வாழும் நிமிடத்தை உணர்ந்துக் கொண்டாடும் இசையின் தாண்டவம்…
100 கட்டுரைகளுக்கு பிறகு என்னுடைய எழுத்துக்களில் எனக்கு பிடித்த, ரசித்த, எனை ஆட்கொண்ட சர்வதேச இசையைப் பற்றி ஒரு பத்து கட்டுரைகளாவது எழுத வேண்டும் என்கிற ஆசையின் வெளிப்பாட்டில் இது பத்தாவது கட்டுரை. இசை என்பது நம்முடைய வாழ்வின் மிக, மிக முக்கியமான பகுதி என எப்பொழுதுமே எனக்கு தோன்றுவதுண்டு. அது எல்லாவகையிலும் எல்லா நேரத்திலும், என்னை மிக மிகச் சிறப்பானதாக வழி நடத்தியிருக்கிறது. அதனால் தான் இசை குறித்தான எனது தேடல் தொடர்ந்து எல்லைகள் அற்றுப் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் இசை என்னையே எனக்கு உணர்த்தியிருக்கிறது. இசையை கண்டிப்பாக வெறும் கொண்ட்டாடத்திற்காக மட்டும் கேட்கும் பழக்கம் என்கிற நிலையிலிருந்து மாறி, அது வேறு ஒரு பரிமாணத்தை நோக்கி என்னை நகர்த்தியிருக்கிறது. அப்படியான நகர்த்தலில் இருந்து யோசிக்கையில் ,பொதுவாக ஒரு இசைக் கோர்வை என்னை ரசிக்க வைக்கிறது. அதனையும் தாண்டி அது எனக்குள் ஊடுருவி என்னை ஆட்கொள்கிறது எனில், அந்த இசைக்கோர்வைக்குள் எதோ ஒன்று இருக்கிறது. அதனாலேயே அதனைச் சரியாக உள்வாங்கி நுட்பமாக கேட்க வேண்டுமெனத் தோன்றும். அதனால் ஒரே ஒரு இசை கோர்வையைக் கூட, ஒரு வாரம் முழுவதும் கூட திரும்ப, திரும்பக் கேட்டிருக்கிறேன். காரணம், அது கொடுக்கும் அதிர்வுகள் அப்படியானது. சில இசைக் கோர்வைகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கையில் அது நம்முள் இன்னும், இன்னும் ஆழமாக உட்செல்லும். அப்படியான தொடர் கேட்டலில், அந்த இசைக் கோர்வை நமக்கு எதோ ஒன்றை உணர்த்தும். அதனை வார்த்தைகளில் விளக்குவது எல்லாம் இயலாத காரியம். புரியும்படி சொல்வதானால், உங்களுக்கு பிடித்த இசையை, அதுக் கண்டிப்பாக மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்களுக்கு, உங்களின் ரசனைக்கு நூறு சதவீதம் ஒத்து போனாலே போதுமானது. அப்படியான உங்களுக்கே உங்களுக்கு பிடித்தமான இசையை அல்லது இசைக் கோர்வையை, அதற்கென தனியான நேரம் ஒதுக்கி, முழுமையாய் அதனுள் போய் காது கொடுத்துக் கேளுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு சூழ்நிலையிலும் அது உங்களை மிக, மிக சிறப்பானவராய் உணரவைக்கும். அப்படியானதொரு உணர்தலை எனக்கு கொடுத்த ஒரு இசை கோர்வை ஒன்றை மீண்டும் ஒரு சர்வதேச குரல் தேடல் மேடையில் கண்டெடுத்தேன்.
