அடி நல்லது…
தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற ஆவல் இருந்தாலும், அன்றாட அலுவல் பணி நிமித்தமான பல்வேறு விஷயங்கள் மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருப்பதால் தொடர்ந்து எழுதுவதில் சிக்கலாகி விடுகிறது. என்னளவில் எழுத்து என்பது இசையின் ஊடே ஊடாடும் ஒரு விதமான லயத்தைப் போன்றது. அந்த லயம் சரியாக புத்தியில் உட்காரும் நேரத்தில் மிகச் சரியாய் எல்லாமே நடந்து விடும். ஆனால் அந்த தாள லயத்தை வலிந்து உருவாக்கினால் அது கந்தரகோலமாகிவிடும் என்பதால், பல நேரங்களில் எழுதத் தொடங்கி நிறுத்தி விடுகிறேன். அந்த லயம் எழுத்துக்குள் இயல்பாக அமையும் போது எனக்கே என்னுடைய எழுத்துக்கள் பிடித்தமானதாக ஆகிறது. என்னுடைய எழுத்துக்கள் எதேனும் ஒரு வகையில் என்னையும் கவர வேண்டும் இல்லையா? இல்லாவிட்டால் எழுதி என்ன பயன்!?, சரி சுயபுராணம் போதும். இப்பொழுது தலைப்பில் சொல்லி உள்ள அடி வாங்குவதை பற்றிப் பேசலாம். பொதுவாக வாழ்வில் பல தருணங்களில் புத்தகம் வாசிப்பதை விடவும், மனித மனங்களை வாசிப்பது மிக. மிக சுவாராஸ்யமானதாக இருக்கிறது. அப்படியான வாசிப்பு பல நேரங்களில், அது என்னையே எனக்கு மிக சிறப்பானதாய் உணர்த்தும் சுய தேடலாய் இருப்பது இன்னும் இன்னும் சுவாரஸ்யத்தை பன்மடங்கு கூட்டி விடுகிறது. இந்த வாழ்க்கை பயணத்தில் கண்டிப்பாய் பல தரப்பட்ட மனிதர்களை, பல்வேறு விதமான வித்தியாசமான சந்தர்ப்பங்களில், பல்வேறு விதமான மனநிலையோடு, பலவிதமான பிரச்சனைகளை சுமந்துபடி நடமாடுபவர்களாக, நம்மை கடந்து செல்பவர்களாக அல்லது நம்முடன் உட்கார்ந்து பேசுபவர்களாக இல்லை நம்முடன் எல்லாவற்றையும் பற்றி கலந்துரையாடுபவர்களாக என ஒவ்வொரு நாளும் இப்படியான மனிதர்களை கடந்து பயணித்து கொண்டே இருக்கிறோம்.
ஆனால் என்றைக்காவது அப்படியான மனிதர்களின் மனங்களைப் பற்றிய, அவர்களின் செயல்களுக்கு பின்னால் உள்ள கதைகளை யோசித்திருக்கிறோமா, கேட்டிருக்கிறோமா, இன்றைய தலைமுறைக்கு அப்படியான கதைகளை கேட்கும் அளவுக்கான பொறுமை இல்லை. அதனால் தான் ஒரு பெரிய கூண்டாக தயார் செய்து அதனுள் விளையாட பல தரப்பட்ட முரண்பட்ட கதாபாத்திரங்களாக பொறுக்கி எடுத்து, அப்படியான கதாப்பாத்திரங்களை மொத்தமாய் அந்த கூண்டுக்குள் அடைத்து, அப்படி அந்த கூண்டுக்குள் உலவும் கதாபாத்திரங்களின் முரண்பாடுகளை மிகச் சிறப்பாய் பல தூண்டில்களை போட்டு வெளிக் கொண்டுவந்து, அதனையும் அதகளமாய் காட்சி படுத்தி, அதன் வழியே நம்முடைய சிந்தனையையும், செய்ய வேண்டிய செயலையும் பற்றிய எண்ண ஓட்டத்தை மழுங்கடித்து, கூண்டுக்குள் இன்றைக்கு எந்த கதாபாத்திரம் எப்படி நாறடிக்கப்பட போகிறது என்பதை மிகச் சிறப்பான விவாத பொருளாக மாற்றி, அதனை பற்றிய செய்திகளை பிரதான படுத்தி வெகு சிறப்பாய் நமக்கே தெரியாமல் நம்முடைய அறிவையும் மழுங்கடித்து, நம்முடைய நேரத்தையும், பணத்தையும் உருவிக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் இதன் வழியே நாம் என்ன அடைகிறோம் என யோசித்தால், அடுத்தவரின் வீட்டினை ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் ஒருவிதமான போதை மனநிலைக்கான சுயசொரிதலை தவிர வேறொன்றுமில்லை. அதுவும் போக நாம் அந்த கூண்டுக்குள் இருந்தால், அங்கிருக்கும் சூழலை எப்படி கையாண்டிருப்போம் என்பதை நம்முடைய மனத்துக்குள் கனவு கண்டு, அந்தக் கனவுக்குள் அந்தச் சூழ்நிலையை வெகு சிறப்பாக கையாளும் நாயகர்களாகவோ அல்லது நாயகிகளாகவோ நம்மை உருவகப்படுத்திக் கொண்டு, கனவு கதாநாயர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறோம். இது எப்படியெனில் விளையாட்டு போட்டியை பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டே, நான் மட்டும் களத்துக்குள்ள இப்ப இருந்தேன் போட்டியையே மாத்திருவேன் என்கிற வெட்டி சவடாலைப் போல. ஆனால் நிஜத்தில் களத்தில் இறக்கிவிட்டால் அங்கிருக்கும் சூழலின் தன்மையே நம்மை சிறுநீர் கழிக்க வைத்துவிடும் என்பது தான் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிதர்சனம்.
