துரத்தும் ஊமைச்செந்நாய்…
வாசிப்பின் மீதான ஈர்ப்பு அதிகமாகி மிக ஆழமாக வாசிப்பில் திளைத்த நேரத்தில், வருடமோ அல்லது மாத இதழோ அல்லது வார இதழோ மிகச்சரியாக நினைவில் இல்லை. உயிர்மை என நினைக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதை ஒன்று வெளிவந்திருந்தது, கதையின் பெயர் ஊமைச்செந்நாய். என் வாசிப்பை மிக அநாசயமாக அடுத்த தளத்திற்கு எடுத்து சென்ற கதை என்று ஊமைச்செந்நாயை சொல்லலாம். கதையை வாசித்து முடித்து விட்டு அதிர்ந்துவிட்டேன். காரணம், அதுநாள் வரை அப்படி ஒரு வீரியமான ஆழ்மனம் வரை சென்று அதிரவிட்ட கதையை நான் வாசித்ததில்லை. அந்த கதையின் தாக்கம் மிக நீண்டநாட்களுக்கு என் ஆழ்மனதினுள் ஊசலாடிக் கொண்டே இருந்தது. அந்த கதை ஏற்படுத்திய அதிர்வு சாதாரணமானது அல்ல. மிகப்பெரும் அமைதிக்கு நடுவில், ஒரு பெரிய வெண்கல மணியை அடித்தால், அதன் ஒலி நின்று நிதானமாக ஒரு அதிர்வை அப்படியே பரவவிட்டபடி இருக்குமே, அது போன்றது தான் அந்த ஊமைச்செந்நாய். அந்தக் கதையை வாசித்து முடித்து பல வருடங்களுக்குப் பிறகும், அதன் தாக்கம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், வேறேதையாவது படிக்கும் போதோ அல்லது பார்க்கும் போதோ வராமல் இருக்காது. அப்படிப்பட்ட அந்தக் கதை ஜெயமோகனின் கதை தொகுப்பு புத்தகம் ஒன்றில் வெளிவந்தது. அந்த தொகுப்பின் பெயரும் ஊமைச்செந்நாய். அதனுள் ஜெயமோகன் எழுதிய பல்வேறு கதைகளும் இருந்தது. சில வருட இடைவெளியில் மீண்டும் அந்த கதையை படித்த போது, அந்த கதை அப்படியே உயிர்ப்போடு மனதினுள் விரிந்தது. மீண்டும் இம்முறை, சென்னைக்கு நண்பனின் திருமணதிற்கு சென்ற போது, அந்தத் தொகுப்பு கையில் கிடைத்தது. எடுத்து வந்துவிட்டேன். கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு மீண்டும் இப்பொழுது படித்து முடித்தபோது, இது வெறும் கதையல்ல, அதை தாண்டிய ஆகப்பெரும் சாகவரம் பெற்ற உயிர்ப்புத்தன்மை இதில் இருக்கிறது என உணரவைத்தது ஊமைச்செந்நாய்.
ஒரு வெள்ளைக்கார துரையும், அவனுக்கு கீழ் அடிமையாக இருக்கும் ஒருவனும், காட்டினுள் ஒரு மிக முக்கியமான வேட்டை ஒன்றுக்கு புறப்படுகிறார்கள். அந்த நிகழ்வை, அந்த அடிமையின் குரல் வழியாக ஊமைச்செந்நாயின் கதை விரிகிறது. அந்த அடிமையின் பெயராக கதை மாந்தர்கள் அழைப்பது ஊமைச்செந்நாய். அவனை ஏன் ஊமைச்செந்நாய் என அழைக்கிறார்கள் என்பதை கதையை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த ஊமைச்செந்நாய் எனும் ஆளின் வழியே ஜெயமோகன் விரித்திருக்கும் உலகம் மிக, மிக நுட்பமானது. ஒரு கதை சொல்லி தன்னுடைய கதையின் எந்த அடுக்குவரை சென்றால், அதன் உயிர்தன்மையை இழக்காமல் அந்த கதை சாகவரம் பெற்ற கதையாக ஆக்க முடியும் என்பதற்கு ஊமைச்செந்நாய் ஆகச்சிறந்த உதாரணம். இந்த ஒரு கதை போதும் ஜெயமோகன் எப்படிப்பட்ட எழுத்தாளன் என்பதைச் சொல்ல. சத்தியமாக இந்த ஊமைச்செந்நாய் பல நூறு வருடங்கள் கழித்தாலும், அதன் தன்மை இம்மியளவு கூட இழக்காமல், கம்பிரமாக நிற்கக்கூடிய முழு தகுதியுடையது என்பதில் துளியும் சந்தேகமேயில்லை.
இந்த கதையின் முழுமையான வீச்சை இந்த முறை படிக்கும்போது தான் முழுமையாக உணர்ந்தேன் எனச் சொல்லலாம். ஒருவன் தன்னுடைய வாழ்வில் எந்த தருணங்களை எப்படி உள்வாங்க வேண்டும், அவனுடைய விழிப்புணர்வு என்பது எப்பேர்பட்ட இடர்பாடுக்கு இடையிலும் எப்படி இருக்க வேண்டும். புறக்கணிப்பு, அவமானம், அடிமையாய் நடத்தப்படுதல், இன்னும் நிறைய இவை எல்லாவற்றைம் எதிர்கொண்டு அதனை தனக்கான ஆயுதமாக எப்படி மாற்ற வேண்டும். என்பதெல்லாம் மிக, மிக நுட்பமாக இந்தக் கதையினுள் ஒளிந்திருக்கிறது. ஒரு கதையின் கதாபாத்திரம் வழியே இவ்வளவு அடுக்குகளையும், அதை தாண்டியும் கொண்டுவர முடியுமா என யோசிக்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. சாதாரணமான வாசிப்பின் வழியே இந்த கதைக்குள் இருக்கும் நுட்பங்களை கண்டைய முடியாது. தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் வாசித்து பயிற்சி இருந்தால் ஒழிய, இந்த ஊமைச்செந்நாயை வாசிப்பது சற்று கடினம் தான். ஆனால் அப்படி வாசித்தலின் சுவை அறிந்தவர்களுக்கு இந்த ஊமைச்செந்நாய் எத்தகையது என புரியும்.
பின்குறிப்பு : இந்த ஊமைச்செந்நாய் கதை தொகுப்பினுள் என்னை அதிரவிட்ட இன்னுமொரு கதையும் இருக்கிறது. அந்த கதை மத்தகம். மத்தகம் பற்றி அடுத்த பதிவில். மத்தகம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், இணையத்தில் தேடிப்பாருங்கள். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916