வாழ்ந்து பார்த்த தருணம்…119

மின்சார வேலி…

ஒரு வாரத்தின் இறுதி நாளும், அதன் அடுத்த நாளும் விடுமுறை தினமாய் வருவது இன்றைக்கு ஒரு மிகப் பெரும் பயணத்திட்டதின் மிக முக்கியமான அடிப்படை கூறுகளாகி விட்டன. அப்படியான ஒரு இரு தினமும் விடுமுறையாக வாய்த்த நாளில் ஒரு மலை பயணம் போகலாம் என வலுக்கட்டாயமான முடிவு ஒன்றை என்னுடைய தம்பி முன்மொழிந்தான். சரியென சம்மதித்தேன், காரணம் ஒரு வாகான மலை முகட்டில் போய் நின்று, ஒரு ஏகாந்த கிறுக்கனை போல் கத்தி கூப்பாடு போட்டு மலையோடு பேசி வெகு நாட்கள் ஆகிவிட்டன என்பது தான். அதனால் தாராளமாக போகலாம் என முடிவெடுத்தாயிற்று. இன்றைய நிலையில் பயணம் என்பது எதில் பயணிக்கிறீர்கள் என்பது அல்ல, எப்படி பயணிக்கிறீர்கள் என்பது தான் முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது. காரணம் இன்றையப் பயணத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள் இருக்கின்றன, முதல் விஷயம் அலைப்பேசியை நோண்டுவது, இரண்டாவது, பயணம் நெடுகிலும் வேலை நிமித்தமாகவோ அல்லது வேறேதாவது ஒரு காரணத்துக்காவோ, அதே அலைபேசியில் யாருடனாவது பேசிக் கொண்டே போவது. மூன்றாவது போகும் பயணத்துக்கும் நம்முடைய பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாமல், ஏதாவது மொன்னையான விஷயங்களை பேசிக் கொண்டே பயணிப்பது. இன்றைய நிலையில் இந்த மூன்று முக்கியமான விளங்காத விஷயங்களை கைவிட்டாலே கண்டிப்பாக அந்தப் பயணம் பயணமாக இருக்கும். கண்டிப்பாய் மேலே சொல்லியிருப்பது தொழில் முறை பயணிப்பவர்களுக்கானது அல்ல, அதுவும் போக என்னளவில் தொழில்முறை பயணத்தை, பயணம் என்கிற வகைமைக்குள்ளாகவே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதனை, நகரும் அலுவலகத்தில், நகர்ந்து கொண்டே பயண பணி செய்வது என்று வேண்டுமானால் வைத்து கொள்ளலாம்.

புதியதான நிலப்பரப்பை நோக்கியதான ஒரு பயணம் என்பது என்றைக்குமே மிக, மிக சுவாரஸ்யத்துடன் கூடிய அற்புதமான தேடல் அல்லது பாடம் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பொதுவாக இன்றைக்குப் பயணம் என்பதே சுற்றுலா என்கிற வகைமைக்குள் அடைபட்டு போன பிறகு, அங்கே முதல் கேள்வியாக கேட்கப்படுவது, போகிற ஊரில் பாக்குற மாதிரி என்னென்ன இடம் இருக்கும் என்பது தான். எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. போவதே புதியதான ஒரு இடத்திற்கு, அங்கே நாம் பார்க்கப் போகிற அனைத்துமே முதல்முறை புதியதாய் தான் பார்க்கப் போகிறோம். அப்படி இருக்கையில் அது என்ன பாக்குற மாதிரி அங்க என்ன இருக்கு என்கிற கேள்வி. என்னிடம் யாராவது உங்க ஊர்ல பாக்குற மாதிரி என்ன இருக்கு எனக் கேட்டால், எங்க ஊர்ல எல்லாமே பாக்குற மாதிரி தான்பா இருக்கும் எனச் சொல்லி விடுவேன். முதலில் இது போன்ற கேள்வியை ஒழித்து விட்டு கிளம்பினால் தான், அந்தப் பயணமே சிறப்பான பயணமாக இருக்கும் என்பது என்னுடைய ஆழமான எண்ணம். அதுவும் போக மலை பிரதேசம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும், அதில் இன்னென்னது இருக்க வேண்டும் என்று, இந்தத் திரைப்படம், தொலைக்காட்சி போன்றவற்றை பார்த்து விட்டு கற்பனை செய்யும் அறிவாளிகளின் வார்த்தைகளை குப்பையில் கிடாசிவிட்டு கிளம்புதல் முற்றிலும் நலம். இது மாதிரி எந்த ஒரு முன் முடிவுகளற்ற பயணம் கொடுக்கும் பாடம் மிக, மிக அற்புதமானது. அப்படியான ஒரு பயணமாக சிறுமலை நோக்கியதான பயணம் மிக, மிக சிறப்பானதாகவே இருந்தது. பொதுவாய் மலைன்னா அது கொடைக்கானல் அல்லது ஊட்டி மாதிரி இருக்கணும் அப்படி இல்லையா குறைந்தது இமய மலை மாதிரியாவது இருக்கணும் என சொல்பவர்கள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

