற வேலுநாயகர் அப்பட்டமாய் கடைபிடித்தது தான். அதுவும் படம் முழுவதும் அதைப் போல் தான் கமல் நடித்தார் என்கிற குற்றச்சாட்டையும் முன் வைக்க முடியாது. படத்தின் முக்கியமான சில பகுதிகளில் அப்படியான மார்லன் பிராண்டோவின் கதாபாத்திர வடிவமைப்பை அப்படியே தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பொறுத்துவதின் வாயிலாக அந்த கதாபாத்திரம் மிகச் சிறப்பாக உயிர் பெறும் என தோன்றியதன் விளைவாக தான் கமல் அப்படி நடித்தார் என்கிற கண்ணோட்டத்தில் தான் அதனைப் பார்க்கிறேன். அது ஒரு வகையில் கமல் ஒரு நேர்காணலில் சொன்னது போல், ரஜினியிடம் இருக்கும் வேகம் உத்தமபுத்தரனில் வரும் இரு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த சிவாஜியின் வேகமான எதிர்மறை கதாபாத்திரத்தில் இருந்து வந்தது எனச் சொன்னார். ஒரு வகையில் அது உண்மையும் கூட. அப்படியான கதாபாத்திர பாதிப்பில் இருந்து தான் வேலுநாயகரின் கதாபாத்திரமும் இருக்கிறது.
மணிரத்தினம், கமல், பிசி.ஶ்ரீராம், இளையராஜா என நான்கு மிகப்பெரும் திரை ஆளுமைகள் ஒன்றாக இணைந்து வெகு நேர்த்தியாக பணியாற்றினால் எப்படியான வெளிப்பாடு இருக்கும் என்பதற்கு நாயகன் ஒரு மிகச் சிறந்த படம் அல்ல பாடம். மேலே குறிப்பிட்டுள்ளது போல் நாயகனின் பல காட்சிகள் கண்டிப்பாக இது காட்பாதர் திரைப்படத்தின் நகல் அல்ல என சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதில் மிக முக்கியமாக இன்றளவும் என் மனதினுள் மிக பெரும் அதிர்வை ஏற்படுத்தி திரும்ப, திரும்ப பல முறை இணையத்தில் தேடிப் பார்த்துகொண்டிருக்கும் காட்சி ஒன்று உண்டு. இன்னும் ஓராயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத மறக்க முடியாத காட்சி அது. அந்தக் காட்சி கமல் என்கிற வேலு நாயகர் நீலா என்கிற சரண்யா பொன்வண்ணனை முதல் முறையாக சந்திக்கும் காட்சி. நாயகன் முழுத் திரைப்படமும் இணையத்தில் இருக்கிறது. முடிந்தால் போய் மீண்டும் ஒரு முறை அந்த காட்சியைப் பாருங்கள். அதில் மிகச் சரியாக நான் சிரித்தால் திபாவளி பாடல் முடிந்து 22:50வது நிமிடத்தில் தொடங்கும் பிரதான நாயகி சரண்யா அறிமுகமாகும் அந்த இரவுக் காட்சி தொடங்குவதிலிருந்து மறுநாள் காலை முடிவது வரை அந்தக் காட்சி மொத்தமும் நமக்கு கடத்தும் படிப்பினைகள் ஏராளம். பிரதான நாயகன் விலை மாதுகளை வைத்து தொழில் நடத்தும் ஒரு பெண்ணினுடைய விடுதி ஒன்றின் அறையினுள் நுழைவதிலிருந்து அந்தக் காட்சி தொடங்குகிறது. விலைமாது தானே என்கிற முன் முடிவில் அந்த அறையினுள் நுழையும் நாயகனிடம், அந்தப் பெண்ணை பற்றிய பிம்பம் எப்படியானதாக இருக்கும் என்கிற கண்ணோட்டத்தில் இருந்து தான் அந்தக் காட்சியின் பிரதான ஒளிப்பதிவு கோணமே இருக்கும். அந்த அறையினுள் நுழைந்து தன்னுடைய மேல் சட்டையை நீக்க ஆரம்பிக்கும் நாயகனிடம், நீங்கள் தமிழா என அந்த அறையினுள் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு அந்தப் பெண் கேட்க, கமல் ஆமாம் என்றபடி