வாழ்ந்து பார்த்த தருணம்…116

புரிதல்…

கடந்து சில நாட்களாக எழுதவில்லை, எழுத வேண்டும் எனத் தோன்றவில்லை. வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்ததால், ஒரே மாதிரியாக எழுதுகிறோமோ என்கிற ஒரு சின்ன பய பிம்பம் அவ்வ போது எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்ததால், எழுதுவதை கொஞ்சமாக தள்ளி வைத்துவிட்டு வாசிக்க ஆரம்பித்தேன். அதே நேரம் முகநூல் பக்கத்திலும் சரி, தன்னுடைய வலைப்பக்கத்திலும் எழுத்தாளர் திரு சாரு அவர்கள் ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் அவருடைய புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என ஞாபகபடுத்திக் கொண்டே இருந்தார். சாருவின் கட்டுரைகளைத் தொடர்ந்து அவருடைய இணையப் பக்கத்தில் போய் தொடர்ச்சியாக வாசித்திருக்கிறேன். ஆனால் அவருடையப் புத்தகங்கள் எதனையும் பெரியதாக வாசித்ததில்லை, அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அதனை மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். சாரு அவருடையப் புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் நாட்களாக சொல்லியிருந்த நாட்களுக்குள் அதனை வாங்குவதற்கு கொஞ்சம் பணம் பற்றாக்குறையாக இருந்தது என்ன செய்வதென்று முழித்து கொண்டிருந்த போது, அவரே பதிப்பகத்தாரிடம் பேசி ஒரு ஐந்து நாட்கள் அந்தத் தள்ளுபடி விற்பனையை நீட்டித்துக் கொடுத்தார். அதற்குள் வர வேண்டிய பணமும் வந்து விட்ட படியால், சாருவுக்கு நன்றி சொல்லிவிட்டு, ஜீரோ டிகிரி இணையப் பக்கத்தின் வழியே புத்தகத்தினைத் தேர்ந்தெடுத்துப் பணம் செலுத்தி விட்டு வந்தால். மறுநாளே புத்தகம் கைகளுக்கு வந்து விட்டது. வாங்கியப் புத்தகங்கள் என்னென்ன என்பதை சொல்லாமல், ஒவ்வொருன்றையும் வாசித்துவிட்டு, அது கொடுத்தத் தாக்கத்தை சொன்னால் சரியாக இருக்குமென தோன்றியது, முதல் புத்தகமாக வாசிக்கத் தேர்ந்தெடுத்தது கடவுளும் நானும் புத்தகத்தைத் தான்.

ஏன் அந்தப் புத்தகம் என்றால் என்னிடம் பதில் இல்லை. ஆழ்மனதில் இருந்து இந்தப் புத்தகத்தை முதலில் வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது அவ்வளவே. இந்தப் புத்தகத்தை ஏற்கனவே வாசித்திருந்தீர்களானால் மேலே சொல்லியிருப்பதன் அர்த்தம் விளங்கும். இல்லையேல் ஒன்றும் பிரச்சனையில்லை. புத்தகத்தை வாங்கி கண்டிப்பாய் வாசித்து விடுங்கள். பொதுவாகக் கடவுளை பற்றியப் புரிதல் என்பது இங்கே எப்படி இருக்கிறது என யோசித்தால் பல சமயங்களில் தலைசுற்றிவிடும். அதனால் யோசிப்பதேயில்லை. ஒரு சின்ன சம்பவம், சில வருடங்களுக்கு முன்பு என்னுடையத் திருமணம் உறுதியானப் பிறகு, அப்பொழுது குடியிருந்த வீடு திருமணம் முடிந்த பிறகு வசிப்பதற்கு உகந்ததாக இருக்காது என்கிற காரணத்தால், வேறு வீடு தேடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் உடன் பணிபுரிந்த ஒரு நண்பரின் வாயிலாக ஒரு வீடு பார்த்தோம் மிகவும் பிடித்திருந்தது. சரியென வீட்டின் உரிமையாளரிடம் பேசினால், அவர் நாங்கள் இந்த ஊரில் இல்லை, என் நண்பரிடம் அந்த வீட்டுக்கான சாவி இருக்கிறது, நான் சொல்லிவிடுகிறேன் நீங்கள் வாங்கி வீட்டை ஒரு முறை பார்த்துவிட்டு உறுதிப்படுத்துங்கள் எனச் சொல்லிவிட்டார். சாவியை வாங்கினோம் வீட்டை உள்ளே சென்று பார்த்தோம் எல்லாம் முடிந்து, உறுதியாக நாங்கள் அந்த வீட்டுக்கு குடி வருகிறோம் என சாவியை ஒப்படைக்கையில் வீட்டினுடைய உரிமையாளரின் நண்பரிடம் சொன்னோம். ஆனால் சாவியை கைகளில் வாங்கிய அவரோ உறுதியா அந்த வீடு பிடிச்சிருக்கா என திரும்ப, திரும்ப ஒரு வித தயக்கதோடே கேட்டுக் கொண்டே இருந்தார், முதலில் எனக்கு அவரின் தயக்கம் புரியவில்லை. பின்னர் புரிந்தது. அந்த வீட்டினுள் உரிமையாளரும், அவரின் நண்பரும் பின்பற்றும் ஒரு மதத்தின் அடையாளம் வீட்டின் பிரதானமான இடத்தில் சுவற்றில் பெரியதாக பொறிக்கப்பட்டிருந்தது. அதுவும் போக என்னுடைய உடலில் மதம் சார்ந்த அடையாளம் ஒன்று அப்பட்டமாக வெளிப்பட்டபடி இருந்தது. இதையெல்லாம் யோசித்து அவர் ஏன் தயங்குகிறார் என புரிந்தபடியால், அவரிடம் சகோதரா நீங்கள் வழிபடும் ஆலயத்திறகுள் பலமுறை சென்று வந்திருக்கிறேன், அதனுள் செல்லும் போது அப்பொழுது என் உடலில் இருக்கும் மத அடையாளம் அந்த ஆலயத்தினுள் இருப்பவர்களுக்கு சலனத்தை ஏற்படுத்தும் எனில் அதனை அழித்துவிட்டு போவதில் எனக்கு தயக்கமே இருந்ததில்லை. நீங்கள் மற்ற மதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என எனக்குத் தெரியாது. ஆனால் கடவுளை பற்றிய என்னுடைய புரிதலே வேறு. அதனால் வேறு யாரை விடவும் உங்கள் வீட்டினுள் இருக்கும் அந்த அடையாளத்தை மிக மரியாதையாய் மட்டுமே என்னால் அணுக முடியும் எனச் சொன்னவுடன், ஒரு நொடி கூட யோசிக்காமல் அவர் மன்னித்து விடுங்கள் எனச் சொல்லி என்றைக்கு அந்த வீட்டிற்கு குடி வருகிறீர்கள் எனக் கேட்டார்.