சிறுமலை மொத்தமாக 18 கொண்டை ஊசி வளைவுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சின்னதான ஒரு மலை. பெரும்பாலும் மலை முழுவதுமே காபி தோட்டங்களும், அதன் நடுவே மிளகும் பயிர் செய்யப்பட்டிருக்கின்றன. மின்சார வேலி இல்லாத காபி தோட்டமே இல்லை. பணப்பயிர் இல்லையா. அதனால் தான் இவ்வளவு பாதுகாப்பு. காரணம் காட்டு மாடு வந்தால் மொத்தமாக துவசம் செய்து விடுமாம். பயிராக இருந்தாலும் அது பணப் பயிராக இருந்தால் பாதுகாத்து தான் ஆக வேண்டும் என்பது இந்த மனித சமூகத்தின் அடிப்படை விதி. இயற்கையாக இருந்தாலும் மனிதனின் பார்வையில் அதன் தரம் என்பது அதன் பணமதிப்பீடு சார்ந்து தான் இருக்கிறது. ஆனால் மற்ற உயிரினங்களுக்கு அது வெறும் உணவு அவ்வளவே. நாம் தான் எல்லாவற்றையும் சக மனிதனையும் சேர்த்தே சொல்கிறேன், இவற்றால் எனக்கு என்ன கிடைக்கும், எவ்வளவு கிடைக்கும் என்கிற மனநிலையிலிருந்து பார்க்க பழகி வெகு நாட்கள் ஆகிறது. அதனால் தான் பயணத்தில் கூட இவ்வளவு செலவு பண்ணி போகிறோம், அங்க பார்க்க எதுவுமே இல்லைன்னா என்ன பண்ணுறது என்கிற கேள்வி அடிப்படையிலேயே தோன்றுகிறது. இன்றைக்கு மனிதன் எங்கு போனாலும் ஒன்று அந்த இடம் சகலவசதிகளும் உள்ள சுற்றுலா தளமாக இருக்க வேண்டும் அல்லது பொழுது போக்கு பூங்காவாக இருக்க வேண்டும். இரண்டும் இல்லையா முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட கான்கிரீட் கடைகளாக இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாத அதே நேரம் மிகச் சிறந்த அற்புதமான இயற்கை எழில் சூழ்ந்த சிறு சிறு மலை கிராமங்களை உள்ளடக்கிய மலை தான் சிறுமலை.