2015ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு சர்வதேச குரல் தேடல் மேடை. நான்கு நடுவர்கள். நான்கு பேரும் மிகப் பிரபலமான உலகறிந்த பாடகர்கள். அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பின்னால் இருக்கும் மேடையில், பாடுபவரின் குரல் இசைக்கு நடுவில் பாட ஆரம்பிக்கிறது. இயல்பாக ஆரம்பிக்கும் பாடல் 44வது நொடியில் ஒரு உச்ச ஸ்தாயிக்கு போகிறது. விருப்ப குறியை தாங்கி நிற்கும் நடுவர் ஒருவரது சுழல் நாற்காலி பாடுபவரை நோக்கி திரும்ப, அடுத்த பத்தே நொடிகள் மீண்டும் குரல் உச்சத்திற்கு போக 54வது நொடியில் அடுத்த இரு நடுவர்களின் சுழல் நாற்காலிகள் பாடுபவரை நோக்கி திரும்பிவிட்டன. அப்பொழுது அமெரிக்க பெண் பாடகரான Gwen Stefani முகத்தில் தெரியும் பாவணைகளையும், உற்சாகத்தையும் பார்க்க வேண்டுமே கண்டிப்பாக அதனை கவனிக்கத் தவறாதீர்கள். 1:15 நிமிடத்தில் மீதமிருந்த நடுவரின் சுழல் நாற்காலியும் பாடுபவரை நோக்கித் திரும்பிவிட, அந்த மேடையை அதிரவிட்ட அந்த பாடல் Chandelier. அமெரிக்க குரல் தேடல் மேடையில் அந்தப் பாடலை பாடியவர் 22 வயதான இளைஞன் Jordan Smith. Chandelier பாடலை ஏற்கனவே கேட்டவர்களுக்குத் தெரியும். அந்தப் பாடலை ஒரு மேடையில், அதுவும் போட்டிக்கான குரல் தேடல் மேடையில் பாடுவது எந்த அளவு கடினம் என்பது. காரணம், குரலில் மிகப் பெரும் ஏற்ற இறக்கங்களை கொண்டு வர வேண்டிய பாடல் அது. அதுவும் அதற்குரிய உணர்வோடு கொண்டு வர வேண்டும் இல்லாவிட்டால் மொத்தமாக மேடையிலேயே பொங்கல் தான். இவையெல்லாவற்றையும் விட மிக, மிக முக்கியமானது பாடப் போகும் பாடல் அடைந்திருக்கும் புகழ். அந்தப் பாடல் எந்த அளவு அதிகமான இசை ரசிகர்களால் புகழின் உச்சியை அடைந்திருக்கிறதோ, அதே அளவு அந்தப் பாடலை மேடையில் பாடுவதும் மிகப்பெரும் ஆபத்தான சோதனை. ஆனால் அதனை எல்லாம் மிக அநாயசமாக கையாண்டார் Jordan Smith.
Chandelier பாடலை பற்றி சொல்வதானால், 2014ம் ஆண்டிலிருந்து கிட்டதட்ட இந்த கட்டுரை எழுதப்படும் வரை கிட்டதட்ட 228 கோடி பார்வைகளை கடந்து இணையத்தில் அதகளம் செய்து கொண்டிருக்கிறது. இந்த மாதம், அதாவது 2020 செப்டம்பர் மாதம், இந்த பாடலின் கீழே உள்ள பின்னூட்டத்தில், இந்தப் பாடலை யார் எல்லாம் கண்டு ரசித்திருக்கிறீர்கள் என கேட்கப்பட்டிருக்கும் பின்னூட்டதிற்கு, கிட்டத்தட்ட இப்பொழுது வரை 170 பதில் பின்னூட்டங்கள் இடப்பட்டிருகின்றன. அப்படியானால் ஐந்து வருடங்கள் கடந்தும் இந்தப் பாடல் ஏற்படுத்தும் தாக்கத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். இவ்வளவு தூரம் இணையத்தை அதகளப்படுத்தி கொண்டிருக்கும் Chandelier பாடலை பாடியவர் Sia என்கிற ஆஸ்திரேலிய பாடகி. 1975ம் ஆண்டு பிறந்தவர். பெரும்பாலும் தன்னுடைய இசை கோர்வைகளில் இவருடைய முகத்தை வெளிக்காட்டதவர். இந்த உலகத்தில் வெகு சிலரை மட்டுமே தாக்குக் கூடிய எட்ஸ் எனும் தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த Chandelier எனும் அசலான பாடலின் காணொளியிலும் அவர் நடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக பிரபல இசை கோர்வைகளில் நடனமங்கையாக இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் Maddie Ziegler தான் இந்தப் பாடலில் நடித்தும், நடனமாடியும் இருக்கிறார். Chandelier பாடலின் இசை காணொளியில் Maddie Ziegler நடனத்திலும், அவரின் முகபாவணைகளிலும் சும்மா சொல்லக்கூடாது வாய்ப்பேயில்லை அதிரவிட்டிருக்கிறார். மேலே குறிப்பிட்டுள்ள Jordan Smith பங்குபெற்ற அமெரிக்க குரல் தேடல் காணொளி மற்றும் Chandelier பாடலின் அசலான காணொளி என இரண்டு பாடலையும் கேட்டு அது கொடுக்கும் அதிர்வை நீங்களும் உணருங்கள் மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916