மேலே சொல்லியிருக்கும் சம்பவத்திற்கும் இந்த புத்தகத்திற்கும் என்ன தொடர்பு என யோசிப்பவர்களுக்கு, கடவுளும் நானும் வாசிக்கையில் அந்த தொடர்பு புரிந்துவிடும். கடவுளை பற்றிய என்னுடைய புரிதலை, என்னுடைய நூறாவது கட்டுரையிலும் எழுதியிருக்கிறேன். வாய்ப்பிருப்பவர்கள் வாசியுங்கள். கடவுளும் நானும் புத்தகத்தை பொறுத்தவரை தன்னை ஆன்மீக வாதியாகவும், கடவுளுக்கு பயந்தவராகவும் காட்டிக்கொள்வபவர்களும் மற்றும் கடவுளிடம் தினசரி பேசுவதாக சொல்பவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். உண்மையில் நாம் கடவுளை சரியாகத் தான் அணுகுகிறோமா, கடவுளைச் சரியாகத் தான் புரிந்து வைத்திருக்கிறோமா, உண்மையில் கடவுளின் பெயரை சொல்லி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம், என நம்மை நாமே சீர்தூக்கி பார்க்க வைக்கும் மிகம், மிகச் சிறப்பான புத்தகம் கடவுளும் நானும். இவ்வளவு சிறப்பாய் கடவுளைப் பற்றிய ஆழமான புரிதலை நமக்குள் ஏற்படுத்தும் சாருவைப் பற்றி, அதுவும் சாருவே சொல்வது போல பல நேரங்களில் சாருவை கடவுள் மறுப்பாளர் என்கிற ரீதியிலான கட்டமைக்கப்படும் பிம்பத்தை என்னவென்று சொல்ல எனத் தெரியவில்லை. உண்மையில் கடவுளைப் பற்றிய உண்மையான புரிதலை மிகச் சிறப்பாய் உணரும் ஒருவன், இந்த மனிதன் கடவுளை பற்றி இந்த பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் சல்லித்தனமான விஷயங்களுக்கு நேரெதிரான ஒருவனாகவே இருப்பான். காரணம், இங்கே கடவுள் பெயரைச் சொல்லித் தான் எல்லாவிதமான அயோக்கியத்தனங்களும் அரங்கேறுகின்றன. சாருவின் இந்தப் புத்தகம் அப்படியான சல்லித்தனங்களுக்கும், அயோக்கியத்தனங்களுக்கும் முற்றிலும் எதிரானது. ஆனால் கடவுளை உண்மையாய் உணர்ந்து கொள்ள சொல்லிக் கொடுப்பது. கடவுள் பற்றிய உங்களுடைய தனிப்பட்ட மதம் சார்ந்த அடையாளத்தை எல்லாம் ஒரு ஓரமாக தூக்கி கடாசிவிட்டு, உண்மையில் கடவுள் என்பவர் யார் அவரை உணர்ந்து, புரிந்துகொள்ள என்ன வழி என்று மட்டும் யோசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் வரம். அதை விடுத்து நீங்கள் கடவுள் மறுப்பாளராகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் தூக்கிப்பிடிப்பவராக இருந்தால், உங்களுக்கு இந்த புத்தகத்தில் மரண அடி நிச்சயம். பல நேரங்களில் பலவற்றை இங்கே உணர்ந்து கொள்வதின் வழியே மட்டுமே, நமக்கான அறிவும், அனுபவமும் பெரிதாக விரிவடையும். அதுவும் நீங்கள் உணர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே. இல்லையேல் செக்குமாட்டை போல் ஒரே விஷயத்தை மட்டும் சுமந்து கொண்டு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மட்டுமே சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியது தான். புரிந்து கொள்ள தயாராக இருக்கிறீர்களா என்கிற முடிவு உங்கள் கைகளில். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916