உண்மையில் இவை எல்லாவற்றையும் விட நிஜத்தில் தினம் தினம் நாம் கூண்டுக்குள் பார்க்கும் கதாபாத்திரங்களை விட பலமடங்கு முரண்பாடான கதாபாத்திரங்களை, ஏதோ ஒரு விதத்தில் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் அப்படியான சுழ்நிலைகளில் நம் கண்முன் இருக்கும் முரண்பாடான கதாபாத்திரங்களை கையாளாமல் அல்லது கையாள திராணி இல்லாமல், கூண்டுக்குள் சுற்றும் கதாபாத்திரங்களை மட்டுமே பார்ப்பதற்கும், அவர்களின் மீதான விமர்சனங்களை யோசிக்காமல் சொல்வதற்கும் ஏன் இவ்வளவு மெனக்கெடுக்கிறோம் என யோசித்தால், காரணம் மிக, மிக எளிமையானது. நிஜத்தில் முரண்பாடான கதாபாத்திரங்களை கையாளத் தெரியவில்லை என நம்மால் ஒத்துக் கொள்ளவே முடியாது. காரணம் நம்மைப் பற்றி நாம் இந்த சமூகத்தில் உருவாக்கி வைத்திருக்கும் நாயக அல்லது நாயகி பிம்பம் அதனை சொல்ல விடாது. அதையும் தாண்டி நம்முடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத, நாளுக்கு நாள் தன்னுடைய எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரங்களை கையாளும் சுழ்நிலை வருகையில் அதன் மூலம் பல அடிகள் நம் மேல் விழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் நம்மால் அப்படியான வலிகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து மிகச் சிறப்பானதொரு அனுபவத்தை பெற இயலாது. காரணம், அதற்கு பொறுமை தேவை. அந்தப் பொறுமை தான் நமக்கு வாழ்வை கற்றுக் கொடுக்கும். ஆனால் இன்றைக்கு நம்மிடம் அது தான் இல்லை. நம்முடன் ஒத்துப் போகாத அல்லது உடன்படாத எதனுடனும், அனுசரித்து போவதோ அல்லது புரிந்து கொள்ளவோ கொஞ்சம் கூட மெனக்கெட தயாராக இல்லாத நாம். கண்டிப்பாக, கூண்டுக்குள் நடப்பவைகளை மட்டுமே கடைசி வரை ரசித்துக் கொண்டும், விமர்ச்சித்துக் கொண்டும் இருப்போம். ஆனால் அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதை கடைசி வரை யோசிக்கப் போவதே இல்லை. நிஜம் இப்படியாக இருக்கையில் கூண்டுக்குள் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் நிகழ்வோ, சுழ்நிலையோ போன்றதொரு நிலை நம் கண் முன்னால் தோன்றுகையில் அதனை கையாளத் தெரியாமல் ஓடி ஒழிந்து கொள்வோம். ஆனால் வாழ்வின் இறுதி வரை இப்படி ஓடி ஒழிந்து அடிவாங்காமல் எவ்வளவு தூரம் தப்பிக்க முடியும் என யோசித்தால் தலைசுற்றுகிறது. நிஜத்தில் நம்முடன் முரண்படும் கதாபாத்திரங்களையும், சூழ்நிலைகளையும் லவாகமாக கையாண்டு, அதன் மூலம் கிடைக்கும் அடியையும் அனுபவமாக நம்மால் உணர்ந்து கற்றுக் கொள்ள முடிந்தால் நல்லது. இல்லையேல் கூண்டுக்குள் நடப்பவைகளை மட்டும் விமர்சனம் செய்து தப்பித்து, தப்பித்து ஒரு கட்டத்தில் தப்பிக்க முடியாது என அடிவாங்க தயாராகையில், நம்முடைய உடல், மனம் இரண்டுமே அப்படியான அடியைத் தாங்க தயாராக இருக்காது. அதனால் அடி நல்லது. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916