அந்த பெண்ணை அங்கிருக்கும் கண்ணாடி பிம்பத்தின் வழியாக தான் முதன் முதலில் பார்ப்பார். அங்கே ஆரம்பிக்கும் இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் இசையின் அதகளம் அந்தக் காட்சி முடியும் வரை மிக, மிக சிறப்பானதாய் இருக்கும். நாளைக்கு கணக்குப் பரிட்சை என்று அந்தப் பெண் சொன்னவுடன் கமல் சில நொடிகள் உறைந்து விட்டு, திரும்பி அந்தப் பெண்ணை பார்ப்பார் பாருங்கள், அப்பொழுது கமலின் முகத்தில் வெளிப்படும் பாவணைகளும், அதே நேரம் பின்னனியின் ஒலிக்க தொடங்கும் இசையும் சேர்ந்து நம்மை என்னவோ செய்ய ஆரம்பிக்கும். அப்படியே கமல் கொஞ்சம், கொஞ்சமாய் நகர்ந்து அந்தப் பெண்ணை நோக்கி வருகையில், கமலின் கோணத்தில் இருந்து கேமரா நகர ஆரம்பிக்கும். விலைமாது என்பதைத் தாண்டி, தன் முன் நிற்பது ஒரு பெண் அவளுக்கும் உணர்வு என்கிற ஒன்று இருக்கிறது என்பதை அப்படியே நகர்ந்து வந்து அவள் முன்னே நிற்கையில் அந்தப் பெண்ணின் மீது படர்ந்திருக்கும் வெளிச்சமே கமலுக்குச் சொல்லும். அப்பொழுது கமல் படிக்கிறயா எனக் கேட்டுவிட்டு தொடரும் அந்த உரையாடலின் முடிவில், சரி படி என அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்து கணக்கு பரிட்சைக்கு படிக்கத் தயாராகும் அவளைப் பார்த்தபடி அப்படியே தூங்கிப் போவார். மறுநாள் காலை எழுந்து அந்த அறையின் கதவை கமல் திறக்க, அந்த அறையின் தரையில் குளிருக்காக தன்னுடைய உடலை குறுக்கியபடி ஒரு குழந்தையை போல் படுத்திருக்கும் அவளின் மீது காலை சூரியனின் ஒளிபரவும். படுத்திருக்கும் அவளை கவனித்தபடி அப்படியே அவளை நோக்கி நடந்து வரும் கமல், அவளின் முகத்தின் மிக அருகில் கரங்களை கொண்டுபோய் தொடப்போனவர், அப்படியே கைகளை திரும்ப எடுத்துவிட்டு, அங்கிருக்கும் புத்தகத்தை நகர்த்தி அவளுடைய பெயரை பார்க்கையில், அவளுடைய பெயரான நீலாவின் மீது படர்ந்திருக்கும் சூரிய வெளிச்சம் உணர்த்தும் கதைகள் ஓராயிரம். இன்னும் இந்தக் காட்சியை பற்றிச் சொல்ல நிறையவே இருக்கிறது. போதும் நீங்களே போய் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலே சொல்லியிருக்கும் காட்சியின் வழியே பார்வையாளனுக்கு கடத்தப்படும், உணர்த்தப்படும் விஷயங்கள் மிக, மிக ஆழமானவை, அற்புதமானவை. பொதுவாக தமிழ்த் திரைப்பட வழக்கப்படி நாயகன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நாயகி தர்மபத்தினியாகி இருந்தாக வேண்டும். இதைத் தான் காலம் காலமாக மிக, மிகக் கேவலமாய் தூக்கி பிடித்துக் கொண்டே இருக்கிறோம். எப்பொழுதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திரைப்படங்கள் இப்படி வந்தாலும், பெரும்பாலான திரைப்பட நாயகிகள் தர்மபத்தினிகளாக தான் இருந்தாக வேண்டும். ஒருவேளை அவளுக்கு திருமணமே நடந்து இருந்து, நாயகன் அதன் பின் அவளை மணம் முடிக்கும் சூழ்நிலை வந்தாலும், அவளின் மீது கணவனின் கைவிரல் கூட பட்டிருக்கக் கூடாது. அதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக உடனடியாக மனதில் தோன்றும் திரைப்படம் ரிதம். அந்தத் திரைப்படத்தை பார்க்காதவர்கள் போய் பார்த்துத் தெரிந்து புரிந்து கொள்ளலாம். அதுவும் போக இங்கே பொது சமூகத்தின் புத்தியும் அப்படித்தான் காலம் காலமாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் ஆண்கள் மட்டும் தான் அப்படி யோசிக்கிறார்கள் என்று மொத்தமாக ஆண்களின் மீதும் குற்றச்சாட்டை சொல்லிவிட முடியாது. அதே பொது புத்தியோடு இந்த பிற்போக்குத்தனத்தை ஆதரிக்கும் பெண்கள் கூட்டமும் குறிப்பிட தகுந்த அளவு இங்கே உலவிக் கொண்டு தான் இருக்கிறது. இந்த இடத்தில் இன்னுமொரு விஷயத்தையும் சொல்லத் தோன்றுகிறது. காலம் காலமாக ஏன் இப்பொழுது வரை வெள்ளை துணியில் படியும் சிகப்புகறையினுள் தான் பெண்ணின் ஒழுக்கசுவடுகள் இருப்பதாக நம்ப வைக்கப்படும் ஆணின் ஆழ்மன ஒழுக்கச் சுவட்டை எந்த நிற துணி கொண்டு சோதிப்பது என இன்று வரை எந்த ஒரு ஆணும், அப்படியான ஆணை ஆதரிக்கும் எந்த ஒரு பெண்ணும் யோசித்ததாய் தெரியவில்லை. ஆனால் நாயகன் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பிரதானக் காட்சி அதிலிருந்து முற்றிலும் வேறாக பெண் என்பவள் வெறும் சதை பின்டமல்ல அவளுக்குள்ளும் உணர்வு என்கிற ஒன்று இருக்கிறது. அவளுக்குள்ளும் ஆசைகள், கனவுகள் இருக்கின்றன. முதலில் ஒரு ஆண் பெண்ணின் உடலைத் தாண்டி, அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள எத்தனிக்கும் புள்ளியில் தான் அவன் ஆண் என்பதற்கான அர்த்தமே அவன் வாழ்வில் தொடங்குகிறது. என்பதை சொன்ன திரைப்படங்களுள் மிக, மிக முக்கியமான திரைப்படமாக நாயகனை பார்க்கிறேன். நாயகன் திரைப்படத்தில் இடம்பெறும் மேலே சொல்லியிருக்கும் காட்சியை திரையரங்கில் பார்த்து சிலாகித்த எத்தனை பேர் உண்மையில் தங்கள் வாழ்வில் அப்படியான சூழல் வருகையில் யோசிக்காமல் நடைமுறைப்படுத்துவார்கள் என யோசித்தால் கண்டிப்பாக ஒரு ஈரவெங்காயமும் தேறாது. எல்லாம் திரையில் நடக்கும் வரை தான். நிஜத்தில் நட்டுக் கழண்டு விடும். நிஜத்தில் அப்படியான சூழல் வராவிட்டாலும். அப்படி ஒரு சூழல் வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்கிற மனநிலையை நம்மால் புரிந்து நமக்குள் உருவாக்கிட முடிந்தால், அந்தப் புள்ளியில் இருந்து பெண் என்பவள் தன்னுடைய வாழ்வில் மிக, மிக முக்கியமான தவிர்க்க முடியாத அங்கம் என்கிற புரிதல் வந்துவிடும். இன்னும், இன்னும் நிறையக் காட்சிகளை நாயகனிலிருந்து எடுத்து மேற்கோள் காட்டி சொல்லிக்கொண்டே இருக்கலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். மகிழ்ச்சி.
கடைசியாக : என்னுடைய ரசனைக்கு உட்பட்ட சர்வதேச இசையை பற்றி 10 பதிவுகளாவது எழுதிய பிறகு தான், மற்றவைகளைப் பற்றி எழுத வேண்டும் என்கிற என்னுடைய கண்டிப்பான கட்டுப்பாட்டை நாயகன் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி தகர்த்துவிட்டது. மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916