சிறுமலையில் அகஸ்தியர்புரம் என்கிற கிராமத்தில் ஒரு சிறு மலைகுன்று ஒன்று இருக்கிறது. அந்த மலைக்குன்றின் உச்சியில் தான் அகஸ்தியருக்கு சிவபெருமான் கல்யாண கோலத்தில் காட்சி கொடுத்தது எனச் சொன்னார்கள். சிறுமலை செல்பவர்கள் கண்டிப்பாக தவறவிடக் கூடாத இடம். இந்த அகஸ்தியர்புரம் மலை மலையேற்றத்துக்கு மிகச் சிறப்பானதொரு இடம். இங்கே ஒன்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும் அகஸ்தியர்புரம் மலை சின்ன மலை தான் என்றாலும், அந்த மலையில் ஏறுவதற்கு நீங்கள் குறைந்த பட்சம் தினசரி நடைபயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்பவர்களாய் இருத்தல் நலம். இல்லையேல் மலையேறும் போது நாக்கு தள்ளுவது உறுதி. இது போன்ற மலையேற்ற தருணங்கள் தான், நம்முடைய உடலை நாம் எந்த லட்சணத்தில் வைத்திருக்கிறோம் என்பதை நமக்கே நம்முடைய உடல் பல்லிளித்து காட்டி கொடுத்துவிடும். நாம் எப்பொழுதுமே அடுத்தவர்களிடம் அவர்களுடைய மனதையும், உடலையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என வண்டி வண்டியாக அறிவுரை சொல்வதில் வல்லவர்கள். இதில் என்னையும் சேர்த்தே சொல்கிறேன். ஆனால் இப்படியான இடத்தில் நமக்கு நாக்கு தள்ளும் போது தான், நம்முடைய உடலை நாம் வைத்திருக்கும் லட்சணம் தெரியும். அந்த வகையில் உண்மையில் அகஸ்தியர்புரம் மலையேற்றத்தை மிகவும் ரசித்தேன். பாதி மலையேறிய பிறகு ஒரு வாகான இடத்தில் பாறையின் முனையில் நின்று கொண்டே மலையிடம் கத்தி பேசிக்கொண்டிருந்தேன். இது போன்ற தருணங்கள் தான் நம்முடைய குழந்தை பருவ மனநிலையை நமக்கு மிகசிறப்பாய் நமக்கே கொடுக்கின்றன எனத் தோன்றியது. அதுவும் போக நாங்கள் சென்ற நேரம் மலையுச்சியில் இருக்கும் சிவலிங்கத்துக்கு மிகச் சிறப்பாக அதுவும் தமிழில் அர்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் நின்று கொண்டிருந்த அந்த மலை உச்சியும், அப்பொழுது அங்கே வீசிக்கொண்டிருந்த ஏகாந்த காற்றும், காற்றில் கணீரென ஒலித்து வியாபித்து பரவியபடியே இருந்த தழிழ் சொல் வழிபாடும், அப்பொழுது அங்கே ஊதப்பட்ட வலம்புரி சங்கொலியும், அப்படியே உடலின் நரம்புகளை சிலிர்க்க வைத்தன. மந்திர உச்சாடனைகள் முடிந்து சரியாக தீபம் ஏற்றி வழிபடும் அந்த நொடியில், மிகச் சரியாய், அங்கே அந்த மலை உச்சியில் இருந்த இரண்டு நாய்களும், லிங்கத்தின் முன் வீற்றிருக்கும் நந்தி தன்னுடைய வலது கால்களை எப்படி மடக்கி வைத்திருக்குமோ அதே போல் மடக்கி வைத்திருந்தது தற்செயலாக நிகழ்ந்ததாக எனக்குத் தோன்றவில்லை. இவையெல்லாவற்றையும் விட மின்சார வேலிக்குள் அடைப்பட்டு இருந்த மதிப்பீடு சார்ந்த மனித மனமும், மலையுச்சியில் எல்லைகலற்ற இறைவனும் இவை இரண்டுமே நமக்கு உணரவைப்பவை ஏராளம். நாம் உணரத் தயாராக இருக்கிறோமா என்பது தான் இங்கே கேள்வியே. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916